சுந்தர்பான் காடுகளில் இரண்டாண்டுகள் செய்யப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சுந்தர்பான் காடுகளில், "ராயல் பெங்கால் டைகர்' எனப்படும் வங்கப் புலிகளுக்கும், தங்களுக்கும் இடையே வனத்தின் வளங்களைப் பங்கிடும்போது, தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்று தீவு மக்கள் கூறுகின்றனர். இது குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும்போது, அவர்கள் எப்படி அடிக்கடி மரிச்ஜாப்பியை நினைவு கூர்கின்றனர் என்பது பற்றி இக்கட்டுரை பேசுகிறது.

       கிழக்குப் பாகிஸ்தானில் (பின்பு வங்கதேசம்) இருந்து வங்காள இந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் 1950–கள் முதல் 70–கள் வரை வந்து கொண்டிருந்தனர். இம்மக்கள், மேற்கு வங்காளத்துக்கு வெளியேயுள்ள பல்வேறு மோசமான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்பு மேற்கு வங்காளத்தில் இடம் தரப்படும் என்று அவர்களுக்கு வாக்குறுதியும் அளிக்கப்பட்டது.

marichjhapi_2201977 இல் இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்ததும், இடதுசாரிகளின் ஆதரவாளர்களான அகதிகள் மேற்கு வங்காளத்திற்கு திரும்பி வந்தனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் மரிச்ஜாப்பிக்கு சென்றனர். மரிச்ஜாப்பி சுந்தர்பான் – பிரதேசத்தின் வடகோடியிலுள்ள காடுகள் நிறைந்த ஒரு தீவாகும். பின்பு இந்த அகதிகள் வனச் சட்டங்களை மீறியதற்காக, இத்தீவிலிருந்து கொடூரமான முறையில் அப்புறப்படுத்தப்பட்டனர்.

உண்மையில், சுந்தர்பான் காடுகளில் இரண்டாண்டுகள் செய்யப்பட்ட கள ஆய்வின் அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சுந்தர்பான் காடுகளில், "ராயல் பெங்கால் டைகர்' எனப்படும் வங்கப் புலிகளுக்கும், தங்களுக்கும் இடையே வனத்தின் வளங்களைப் பங்கிடும்போது, தாங்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறோம் என்று தீவு மக்கள் கூறுகின்றனர். இது குறித்த தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும்போது, அவர்கள் எப்படி அடிக்கடி மரிச்ஜாப்பியை நினைவு கூர்கின்றனர் என்பது பற்றி இக்கட்டுரை பேசுகிறது. சுந்தர்பான் தீவுகளை சேர்ந்த மக்களால் மரிச்ஜாப்பி படுகொலை இரட்டைத் துரோகமாகக் கருதப்படுகிறது. தீவு மக்கள் தாங்கள், "பத்ரலோக்' எனப்படும் வங்காள ஆதிக்க சாதியினருக்கு கீழானவர்கள் என்று கருதப்பட்டதாலும், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், சாதாரண மனிதர்களாகக்கூட கருதப்பட முடியாதவர்கள் என்று எண்ணப்பட்டதாலுமே – மரிச்ஜாப்பியில் படுகொலை செய்யப்பட்டோம் என்று வாதிடுகின்றனர். "பத்ரலோக்' என்ற சொல் ஆங்கிலமயமான, படித்த, பணக்கார, நல்ல முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்து "உயர் சாதி'யைச் சேர்ந்த நகர மக்களைக் குறிக்கிறது. தங்களைப் பற்றி இந்தக் கீழான கண்ணோட்டத்தைப் "பத்ரலோக்'கிடம் இருந்து பெற்றுக் கொண்ட புலிகள், தங்களை இரை கொள்ளத் தொடங்கின என்று தீவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாதிடுகின்றனர்.

மரிச்ஜாப்பி படுகொலைகளை – வங்கப் பிரிவினைக்கான நீண்ட பின்னணி, சாதி, மத, வர்க்க வேறு பாடுகளின் அடிப்படையிலான சதி வேலைகள் ஆகியவற்றின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்தாக்கத்தை ராஸ் மாலிக் பெருமளவு வளர்த்தெடுத்துள்ளார். சுதந்திரத்திற்கு முன்பு கிழக்கு வங்காளத்தில் தோன்றிய நாமசூத்ரா (தாழ்த்தப்பட்ட மக்கள்) இயக்கம், இந்தியாவில் உருவான தலித் இயக்கங்களிலேயே மிகவும் வலிமை வாய்ந்த ஒன்றாகும். அதோடு அரசியல் ரீதியாக திரட்டப்பட்ட இயக்கமுமாகும். நாம சூத்ரா இயக்கமும், முஸ்லிம்களும் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டனர். இதனால் 1920களிலிருந்து வங்காள காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாகவே இருக்க வேண்டியிருந்தது.

