"களரி" நாவல் மூலம் தமிழிலக்கியத்தில் அழியாச் சுவடு பதித்த எழுத்தாளர் ப.ஜீவ காருண்யன், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், கதைக் கவிதை நூல், கட்டுரை நூல், மொழி பெயர்ப்பு என்று பன்முகப் படைப்பாற்றலை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கிறார். இப்போது "கவிச் சக்கரவர்த்தி" என்றொரு வாழ்க்கைச் சரித நாடக நூலாக்கி தந்திருக்கிறார்.

கவிச் சக்கரவர்த்தி கம்பர் வரலாறு. சோகமும் அவலமும் ஆச்சரியமும் நிறைந்த நாடகம்.

நூலுக்குள் ஓர் ஒட்டுதலற்ற அலட்சிய மனோ பாவத்துடன் நுழைந்து வாசிப்பை துவக்கினேன். கம்பனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றில் என்ன நாடகக் கூறு இருந்துவிட முடியும்? இந்த நாடகத்தின் மூலமாக என்ன புதிய தகவல் கிடைத்து விடப்போகிறது என்று அசால்ட்டாக நினைத்தேன்.

வாசிக்க வாசிக்க ஓர் ஆச்சரியம் மலர்ந்தது. ஒரு நாடகத்துக்கான சம்பவக் கோர்வை, உணர்வெழுச்சிச் சுழற்சி, படிப்படியான கதை இதழ் விரிதல் என்ற தன்மைகள் பரி பூர்ணமாக ததும்புகின்றன. உரையாடலில் எளிமையும் நளினமும், கதை கூறு தன்மையின் அழகும் பொருந்தியிருக்கின்றன.

கம்பன் என்றால் கம்பராமாயணம் தான் நினைவுக்கு வரும். அது ஒன்று மட்டுமே படைக்கப்பட்டதாக தோன்றும்.

உண்மையில் பதினேழு வயதில் சரஸ்வதி அந்தாதி, இருபத்தியோரு வயதில் ஒரெழுபது, மும்மணிக்கோவை, திருக்கைவிளக்கம், சிலையெழுபது என்று பல வகையான கவிதைக் காவியங்களை படைத்துவிட்டுத்தான், கம்பராமாயணம் படைத்திருக்கிறார்.

அதிலும் ஏரெழுபது முக்கியமானது. உழவுத் தொழிலை முக்கியப்படுத்தி காவியம் படைத்திருக்கிறார்.

நாவிதர், சலவைத் தொழிலாளி, விவசாயி, சடகோபர், சடையப்பவள்ளல் போன்றோரை பற்றியெல்லாம் கவிதைகள் பாடியிருக்கிற கம்பர், மன்னர்களை புகழ்ந்து பாடுவதற்கு இறுதி வரை மறுத்துவிடுகிறார். அதனால் அவர் மகனை இழக்கிறார். மகளை இழக்கிறார். மனைவியை இழக்கிறார். தனது உயிரையும் இழக்கிறார்.

உழவையும், உழைப்பையும், உயர் மனிதப் பண்பையும் உளமாறப் பாடுகிற கம்பனின் செயல், அக்காலப் புதுமையானது. இலக்கியத்தின் பாடு பொருளாக இருக்கும் தகுதி, 'யார்யாருக்கெல்லாம் இல்லை' என்று தொல்காப்பியர் வகுத்து வைத்த இலக்கணத்தை மீறி, இழிசனரையும், வினைவலரையும் கம்பர் இலக்கிய நாயகராக்கியிருக்கிறார்.

கம்பர் தமிழரல்ல, ஆந்திராவிலிருந்து வாழ்வு தேடிவந்த தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்று நாடகத்தின் உப செய்தி கூறுகிறது.

இளவரசனின் ராட்சஸமும்,அம்பிப்பதியின் கொலையும் நெஞ்சை உலுக்குகின்றன. சடையப்ப வள்ளல் மீது ஒரு கம்பீரமான மரியாதை எழுகிறது.

நாடகத்தில் கலைத்தன்மை நிறைவாக இருக்கிறது.

கம்பர் மன்னரால் கொல்லப்படுகிற தந்திரக் காட்சியும், வஞ்சகமும் மனசைத் தைக்கிறது.

கம்பர் வாழ்க்கை வரலாறு சரியானது தானா? நம்பகத் தன்மை மிக்கதா? என்ற சந்தேகக் கேள்விகள் எழுகின்றன.

கம்பனைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் நிறைய வந்துள்ளன. குறு நில மன்னர்யுகம் முடிந்து, பேரரசு யுகம் தோன்றுகிற குலோத்துங்க, ராஜராஜ சோழ மன்னர்களின் போர்ப்படையெடுப்புக்கும், நாடுபிடிப்புகளுக்கும், நியாயம் கற்பிக்கும் விதமாக கம்பரை வைத்து ராமகதையை சோழ மன்னர்களே மொழிமாற்றம் செய்ய வைத்ததாகவும் ஒரு வித ஆய்வும் இருக்கிறது.

இதில் எந்த ஆய்வு சரி என்று யாரும் அறுதியிட்டு சொல்லிவிட முடியாது.

ஜீவ காருண்யன் ஒரு வித ஆய்வுக் கண்ணோட்டத்தில் கம்பர் கதையை நாடகமாக்கியிருக்கிறார். அது சம காலத்துக்கும் பொருந்தக்கூடிய நவீனச் சிந்தனைகளை பந்தி வைக்கிறது.

-

விலை. ரூ. 75.00

மணியன் பதிப்பகம்

14/39, இரத்தின முதலிதெரு

குறிஞ்சிப்பாடி-607 302

கடலூர் மாவட்டம்

Pin It