கீற்றில் தேட

dyfi_logo_100

தொடர்பு முகவரி: 57/21, அருணோதயா காம்ப்ளக்ஸ் 2வது மாடி,
ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 03.
தொலைபேசி: 044-25611348
ஆண்டு சந்தா: ரூ.75

 

இத்தலையங்கத்தை எழுதும் நாளில், உண்ணாவிரதம் 11வது நாளைத் தொட்டுள்ளது. 75 வயது அன்னா ஹசாரே கடந்த 6 மாதமாக ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டம் பரவலான மக்களைச் சென்றடைந்துள்ளது மட்டுமல்ல, தன்னிச்சையாக போராடவும் தூண்டியுள்ளது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாட்களைக் கடத்தி உடல்நிலையைக் காரணம் காட்டி போராட்டத்தை முடிக்கப் பார்த்தது மத்திய அரசு. இறுதியில் நாடாளுமன்றத்தில் சட்டம் மீது விவாதம் நடத்த அரைமனதோடு ஒத்துக்கொண்டு, நாங்களும் ஊழலுக்கு எதிரானவர்கள்தான் என ஊர் ஊராக பேசுகிறது காங்கிரஸ். ஆனால்,உண்ணாவிரதம் என அறவழிப்போராட்டத்தை அறிவித்த நாள் முதல் மத்திய காங்கிரஸ் அரசு போராட்டத்தை ஒடுக்குவதாக நினைத்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் அக்கட்சியையும் அம்பலப்படுத்தியுள்ளது, மக்களையும் போராட்டத்தை நோக்கி ஈர்த்துள்ளது..

இப்போராட்டத்தை இந்திய சுதந்திர வரலாற்றில் முதலில் நடந்த ஊடகங்களின் போராட்டம் என்று தாராளமாக வர்ணிக்கலாம். உலகமெங்கும் நடக்கும் போராட்டத்தை பார்த்து உத்வேகமடையும் இந்திய இளைஞர்களுக்கு ஊடகங்கள் கொடுத்துள்ள அசைன்மெண்ட் என்றும் கூட சொல்லலாம். ஒரு தனி மனிதரின் போராட்ட உறுதியை பாராட்டும் நாம், அவரால் எப்படி சாத்தியமானது என்று கேட்டால் ஊடகங்களைப் பார்த்து தான் பதில் சொல்லவேண்டியுள்ளது. ரட்சகரைப் போல் அவரைப் போற்றுவதற்கு இந்திய நடுத்தர மக்களின் மனநிலையை தயார் செய்த ஊடகங்கள் ஊழல் பிறக்கும் வழிகள் என்ன என்பதை ஸ்பெசல் ஸ்டோரி மூலம் எதிர்காலத்தில் சொல்வார்களா என பார்க்கலாம். இரண்டாவது சுதந்திரப்போராட்டம் என்று அன்னா குழுவால் பெயரிடப்பட்டுள்ள இப்போராட்டம் பிரதமர் வீடு,மந்திரிகளின் வீடு முற்றுகை என தீவிரமாகிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், துளியும் அரசியல் கலப்பின்றி போராட்டம் நடைபெறுவதாகவே கருதப்படுகிறது. அப்படியெனில், இரண்டாவது சுதந்திரத்திற்கு பின் நாட்டை ஆளவேண்டிய தகுதி யாருக்கும் இல்லையா என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

கடந்த 65 ஆண்டுகளாக யாரை தேர்ந்தெடுத்துள்ளார்களோ அவர்கள் செய்த ஊழல்களை எதிர்த்துத் தான் தாங்கள் போராடுகிறோம் என்பதே தெரியாமல் மக்கள் போராடுவது தான் வேதனையாக இருக்கிறது. ஆம். ஒரு போராட்டம் என்பது தவறுக்கு காரணமான ஒன்றை நீக்கி புதிய ஒன்றை தீர்வென முன்வைப்பதே ஆகும். ஆனால், இப்போராட்டத்தில் யாரை நீக்கி, யாரை முன் நிறுத்த வேண்டும் என்பது விவாதமாகவில்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது. லோக்பால் வேண்டுமா என்றால், ம்ம்ம்...என தலையை மேலும், கீழும், முன்னும், பின்னும் ஆட்டும் பா.ஜ.க. கர்நாடகத்தில் லோக் அயுக்தாவை வேண்டாம் என்கிறது. பா.ஜ.வின். முன்னாள் மத்திய அமைச்சர் உள்பட மூன்று எம்.பி.க்களும் அக்கட்சியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர். காரணம் பா.ஜ.க. ஊழல் எதிர்ப்பில் இரட்டை வேடம் போடுகிறது. முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பாவை இறக்கிட படாத பாடுபட்ட பா.ஜ.க. இறுதியில் கட்சியில் மாநிலத்தலைவர் பதவியை கொடுத்துள்ளதே தவிர அதிகாரத்தில் இருந்து விலக்கவில்லை.

காங்கிரஸை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் பா.ஜ.க.வை எதிர்த்து காங்கிரஸ் என்பது தான் அவ்விரு தேசியக் கட்சிகளுக்கும் உள்ள அரசியல் கொள்கை. அரசியலில் ஆர்வம் இல்லையெனினும், சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு போராட்டங்களில் உணர்வுப்பூர்வமாக பங்கெடுக்கும் இளைஞர்களைப் பாராட்டும் அதே வேளையில் அவர்களின் கோபமும், எதிர்பார்ப்பும் தேசத்திற்கு உண்மையாக பலனளிக்க வேண்டுமெனில் இப்போராட்டத்தின் திசைவழியை விவாதிக்க வேண்டியது சமூகப்போராளிகளும், அறிவுஜீவிகளும் செய்யவேண்டிய அரசியல் பணி. ஒரு தனி மனிதர் நாடாளுமன்றமும், அரசியல் கட்சிகளும் என்ன செய்யவேண்டும் என்பதை ஒரு உண்ணாவிரதம் மூலம் தீர்மானிப்பார் எனில் ஜனநாயகம்..? வரலாற்றில் மக்களின் கடமை என்ன.

அரசியல் கலப்பின்றி இப்போராட்டம் நடக்கவேண்டும் என்பது நடுத்தர மக்கள் மனநிலை. ஆனால், வரப்போகும் லோக்பால் புதிய சட்டத்தை யார் அமல்படுத்தப்போவது யார் இன்று இதர சட்டங்களை மீறி ஊழல் செய்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்ல விரும்புவதில்லை. இதுவரை இந்திய அரசியலில் ஊழல் கறைபடியாதவர்களாகவும், இன்றும் வலுவான லோக்பால் சட்டத்துக்காக மட்டுமல்ல, தேர்தல் சீர்திருத்தம், நீதித்துறையை கட்டுப்படுத்தும் ஏற்பாடு எனவும் சமரசமில்லாமல் போராடும் இடதுசாரிகள் மட்டுமே இந்தியாவை ஆளத்தகுதியானவர்கள். இப்போராட்டம் எழுப்பும் குரல்களின் மூலம் பரவ வேண்டிய நம்பிக்கை இடதுசாரி அரசியலின் மீதான ஒற்றுமையாக மாறவேண்டும். இல்லையெனில், இப்போராட்டம் நிச்சயம் தேசத்திற்கு பலனளிக்கப்போவதில்லை. ஒரு சட்டம் மட்டும் தேசத்தை சரியான வழியில் நடத்திட உதவாது. சட்டம் பூமாலையாக இருந்தாலும் ஆள்பவர்கள் குரங்குகளாக இருந்தால் ... பயன் என்ன தேசத்திற்கு?

