சாதி ஒழிப்பு தொடர்பாக - கடந்த ஜூலை 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக்பென் மற்றும் மார்க்கண்டே கட்ஜீ ஆகியோரடங்கிய ‘அமர்வு’ அளித்துள்ள தீர்ப்பு, பாராட்டி வரவேற்கத்தக்கதாகும். உ.பி. லக்னோவைச் சேர்ந்த லதாசிங் என்ற பெண், டெல்லியைச் சார்ந்த பிரேமானந்த் குப்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள். பெண் வீட்டைச் சார்ந்தவர்களின் தூண்டுதலால், காவல் துறை மணமகன் வீட்டார் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து கைது செய்தது.
இதை எதிர்த்து, மணமகள் லதாசிங், உச்சநீதிமன்றத்தில் துணிவுடன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், காவல்துறையின் நடவடிக்கைகளைக் கைவிட உத்தரவிட்டதோடு, “இந்த நடவடிக்கைகள் அதிர்ச்சியாக இருக்கிறது. வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் விரும்பி திருமணம் செய்து கொள்வதை இந்துத் திருமணச் சட்டம் உட்பட எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. இதில், இந்த தம்பதிகளோ, மணமகன் வீட்டாரோ என்ன குற்றம் செய்தனர்?” என்று கேட்டுள்ளது. நீதிபதி கட்ஜீ தனது தீர்ப்பில் - சாதி அமைப்பை கடுமையாக சாடியுள்ளார்.
“சாதி அமைப்பு தேசத்துக்கு ஒரு ‘சாபக் கேடு’. எவ்வளவு விரைவில் இதை அழித்து ஒழிக்கிறோமோ, அவ்வளவு நல்லது. சவாலை சந்திக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரத்தில், சாதி சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது. எனவே சாதி மறுப்புத் திருமணங்களை தேசிய நலன் கருதி வரவேற்க வேண்டும்.
இது தான் சாதி அமைப்பை அழித்து ஒழிக்கும். ஆனாலும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறவர்கள் அச்சுறுத்தப்படுவதும், மிரட்டப்படுவதும், அவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதுமான கவலை தரக்கூடிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இத்தகைய நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானவை. கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவை. இது சுதந்திர, ஜனநாயக நாடு. வயதுக்கு வந்தவர்கள், விரும்புகிறவர்களை திருமணம் செய்ய உரிமை உண்டு. வெவ்வேறு சாதியாக இருக்கலாம் வெவ்வேறு மதமாக இருக்கலாம்; பெற்றோருக்கு உடன்பாடு இல்லை என்றால், தங்கள் உறவுகளைத் துண்டித்துக் கொள்ளலாம்; அதற்காக அச்சுறுத்தல், துன்புறுத்தல், வன்முறையை ஏவி விடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.
இந்த நடவடிக்கைகள் காட்டுமிராண்டித்தனமானவை; கொடூரமான நில பிரபுத்துவ சிந்தனை கொண்டவை. இவர்களை எவ்வளவு கடுமையாகத் தண்டித்தாலும் தகும்” என்று நீதிபதி மிகச் சிறப்பாக தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். வரிக்கு வரி பொன்னெழுத்துக்களால், பொறிக்கப்பட வேண்டிய கருத்துகள்.
பெரியாரும், அம்பேத்கரும் எந்த லட்சியத்துக்காகப் போராடி, எந்தக் கருத்தைப் பரப்பினார்களோ, அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகப் பதிவாகியிருக்கிறது. எப்போதாவது அத்திப் பூத்தாற்போல், உச்சநீதிமன்றத்திலும் இத்தகைய அதிசயங்கள் நிகழவே செய்கின்றன.
