இவ்விதழை வளர்த்து செழிப்பாக்கிட முன்வருக!

அன்புடையீர்!

இந்த இதழைப் பற்றியும் வெளியிடும் அமைப்பு குறித்தும் சிறு விளக்கம் தருவது அவசியம் என்று கருதுகிறோம்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு “எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை’’ என்ற உயர்ந்த கோரிக்கைகளை முன்வைத்து இந்தியநாடு முழுவதும் முப்பது லட்சத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு போராடி வருகிறது.

சர்வதேச அளவில் மனித உயிரினத்திற்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உலக சமாதானத்திற்கான பதாகையை உயர்த்திப் பிடிக்கிறது. விஞ்ஞான சோசலிசத்தைத் தமது அடிப்படை லட்சியமாகக் கொண்டுள்ள சோசலிஸ்ட் நாடுகளில் கல்லாமையும் வேலையின்மையும் போக்கப்பட்டுள்ளது. இந்திய மண்ணிலும் அத்தகைய சூழ்நிலை உருவாகி மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதில் இவ்வமைப்பு விருப்பம் கொண்டு செயல்படுகிறது.நம் நாட்டைப் பொறுத்தவரையில் இங்கே மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள அரசு, கல்வியும், வேலையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில் தனது பாதையை வகுத்துக் கொள்ளவில்லை. வெளி நாடுகளில் கடன் பெறுவதையும் அதன் மூலம் இந்தியாவில் பெரு முதலாளிகளை வளர்ப்பதையும் நிலப்பிரபுக்களை பாதுகாப்பதையும் குறியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் விளைவாக அனைவருக்கும் வேலை கிடைப்பதும் கல்வி கிடைப்பதும், தடைபடுகிறது. இவர்களது மோசமான கொள்கையினால் பாதிக்கப்படும் மக்கள் தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடும் பொழுது அடக்குமுறைச் சட்டங்களைப் போட்டும் ஜனநாயக உரிமைகளைப் பறித்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை நினைத்த நேரத்தில் கவிழ்த்தும் சர்வாதிகாரப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் வகையில் வகுப்புவாத சக்திகளும் பிரிவினை சக்திகளும் செயல்படுகின்றன. இந்த சக்திகளுக்கு ஏகாதிபத்தியம் உதவி செய்து ஊக்கப்படுத்தி வருகிறது. வாலிபர்களை திசை திருப்ப கிறிஸ்துவ மிஷனரிகள் மூலமாக போலி இடதுசாரிகளை உருவாக்கி விடுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மத்திய அரசின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்தும் ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. நாட்டைத் துண்டாட முயலும் பிரிவினைவாத வகுப்புவாத சக்திகளை எதிர்த்தும் மக்கள் ஒற்றுமைக்காகவும் போராடி வருகின்றது.

இவற்றைப் பற்றியும் இதையட்டி அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் அறைகூவல்களைப் பற்றியும் அவ்வப்போது கருத்துக்களை உணர்ந்து பிறருக்கு எடுத்துக் கூறப் பயன்படும் முறையிலும் இந்த இதழ்  பயன்படும்.

அமைப்பை விரிவுபடுத்துவதையும் உறுப்பினர்களின் தத்துவ அரசியல் சமூக உணர்வுகளை மேம்படுத்துவதையும் இந்த இதழ் நோக்கமாகக் கொண்டு செயல்படும்.

ஐம்பது காசு விலையில் ஆரம்பிக்கப்படுகிறது. இன்றுள்ள காகித விலையில் 50 காசுக்கு இதழ் கொண்டு வரும்போது பக்கங்கள் குறைவாகத்தான் இருக்கும் என்பது தெரியாததல்ல.வாலிபர் சங்க உறுப்பினர்களில் பலர் எழுத்தாற்றல் மிக்கவர்கள், கலை இலக்கிய உணர்வு கொண்டவர்கள் அவர்களது திறன் மேலும் மேலும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம்.அவர்களது படைப்புகள் இந்த இதழில் இயன்ற அளவு பிரசுரிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவ்வப்போது ஏற்பட்டுவரும் அரசியல் மாறுதல்களை, இதையட்டி நமது மத்திய, மாநில அமைப்புகளின் அறைகூவல்கள், நடைபெறும் இயக்கங்கள் ஆகியவை குறித்து செய்திகள் வெளிவரும் போது கலைப்படைப்புகள் குறிப்பிட்ட அளவிற்கு மட்டும் வெளிவரும். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். தமிழகத்தில் படிப்படியாக முன்னேறி திருவாரூர் மாநாட்டின் போது எழுபத்தெட்டாயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைப்பு திகழ்கிறது. எண்ணற்ற கிளைகள் உருவாகி வருகின்றன. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தா கட்ட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். இருப்பினும் அதில் சிரமங்கள் உண்டு என்பதையும் உணர்கிறோம். குறைந்த பட்சம் கிளைக்கு ஒன்று என்பதை விரைவில் அமல் நடத்துங்கள்.

கிளைகளும் இடைக்கமிட்டிகளும் விடாமல் வலியுறுத்தி வந்தது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை மேலும் வளர்த்து செழிப்பாக்கிட அனைவரும் முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம். 

என்.நன்மாறன்

மாநிலத் தலைவர். டி.ஒய்.எப்.ஐ அக்டோபர் 1984

Pin It