பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒரு விபரீதமான வேடிக்கை மனிதர். அந்த மாநிலத்தில் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்திலும் சுரங்கங்களை கொள்ளையடித்து வரும் ரெட்டி சகோதரர்களால் இவரது முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தவுடன் அமைச்சர்களிடமோ அல்லது தனது கட்சித் தலைவர்களிடமோ இவர் ஆலோசனை கேட்கவில்லை.

மாறாக, நம்பகமான நான்கு ஐந்து ஜோதிடர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களும் பல கட்டங்களைப் போட்டு கிரக ஆராய்ச்சி செய்து ஒரு தீர்வைக் கூறினர். எடியூரப்பா சேலை அணிந்து கொண்டு யாகம் நடத்தினால்தான் முதல்வர் பதவி தப்பும் என்று கூறவே அதன் படியே செய்தார் எடியூரப்பா.

சேலை கட்டி யாகம் நடத்தியதால் முதல்வர் பதவி தப்பியதோ இல்லையோ, தாமும் தனது மகன்களும் சுருட்டிய நிலத்தைத் தவிர வேறு எங்கு வேண்டுமானாலும் ரெட்டி சகோதரர்கள் சுரங் கம் வெட்டி கொள்ளையடிக்கலாம் என்று இவர் ஒப்புக்கொண்டதால் முதல்வர் பதவி தப்பியது.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையில்தான் முதல்வர் பதவியை அவர் தொடர்கிறார். அவருக்கு இப்போது ஒரு சத்திய சோதனை. எடியூரப்பா மீது எதிர்க்கட்சித்தலைவர் குமாரசாமி பல்வேறு ஊழல் புகார்களை சுமத்தினார். தம்மை சரிக்கட்ட எடியூரப்பா பேரம் பேசினார் என்று குமாரசாமி கூற எடியூரப்பா மறுக்க இது எல்லா மாநிலங்களிலும் நடக்கிற ஒன்றுதான் என்றே பலரும் நினைத்தார்கள்.

இதில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. குமாரசாமியை விலைக்கு வாங்க நான் முயற்சி செய்ய வில்லை. இதை தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரர் கோவிலில் சத்தியம் செய்து நிரூபிக்கத்தயார். குமாரசாமியும் அதேபோல் சத்தியம் செய்யத் தயாரா? என்று சவால் விட்டார். அரசு பணத்தில் இதை ஒரு விளம்பரமாகவும் வெளியிட்டார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட குமாரசாமி தானும் சத்தியம் செய்ய தயார் என்று அறிவித்தார்.

இத்தகைய சவாலும் எதிர் சவாலும் கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கேள்விப்படக் கூடிய ஒன்றுதான். மாநிலத்தின் முதலமைச்சர் ஒருவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இவ்வாறு கள மிறங்கி இருப்பதுதான் புதுமை.

சட்டமன்றத்தைக்கூட ஏதாவது ஒரு கோவிலுக்கு மாற்றி மாறி மாறி சத்தியம் செய்து மசோதா வை நிறைவேற்றினாலும் நிறைவேற்றுவார்கள். பாஜக தான் இப்படி என்றால் மதச்சார்பற்ற என்ற அடைமொழியோடு இயங்கும் கட்சியின் தலைவரும் இப்படி கூத்தடிக்கக்கூடாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததோடு ஓட்டு போடு வதாக பாலில் அடித்து சத்தியம் வாங்கிக் கொண்டனர். சட்டமன்றத் தேர்தலில் பணம் கொடுத் தாலும் பாலில் அடித்து சத்தியம் வாங்க முடியவில்லை. பால் விலை அதிகரித்துவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம். சத்தியம் செய்பவர் களுக்கு ஒரு பாக்கெட் பால் இலவசம் என்றுகூட எதிர்காலத்தில் அறிவிக்கலாம்.

துண்டைப்போட்டு தாண்டத் தயாரா என்று ஆண்களும், முந்தானையைப் போட்டு தாண்டத் தயாரா என்று பெண்களும் கிராமத்துச் சண்டையில் பரஸ்பரம் சவால்விடுவார்கள். இதில் உச்சக் கட்டம் வேட்டியை அவிழ்த்துப்போட்டு தாண்டச் சொல்வதுதான். இவ்வாறு தாண்டிய சில காட்சி களை நான் பார்த்திருக்கிறேன்.

ஆத்திரமும் ரோஷமும் அதிகரிக்கும் போது பெற்ற குழந்தையைப் போட்டு தாண்டுபவர்களும் உண்டு. முந்தானை முடிச்சு படத்தில் கூட இப்படி ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

சாராயக் கடையில் ஒரு தகராறு. கொடுத்தவர் நான்கு கிளாஸ் என்று கூற, குடித்தவர் மூன்று கிளாஸ் என்று சாதிக்க அங்கு நிதானமாக இருந்த குடிமகன்களால் இந்தப்பிரச்சனையை தீர்க்கமுடிய வில்லை. பரஸ் பரம் அவரவர் குழந்தையை போட்டு தாண்டுவது என்று முடிவாயிற்று. சாராயக் கடைக்காரர் அருகில் சால்னா விற்றுக் கொண்டிருந்த தனது பத்து வயது பையனை படுக்க வைத்து படக்கென்று தாண்டி விட்டார். குடிமகனோ தனது மகனை வீட்டிற்குச் சென்று அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். அவருக்கு வயது 60 இருக்கும். அவரது மகனுக்கு வயது சுமார் 35 இருக்கும்.

