"பத்திரிகை சுதந்திரத்தை ஆங்கிலேய அதிகாரிகள் கருவறுக்கத் தீர்மானஞ் செய்து விட்டார்கள். இது போன்ற விஷயங்கள் வரும்போது ஜனங்கள் எதிர்த்து மன்றாடுவதற்கு இடமில்லாதபடி தொடக்கத்திலேயே பொதுக் கூட்டங்களைத் தடுக்குஞ் சட்டத்தைப் பரவச் செய்து வைத்துவிட்டார்கள்.

பத்திரிகைச் சட்ட மேற்படுத்திச் சிறிதேனும் சுதந்திர உணர்ச்சி யேற்படுத்தக்கூடிய பத்திரிகைகளெல்லாம் அமுக்கிவிட நிச்சயங் கொண்டிருப்பதை நமது ஜனங்கள் வாயினால் கூடாதென்று சொல்லக்கூட வழியில்லாமல் போய்விட்டது. சரீர ஆயுதங்களை முன்னாளிலேயே பறித்துக் கொண்டார்கள். இப்போது அறிவின் ஆயுதங்களையும் பறிக்கப் பார்க்கிறார்கள்.

ஓர் ராஜாங்கத்தை அங்கீகாரஞ் செய்து அதற்கு அடங்கியிருப்பதையே விரதமாகக் கொண்டவர்கள் கூட அந்த ராஜாங்கத்தின் தனிச் செய்கைகளிலே சிலவற்றைக் கண்டனை செய்யவும், எதிர்க்கவுங் கூடா தென்பதாக நியதியில்லை. அங்ஙனம் எதிர்ப்பது ராஜத் துரோகமாக மாட்டாது. இங்கிலாந்திலுள்ள ஜனங்களில் சுமார் பாதி பேர் லிபரல் மந்திரிகளின் வரவு செலவுத் திட்டத்தை நாசஞ் செய்து விட வேண்டுமென்று கொடூரமான போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இங்ஙனம் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் ராஜத் துரோகிகளாக மாட்டார்கள்.

ஆதலால், நம்மவர்களிலே ராஜ பக்திப் பட்டத்தில் அன்பு செலுத்தி வாழ்பவர்கள் கூட அதிகாரிகளின் செயல்களிலே சிலவற்றை எதிர்க்கலாம்.

பொதுக் கூட்டங் கூடும் உரிமையை நம்மவர்கள் எளிதில் இழந்துவிடக் கூடாதென்பது நம்முடைய விருப்பம். அதற்கு இயன்ற வகைகளிலெல்லாம் மன்றாடிப் பார்க்கவேண்டும்.

அதில் என்ன துன்பங்கள் நேரிட்ட போதிலும் பெரிதில்லை. பத்திரிகைகளை நிறுத்துவது அவர்களுக்கு எளிதான காரியம்.

பொதுங்கூட்டஙகளைத் தடுப்பது அத்தனை எளிதன்று. பொதுக் கூட்டங்கள்! பொதுக் கூட்டங்கள்! பொதுக் கூட்டங்கள்! இவை நிற்குமானால் நமது முயற்சி வளர்ந்தேறுவதற்கு வேறு வழியில்லை.

தமிழ் ஸஹோதரர்களே, இந்த விஷயத்தில் அறிவைச் செலுத்தி ஆராய்ந்து பார்த்துச் செய்தற்குரிய செய்கைகளை உடனே செய்ய வேண்டும். ஓம்.

("சூரியோதயம்" பத்திரிகையில் (13.2.1910) பாரதி எழுதியது.)

Pin It