கேசன், ராஜா, செல்லதுரை, சேவகமூர்த்தி, மூக்கன், பூபதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட (30.6.1997) சுமார் 85 நாட்களில், Murugesan41 பேர் மீது குற்றப்பத்திரிகை 25.9.1997 அன்று தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஜெயராமன் என்பவர் பாம்புக் கடித்து இறந்ததால், 40 பேர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் காட்டப்பட்டனர். 9.3.1998 மற்றும் 27.3.1998 ஆகிய நாட்களில் குற்றம் சாட்டப் பட்டவர்களில் பெரும்பாலானோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர். ராமமூர்த்தி, பலருக்கு ஜாமீன் வழங்கி ஆணையிட்டார். நீதிபதி கே. நடராஜன் கடைசி மனு மீது ஜாமீன் வழங்கி ஆணையிட்டார். குற்றம் சுமத்தப் பட்டவர்களில் பலருக்கு மேலவளவிற்கும், தத்தம் சொந்த கிராமங்களுக்கும் சென்று தங்கிக் கொள்ளும் வகையில், நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில் மேலவளவில் தலித் மக்களிடையே பீதியும், அச்சமும் மேலோங்கி இருந்தது.

தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமை மற்றும் படு கொலையில் தொடர்புடைய பலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனையற்ற ஜாமீன் உத்தரவுகளைக் கண்டு தலித் மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடும் மன உறுதி பூண்ட 75 வழக்குரைஞர்கள் (பொ. ரத்தினம் உட்பட), மேலவளவு படுகொலை விசாரணை எந்தவிதக் குறுக்கீடும், அச்சுறுத்தலும் இன்றி அமைதியான சூழலில் நடைபெறவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளைக் கலைக்காமல் இருக்கவும், 30.4.1998 அன்று அன்றைக்கிருந்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் மேலவளவு படுகொலையைப் பற்றி வழக்குரைஞர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர் : "குற்றம் சாட்டப் பட்டவர்களில் ஆறு பேர் தலைமறைவாகி உள்ளதையும், நீதிமன்றக் காவலில் (சிறையில்) இருந்த 30 பேர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதையும், நான்கு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலில் (சிறையில்) உள்ளது பற்றியும் கவலை தெரிவித்திருந்தனர். மேலவளவு படுகொலையும், தலித் மக்களின் துயரங்களும் நியாய சிந்தனையுடைய அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், பிற சாதியினரால் தாங்கள் மேலும் தீர்த்துக் கட்டப்படக் கூடுமென்று - தலித்துகளுக்குத் தொடரும் அச்சுறுத்தலும் மென்மேலும் அதிர்வுறச் செய்வதாகத் தெரிவித்திருந்தனர்.

கொலை செய்யப்பட்ட முருகேசன் மற்றும் ராஜாவின் மூத்த சகோதரர் கருப்பையா 14.4.1998 அன்று, தமிழக அரசின் முதலமைச்சருக்கு - எதிரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையிட்டும் பயன் ஏதும் இல்லாததால், கருப்பையா ஜாமீனை ரத்து செய்யக் கோரி மூன்று மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எஞ்சியுள்ள மூன்று மனுக்களில் அளிக்க வேண்டிய தேவையான தகவல்கள் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதால், எங்களில் ஒரு சிலர், அரசு வழக்குரைஞரிடம் தேவையான தகவலைத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளோம்.''

இப்படுகொலையில் தொடர்புடைய 11 பேர், மேலவளவிலேயே தங்க உயர் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலை மறைவாகியுள்ள முக்கிய குற்றவாளிகளில் ராமர் மற்றும் சிலர் மீது இரட்டைக் கொலை மற்றும் கடுங் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன என்பதால், மேற்கண்ட நபர்களின் ஜாமீனை ரத்து செய்வது குறித்து விசாரிக்க, "டிவிஷன் பென்ஞ்ச்' ஒன்றினை அமைக்கும்படி கேட்டுக் கொண்டனர். 30.4.1998 கடிதத்தினைத் தொடர்ந்து, வழக்குரைஞர்கள் 4.5.1998 அன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மீண்டும் ஒரு முறையீட்டை அளித்தனர்.

இம்முறையீட்டில், "மேலவளவு படுகொலையில் தொடர்புடைய தலைமறைவாகியுள்ள 10 பேர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப் பட்டவர்களைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முதன் முதலாக ஜாமீனில் விடப்பட்ட "எ12' தினகரன், மேலவளவு ஊராட்சியில் 10 ஆண்டுகளாகத் தலைவராக இருந்து, மேலவளவு "ரிசர்வ்' தொகுதி ஆக்கப்பட்டதால் - பாதிப்புக்குள்ளானவரும், இப்படுகொலையை திட்டமிட்டு நடத்தியவருமான "எ1' அழகிரிசாமியின் மகன்.

