மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத்திருக்கும் பிஜேபி மீண்டும் தனது அரசியல் சித்து வேலைகளை ஆரம்பித்து இருக்கின்றது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரசு கூட்டணி அரசை கவிழ்க்க வழக்கம் போல குதிரை பேரத்தில் இறங்கி இருக்கின்றது பாஜக பாசிசக் கும்பல். இதன் தொடர்ச்சியாக காங்கிரசு மற்றும் மஜதவைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து குமாரசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மை பலத்தை இழக்க வைத்திருக்கின்றது.

kumarasamy and congress leaderநடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் பிஜேபி 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும் பெற்று யாருக்குமே ஆட்சி அமைக்கத் தேவையான 111 இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. ஆனால் 104 இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியில் அமரவிடக் கூடாது என்பதற்காக தனக்கு எதிராக தேர்தலில் நின்ற மஜதவை காங்கிரசு ஆதரித்தது. இதனால் 104 இடங்களைப் பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத அவல நிலை பிஜேபிக்கு ஏற்பட்டது. ஒரு இடம், இரண்டு இடம் இருந்தாலே ஆட்சியைக் கைப்பற்ற தகிடுதத்தங்களை செய்யும் அமித்ஷா தலைமையிலான ஜனநாயக விரோதக் கும்பல் 104 இடங்களை வைத்துக் கொண்டு குமாரசாமியை நிம்மதியாக ஆட்சி செய்ய விட்டுவிடுவார்களா?

பணத்திற்கும், பதவிக்கும் மயங்காத அரசியல்வாதி என்று எவனாவது தேர்தல் அரசியலில் இருக்கின்றார்களா என்ன? பல நூறு கோடிகளை தேர்தல் சந்தையில் முதலீடாகக் கொட்டி மக்கள் சேவையாற்றவா இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றார்கள்? ஏன் காங்கிரசு மற்றும் மஜதவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள அவர்களின் வர்க்கத் தன்மையைப் பார்க்க வேண்டியது அவசியம்.

2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் தேர்தலில் போட்டி இட்டவர்களில் 208 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 17.86 கோடிகள். காங்கிரசு சார்பில் போட்டியிட்டவர்களில் 207 பேர் கோடீஸ்வரர்கள் இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 38.75 கோடிகள். இதே போல மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர்களின் 154 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களின் சராசரி சொத்து மதிப்பு 20.91 கோடிகள். அதே போல பாஜக வேட்பாளர்களில் 83 பேரும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 59 பேரும், மஜத வேட்பாளர்களில் 41 பேரும் குற்றப்பின்னணி உடையவர்கள். இவர்கள் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் போன்றவை உள்ளன. ஆக மொத்தம் கர்நாடக தேர்தலில் பாஜக சார்பிலோ, காங்கிரசு சார்பிலோ, மஜத சார்பிலோ நிறுத்தப்பட்ட அனைவருமோ கோடீஸ்வரர்களாகவும் , குற்றப் பின்னணி உடையவர்களாகவுமே பெரும்பாலும் இருந்திருக்கின்றனர்.

இப்படி பெரும் கோடீஸ்வரர்களையும், ரவுடிகளையும், கொலைகாரர்களையும் கொஞ்சம் கூட வெட்க மானமே இல்லாமல் தேர்தலில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்த யோக்கியர்கள்தான் காங்கிரசும், பிஜேபியும், மதசார்பற்ற ஜனதாதளமும். இப்போது நடந்து கொண்டிருப்பது உண்மையில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் கிடையாது. கர்நாடகாவை யார் கொள்ளையடிப்பது என்பதற்காக ரவுடிகளுக்கும், பொறுக்கிகளுக்கும், கொலைகாரர்களுக்கும் நடக்கும் வெட்டுக் குத்து சண்டை. இந்த சண்டையில் நிச்சயம் அதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்சியே வெற்றி பெறும் என்பதால் நாம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக நம்பலாம்.