இவர் வீட்டிற்குச் சென்று சபையில் தமக்கு நேர்ந்த அநீதியை எடுத்துரைத்து சத்திய சோத னைக்கு வருமாறு அழைக்க அவரது மகன் கடுப் பாகிவிட்டார். வளைத்து வைத்து போட்ட போட்டில் நாலு கிளாஸா மூணு கிளாஸா என்று கண்டறிய முடியாத சாராயத்தின் போதை இறங்கி விட்டது. ரோசக்கார மகன், கடைக்கு வந்து அந்த ஒரு கிளாசுக்கான காசை வீசியெறிந்துவிட்டு போய்விட்டார்.

பில்லி சூனியம் வைப்பது, காசு வெட்டி போடுவது போன்ற பழக்கங்களும் இன்னும் நீடிக் கிறது. ஒருவரது குடும்பத்தை கெடுக்க வேண்டு மென்றால் அவரது பெயரைச் சொல்லி காசு வெட்டி போட்டுவிடுவார்கள். அந்தக் கோயில் பூசாரி மட்டுமின்றி சம்பந்தப்பட்ட சாமியும் இதற்கு உடந்தை.. இவ்வாறு வெட்டிப்போடப் படும் காசு குறைந்த அளவு மதிப்புள்ளதாகத்தான் இருக்கும் இன்னும் சில பேர் வழக்கொழிந்து போன ஐந்து பைசா, பத்து பைசா நாணயங்களை வெட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். செல்லாக்காசை வெட்டிப்போட்டால் சம்பந்தப் பட்ட சாமி தன்னுடைய கடமையை சரியாகச் செய்யுமோ என்னமோ தெரியாது.

காசுவெட்டி உறவை வெட்டிக்கொண்டவர்கள் அப்படியே இருந்துவிட்டால் பிரச்சனையில்லை. இரண்டு பேரும் ராசியாக வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று பெரிய அளவிற்கு பரிகாரம் செய்ய வேண்டும். எப்படியும் 2ஆயிரம் 3ஆயிரம் செலவாகும். இதற்கு பயந்து பகையாக இருந்துவிடுபவர்களும் உண்டு.

குறிப்பிட்ட மாப்பிள்ளையை வளைத்துப் பிடிக்க மருந்து வைக்கும் கதையும் ஏராளம் உல வும். மந்திரவாதியிடம் மருந்தை வாங்கி வந்து ஏதாவது ஒரு உணவுக்குள் மறைத்து வைத்து கொடுத்துவிடுவார்களாம். அவர் அந்த மருந்தை சாப்பிட்டுவிட்டால் இந்தப் பெண்ணைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்பாராம்.

எந்த செறுக்கி மருந்து வைத்தாலோ தெரிய வில்லையே என் பிள்ளை இப்படி ஆகிவிட்டானே என்று புலம்புவார்கள். இயல்பாக மலரும் காதலை திசை திருப்பத்தான் இத்தனையும். பெற்றோர் களுக்கு பயந்து ஆமாம் மருந்து வைத்து விட்டார்கள் என்று சிலர் கூறிவிடுவார்கள். அவரை அழைத்துச்சென்று தகுந்த மந்திரவாதியைப் பிடித்து மருந்து எடுக்கும் வைபவம் நடக்கும். அவரை வாந்தியெடுக்க வைத்தால் அந்த மருந்து வெளியே வந்துவிடும். அதில் பார்த்தால் முடி முளைத் திருக்கும். இதனால்தான் மாப்பிள்ளைக்கு வயிற்றுக் கோளாறும், மூளைக்கோளாறும் ஏற் பட்டதாகக் கூறி கணிசமாக கறந்துவிடுவார் மந்திரவாதி.

வழுக்கைத் தலையில் முடி முளைக்க வைப்ப தற்கு அமேசான் காட்டு மூலிகை என்று விளம்பரம் செய்யும் காலம் இது. வயிற்றுக்குள் எப்படி முடி முளைக்கும் என்று ஒரு மந்திரவாதியை கேட்டேன். “எல்லாம் கை வேலை தான்” என்றார் கமுக்கமாக. அதற்கு மேல் அவரும் அந்த தொழில் ரகசியத்தை விவரிக்கவில்லை.

இந்த மருந்து, மாய மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாமல் அந்தப் பெண்ணையே கட்டிக் கொள்பவர்களும் உண்டு. அவர்களுக்கு வைத்த மருந்து எடுக்கப்படுவதே இல்லை. ஒரு வேளை அது உண்மையாக இருந்தால் ஒரு பெரிய முடிக் காடே வளர்ந்திருக்கும்.

கிராமங்களில் இத்தகைய வேலைகளைச் செய் பவர்கள் மை பெட்டி வைத்திருப்பார்கள். கம்யூட்டர் பெட்டி வந்த பிறகு இந்தக் கருமம் எல் லாம் தொலைய வேண்டுமல்லவா? அதற்குள் கையை விட்டு பார்த்தால் எத்தனை எத்தனையோ மாயாஜால மன்னர்கள் புதுப்புது பெயர்களில் ஒளிந்துகிடக்கிறார்கள்.

Pin It