"இவர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் மேலவளவிற்கு அடிக்கடி சென்று வருவதாகவும் அறிய வருகிறோம். குறிப்பாக, இந்த தினகரன், 20.4.1998 அன்று மாலை 6.30 மணியளவில் அவரது தாத்தாவின் வீட்டில் சக குற்றம் சாட்டப்பட்ட நாகேஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். தினகரனை வேறு சிலருடன் மேலவளவு ஊராட்சித் தலைவர் ராஜாவும் (முருகேசனின் கொலைக்குப் பின்னர் தேர்வு செய்யப்பட்டு, கள்ளர் சாதியினரால் பழி வாங்கப்படுவோமா என்று அச்சத்திலிருந்தவர்) பார்த்திருக்கிறார்.
"உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் நிபந்தனைகளை காவலர்களின் கண்ணெதிரே மீறியும், காவலர்கள் தினகரனின் ஜாமீனை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்காததும், நீதிமன்ற நடவடிக்கைகளிலும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதில், மேலவளவு தலித் மக்களின் மற்றும் பிற பகுதிகளில் உள்ளோரின் நம்பிக்கையில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலவளவு வழக்கில் சாட்சியம் அளிக்க முன்வரும் சாட்சிகள், இதனால் மிகுந்த அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். மாண்புமிகு தலைமை நீதிபதி அவர்கள் தலையிட்டு சி.ஆர்.எல். ஓ.பி. 3021/98 நாள் 9.3.98, 3068/98 நாள் 13.3.98, 3544/98 நாள் 19.3.98, 4187/98 மற்றும் 4188/98 நாள் 27.3.98, 4558/98 நாள் 4.4.98இல் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உதவிடும்படி கேட்டுக் கொள்கிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தலைமை நீதிபதியின் ஆணையின் பேரில் வழக்குரைஞர்களின் மனுவை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 24.9.1998 அன்று நீதிபதிகள் ஜெயராம் சவுதா மற்றும் வி. பக்தவச்சலு ஆகியோர் மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனத்தள்ளுபடி செய்தனர். இத்தீர்ப்பினை எதிர்த்து வழக்குரைஞர் ரத்தினம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மேல் முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் கே.டி. தாமஸ் மற்றும் டி.பி. மகோபத்ரா ஆகியோர் 8.2.2000 அன்று வழங்கிய தீர்ப்பில், உயர் நீதிமன்றம் 75 வழக்குரைஞர்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது சரியல்ல என்று கூறினர். மேலும், இம்மனு மீது தகுதி அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டுமெனவும் உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.

முருகேசனின் அண்ணன் கருப்பையா, 14.12.2000 அன்று வழக்கை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றி சாட்சிகளை விசாரித்தால் தான் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் சாட்சியம் அளிக்க ஏதுவாக இருக்குமென, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அத்துடன் ஈரோடு வழக்குரைஞர் திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கக் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பிரிவு, மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்த வழக்கை சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அத்துடன் ஈரோடு வழக்குரைஞர் திருமலை ராஜனை அரசு சிறப்பு வழக்குரைஞராக நியமித்தும் உத்தரவிட்டது.

சேலம் அமர்வு நீதிமன்றத்தில் 5.2.2001 அன்று வழக்கு ஆவணங்கள் பெறப்பட்டு வழக்கு எண். எஸ்.சி. 10/2001 ஆகப் பதிவு செய்யப்பட்டது. வழக்கினை விசாரிக்க சாட்சிகள் மேலவளவில் இருந்தால் ஆபத்து எனக் கருதி, நாமக்கல் பகுதியில் அவர்களை வழக்குரைஞர்கள் தங்க வைத்தனர். இவர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளுக்கு வழக்குரைஞர்களே ஏற்பாடு செய்தனர். வழக்கு விசாரணை 2.4.2001 அன்று தொடங்கியது. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள நீதிபதி ஏ.ஆர். ராமலிங்கம், 26.7.2001 அன்று இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும் 23 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தார். மேலும், வன்கொடுமைத் தடைச் சட்டம் 1989இன் பிரிவின் கீழ் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படவில்லையெனத் தீர்ப்புரைத்தார்.

ஆகஸ்டு, செப்டம்பர் 2001இல் ஆயுள் தண்டனை பெற்ற 17 பேரின் மேல் முறையீடும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் விடுதலை செய்யப்பட்ட 23 பேர் தொடர்பான சீராய்வு மனுவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. (இதற்கிடையில் தண்டனை பெற்ற அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளிவந்தனர். இவர்களது ஜாமீனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக என். பூபாலன் என்பவர் தொடுத்த மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றம், 17 பேருக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை பிப்ரவரி 2005இல் ரத்து செய்து, இவர்கள் அனைவரையும் சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டது.)