கல்வி உயர்கல்வி வளர்ச்சிப் பெருகும்போது, காதல் திருமணங்களும் தடைகளைத் தகர்த்து நிகழ்கின்றன. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் கிடைக்கும் கல்வியின் பயன், சாதி ஒழிப்புக்கே பயன்படுகிறது என்பதற்கு, இந்த சாதி மறுப்பு காதல் திருமணங்கள் சான்றுகளாக இருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ளூர் சாதி வெறி எதிர்ப்புக்கு, மிரட்டலுக்கு அஞ்சி, பல காதலர்கள், சென்னை மாநகரக் காவல்துறையிடம் பாதுகாப்பு தேடிவருவதைப் பார்க்கிறோம். உள்ளூர் காவல்துறையில் நீதி கிடைக்குமா என்ற அச்சத்திலும், ஏடுகளில் செய்தி வெளிவந்து விட்டால், தங்களைப் பிரித்து விட முடியாது என்ற நம்பிக்கையாலும் இவர்கள் சென்னை மாநகரக் காவல்துறையை நோக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை இயக்குனர் லத்திகா சரண் வெளியிட்டுள்ள ஒரு கருத்து ஏமாற்றமும், வேதனையும் தருவதாக இருப்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
அச்சுறுத்தலிலிருந்து காப்பாற்றக் கோரி, மாநகரக் காவல் துறைக்கு வரும் காதல் இணையர்களின் புகார்களை உள்ளூர் காவல் நிலையத்துக்கே திருப்பி அனுப்பப்படும் என்று லத்திகா சரண் கூறியுள்ளார். உள்ளூர் காவல்துறை இதில் நியாயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது. குறைந்த வயதுள்ளவர்கள் திருமணம் செய்ய முன் வந்தால் தடுக்க வேண்டியது தான்.
அதற்கான சான்றுகளை மாநகர காவல்துறை கேட்டுப் பெறலாம். உள்ளூர் காவல்துறையிடம் விசாரித்துக் கேட்டறியலாம். அதற்காக - பாதுகாப்பு தேடி வருகிறவர்களை மீண்டும் உள்ளூருக்கு திருப்பு அனுப்புவது, நியாயம் வழங்குவது ஆகாது. எனவே, சென்னை மாநகரக் காவல்துறை இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
அய்.அய்.டி. தலித் மாணவனின் சாதனை
திலீப் மாஸ்கே என்ற தலித் மாணவர். கான்பூர் அய்.அய்.டி.யில் படித்து தேர்ச்சி பெற்றவர். மகாராஷ்டிரா மாவட்டம் ஜால்னா மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில், குடிசையில் மின்சார விளக்குகூட இல்லாத சூழலில் வளர்ந்தவர். அப்பா நிலமில்லாத கூலித் தொழிலாளி. அய்.அய்.டி.யை முடித்த அந்த மாணவன், தனது மாநிலத்தில நிலமற்ற ஏழை மக்களைப் பற்றிய கள ஆய்வுப் பணியில் இறங்கினார்.
கிராமம் கிராமமாகப் போய் அரும்பாடுபட்டு, தகவல்களை சேகரித்து அறிக்கை ஒன்றை தயாரித்து, மாநில அரசிடம் அளித்தார். நிலச் சீர்த்திருத்தங்களுக்கு ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை முன் வைத்த அந்த ஆய்வை, மகாராஷ்டிரா அரசு ஏற்றுக் கொண்டு, செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. இதனால் 18 லட்சம் நிலமற்ற தொழிலாளர்களுக்கு நிலம் கிடைக்கவிருக்கிறது.
தலித் மாணவரின் இந்த அரியத் தொண்டினைப் பாராட்டி அமெரிக்காவின் சர்வதேச மனித உரிமை மற்றும் சுகாதாரத்துக்கான அமைப்பு, 2006 ஆம் ஆண்டுக்கான ‘ஜொனாத்தன் பான்’ என்ற சிறப்பு விருதை, அந்த 27 வயது மாணவருக்கு வழங்கியுள்ளது.
விருது பெறுவதற்கு கடந்த வாரம் வாஷிங்டன் புறப்பட்ட அந்த மாணவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், “தகுதி என்று தனியாக எதுவும் குதிப்பது இல்லை; வாய்ப்புகளை வழங்குவது தான் முக்கியம். நான் இடஒதுக்கீட்டினால், பயன் பெற்றேன். எனது ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். இந்த விருதைப் பெறுவதற்கு 38 நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையே நடந்த போட்டியில் வெற்றி பெற்று, இவர் தேர்வாகியுள்ளார்.
இந்தியாவைச் சார்ந்த ஒருவர், இந்த விருதை இப்போதுதான் முதல் முறையாகப் பெறுகிறார். ‘திலீப், சாதனைத் திலகமே! ஒடுக்கப்பட்ட சமுதாயதை நீ தலை நிமிரச் செய்து விட்டாயப்பா’ என்று வாழ்த்தத் தோன்றுகிறது. பார்ப்பன ஊடகங்களால் இருட்டடிக்கப்பட்டுவிட்ட செய்தி இது!
தகவல் : புதுடெல்லியிலிருந்து உதித்ராவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘வாய்ஸ் ஆப் புத்தா’ மாதமிருமுறை ஏடு.