இந்திய வரலாறு குறித்த இந்நூல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் இர்பான் அபீப் 30 ஆண்டுகளாக எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக 1995ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தற்போது என்.சி.பி.எச். நிறுவனம் இரா.சிசுபாலன் அவர்களின் சரளமான தமிழாக்கத்தில் இந்நூலை வெளியிட்டுள்ளனர்.

1960 முதல் பல்வேறு சர்வதேச தேசிய கருத்தரங்குகளிலும், அகில இந்திய வரலாற்று கழகத்தின் மாநாடுகளிலும் இர்பான் அபீப் சமர்பித்த ஆய்வுரைகள் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் வருகைக்கு முந்தய முகலாயர் ஆட்சிக் காலத்திலும் காலனி ஆதிக்க காலத்திலும் நிலவிய நிலவுடமை மற்றும் பொருளாதார அமைப்பு முறைகள் பற்றி பல்வேறு புள்ளி விபரங்களும் மற்றும் ஆதாரங்களுடன் இந்த கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்புகள் இக்கட்டுரைகளின் ஆழமான ஆய்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

இந்தியாவைப் பற்றி மார்க்ஸின் கருத்துக்கள் நியூயார்க் டெய்லி டிரி பியூன் இதழில் (1853) எழுதிய கட்டுரையில் வெளிவந்துள்ளது. மூலதனம் நூல் எழுதுகின்ற பொழுது கிடைத்த புதிய தகவல்கள் அடிப்படையில் மார்க்ஸ் தன்னுடைய நிர்ணயிப்புகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்திய விபரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சி, வர்க்க போராட்ட வடிவங்கள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றில் விவசாயம், சாதி போன்ற கட்டுரைகள் ஆய்வு நோக்கில் பல புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. இந்திய பொருளாதாரம் காலணிய மயமானதையும் அப்போது மூலதனத்திரட்சி உருவான பின்னணியையும் இந்த கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது.

'மார்க்சிய வரலாற்று வரைவியல் குறித்த பிரச்சனைகள்' என்ற முதல் கட்டுரை வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்வதற்கான பார்வையை விளக்குகிறது.

வரலாற்று தகவல்களும், ஆய்வுகளும் இடம் பெற்றுள்ள இந்நூல் வரலாற்றை கற்க விரும்புவோர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.

வெளியீடு:

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் - (பி) லிட்

41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

அம்பத்தூர்

சென்னை-600098

விலை ரூ.250/-

Pin It