-ஆசிரியர் குழு.

Pin It

 

முதுகெலும்பு ஒடிந்த தேசமாக மாறிவருகிறது இந்தியா. இந்தியாவின் எதிர்காலம் என வர்ணிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்காலம் தேடி முடிவில்லா பயணத்தை துவக்கியிருக்கின்றனர். இந்திய கிராம சமூகம் என்பது சுயபூர்த்தி கிராமங்களாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திகழ்ந்ததாகவும், முகலாயரும், வெள்ளையரும் ஆட்சியைப் பிடித்த போதும் கூட கிராமங்கள் எவ்வித மாற்றமுமின்றி அப்படியே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மாற்றங்களே நிகழாமல் கிராமங்கள் இருந்தது என்றில்லை, இந்தியாவிற்கே உரிய பிரத்யேக தன்மையோடு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருந்தது. ஆனால் கிராமங்களின் வளங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் பார்த்துக் கொள்ளப்பட்டதாக அர்த்தப்படுத்தப்படுகிறது.

இன்று கிராமங்கள் எல்லாம் தலைகீழாக மாறிப்போய் விட்டது. பொருளாதாரம் தான் அனைத்து மாற்றங்களுக்கும் அடிப்படை என்பதற்கிணங்க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், கிராமப்புற பொருளாதாரம் முற்றிலும் நலிவுற்று, மக்கள் பிழைப்பை தேடி நகரங்களை நோக்கி தள்ளப்படுகின்றனர்.இருந்தாலும் நாட்டின் மக்கள் தொகையில் 72.2 சதமானவர்கள் சுமார் 6,30,000 கிராமங்களில் வசிக்கின்றனர். மீதமுள்ள 27.8 சதமானவர்கள் மட்டுமே 5,480 நகரங்களில் வசிக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் இன்று விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது அதன் விளைவு கிராமத்தில் உள்ள பெரும் பகுதி மக்கள் நகரத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து மக்கள் பிழைப்பை தேடி நகரங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் சென்றது இப்போது மட்டுமல்ல காலம் காலமாய் நடந்து வந்தது தான். நாம் அடிமைப்பட்டு கிடந்த காலத்தில் பினாங்கு, பர்மா, இலங்கை, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கு பிழைப்பைத் தேடி சென்றார்கள். 70களில் மக்கள் பிழைப்பைத் தேடி வெளியேறினார்கள். ஆனால் கிராமத்தில் விவசாய வேலை இல்லாத காலத்தில் மட்டுமே அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று வேலை செய்து விட்டு மீண்டும் அறுவடைக் காலத்தில் கிராமத்திற்கு வந்து விடுவார்கள். அதே போல் பஞ்சம் பிழைக்கப் போவதும் வெறும் ஆண்கள் மட்டுமே செல்வார்கள், தற்போது கிராமத்தில் விவசாய வேலை இல்லை, விவசாய உற்பத்திக்கு நியாயமான விலை இல்லை, விவசாயத்திற்கு தேவையான இடு பொருட்களின் விலை உயர்வு, இப்படி தொடர் தாக்குதல், மறுபுறம் குறைவான கூலியும், சாதியின் பெயரால் இழிவும் என வாழ்வின் நெருக்கடி காரணமாக பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக, கிராமம் கிராமமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் இடம் பெயர்கின்றனர்.

நகரமயமாதல்: 

நகரமயமாதலின் அடிப்படையே இடம் பெயர்தல்தான். விவசாயம் பொய்த்துப்போகிறது. விவசாயத்தை நம்பி இனி குடும்பம் நடத்த முடியாது, உயிர்வாழ முடியாது என்ற நிலையில் தனியாகவோ, குடும்பம் குடும்பமாகவோ சின்ன சின்ன கூலி வேலைகளை தேடி நகரங்களை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

கடந்த இருபதாண்டில் நகரமயமாதலின் வேகம் மிகவும் அதிகமாகியுள்ளது. குறிப்பாக தற்போது தேசம் முழுமையிலும் தமிழகம் தான் நகரமயமாதலில் முதலிடம் வகிக்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 48.45 சதமானோர் நகரங்களில்தான் வசிக்கின்றனர். அதாவது தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையான 7.23 கோடியில் 3.49 கோடி பேர் நகரங்களில் தான் உள்ளனர்.

குறிப்பாக, தமிழகத்தில் வட மாவட்டங்கள் முழுமையும் வேகமாக நகர்மயமாகி வருகிறது. சென்னை ஏறக்குறைய நூறு சதவிகிதமும், சென்னை அருகில் உள்ள மாவட்டங்களான திருவள்ளூர் 65.3 சதமும், காஞ்சிபுரம் 63.59 சதமும் நகரமயமாகியுள்ளதாக புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. தமிழகத்திலேயே சென்னையை அடுத்த நகரமயமாகியுள்ள மாவட்டம் கன்னியாகுமரியாகும். அங்கு 82.47 சதம் நகரமயமாகியுள்ளது.

தமிழகத்தின் தற்போதைய அதிமுக அரசின் பட்ஜெட்டில் கூட நகரமயமாதலுக்கான காரணம் மிகத் தெளிவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாயத்திற்கான பாசனத்திறன் மற்றும் பயிரிடும் திறன் தொடர்ந்து குறைந்து வருவது தமிழகத்தின் வேகமான நகரமயமாதலுக்கான காரணமென்றும், தமிழகத்தில் வெறும் 58 சதமான நிலங்கள் மட்டுமே தற்போது பாசன வசதி பெரும் நிலையில் உள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நகரமயமாதலை கட்டுப்படுத்தும் நோக்கோடு நகரங்களுக்கு இணையாக கிராமங்களை உயர்த்தப்போகிறோம் என்றும் இதே பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்காக “ஒருங்கிணைந்த கிராம கட்டுமான மேம்பாட்டு திட்டம்” இவ்வாண்டு முதல் செயல்படுத்தப்படுமென்றும் அதற்கு ஆண்டுக்கு 680 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

9 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்குவதற்கே 900 கோடி வரை ஒதுக்கும் அரசு கிராம மேம்பாட்டிற்கு ஒதுக்கும் நிதி வெறும் 680 கோடிதான்...! அதேபோல் வேளான் பாசனத்தை உயர்த்துவதற்கு அரசு ஒதுக்கும் திட்ட நிதி வெறும் 200 கோடிக்குள்தான்.

