வைதீக மதம் அசைவ உணவை முழுமையாக வெறுக்கிறது. அசைவ உணவை சாப்பிடாமல் இருப்பது தான் இந்து தர்மம் என்று கருதுகிறது. அதனால் தான் பார்ப்பனர்கள் அசைவ உணவை வெறுக்கிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு புரதச் சத்து கண்டிப்பாக வேண்டும் என்ற அடிப்படையில் மதிய உணவுத் திட்டத்தில்  முட்டை போடப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் நடைபெற்று வருகிற பாரதிய ஜனதா கட்சி வைதீகப் பார்ப்பனியக் கொள்கையை ஏற்று, “குழந்தைகளுக்கு முட்டை போடுவது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கு எதிரானது, கொழுப்புச் சத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும், ஹார்மோன் பிரச்சனைகளை உருவாக்கும்” என்று ஒரு முடிவிற்கு வந்திருக்கிறது.

கர்நாடகத்தில் பாடத்திட்டத்தை எப்படி அமைப்பது என்று உருவாக்கப்பட்ட ஒரு குழு, பாடத் திட்டத்தையும் தாண்டி மதிய உணவுத் திட்டத்திற்கும் ஒரு பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அதில் தரப்பட்ட பரிந்துரைதான் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை போடக்கூடாது என்பதாகும்.

இந்த அறிக்கை கர்நாடக அரசிடமும், NCERT என்று சொல்லப்படுகின்ற தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திடமும் அந்தக் குழு சமர்ப்பித்திருக்கிறது. இது ஒரு மிக மிக மோசமான முடிவாகும்.

இந்துத்துவா என்ற பெயரில் சனாதன தர்மத்தை அவர்கள் பேசுகிறார்கள். சனாதன தர்மம்  என்பது பார்ப்பன தர்மம் தான் என்பதற்கு கர்நாடக அரசின் அந்தக் குழு வெளியிட்டிருக்கிற அறிக்கையே சான்றாக இருக்கிறது.

உ.பி.யில் பாஜக ஆட்சியை மிஞ்சக் கூடிய அளவிற்கு கர்நாடக பாஜக ஆட்சி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு சனாதன திட்டத்தை அறிவித்துக் கொண்டே இருக்கிறது. அறிவியலாளர்கள், மருத்துவர்கள் இந்தக் கருத்தை அடியோடு மறுக்கிறார்கள்.

   முட்டை என்பது கொழுப்புச் சத்து அல்ல. அது முழுமையான புரதச் சத்து. குழந்தைகளுக்கு அவசியமான தேவை. 25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டத்தில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று முட்டையினுடைய புரதச் சத்தின் தன்மைகளை விளக்கி விரிவான கட்டுரை ஒன்றை ‘தமிழ் இந்து’ ஏட்டில் மருத்துவர் ஒருவர் எழுதியிருக்கிறார்.

இறைச்சி, மீன் சாப்பிடுவதற்குக்கூட ‘சனாதனத்தின்’ தடை கேட்கும் காலம் வந்தாலும் ஆச்சரியமில்லை. முட்டையை மதிய உணவுத் திட்டத்திலிருந்து அகற்ற போலி அறிவியல் காரணங்களைக் கூறுவதற்கு அரசு சார்பில் குழு நியமிக்கப்படுவதே வெட்கக் கேடானது.

  நாளை மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டை பார்ப்பன மதத்திற்கு எப்படி இழுத்துச் செல்லும் என்பதற்கு கர்நாடக அரசு அரங்கேற்றும் கேலிக்கூத்துகள் இருந்து கொண்டிருக்கின்றன.

- விடுதலை இராசேந்திரன்

Pin It