தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 12ஆவது மாநில மாநாட்டை நோக்கி...

இந்திய சரித்திரக்களஞ்சியம் என்னும் 15 நூல் தொகுதிகளை வழங்கிய ப.சிவனடி முதல் சங்க இலக்கிய ஆய்வுகளில் திளைக்கும் வே.பெருமாள்சாமி வரை என ஒரு ஆய்வுப்பரம்பரை உள்ள விருதுநகரில் தத்துவப்போராட்டக் களத்தில் தளராது (பல சமயம் தனித்து நின்றே) போராடி வரும் தமுஎகசவின் 12ஆவது மாநில மாநாடு கூடுகிறது.

மனித நேய எழுத்திலிருந்து சோசலிச யதார்த்தவாத எழுத்துவரையான ஒரு விரிந்த பரப்பில் யதார்த்தவாதத்தில் காலூன்றி நிற்கும் எழுத்துக்களைக் கொண்டாடும் அமைப்பு தமுஎகச.படைப்பாளிகளின் முழுமையான படைப்புச் சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் காக்கப்போராடும் அதே நேரத்தில் கலைஞர்களின் எழுத்தாளர்களின் சமூகப்பொறுப்பையும் படைப்புப்பணிகளை சமகாலத்தோடு இணைக்கவேண்டிய அவசியத்தையும் உணர்த்துகிற அமைப்பு தமுஎகச.நேற்றின் கதையானாலும் முன்னைப் பழங்கதையானாலும் அதை இன்றின் தட்டில் வைத்து வழங்கிட வற்புறுத்தும் இயக்கம் இது.

கடந்த மூன்று ஆண்டுகளில் கலை இலக்கிய உலகில் பண்பாட்டுத்தளத்தில் நடந்தவை குறித்துத் தனது கொள்கை அறிக்கையின் வெளிச்சத்தில் ஆய்வு செய்து இவற்றில் தமுஎகசவின் பங்களிப்பு என்ன என்பது குறித்த சுயபரிசீலனை செய்து வரும் மூன்றாண்டுகளுக்கான இலக்குகளை நிச்சயிக்கும் பணிதான் இம்மாநாட்டின் தலையாய பணியாக இருக்கும். 1975இல் 32 பேர் மதுரையில் கூடி துவங்கிய இந்த இயக்கம் இன்று 20,385 உறுப்பினர்களைக்கொண்டு எல்லா மாவட்டங்களிலும் கிளை பரப்பி நிற்கிறது.இந்த அமைப்பின் பலம் பலவீனம் குறித்த சுயவிமர்சனப்பூர்வமான விவாதத்தை இம்மாநாடு மேற்கொள்ளும்.

இம்மாநாடு செப்டம்பர் 16,17,18 தேதிகளில் கூடுகிறது.செப்.15 மாலை 5 மணிக்கு எம்.எஃப்.ஹூ`சேன் நினைவு வளாகத்தில் ஓவிய,சிற்ப,புகைப்பட,கேலிச்சித்திரக் கண்காட்சிகள் திறப்பு விழா நடைபெறுகிறது.ஓவியர் °ரீரசா தலைமையேற்க இயக்குநர் எடிட்டர் லெனின் மற்றும் தமுஎகசவின் முன்னோடி ஓவியர் தி.வரதராஜன் அரங்குகளைத் திறந்து வைக்கிறார்கள். மாநாடு செப்.16 காலை எழுத்தாளர் nமூஜயந்தன் நினைவு வளாகத்தில் (கந்தசாமி செட்டியார் ராஜம்மாள் திருமண மண்டபம்) துவங்கும். எட்டயபுரம் பாரதி இல்லத்திலிருந்து கொண்டுவரப்படும் ஜோதியை தமுஎகசவைத் துவக்கிய முன்னோடிகளில் ஒருவரான தோழர் கு.சின்னப்பபாரதி பெற்றுக்கொள்கிறார்.பன்மொழிப்புலவர் மு.கு.ஜகந்நாதராஜா நினைவாக ராஜபாளையத்திலிருந்து புறப்பட்டு வரும் புத்தக ரதத்தை தமுஎகசவின் மூத்த படைப்பாளி நாவலாசிரியர் டி.செல்வராஜ் பெற்றுக்கொள்கிறார்.அதை அடுத்து மறைந்த தமுஎகச தோழர்கள் மூ.சி.கருப்பையா பாரதி, கே.பி.பாலச்சந்தர்,பா.இராமச்சந்திரன்,புதுவை நாகசுந்தரம் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு. சுந்தரவள்ளி தொகுத்துரைக்க உதயசங்கர் அஞ்சலி உரை நிகழ்த்துவார்.

தொடர்ந்து கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி நினைவரங்கில் மாநாட்டு நிகழ்வுகள் நடைபெறும். மாநிலத்தலைவர் அருணன் தலைமை உரையாற்ற,வரவேற்புக்குழுத்தலைவர் திரு.மெரிட் சுப்பாராஜ் வரவேற்க,சுதந்திரப்போராட்ட வீர்ர் தோழர் என்.சங்கரய்யா வாழ்த்துரைக்க மாநாட்டை சாகித்ய அகாடமி விருதுபெற்ற படைப்பாளி நாஞ்சில்நாடன் துவக்கி வைக்கிறார்.தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் பொதுச்செயலாளர் தோழர் காமராசு,கேரள புரோகமன கலாசாகித்ய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் வி.என்.முரளி ஆகியோர் தங்களின் தோழமை வாழ்த்துக்களைத் தெரிவிக்க விருதுநகர் மாவட்டச்செயலாளர் அ.லட்சுமிகாந்தன் நன்றிகூற மாநாட்டுத்துவக்கவிழா நிறைவு பெறும். துவக்க விழா நிகழ்வுகளை பிரகதீ°வரன் தொகுத்து வழங்குகிறார்.