ஊரக வளர்ச்சி

மத்திய அரசின் பல்வேறு ஆய்வறிக்கைகளும் கிராமப்புற நெருக்கடியை ஒப்புக் கொள்கின்றனவே தவிர மாற்று நடவடிக்கைக்கான திட்ட ஒதுக்கீட்டை எந்த வகையிலும் உயர்த்திய பாடில்லை.

“இந்தியா கிராமங்களின் நாடு என்றும், கிராமங்களில் வசிப்பவர்களில் 50 சதமானோர் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏழ்மையிலேதான் இருக்கின்றனர்.” என்று பதினோறாவது ஊரக வளர்ச்சி குறித்த ஐந்தாண்டு திட்ட அறிக்கையே குறிப்பிடுகிறது.

இந்நிலையை மாற்ற கிராமங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை உயர்த்துவது, அதாவது பள்ளிகள், மருத்துவ வசதிகள், சாலை, மின்சாரம், குடிநீர், போக்குவரத்து போன்ற தேவைகளை பூர்த்தி செய்வது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்துவது விவசாயம் சார் தொழிற்சாலைகளை உருவாக்குவது, அதன்மூலம் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவது போன்ற தேவைகளை கிராமப்புற மக்களுக்கு வழங்குவது என்று பதினோறாவது ஐந்தாண்டு திட்டம் கூறியுள்ளது. கடந்த 2010-11 நிதி ஆண்டில் மத்திய அரசு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதி 9000 கோடி, கழிப்பிட வசதிக்காக ஒதுக்கியது 1580 கோடி மட்டும்தான் கிராமப்புற இந்தியாவை உயர்த்தக் கூறிய அனைத்து திட்டங்களும் சாத்தியப்படாமல் அடுத்தாண்டோடு இந்த ஐந்தாண்டு திட்டம் முடியப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே ஒன்றை நினைவுப்படுத்த வேண்டியுள்ளது. 10 ஆண்டுகளாய் இந்தியாவில் 2.50 லட்சம் விவசாயிகள் வாழ முடியாமல் வாங்கிய கடனை கட்ட முடியாமல், சொந்த கிராமத்தில் சுய மரியாதை இழந்து, வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாட்டின் ஒட்டுமொத்த உழைப்பு சக்தியில் சரிபாதிக்குமேல் விவசாயத்துறையில்தான் செலுத்தப்படுகிறது. ஆனால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்திய நாடடின் பொருளாதாரத்திலும் மற்றும் வேலைவாய்ப்பிலும் பெரும் பங்காற்றுவது 1.விவசாயத்துறை, 2. தொழில்துறை ,3. சேவைத்துறை இம்மூன்றும்தான். ஆனால் இன்று விவசாயத்துறையையும் தொழில் துறையையும் அழித்துவிட்டு சேவைத்துறையில் 13 சதம் வளர்ந்து விட்டோம் என பேசித் திரிகின்றனர் ஆட்சியாளர்கள். 1950 களில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியில் 60சதமாக இருந்தது விவசாயத்துறை தற்போது வெறும் 17சதமாக குறைந்துள்ளது. அதே போல் அன்று விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு 56சதமாக இருந்தது தற்போது வெறும் 22.3 சதமாக குறைந்துள்ளது அதிலும் இளைஞர்கள் பங்கேற்பு 2.3 சதமாக உள்ளது என்றால் இந்த விவசாயத்துறைக்கு 64 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் செய்தது என்ன.

தவறான பொருளாதாரக் கொள்கைகளால் விவசாயிகளுக்கான மானியம் வெட்டப்படுகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கடன்முறையாக கிடைக்காததால் கந்துவட்டி கடன் போன்றவைகளில் சிக்கித்தவிக்கின்றனர். அரசு மொத்தமாக அறிவிக்கும் கடன் தள்ளுபடி என்பது பெரும்பாலும் பெரும் நிலச்சொந்தக்காரர்களுக்குதான் பயன் தருகிறது.

இந்தியாவின் முக்கிய ஆதாரமான விவசாயத் துறையைப் பாதுகாக்காமல் இடம் பெயர்தலை தடுக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ள விவசாய நிலங்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நீர் ஆதாரமும் தேவைக்கு ஏற்ப ஆண்டில் சராசரியாக 110 செ.மீ மழை வளம் உள்ளது. உழைப்பதற்கு ஆற்றல் படைத்த 54 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா பின்னர் ஏன் நாட்டில் விவசாயம் அழிந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்திய நாடு முழுவதும் 75 லட்சம் ஏக்கர் நிலங்கள் வரை தரிசாக மாறிவருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டு விட்டன.

எப்படியோ கடினப்பட்டு பொருட்களை உற்பத்தி செய்தாலும், விளைபொருட்களுக்கான கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களே மக்களை விவசாயத்தை விட்டு வேறேதேனும் பிழைப்பை தேடி ஓட வைக்கிறது.

தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே இடம் பெயர்தலை சற்று குறைக்க முடியும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை என்பதற்கு பதிலாக குடும்பத்தில் உள்ள 20 வயதுடைய அனைவருக்கும் வேலை, முறையான கூலி என்பன போன்றவை சில முன்னேற்றங்களை உருவாக்கும்.

அதேபோல் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்குதல் மற்றும் மாவட்டங்களில் உள்ள கனிம வளங்களை பயன்படுத்தி அரசு புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதும், வேலை வாய்ப்புகளை படித்த கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

ஐந்தாண்டு திட்டங்களும், பலநூறு ஆய்வறிக்கைகளும் விவசாயம் குறித்தும், இடம்பெயர்தல் குறித்தும் அரசு முன்வைக்கிறதே தவிர, விவசாயியோ, விவசாயமோ முன்னேறிய பாடில்லை..... உழுதவன் இன்று கணக்கு பார்க்கையில் உழக்கு கூட மிஞ்சவில்லை.

Pin It

 

ஓடினேன். ஓடினேன் வாழ்க்கையின் ஓரத் திற்கே ஓடினேன், .சென்னையில் பிழைக்கலாம் என்று வந்த என்னை, சென்னை போடா வெண்ணெய் என்றது என்று ஒரு நகைச்சுவை வரும். இது உண்மையாகவே உள்ளது சென்னைக்கு பிழைக்க வந்த அனைவருக்கும்.ஆனால் ரசிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், வாழ்க்கை வேதனையாகவே கழிகிறது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம் ஆகிய பகுதியில் காலை வேளையில் நின்று கொண்டிருந்தால் . ஒரு நாளைக்கு எத்தனை பேர் இடம் பெயர்ந்து வருகிறார்கள் என்று யாரும் பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது சென்னையில் மட்டும் சுமார் 90 லட்சம் மக்கள் உள்ளனர். நாளுக்கு நாள் சென்னை நகருக்கு வந்து செல்லும் மக்கள் தொகை மட்டும் 2.50லட்சம் என கணக்கிடப்படுகிறது.