ஏற்கெனவே 17 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் காங்கிரசு-மஜத கூட்டணியின் பலம் 99 குறைந்துள்ளது. இதை வைத்துக் கொண்டு நிச்சயம் குமாரசாமியால் ஆட்சியைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள முடியாது. அப்படி காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் அவர் நம்ம எடப்பாடியைப் போல மாறவேண்டும். அதாவது பிஜேபியின் பாதந்தாங்கியாக‌ மாற வேண்டும். ஆனால் அதற்கும் கூட வாய்ப்பில்லாத சூழ்நிலையே நிலவுகின்றது. 17 பேர் ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் எம்எல்ஏக்களின் பலம் 208 ஆகக் குறைந்துள்ளது. இதனால் ஏற்கெனவே 105 இடங்களைப் பெற்றிருக்கும் பாஜகவே ஆட்சி அமைக்க முடியும். வெறும் 37 இடங்களை வைத்துக் கொண்டு முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்ட குமாரசாமிக்குக் கடைசியாக இருக்கும் வாய்ப்பு என்பது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜேபியை அம்பலப்படுத்துவது; இல்லை என்றால் பேக்கரியை அமித்ஷாவிடம் நல்ல விலைக்கு அடமானம் வைத்துவிட்டு அமைதியாகி விடுவது.

ஏற்கெனவே மஜத எம்எல்ஏக்கள் 3 பேரை பாஜக விலைக்கு வாங்கிவிட்டதால் மீதமிருக்கும் எம்எல்ஏக்களையும் பாஜக நிச்சயம் விலைக்கு வாங்காது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ரவுடிகளையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும் வைத்துக் கொண்டு நிச்சயம் மஜத-காங்கிரசால் எந்த அரசியல் அறத்தையும் பேச முடியாது. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அமித்ஷா தலைமையிலான பாசிச கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை நாம் ஏற்கெனவே பல முறை பார்த்திருக்கின்றோம்.

தற்போது கர்நாடகவில் ஆட்சியை கவிழ்க்கும் சதிவேலைகளில் தீவிரமாக இருக்கும் அதே சமயத்தில் கோவாவில் 10 காங்கிரசு எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியிருக்கின்றது. பாபு கவேல்கர் தலைமையில் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜக-வில் சேர்ந்துள்ளார்கள். ஏற்கெனவே ஆட்சியமைக்கத் தேவையான 21 இடங்களை பெறமுடியாமல் வெறும் 13 இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு. மகாராஷ்ட்ரவாடி கோமந்த் கட்சி, கோவா ஃபார்வேர்டு கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்திருந்த பாஜக தற்போது காங்கிரசில் இருந்து 10 எம்எல்ஏக்களை குதிரை பேரத்தின் மூலம் இழுத்துள்ளதால் அதன் பலம் 23 ஆக உயர்ந்திருக்கின்றது. 17 எம்எல்ஏக்களை பெற்றிருந்த காங்கிரசு 10 எம்எல்ஏக்களை இழந்து தற்போது வெறும் 7 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்திருக்கின்றது.

மக்கள் நலன் சார்ந்த எந்த சிந்தனையும் அற்ற, பொறுக்கித் தின்பதற்காகவே அரசியலுக்கு வரும் சமூக விரோதிகளின் கூடாரமாக கார்ப்ரேட் அரசியல் கட்சிகள் விளங்கி வருகின்றன. பாஜக, மஜத, காங்கிரசு என கட்சிகளின் பெயர்கள் மட்டுமே மாறியிருக்கின்றதே ஒழிய அதன் வர்க்கத் தன்மை என்பது கார்ப்ரேட் அடிவருடித்தனம்தான். அயோக்கியர்களையும், பொறுக்கிகளையும், கொலைகாரர்களையும், ஊழல்வாதிகளையும், மோசடிப் பேர்வழிகளையும் நம்பி கட்சி நடத்தும் இந்த உத்தமர்களால் ஒருபோதும் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் ஆட்சியை அளிக்க முடியாது.

பன்றிகள் தங்கள் தொழுவத்தை மாற்றிக் கொள்வதால் அதன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை. எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதும் , தாங்கள் போட்டியிட வாய்ப்பு கொடுத்த கட்சியையே கவிழ்க்கப் பார்ப்பதும் பன்றிகளின் செயல்களுக்கு ஒப்பானதுதான் என்பதை நம் மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றார்களோ அப்போதுதான் மக்கள் நலன் சார்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்காகவே உழைக்கும் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் கட்சிகளின் ஆட்சி அமையும்.

- செ.கார்கி

Pin It