2016 மார்ச்சு 12 ஆம் நாளன்று உடுமலைப் பேட்டையில் நடைபெற்ற சங்கரின் ஆணவப் படுகொலை தமிழகத்தையே அதிர்ச்சியில் உறையச் செய்தது. 32 வெட்டுக் காயங்களோடு சங்கர் கொல்லப் பட்டதோடு, கவுசல்யாவும் மிகக் கடுமையாகத் தாக்கப் பட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் கீழமை நீதிமன்றம், கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி மற்றும் மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரை 2017 திசம்பர் 12 அன்று விடுதலை செய்தது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட ஆறு பேருக்குத் தூக்கு தண்டனையும், ஸ்டீபன் தனராசுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கப் பட்டது.
(கோவை சிறையிலிருந்து விடுதலையான சின்னசாமியை வரவேற்கும் சாதிக் கூட்டம்)
இத்தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் இரு தரப்பின் சார்பிலும் மேல் முறையீடு செய்யப் பட்டது. அதனடிப்படையில் இப்பொழுது தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையும், மேலும் இருவரது தண்டனையும் நீக்கம் செய்யப்பட்டு விடுதலை ஆகியுள்ளனர். எஞ்சியுள்ள ஐவரது தூக்கு தண்டனை, 25 ஆண்டு கால ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே அன்னலட்சுமி உள்ளிட்ட மூன்று பேரது விடுதலையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றம் தற்பொழுது அளித்திருக்கும் இத்தீர்ப்பு, தமிழகத்தில் பரவலான அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. இருப்பினும், இவ்வழக்கு தொடர்பாக எழுப்பப்பட்ட 5 முக்கிய வினாக்களுக்கு உயர் நீதிமன்றத் தீர்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
(1) சங்கருடனான திருமணத்திற்குப் பிறகு, தனது தந்தை சின்னசாமி மீது கவுசல்யா கொடுத்த புகார் திரும்பப் பெறப்பட்டது பற்றிய விளக்கம் -
திருமணத்திற்குப் பிறகு, தனது குடும்பத்தினர் தனக்குத் தொல்லை கொடுக்க மாட்டார்கள் எனக் கருதியதாலும், கவுசல்யாவிடமிருந்த நகைகள் மற்றும் பொருள்களை குடும்பத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டு விட்டதாலும், ஒரு வகையான சமரச அடிப்படையில் கவுசல்யாவே வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
(2) தந்தை சின்னசாமி, குற்றம் சாட்டப் பட்டவர்களோடு அடிக்கடி செல்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசி வந்தார் என்பதற்கான விளக்கம் -
குற்றம் நடைபெறும் முன்பு இப்படிப்பட்ட உரையாடல் நடைபெற்றிருந்தாலும், குற்றத்தை மெய்ப்பிக்க மேற்காண் உரையாடல் பதிவு செய்யப்படவில்லை. அது நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப் படவில்லை.
(3) தந்தை சின்னசாமி, ஏடிஎம் மூலம் பல முறை பணம் எடுத்து, குற்றவாளிகளுக்குக் கொடுத்துள்ளார் என்பதற்கான விளக்கம் -
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்ததற்கான சிசிடிவி காட்சிகளைச் சாட்சியமாக வழங்கவில்லை.
(4) தந்தை சின்னசாமி, குற்றவாளிகளுக்குத் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தந்தார் என்பதற்கான விளக்கம் -
குற்றவாளிகள் தங்கிய விடுதியின் பதிவேட்டையோ, கட்டணச் சீட்டையோ காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. விடுதிக் காப்பாளர்கள் நீதிமன்றத்தில் வாய்மொழி ஒப்புதல் தந்த போதிலும், அதற்கு வலிவூட்டத் தேவையான சான்றுகள் தரப்படவில்லை. (No Hard evidence)
(5) குழந்தைகள் பூங்காவிலும், பழநியிலும் படுகொலைக்கான சதித் திட்டத்தைக் குற்றவாளிகள் தீட்டிக் கொண்டிருந்தார்கள் என ஒர் ஆட்டோ ஓட்டுநர் கூறியது பற்றிய விளக்கம் -
ஆட்டோ ஓட்டுநர் 70 மீட்டர் தொலைவில் இருந்து இதைக் கேட்டதாகக் கூறியது ஏற்கத் தக்கதல்ல. அவ்வளவு தொலைவில் இருந்து சிலர் பேசுவதை மற்றவர்கள் கேட்க முடியாது.
மேலும் படுகொலை நடந்த இடத்தில் சின்னசாமி இருக்கவில்லை. தவிரவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உரிய ஆவணங்களுடன் மெய்ப்பிக்கப் படவில்லை. காவல்துறை வாதத்தில் நிறையப் போதாமை உள்ளது. எனவே கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப் பட்டுள்ளார்.
பிற குற்றவாளிகள் குறித்து கவுசல்யா கொடுத்த வாக்குமூலமும், நேரடி சாட்சிகள் தந்த வாக்குமூலமும் ஏற்கப்பட்டு அவர்களுக்கு 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
வழக்கு தரும் படிப்பினைகள் -
(1) திருப்பூர் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற பொழுது, கவுசல்யாவும் ஏனைய பல இயக்கங்களும் அவ்வழக்கினைத் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். ஆனால், வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட பொழுது வழக்கு செல்லும் போக்கு குறித்து உரிய கண்காணிப்பு இல்லாமல் போய் விட்டது. தனது ஒத்துழைப்பு முறைப்படி தமிழக அரசால் அப்பொழுது கோரப்படவில்லை என்று கவுசல்யாவே கருத்துத் தெரிவித்துள்ளார்.