1901ல் சென்னை மாநகரம் 70சதுர கி.மீ பரப்பளவோடு 5.40லட்சம் மக்கள் தொகை கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவின் பெருநகரங்களில் ஒன்றாக சென்னை மாநகரம் விளங்குகிறது. சென்னை பெருநகர்ப் பகுதியின் பரப்பளவு 1189சதுர கி.மீட்டராக விரிவடைந்துள்ளது. மாநகராட்சியின் 155வட்டங்கள், 16நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் 214 கிராமங்களை கொண்டதாக உள்ளது. சென்னை பெருநகரில் 1731 குடிசைப்பகுதிகள் உள்ளன. இவற்றில் 1473 குடிசைப் பகுதிகள் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக உள்ளன என்றும் 242 குடிசைப்பகுதிகள் ஆட்சேபகரமான (ஆக்கிரமிப்பு) இடங்களில் உள்ளன என்றும் ஆட்சியாளர்களால் கூறப்படுகிறது. இதில் பெரும்பகுதி நீர்வழிக்கரையோரங்கள், சாலையோரங்களில் உள்ளன. மேம்படுத்தப்பட்ட குடிசைப்பகுதி என்ற வார்த்தையின் அர்த்தம் அங்கு வாழ்வோருக்கும் நமக்கும் புரியாத புதிர்தான்.

சென்னை நகர மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்கள் சென்னை நகரின் பரப்பளவில் 6 சதவீதத்தில் மட்டுமே வசிக்கின்றனர். இவ்வளவு பரந்து விரிந்த சென்னை நகரில் ஒரு சிறு ஆய்வை மேற்கொண்டோம். சென்னை பாரிமுனையின் பாதைகளில் வாழ்வோர், சிந்தாரிப்பேட்டையில் உள்ள பூதபெருமாள் நகர் போன்ற இடங்களில் 44 வீடுகளை ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வு செய்த வீடுகளில் ஒரு கிருஸ்தவ குடும்பவம், இரண்டு இஸ்லாமிய குடும்பங்களும் இருந்தன இதர குடும்பங்கள் அனைத்தும் இந்துக்கள். இடம் பெயர்தல் குறித்த மிகப்பெரிய ஆய்வுகள் எல்லாம் வெளிப்படுத்தும் தகவல் என்னவென்றால் பெரும்பாலும் இடம்பெயர்பவர்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை எடுத்துரைத்துள்ளது. அதை நிருபிக்கும் வகையில்தான் நமது ஆய்வு முடிவுகளும் வந்துள்ளது. 4 குடும்பங்கள் தங்களின் சாதியை குறிப்பிடவில்லை ஒரு குடும்பம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஐந்து குடும்பங்களை தவிர மற்ற அனைவரும் தலித் மக்களாகவே உள்ளனர்.

இந்த குடும்பங்களில் மொத்தம் 172 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 21-+40 வயதுக்குட்பட்டோர் மொத்தம் 90பேர் அதில் ஆண்40, பெண்50இந்த வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகமாக உள்ளனர். ஆய்வில் பட்டியலிடப்பட்ட 172 உறுப்பினர்களில் மொத்தம் 66பேர் படிக்கவில்லை 31பேர் தாங்கள் என்ன படித்துள்ளோம் என்பதை குறிப்பிடவில்லை, பெரும்பாலும் இவர்களும் படிக்காதவர்களாகவே இருப்பார்கள்.

5வது வரை படித்தவர்களில் 13பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 29பேர்தான். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களில் பெண்கள் 4 பேர்தான். பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் வெறும் இரண்டு பேர்தான். குறிப்பாக சொல்ல வேண்டியது. என்னவென்றால், கல்லூரி படிப்பு படித்தவர்களோ, தற்போது படிப்பவர்களோ ஒருவர் கூட இல்லை. சென்னை நகரைப் பொறுத்தவரை குடிநீர் என்பது சாதாரண குடிசைப் பகுதிகளில் வசிக்கும் (அரசு கணக்குப்படி) 10,56,414 பேரில் 31 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இதில் 42 சதவீதம் பேர் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் பெறுகின்றனர்.

இதுவே மற்றவர்கள் (அப்பார்ட்மென்ட்ஸ், தனிகுடியிருப்பு) 42 சதவீதம் பேர் குழாய் மூலம் தண்ணீர் பெறுகின்றனர். மீதி தனியார் மூலம் பெறுகின்றனர். இக்குடிநீர் அதிகபட்சம் ஒருவருக்கு 35 லிட்டர்வரைதான் கிடைக்கிறது. இது குடிசைப்குதிகளில் 25லிட்டராக உள்ளது. ஆனால் நபர் ஒருவருக்கு 120லிட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்க வேண்டும். இது சென்னையைப் பொறுத்தவரை கானல் நீராகத்தான் உள்ளது.

சென்னை என்றாலே காலிகுடங்களுடன் வரிசையில் லாரிக்குப் பின்னால் ஓடும் நிலைதான் அன்றும், இன்றும், உள்ளது. நாம் எடுத்த ஆய்வில் கூட சென்னை குடிநீர் வடிகால் வாரிய குடிநீரை மட்டுமே அனைத்து குடும்பத்தினரும் நம்பி உள்ளனர். ஆனால் கிடைக்காதததால் தாகத்திற்கு நீர் வாங்கியே தாகம் தணிக்கின்றனர்.

சென்னை மாநகரப் பகுதிகளில் மட்டும் 2,05,020 குடியிருப்புகள் தனியறைகளற்ற குடியிருப்புகள் ஆகும். இவை அதிகபட்சம் 100சதுர அடி அளவிலான குடியிருப்புகளாகவே உள்ளன. இங்கு கழித்தல், குளித்தல் போன்றவை அனைத்தும் பொதுவெளியில் தான் நடைபெறுகின்றன. நாம் சந்தித்த வீடுகளில் இரண்டு வீடுகளில் மட்டும்தான் தனிக் கழிப்பிடங்கள் உள்ளது. மீதம் அனைத்து வீடுகளுமே பொதுக்கழிப்பிடத்தையும், பொதுவெளியையும்தான் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.

நகரங்களில் வசிக்கும் மக்களுக்கே போதுமான அடிப்படை வசதிகள் கிடைக்காத பட்சத்தில் பிழைப்புத்தேடி வந்தவர்களையும் சேர்த்து 3.49 கோடி மக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், சாலை, பள்ளி, மருத்துவமனை என எதுவும் தமிழகத்தின் எந்த நகரத்திலும் இல்லை. நகரம் என்று சொன்னால் மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான தண்ணீர், கழிவு மேலாண்மை, மின்சாரம் போன்றவை போதுமான அளவு இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்திலோ நகரம் என்ற பெயரைத்தவிர நகரத்திற்கான எந்த வசதியும் இல்லை.

புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு சுரண்டியது வெளி மாநில தொழிலாளர்களைத்தான். 90 சதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். பெரும்பாலும் குடும்பத்துடன் இடம் பெயர்ந்து வரும் இம்மக்கள் தங்கும் இடம் கூவம் கரை மற்றும் குடிசைப்பகுதிகள் தான். அரசின் அதிகாரப்பூர்வமற்ற வழிகாட்டுதல் கூட அதுதான். புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு சுரண்டிய தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்க வைக்கப்பட்ட இடம் கூவம் கரைகளே.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சென்னைக்கு பிழைக்க வருகின்றபோதிலும், அதிகம் வருவது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தான். இவர்கள் தங்குவதும் கூவம் மற்றும் குடிசைப்பகுதிகளில் தான். விவசாயம் பொய்த்துப்போனதால் இங்கு இடம் பெயர்ந்து வரும் இம்மக்கள் பெரும்பாலும் ஊர் திரும்புவதில்லை. சென்னையிலேயே குடிசை அமைத்து தங்கிவிடுகின்றனர். இவர்களைத் தான் ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்து சென்னைக்கு வெளியே அனுப்புகிறது. சிங்காரச் சென்னைக்கு இவர்கள் அழுக்கானவர்களாக தெரிகிறார்களாம். நவீன தீண்டாமையான இக்கொடுமை அரசின் பெயரால் நிகழ்த்தப்படுவது பெரும் வன்முறையாகும்.

நாம் சந்தித்த மக்கள் அனைவரும் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சென்னைக்கு இடம்பெயர்ந்து வந்தவர்கள் தான். 40 ஆண்டுகளாக இங்கே தான் இருக்கேன் என தன் பேத்தியை மடியில் வைத்துக்கொண்டு ஒரு பாட்டி கூறுகையில், தேசமே தெருவில் கிடப்பதாகத்தான் நமக்குத் தோன்றுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் அரசின் இலவச அரிசி உட்பட எந்த சலுகையையும் பெற முடியவில்லை. கழிப்பிட வசதி, மற்றும் குடிநீருக்காக பெரும் பகுதியை செலவழிக்கும் இம்மக்களுக்கு சேமிக்கும் வாய்ப்பு சாத்தியமில்லை.இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் அரசு தங்களுக்கு ஏதும் செய்யப்போவதில்லை என்பதே இவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அசைத்துப் பார்க்குமா அரசு?

Pin It

 

திரைகடல் ஒடி திரவியம் தேடியவர்கள் இன்று தெருவில் வாழ்ந்து உணவு தேடுகிறார்கள். செல்வம் ஈட்ட அயல்நாடு செல்வதுமாறி, பின்னர் வேலைக்காக வெளியூருக்கும் செல்லத்துவங்கி, இன்று நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்து கிளம்பியதைப் போன்று, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக புறப்பட்டு வருவது மிக ஆபத்தானதாக மாறிவிட்டது. கூலிகளாக அல்லது குறைந்த சம்பளத் தொழிலாளியாக மாற்றப்பட்டு சுரண்டப்படும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்வு ஒரு பெரும் சமூக, பொருளாதாரப் பிரச்னையாக மாறிவருகிறது. ஊரக வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு சிறு பலவீனமாக மட்டுமே அரசின் கோப்புகளில் தெரிந்தாலும், சந்தைப் பொருளாதார வளர்ச்சியை தன் தோளில் சுமக்க இத்தகைய நவீன அடிமைகள் தேவை என்பதே ஆட்சியாளர்களின் கொள்கை.

சமன் இழந்து வரும் சமூக வளர்ச்சிக்கு இன்றைய உதாரணம் இடம்பெயர்வு பிரச்னைதான். வருடத்தின் அனைத்து நாட்களிலும் நடந்துகொண்டே இருக்கிறது இடம்பெயர்வு. கிராமப் பொருளாதாரம், கிராமப்புற கல்வி-வேலை வளர்ச்சி, விவசாயம் என மாற்று திட்டமிடலுக்கான குரலை ஓங்கச் செய்வது காலத்தின் கட்டாயம். இந்நோக்கில் இளைஞர் முழக்கம் ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் மூலம் இடம்பெயர்ந்த மக்களிடம் நேரடியாக செய்யப்பட்ட சர்வே மூலம் மூன்று கட்டுரைகளை தயாரித்து இவ்விதழில் வழங்கியுள்ளோம். வடசென்னையில் பாரிமுனையில் உள்ள நடைபாதை வசிப்போரிடமும், தென்சென்னையில் பூதபெருமாள் நகரில் உள்ள மக்களிடமும், திருப்பூரில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களிடமும், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு கிராமங்களிலும் மேற்கொண்ட கணக்கெடுப்புகளை வைத்து இக்கட்டுரைகள் தயாரிக்கப்பட்டன.

-ஆசிரியர் குழு

குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் திருப்பூர் நகரம் இடம்பெயர்ந்த மக்களை அதிகம் கொண்டதாகும். பதிவு செய்யப்பட்ட 21, 570 சிறு மற்றும் குறுந்தொழில்களைக் கொண்டது இந்த நகரம். நாளும் வந்துசேர்வோர் எண்ணிக்கை என்று பார்த்தால் நிச்சயம் ஆயிரத்தைத் தாண்டும். தமிழகத்தில் மிக வேகமாக மக்கள் தொகை வளரும் மாவட்டமான திருப்பூரின் மக்கள் தொகை இன்று இருப்பதைப்போல வளர்ந்து சென்றால் பல சமூகப் பிரச்னைகள் எழும் ஆபத்து காத்திருக்கிறது. இன்று தமிழகத்தில் மிக அதிகமாக தற்கொலை நடக்கும் மாவட்டமான இங்கு, இடம் பெயர்ந்த மக்களின் வாழ்நிலையும் மிக மோசமானதாகும். .