மதிய உணவுக்குப் பின் பிரதிநிதிகள் மாநாடு மாநிலத்தலைவர் அருணன் மற்றும் மாநிலத்த்துணைத்தலைவர்கள் தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், நன்மாறன், நந்தலாலா, முத்துநிலவன், ச.செந்தில்நாதன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவின் தலமையில் நடைபெறும். கலை இலக்கிய ஆய்வறிக்கையை பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வனும் அமைப்பு அறிக்கையை துணைப்பொதுச்செயலாளர் கே.வேலாயுதமும் வரவு-செலவு அறிக்கையை பொருளாளர் இரா.தெ.முத்து அவர்களும் முன் வைப்பார்கள். அவற்றின் மீது மாநாட்டுப்பிரதிநிதிகள் விவாதிப்பார்கள். 550 பேர் பிரதிநிதிகளாகப் பங்கேர்கிறார்கள். அன்று மாலை 6 மணிக்கு புதிய நூல்கள் குறுந்தகடுகள் வெளியீட்டு விழா சாகித்ய அகாடமி விருது பெற்ற தோழர் மேலாண்மை பொன்னுச்சாமி தலைமையில் நடைபெறும். தோழர்கள் ஆதவன் தீட்சண்யா, கவிஞர் ஜீவி இருவரும் நூல்களையும் படைப்பாளிகளையும் அறிமுகம் செய்வார்கள். 7 மணிக்கு திரை இயக்கம் குறித்த நிகழ்வு குறும்பட இயக்குநர் தோழர் எஸ்.கருணா தலைமையில் நடைபெறும். இயக்குநர் எம்.சிவக்குமார் ஓரிரு படங்களைத் திரையிட்டு உரை நிகழ்த்துகிறார்.

செப் 17 காலை 9.30மணிக்கு nமூஜயந்தன் வளாகத்தில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு உறுதி ஏற்பு நிகழ்ச்சி.10 மணிக்கு மீண்டும் பிரதிநிதிகள் மாநாடு தொடரும்.இடையில் தெலுங்கு எழுத்தாளர் தெலக்கபள்ளி ரவி அவர்களும் கர்நாடக சமுதாயா நாடக இயக்கத்தின் பொதுச்செயலாளர் டி.சுரேந்திராவும் வாழ்த்துரை வழங்குவார்கள்.செப்-17 மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறும்.சிகரம் ச.செந்தில்நாதன் தலையேற்கிறார். கீழ்க்கண்ட உரைகள் அக்கருத்தரங்கில் அமையும்.

ஊடக அரசியலைப் புரிந்துகொள்ள.. திரு.சசி குமார், ஆசிய ஊடக வளர்ச்சி மையம்
மௌனமாய்ப் பெருகும் மதவாத அரசியல்- மதுக்கூர் இராமலிங்கம்
தமிழ் அரசியலின் தடம்பற்றி... - சு.வெங்கடேசன்

மூன்றாவதுநாள் செப் 18 காலை 10 மணிக்கு தோழர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றுகிறார். அன்று மாலை 5 மணிக்கு 10ஆயிரம் பேர் பங்கேற்கும் மாபெரும் கலைப்பேரணி நடைபெறுகிறது. பேரணி முடிவில் கலை இலக்கிய இரவு நடைபெறுகிறது. கலை இரவில் அருணன், ச.தமிழ்ச்செல்வன், நன்மாறன், நந்தலாலா, பாரதி கிருஷ்ணகுமார், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நடிகர் நாசர் போன்றோர் உரையாற்றுகிறார்கள். திரைப்பட இயக்குநர்கள் ஜனநாதன், வசந்தபாலன், சுசீந்திரன், சசி, சிம்புதேவன், சீனு ராமசாமி, ஏகாதசி ஆகியோர் பங்கேற்கும் மக்களோடு கலந்துரையாடல் நடைபெறுகிறது. திண்டுக்கல் சக்தி போர்ப்பறை, புதுகை பூபாளம் கலைக்குழு, புயல் தப்பாட்டக்குழு, புதுவை சப்தர் ஹாஷ்மி இசைக்குழு, கரிசல் கிருஷ்ணசாமி, திருவுடையான், கருணாநிதி, வைகறை கோவிந்தன்,ஈரோடு வெ.ராnஜஸ்வரி ஆகியோர் பங்கேற்று இசைக்கிறார்கள். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்,சட்டமன்ற உறுப்பினர் திரு பாண்டியராஜன் உள்ளிட்ட மாவட்டப் பிரமுகர்கள் வாழ்த்துரைக்கிறார்கள். பிரதிநிதிகள் மாநாடு தவிர்த்த மற்ற நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்கலாம். மாநாட்டுக்குள் கவிதை வாசிப்பும் நிகழும் அந்நிகழ்வை கவிஞர் ஜீவி ஒருங்கிணைக்கிறார். கலை இரவு நிகழ்ச்சிகளை மணிமாறன்,லட்சுமணப்பெருமாள் ஒருங்கிணைக்கிறார்கள்.

வரவேற்புக்குழுச் செயலாளர் தேனி வசந்தன் நன்றியுரைக்க மாநாடு நிறைவடையும்.

- ச.தமிழ்ச்செல்வன்

Pin It