ஆட்சி அதிகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த வங்காளி இந்து ஆதிக்க சாதியினர், சுதந்திரத்தின் போது வங்காளத்தைப் பிரிக்கும்படி நெருக்கடி கொடுத்தனர். அதன் மூலம் வங்காளத்தின் மேற்குப் பகுதியை மட்டுமாவது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைத்தனர். இந்து, முஸ்லிம் என்று மத அடிப்படையில் நடந்த இந்தப் பிரிவினை, பேரம் பேசுவதற்கு தலித்துகளுக்கு இருந்த வாய்ப்புகளை தட்டிப் பறித்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, அவர்கள் இரண்டு நாடுகளிலும் அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்ட சிறுபான்மையினராக மாறிப்போயினர்.

இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்த வங்காள "மேல் சாதி' நிலவுடைமையாளர்கள், முஸ்லிம்கள் மற்றும் "கீழ் சாதி' குத்தகைதாரர்களால் அச்சுறுத்தப்பட்டனர். இவர்கள்தான் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து மேற்கு வங்காளத்திற்கு வந்த முதல் நிலை அகதிகளாவர். பின்பு கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துக்களான கிராமப்புற நடுத்தர விவசாயிகளும், கைவினைஞர்களும் இடம் பெயர்ந்தனர். இவர்களில் வசதி பெற்றவர்கள் கல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தங்களுக்கு இருந்த உறவினர்கள், நண்பர்களிடையே இடம் தேடிக் கொண்டனர். இவர்களில் ஏழைகள் பொது இடங்களையும், தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டு அப்புறப்படுத்துதலை எதிர்த்து நிற்க முயன்றனர்.

1960களிலும், 70களிலும் (குறிப்பாக 1971 இல் நடைபெற்ற வங்கதேச விடுதலைப் போருக்குப் பின்பும், 1975 இல் முஜிபுர் ரஹ்மான் கொல்லப்பட்டு ஜியாவுர் ரஹ்மான் ஆட்சிக்கு வந்த பின்பும்) மதக் கலவரங்கள் கிழக்கு வங்காளத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்த ஏழைகளிலும் ஏழைகளான "கீழ் சாதி' இந்துக்களுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டன. இந்த மக்கள் இப்போது அடைக்கலம் தேடி, மேற்கு வங்காளத்திற்கு வரத் தொடங்கினர்.

முன்பு வந்த வசதி பெற்ற அகதிகளுக்கு மேற்கு வங்காளத்தில் குடும்ப ரீதியாகவும், சாதி ரீதியாகவும் தொடர்புகள் இருந்தன. ஆனால் 60களிலும், 70களிலும் வந்த ஏழை தலித் அகதிகளால் கல்கத்தாவில் வாழ வழி தேடிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் அரசால் பல்வேறு மோசமான, வளமற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பப்பட்ட பகுதிகளில் ஒன்றான தண்டகாரண்யா – வறண்ட பாறைப் பாங்கான, படுமோசமான நிலப்பகுதியாகும். தண்டகாரண்யா என்பது, தற்போது சட்டிஸ்கர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய மத்தியப் பிரதேசம், ஒரிசா, ஆந்திரா ஆகியவற்றின் பகுதிகளை உள்ளடக்கிய இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியாகும். இந்தப் பகுதி வங்காள அகதிகளைப் பொருத்தவரை புவியியலிலும், பண்பாட்டிலும் அவர்களுக்கு தொடர்பே இல்லாததாகும். எதிர்க்கட்சிகள் மேற்கு வங்காளத்திலிருந்து அகதிகளை வெளியேற்றும் காங்கிரசின் முயற்சிகளை கண்டித்ததோடு, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகதிகள் மேற்கு வங்காளத்தில் குடியமர்த்தப்படுவார்கள் என்று உறுதியளித்தனர்.

எதிர்க்கட்சிகளின் வாக்குறுதியின் அடிப் படையில் பார்த்தால், அகதிகள் சுந்தர்பான் காடுகளில் உள்ள தீவுகளில் ஏதாவது ஒன்றில் குடியேற்றப்படவே சாத்தியங்கள் இருந்தன. அப்போதைய எதிர்க் கட்சித் தலைவரான ஜோதிபாசு, அகதிகள் பிரச்சினையை மேற்கு வங்க சட்டப் பேரவையில் எழுப்பினார். ஒரு பொதுக் கூட்டத்தில், அகதிகளுக்கு சுந்தர்பான் காடுகளில் இடம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வங்கதேசத்தின் குல்னா என்ற பகுதியிலிருந்து வந்த அகதிகள், சுந்தர்பான் காடுகளில் மனிதர்கள் வாழும் தீவுகளில் குடியேற விரும்பினர். காரணம், சுதந்திரத்திற்கு முன்பு சுந்தர்பான் காடுகளை பண்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, குல்னாவிலிருந்து வந்தவர்கள்தான் அங்கு முதலில் குடியேறினர். எனவே, தற்போது குல்னாவிலிருந்து வந்த அகதிகளுக்கு சுந்தர்பான் காட்டுப் பகுதியில் நண்பர்களும், உறவினர்களும் இருந்தனர். எனவே, எந்தத் தொடர்புமில்லாத தண்டகாரண்யாவிற்கு செல்வதைவிட சுந்தர்பான் காடுகளில் குடியேறவே அவர்கள் விரும்பினர்.