டாலர் சிட்டி, பனியன் சிட்டி என பெருமையோடு அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்நிலையை ஆராய்ந்து பார்க்கையில் இந்தப்பெருமையில் உள்ள அர்த்தம் என்பது அவர்களுக்கானதாக இல்லை என்றே புரிகிறது. 1939ல் 4 தொழிற்சாலையாக இருந்தது 1957க்கு பின்னர் 100 என்றும், 1968ல் 250 என்றும் வளர்ந்து, 1972ல் 1200 என உயர்கை யில் தமிழகத்திற்குள்ளிருந்து இடம்பெயர்வு அதிகமாகத்துவங்கியிருந்தது. இன்று, தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் இளைஞர்கள் மட்டுமல்லாது, இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் இருந்தும் இடம்பெயர்ந்து வரும் திருப்பூர் மிக வேகமாக வளர்ந்துவருகிறது. குறைந்த கூலித்தொழிலாளர்களாக சுரண்டப்படும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை பல்வேறு சோகங்களையும், அதிர்ச்சிகளையும் உள்ளடக்கியதாகும். 2011ல் சென்னையில் மக்கள் தொகை 43,43,645. திருப்பூர் மாவட்டத்தில் 24,71,222 ஆக உள்ளது. இதில் 9,51,834 கிராமப்புறம் எனில் நகரத்திலோ 15,19,388, ஆகும்.அதிலும் திருப்பூர் எனக் கணக்கிட்டால் சுமார் 10 லட்சம் வரை இருக்கும். 1970ல் 2 லட்சமாக இருந்த மக்கள் தொகை, 1984ல் 4 லட்சம்,2002ல் 6.5 லட்சம், ஆனால் கடந்த 8 ஆண்டில் சுமார் 3.5 லட்சம் உயர்வு என இப்படி அசுரமென வளர்ந்து நிற்கையில் ஆபத்தும் அசுரத்தனமானதாகவே தெரிகிறது.

இக்கட்டுரைக்காக 10 குழுக்களாக 60 இளைஞர்கள் மூலம் தனிநபர்களிடத்தில் ஆய்வு செய்ததில் இருந்து கிடைத்துள்ள தகவல்களை தொகுத்துப் பார்த்தால் திருப்பூரின் வளர்ச்சி மக்களுக்கு இல்லையென தெரிகிறது. பல வட மாநிலங்களிலிருந்து வந்தவர்களிடத்தில் மட்டுமல்லாது, தமிழகத்தின் தென்மாவட்டம், வடமாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களிடத்திலும் பெறப்பட்டுள்ள விபரங்கள் இந்தியாவின் சோகத்தை மையமாகக் கொண்டதாகும்.

25 வயது முதல் 40 வயதான இளைஞர்கள் தான் மிக அதிகமாக இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.ஒரளவு பள்ளிப்படிப்பை முடித்துள்ள இவர்களில் பெரும்பாலோனோர் 10வது வகுப்பு வரை படித்ததாகக் கூறுகையில், வறுமையும், அருகில் கல்லூரி இல்லாததும் கல்லூரிப் படிப்பை தடுத்ததாகக் கூறுகின்றனர். விவசாயம் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்கள்தான் இடம்பெயர்ந்து வந்தவர்களில் அதிகமானோர். 90 சதத்துக்கும் அதிகமானோர் கூறுவது விவசாயத்தின் அழிவே. சொந்த நிலம் மற்றும் வீடு இரண்டும் கிராமத்தில் இருந்த போதும், விவசாயம் செய்யப் போதுமான பாசன வசதி, பயிர் விளைவிக்கும் வாய்ப்பு, விவசாய இடு பொருள்களின் விலை உயர்வு என தொடர் தாக்குதலால் பாதிப்புக்குள்ளானவர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கும் ஒரே வாய்ப்பு ஊரைக் காலி செய்வது என்பதே பெருவாரியானவர்களின் கவலையாகும். இதற்கென ஊரில் ஏஜென்சி துவங்கி நடத்தி வருவோர், இடம் பெயரும் மக்களுக்கு ஏற்ற நகரமென பெரும்பாலும் உரைப்பது தமிழகமெனில், அதில் திருப்பூர் பிரதானமானதாகும். நாம் சந்தித்தவர்களில் 60 சதமானோர் சொந்த நிலமும், வீடும் தங்களது சொந்த ஊரில் உள்ளதாக கூறியுள்ளனர்.

கேம்ப் கூலி, சுமங்கலி என்ற சுரண்டல் திட்டங்கள் இடம் பெயர்ந்து வேலை தேடி வரும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திட்டங்களாகும். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் குடும்பத்துடன் இல்லாமல் தனியே இடம் பெயர்ந்து வருகையில், ஏஜென்சிகள் மூலம் சேர்க்கப்படும் திட்டம் சுமங்கலித்திட்டமே. இவர்களின் வாழ்நிலை கொத்தடிமை நிலையே. எவ்விதமான உரிமையும் இல்லாமல், மிக அதிக நேரம் வேலை வாங்கப்படும் இவர்களின் உடல்நிலையும், மனநிலையும் பாதிக்கப்பட்டு வருவதாக பல ஆய்வறிக்கைகள் வந்தபின்னும் அரசின் தலையீடு கேள்விக்குறியே.

ஆய்வில் ஊதியம் குறித்து கேட்டபோது, 5000 முதல் -8000 வரையான ஊதியம் மட்டுமே வாங்குவதாகக்கூறும் தொழிலாளர்கள், வீட்டிற்கு அனுப்புவது மிகச்சிரமமாக உள்ளதாகவே கூறுகின்றனர். வீட்டு வாடகை,உணவு இரண்டும் மிகுந்த செலவாகிறது.மருத்துவம் மற்றும் போக்குவரத்து ஆகியனவும் மிகுந்த செலவுள்ளதாக கூறும் இவர்கள், வீட்டிற்கு பணம் அனுப்பும் நோக்கம் பல மாதங்களில் நிறைவேறாதபோது சிரமப்படுவதாக கூறுகின்றனர். 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை என்ற பெயரில் சுரண்டப்படுவதால், 40 வயதிலேயே மிகவும் உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் கூறும் இவர்கள் அப்போது வருமானம் மிகவும் குறைந்துவிடுவதாகவும் கவலைப்படுகின்றனர்.

இடம் பெயர்ந்து வரும் இத்தொழிலாளர்களில் 95 சதமானோர் எந்த சங்கத்திலும், அரசியல் கட்சியிலும் இல்லையென்றே கூறுகின்றனர். சேமிப்பு குறித்த கேள்விக்கு 80 சதமானோர் இல்லையென்றே பதில் தந்துள்ளனர்.மீதம் 20 சதமானோரில் 10 சதம் மட்டுமே சேமிப்புக் கணக்கு மூலம் சேமிப்பதாகவும், இதர பத்து சதம் கையிருப்பு மூலம் சேமிப்பதாகவும் கூறியுள்ளனர். இவர்கள் வாழும் பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை வசதியும் இல்லையென்று கூறும் இவர்கள், புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே அவர்களின் வாழ்விடம் உள்ளதாக கருதுகின்றனர். குடிநீர் வசதி கூட உத்தரவாதப்படுத்தப்படாததால் சில நேரங்களில் அதற்கும் காசு செலவழிக்கும் நிலையை எண்ணி வருத்தப்படுகின்றனர். 80 சதமானோர் வருடத்திற்கு ஒரு முறை திருவிழாக்காலங்களில் மட்டும் ஊருக்கு சென்றுவருவதாக கூறுகின்றனர்.