(2) சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களின் செயல்பாடு மனநிறைவு கொள்ளத் தக்க வகையில் இருக்கவில்லை எனத் தொல்.திருமாவளவன் அவர்களும், மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களும் கூறியிருப்பது கருத்தில் கொள்ளத் தக்கதாகும்.
(3) இவ்வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். கவுசல்யாவும் மேல் முறையீடு செய்யப் போவதாக அறிவித்து உள்ளார். அதே போல, பிற அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
(4) பணத்திற்கு ஆசைப்பட்டு, கூலிப்படையாகச் செல்லும் இளைஞர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாகும். குற்றத்தில் தொடர்புடைய முக்கியமானவர்கள் அனைவரும் தற்பொழுது தப்பி விட்டனர். எஞ்சிய 5 இளைஞர்கள்தான் இப்பொழுது 25 ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். கூலிப்படை இளைஞர்கள் இதற்கு முன்னால் எத்தகைய பெரிய குற்றச் செயலிலும் ஈடுபட்டவர்கள் அல்ல என்பது குறிப்பிடத் தக்கதாகும். எனவே இவ்வழக்கின் தீர்ப்பு, கூலிப்படையாகச் செயல்படுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை ஆகும்.
(5) "சட்டம் ஓர் இருட்டறை. வழக்கறிஞரின் வாதம் அதில் ஒரு கை விளக்கு " என்றார் அறிஞர் அண்ணா. கொடுமை கண்டு பொங்கி எழுந்து சாலையில் போராடும் சனநாயக இயக்கங்கள், சட்ட அரங்குகளிலும் அதே அளவு அர்ப்பணிப்போடு போராட வேண்டும். இல்லாவிட்டால், மிகக் கொடிய குற்றவாளிகள் கூட சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பி விடுவார்கள். இந்தப் படிப்பினையையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலவளவு முருகேசன் படுகொலை, கண்ணகி படுகொலை போன்ற பல வழக்குகளை இதற்குச் சான்றாகச் சுட்டிக் காட்டலாம்.
(6) சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான கோரிக்கை ஆகும். இந்திய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் இதற்காகத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளன.
உச்ச நீதிமன்றமும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக இரண்டு முறை தீர்ப்பளித்து உள்ளது. அத்துடன் 2006 சூலை 7 ஆம் நாளன்று லதா சிங் குறித்த வழக்கில் தீர்ப்பளித்த பொழுது, "சாதி அமைப்பு, நாட்டைப் பீடித்துள்ள சாபம் ஆகும். அது எவ்வளவு விரைவில் அழிக்கப் படுகிறதோ, அந்த அளவுக்கு நல்லது. சாதி மறுப்புத் திருமணங்கள், உண்மையில் நாட்டு நலனுக்கானவை. அவற்றின் விளைவாகச் சாதி அமைப்பு அழியும். எனவே வயது வந்த ஓர் ஆணோ, பெண்ணோ சாதி கடந்து அல்லது மதம் கடந்து திருமணம் செய்து கொண்டால், அவர்களது திருமண வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. யாராவது தானாகவோ அல்லது பிறரைத் தூண்டி விட்டோ அத்தகைய அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்தல் அல்லது வன்முறைச் செயலில் ஈடுபடுவாரானால், அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது, தொடர்புடைய அதிகாரிகளின் பொறுப்பு ஆகும்" என்றும் அது தனது கருத்தைத் தெளிவாக்கி இருக்கிறது,
மேலும் அசோக்குமார் தோடி (எதிர்) கிஸ்வர் ஜகான் மற்றும் பிறர் குறித்த வழக்கிலும் இதே கருத்தை உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
எனவே சாதி ஆணவப் படுகொலைக்குத் தனிச் சட்டம் இயற்றுவதற்கு, சட்ட வழியிலான தடையோ அல்லது தார்மீக வழியிலான இடையூறோ சிறிதளவும் இல்லை. ஆகவே தாமதிக்காமல் ஒன்றிய அரசு தனிச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
(7) தனிச் சட்டம் இயற்றப்படும் வரை, பஞ்சாப் மாநில அரசில் பின்பற்றப்படும் நடைமுறையினைத் தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மீது பெற்றோர், உறவினர் போன்றோர் தாக்குதல் தொடுக்கும் ஆபத்து உள்ளது. எனவே அப்படிப்பட்ட நெருக்கடியைத் தவிர்க்க, பஞ்சாப் அரசின் சார்பாகப் பாதுகாப்பு இல்லங்கள் பரவலாக உருவாக்கப் பட்டுள்ளன. நிலைமை சீரடையும் வரை திருமண இணையர்கள் அரசின் பாதுகாப்பில் தங்கிக் கொள்ளலாம். இதைப் போன்ற நடைமுறையைத் தமிழக அரசும் பின்பற்ற வேண்டும்.
சங்கரின் படுகொலைக்கு முக்கிய காரணமானவர்கள் குற்றச் செயலிலிருந்து தப்பி விட்டால், தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே அது தவறான எடுத்துக் காட்டாக மாறிவிடும். தவிரவும், மக்களுக்கு நீதிமன்றங்கள் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விடும். எனவே உச்ச நீதிமன்றத்தில் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்து, சிறந்த சட்ட வல்லுநர்கள் மூலம் நீதியை நிலை நாட்ட வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அந்தக் கடமையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- கண.குறிஞ்சி