முருகேசனின் அண்ணன் கருப்பையா, தமிழக அரசுக்கு தமது 10.8.2001 நாளிட்ட கடிதம் மூலம் ஆந்திர மாநில மூத்த வழக்குரைஞர் கே.ஜி. கண்ணபிரானை, உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மற்றும் சீராய்வு மனு விசாரணையில் அரசு வழக்குரைஞராக நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசு இந்த முறையீட்டின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காததால், இம்முறையீட்டின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 1.10.2004 அன்று மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அசோக்குமார், இவ்வழக்கில் சட்டப் பிரச்சினை உள்ளதாகவும், அரசுக்கு நிறைய செலவு ஆகுமென்பதால் வழக்கை தலைமை நீதிபதிகள் பி. சதாசிவம் மற்றும் எஸ்.ஆர். சிங்கார வேலு ஆகியோர் அடங்கிய பிரிவிற்கு மாற்றி விசாரிக்க அனுப்பி வைத்தார். இவ்வழக்கை விசாரித்தவர்கள், அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அய். சுப்பிரமணியம், இவ்வழக்கைத் திறமையாக நடத்தும் தகுதி பெற்றவர் எனக் கூறி விசாரணையை முடித்துக் கொண்டனர்.

அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அய். சுப்பிரமணியம், 16.11.2005 அன்று விலகிக் கொண்டார். மூத்த வழக்குரைஞர் கே. துரைசாமி அரசு குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவரும் விலகிக் கொண்டார். மீண்டும் வழக்குரைஞர் குழு கே.ஜி. கண்ணபிரானை இவ்வழக்கில் அரசு சார்பில் நியமிக்கும்படிக் கோரி, தமிழக அரசின் உள்துறைச் செயலரிடம் 16.11.2005 அன்று மனு அளித்தனர். இம்மனுவின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு 16.12.2005 அன்று தமிழக அரசு மேலவளவு வழக்கில் அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன், அரசு, தரப்பில் ஆஜராவார் என்று அறிவித்ததன் பேரில் முடித்துக் கொள்ளப்பட்டது. இறுதியாக, 19.4.2006 அன்று வழங்கிய தீர்ப்பில் 17 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. அரசு மேல் முறையீடு செய்யாததால், 23 பேர் விடுதலை செய்யப்பட்டதில் எதுவும் செய்வதற்கில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலவளவு படுகொலை விசாரணை முழுக்க சந்தித்த தடைகள் எண்ணிலடங்கா. கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற வேறு எந்தவொரு தலித் வழக்கைக் காட்டிலும், மேலவளவு வழக்கு அனைவராலும் பரவலாகப் பேசப்பட்டது. இருப்பினும், இத்தகையதொரு வழக்கில் கூட நீதி பெறுவதற்காக நாம் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்றொரு கருத்து, இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக வேரூன்றப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. "மேலவளவு பஞ்சாயத்தில் ஒரு தலித் தலைவனானால், அவன் தலையே இருக்காது' என்று சொல்லி பட்டவர்த்தனமாக பொது மக்கள் முன்னிலையில் ஆறு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட ஒரு கொடூரத்தைக் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 860இன் கீழ் ஆயுள் தண்டனை அளிக்க முன்வந்த நீதிமன்றம், கொலையுண்ட காயம்பட்ட அனைவரும் தலித்துகள் என்பது நன்கு தெரிந்திருந்திருந்தும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளவில்லை. இச்சட்டத்தை சரியாகப் பயன்படுத்தக்கூட, சாதிய அரசு எந்திரங்களும் "கள்ளர்' ஆதிக்க காவல் துறையும் முனைவதில்லை என்பது மேலும் நிரூபணமாகியிருக்கிறது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் படாததால், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது, கோடிட்டுக் காட்டப்பட வேண்டிய செய்தி. இவ்வளவு இடர்ப்பாடுகளைக் கடந்தும் 23 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில், தலித்துகளுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு செய்த அதே தவறை, தி.மு.க. அரசும் செய்யப் போகிறதா என்பது அது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போகிறதா, இல்லையா என்பதைப் பொருத்தே தெரியவரும்.

மேலவளவு போராளிகளுக்கு "விடுதலைக் களம்' அமைப்பது, எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு மேலவளவு கொலையாளிகள் "விடுதலை' பெற்று விடாமல் பார்த்துக் கொள்வதும் மிக மிக இன்றியமையாததாகும். தேர்தல் நேரத்தில் மேலவளவு தொடர்பாக வெளிவந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அறிக்கை கூட வெளியிடாதது, மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது.

இன்றைக்கு வரலாற்றை முன்மொழியும் முயற்சியாக, அயோத்திதாசர் தொடங்கி, கீழ் வெண்மணி கொடுமைகள் போன்றவை தோண்டியெடுக்கப்பட்டு, அன்றைய இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதே நேரத்தில் தற்கால வரலாறும் செப்பனிடப்பட வேண்டும். இல்லை எனில், தலித் இயக்கங்களின் தற்கால "சமரச வரலாறு'களை எதிர்காலத் தலைமுறை விசாரிக்கும். பழம் பெரும் வரலாறுகளையும், பழந்தலைவர்களையும் ஆராதிப்பது மட்டுமே தலித்துகளை விடுதலை செய்துவிடாது. அத்தலைவர்களின் சிந்தனைகளை தற்காலப் பிரச்சினைகளுடன் பொருத்திப் பார்த்து, களப்பணி ஆற்றுவதன் மூலமே வரலாற்றை நேர் செய்ய முடியும்.

 

-அய்.இளங்கோ
Pin It