10/11 அல்லது 10/16 என்ற அடிப்படையில் வாடகை வீட்டில் குடியிருப்பதாக கூறும் இவர்கள் தங்களது சொந்த மாநிலம் அல்லது மாவட்டத்துக்காரர் என்ற அடிப்படையில் தான் நண்பர்களை தேர்வு செய்துகொள்கின்றனர். திருப்திகரமான வாழ்வு குறித்த கேள்வியை கேட்கையில், சில நிமிடங்கள் தாமதமாகவே பதில் வருகிறது. சொந்த ஊர் நினைப்பு வந்து செல்லும் அந்நேரத்தில், ம், பரவாயில்லை என்று பதில் சொல்வோர் கூட 20 சதம் தான். இதரர் பதில் சொல்லவிரும்பவில்லை அல்லது உடனே சொல்லும் வார்த்தை இல்லை என்பதே உண்மை. ஆனால். சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு 90சதமானோர் ஆம் என்றே பதில் கூறியுள்ளனர்.

அரசு உங்கள் ஊருக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கையில் பலரின் பதிலும் விவசாயம் தான். விவசாயத்தை பொய்க்க வைத்து, விவசாயிகளை ஊர், ஊராக விரட்டும் வேலையை அரசு செய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இவர்களின் பதில் உள்ளது. கிராமங்களில் விவசாயம் மட்டுமல்லாது, விவசாயம் சார்ந்த தொழில்களையும் ஊக்குவிக்கவேண்டுமென்று கூறும் இவர்களின் எதிர்கால கனவில் சொந்த ஊர் தான் மையமாக இருக்கிறது. ஆனால், அங்கு பள்ளிக்கூடம், மருத்துவ வசதி, கல்லூரி வசதி என ஏதும் இல்லாத நிலையில் எப்படி வாழ்வது என கேட்கின்றனர். வளர்ந்துவரும் உலகத்தில் எவ்வித வளர்ச்சியும் கிராமங்களுக்கு செய்யப்படவில்லையெனில், நகரங்களை நோக்கி வருவதைத் தவிர வேறு வழியில்லையென்றே கூறுகின்றனர். இவ்வாழ்க்கை விரும்பி வந்ததல்ல என்றும், தொடர்வது உத்தரவாதம் அல்ல என்றும் கருதுகின்றனர். சொர்க்கமே என்றாலும் அது சொந்த ஊர் போல அல்ல என்று நம்மால் உணர முடிகிறது. அரசு உணருமா.?

Pin It

 

இளைஞர் முழக்கத்தின் முதன்மைப்பகுதிக்காக விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை வட்டம் வேலூர், உ.நெமிலி வருவாய் கிராமங்களில் 3 குழுக்களாக பிரிந்து 100 வீடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வை மையமாகக்கொண்ட இக்கட்டுரையில் மாவட்டம் குறித்த அறிமுகத்துடன் மக்கள் கருத்தை விவாதிப்போம்.

1114 கிராமப்புற ஊராட்சிகளைக்கொண்டு பரந்து விரிந்த விழுப்புரம் மாவட்டம் விவசாயத்தை பிரதானமாகக்கொண்ட விவசாயத் தொழிலாளர்கள் அதிகமான மாவட்டம். கரும்பு, மணிலா, முந்திரி, சவுக்கு, மஞ்சள், மரவள்ளி மற்றும் தானிய பயிறு வகைகள் உற்பத்தியாகக்கூடிய இங்கு 8 கரும்பு ஆலைகளும் உள்ளது. காவேரி, தென்பெண்ணை, பாலாறு என தமிழகத்தின் வளம் குறித்து பெருமை பேசும் பாடலில் உள்ள தென்பெண்ணை பாய்வதாக கூறப்படும் இங்கு விவசாயம் பொய்த்துப்போய் பலவருடமாகிவிட்டன. இல்லாத ஆற்றின் மேல் பாலம் கட்டும் அளவுக்கு தமிழகம் இன்னும் முன்னேறவில்லை என்பதால், பேருந்துகளும், ரயில்களும் மிக நீண்ட பாலங்களில் அடிக்கடி பயணிக்கையில் ஆறு அங்கு ஓடியிருக்கும் என நம்ப முடிகிறது. கிராமங்களில் விவசாயப்பகுதி குறைந்து போய் ரியல் எஸ்டேட் வளர்ந்து வருவது வேதனைமிக்கதாக உள்ளது. கடற்கரையோரங்களில் உப்பு உற்பத்தியும், கருப்புக்கல் போன்ற இயற்கை கனிம வளங்களும் நிறைந்திருந்தபோதிலும் அவ்வளங்கள் மக்களின் வாழ்வாதார நிலையை உயர்த்தவில்லை என்பது பெரும் முரணாகும்.

நாங்கள் சந்தித்த நூறு வீடுகளில் உள்ள மொத்த மக்கள் 586பேர். இதில்20-+40 வயதுடைய 85 இளைஞர்கள், 10+-20 வயதுடைய 64 இளைஞர்கள்,40+-60 வயதுடைய 38 ஆண்கள் ஆகிய 187 பேரில் 124 பேர் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர். வெளியூருக்கு வேலைக்கு செல்வதில் பெண்களும் விதிவிலக்கல்ல.20 முதல் 60 வயதுடைய 186 பெண்களில் 96 பெண்கள் வெளி யூருக்கே வேலைக்கு செல்கின்றனர். ஆண்களில் 66.3 சதமானோரும், பெண்களில் 52 சதமானோரும் வெளியூருக்கு வேலைக்கு செல்கையில் உள்ளூர் சமூக வளர்ச்சி என்பது எவ்விதத்தில் சாத்தியம்? வேலைக்கு வெளியூர் செல்லும் இம்மக்கள் உள்ளூருக்கு வருவது பெரும்பாலும் கோயில் விழாக்களுக்கும், பண்டிகை காலங்களுக்கும் மட்டும்தான். திருவள்ளூர், சென்னையைச் சுற்றியுள்ள செங்கல் சூளைகளுக்கு வேலைக்கு செல்வது பிரதானமானதாகும்.

தை முதல் ஆடி மாதம் வரையான காலங்களில் மாட்டு வண்டிகளுடன் கணவன், மனைவி மற்றும் குடும்பத்தில் வேலை செய்யத் தகுதியான அனைவரும் சென்று வேலை செய்கையில் குடும்பத்துக்கான சம்பளம் என்று பேசப்படும் ஊதியம் 30+-50 ரூபாய் வரை இருப்பதுதான் வழக்கமாம். பாலியல் சீண்டல்கள், முதலாளிகள் செய்யும் அடாவடித்தனங்கள் என அனைத்தையும் பொறுத்துப்போகும் இவ்வாழ்க்கை கொத்தடிமை வாழ்க்கை முறை போல் உள்ளதாக மக்கள் கூறுவது பெரும் சோகமாகும். அதே போல், கரும்பு வெட்ட ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கும் பெரும்பாலான விவசாயத் தொழிலாளிகள் செல்கின்றனர். சொந்த நிலம் இருந்தும் விவசாயம் செய்ய வசதி இல்லாத விவசாயிகள் தாங்களும் வேலைக்காக மேற்கூறப்பட்ட பகுதிகளுக்கே செல்வதாக கூறுகிறார்கள்.

விவசாயம் பெரும் செலவு சார்ந்த தொழிலாக மாறிவருவதாகக் கூறும் இம்மக்கள் பல ஆண்டுகளாக பாசன வசதிகள் குறைந்து வந்தபோதும் அரசு தலையிடாததை பெரிய காரணமாகக் கூறுகின்றனர். உரம், பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை அரசு மான்ய விலையில் வழங்கி, பாசன வசதிகளையும் மேம்படச்செய்தால் உள்ளூரிலேயே விவசாயம் செய்யத்தயாராக இருப்பதாக கூறும் விவசாயிகள், தங்களால் மேலும் சில தொழிலாளர்களுக்கும் வேலை தர முடியும் என்றும் கூறுகின்றனர்.

கிராமப்புற வேலைத்திட்டம் இக்கிராமங்களில் முறையாக அமலாகவில்லை என்று கூறும் மக்கள் வருடத்திற்கு நூறு நாள் வேலை எனில் இதர நாட்களுக்கு எங்களை அரசு என்ன செய்யச்சொல்கிறது என்று கேட்பது நியாயமான கேள்வி. நூறு நாள் வேலையையும் முறையாகத் தராமல் 30-+40 நாட்கள் வரை மட்டுமே தருவதோடு மட்டுமல்ல, ஊதியமும் நூறு என்பதற்குப்பதிலாக ரூ. 60+-70 வரை மட்டுமே தரப்படுகிறது. இதிலும் ஊழல் என்பது கைப்புண்ணாக பளிச்செனத் தெரிகிறது. நாங்கள் சந்தித்த நூறு வீடுகளில் 62 வீடுகளில் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். இவர்களில், 39 ஆண்கள், 46 பெண்கள் 5வது வகுப்புக்குள் படித்தவர்கள். 6-+10வரை படித்தவர்கள் 82 ஆண்கள் மற்றும் 70 பெண்கள் ஆவர். 12 வரை படித்தவர்கள் 13 ஆண், 7பெண் மட்டுமே. ஐ.டி.ஐ-2ஆண், ஒரு பெண், பாலிடெக்னிக் 2ஆண்கள் மட்டுமே. இளநிலை பட்டம் படித்தவர்கள் 5ஆண், ஒரு பெண்,ஆனால், முதுகலை படித்தோர் யாரும் இல்லை. பொறியியல் கல்லூரியில் தற்போது 3 ஆண்கள் மட்டும் படித்து வருகின்றனர். அதாவது, துவக்கக் கல்விக்கு போகும் பெண்களின் எண்ணிக்கை ஒரளவு இருந்தாலும் உயர்கல்வி, தொழிற்கல்வி, வேலை வாய்ப்புக்கல்வி என வரும்போது பெண்களுக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

586 பேரில் ஏதும் படிக்காத மக்கள் எண்ணிக்கையோ 84 ஆண்கள்,116 பெண்கள். இன்று வரையான கல்வி கற்கும் ஏற்பாட்டில் இத்தகைய பாகுபாடு நீடிப்பதை நாம் உணரமுடிகிறது. இம்மக்கள் வெளிமாநிலம் முதல் சென்னை வரை குடும்பத்துடன் இடம்பெயர்வதால், கிராமங்கள் வெறிச்சோடிக்கிடக்கும். குழந்தைகளின் பள்ளிக்கல்வி கூட பல காலமாக உத்தரவாதப்படுத்தப்படாத ஒன்றாகவே நீடிக்கிறது. மாநிலத்தில் 35.23 சதமாக உள்ள இடைவிலகல் இங்கு 40.39 .என தமிழகத்திலேயே அதிக இடைவிலகல் பள்ளிக்கல்வியில் உள்ள மாவட்டம் என்ற அவலநிலை இதனால்தான் நீடிக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி வாய்ப்புகளும், உயர்கல்வி வாய்ப்புகளும் கிராம மக்களுக்கு முழு அளவில் சென்றடையவில்லை.மாநிலத்தில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் என்பது 42.22 என்கையில் விழுப்புரம் மாவட்டத்திலோ 57சதமாகும். மாநில வறுமைக்கோடு 31.7 சதம், ஆனால், இங்கு 50.9 சதம் எனும்போது இலவசக்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கிராம மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்கவேண்டும். பத்து கலை அறிவியல் கல்லூரிகளும், 14 ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகளும், 7 பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், அரசுப்பள்ளிகளில் துவங்கும் புறக்கணிப்பு உயர்கல்வி வரை கிராம மக்கள் மீது தொடர்கையில் இடப்பெயர்வை எப்படி தடுக்க இயலும்.

சென்னையோடு மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதை இணைப்பு மட்டுமல்லாது, சென்னையில் இருந்து 159 கி.மீ.தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆறுவழிச்சாலையில் உள்ள ஒரு மாவட்டத்தில் கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பின்மை என அனைத்திலும் பின் தங்கிப்போனதற்கு என்ன காரணம்? விழுப்புரம் மாவட்ட தொழில்மையம் ஆய்வு செய்து இங்கு பல புதிய தொழிற்சாலைகளை துவங்குவதன் மூலம் உற்பத்தியை மட்டுமல்லாது,வேலை வாய்ப்புகளையும் பெருக்கமுடியும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆயினும், அரசின் பார்வை ஏன் இவர்கள் மீது படவில்லை? இதுவரை தொழிற்பேட்டை என ஒன்று கூட துவக்கப்படவில்லை. 8 கரும்பு சர்க்கரை ஆலைகள் உள்ளன.ஆனால், கரும்பு சக்கையைப் பயன்படுத்தி காகித தொழிற்சாலை கொண்டுவரப்படவில்லை. மஞ்சள்.முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, மர வள்ளிக்கிழங்கு அரவை ஆலை என விவசாயப்பொருட்களை வைத்து பல தொழிற்சாலைகள் துவங்கி பல ஆயிரம் பேருக்கு வேலை உள்ளூரிலேயே தரமுடியும். கிராமப்புற பொருளாதாரம் பற்றி பேசும் ஆட்சியாளர்கள் ஏன் கிராம மக்களின் வாழ்வைப்பற்றி யோசிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்விக்கு ஒரு விடை தான் தோன்றுகிறது. கிராம மக்கள் இன்னும் கேள்வி கேட்க துவங்கவில்லை என்பதே அது.

நமக்கு தோன்றுவதும் ஒன்று தான், நாம் கேள்வி கேட்டபோது நம்மிடம் கேள்வி கேட்ட அம்மக்கள் ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்க வெகுநாட்களாகாது.

Pin It