1975 ஆம் ஆண்டு தண்டகாரண்யா விலிருந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர், 1977 ஆம் ஆண்டு இடது முன்னணி ஆட்சியமைத்ததும் மரிச்ஜாப்பி தீவில் கொசாபா காவல் நிலைய எல்லைக்குள் இருந்த மொரிச்சாக் என்ற மணல் மேட்டில் குடியேறத் தொடங்கினர். இங்கு 16 ஆயிரம் குடும்பங்கள் குடியேறலாம் என்றும், இன்னும் 30 ஆயிரம் குடும்பங்கள் அருகில் உள்ள தத்தாபசூரிலும், சுந்தர்பானிலுமுள்ள மற்ற பண்படுத்தக்கூடிய வெற்று நிலங்களிலும் குடியேற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.

ஆனால், சுந்தர்பான் காடுகளுக்கு குடியேற வந்த தலித்துகள், பல்வேறு ரயில் நிலையங்களில் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டனர்; மூர்க்கமாக விரட்டியடிக்கப்பட்டனர். மரிச்ஜாப்பி வந்து சேர்ந்தவர்களுக்கு உணவும் நீரும் மறுக்கப்பட்டு பட்டினி போடப்பட்டனர். இறுதியில் சுட்டுக் கொல்லவும் பட்டனர்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித் தனித் தாய்நாடு என்ற அடிப்படையில் வங்காளம் – மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம் என்று பிரிக்கப்பட்டது. மென்மேலும் கூர்மையடைந்து வந்த இந்தப் பிரிவினை, வங்காளத்தின் தெற்குப் பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட சாதி ஏழை கிராம மக்களையே பெரிதும் பாதித்தது. இந்த மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மத ரீதியில் பிரச்சினை ஒன்றுமில்லை.

"நிம்னோ போர்கர்' எனப்பட்ட இந்த தாழ்த்தப்பட்ட சாதி மக்கள், பத்ரலோக் எனப்படும் சாதி இந்துக்களிடமிருந்து பொருளாதார ரீதியிலும், பண்பாட்டு அடிப்படையிலும பெரிதும் வேறுபட்டிருந்தனர். வங்காளி, முஸ்லிம் என்ற அடையாளங்கள் குறித்த விவாதங்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருவர் வங்காளியாக இருந்து மேல் சாதியினராக இல்லாமல் இருந்தால் ஏற்படக்கூடிய நெருக்கடிகள் குறித்து குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுந்தர்பான் தீவுகளில் வாழும் மக்கள், தங்களை கல்கத்தா ஆதிக்க சாதியினர் புலிகளுக்கான உணவு என்று கருதுகிறார்கள் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள – இந்த சாதி வேறுபாடு, பிளவு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ரணஜித் குகாவின் "எலிமென்ட்டரி ஆஸ்பெக்ட்ஸ் ஆப் பெஸன்ட் இன்ஸர்ஜென்ஸிஸ் இன் கலோனியல் இந்தியா' (1983) என்ற நூல், பின்பு "சபால்டர்ன் ஸ்டடிஸ் ஆன் ரூரல் கம்யூனிட்டீஸ்' என்ற தொடர் கட்டுரை ஆகியவை வெளியான பின்பு, காலனியாதிக்க காலத்தில் வங்காள கிராமப்புற இயக்கங்கள் குறித்த ஆய்வுக்கு அதிக முக்கியத்துவமும், கவனமும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வுகள் "கீழ்சாதி' மக்களின் மதம், அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் மதத்தின் பங்கு ஆகிய விஷயங்களுக்கே மிக அதிக முக்கியத்துவம் தருகின்றன என்று தாஸ் குப்தா கூறுகிறார். மதம் முக்கியமானது. அதே நேரத்தில் பொருளா தாரம், அரசியல் மற்றும் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படாத பண்பாட்டுக் கூறுகள் ஆகியவையும் மதத்தின் அளவிற்கே முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, மதத்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பது மற்ற காரணிகளைப் புறக்கணிப்பதாகும். நாம் ஒரே சமூகம் என்ற உணர்வானது, மதத்தின் மேன்மையிலிருந்து உருவாகவில்லை. சாதி, வர்க்க வேறுபாட்டிலிருந்தே பிறக்கிறது. இந்த வேறுபாடு, மரிச்ஜாப்பி மற்றும் மனிதர்களைத் தின்பவைகளாக மாறிய புலிகள் குறித்த சுந்தர்பான் தீவு மக்களின் சொற்களில் வெளிப்படுகிறது.

marichjhapi_261இந்தியாவிலும், வங்க தேசத்திலும் தேசிய விலங்கு புலி. புலிக்கு உள்ள இந்த அந்தஸ்து குறித்து ஒருவர் பெருமை கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீவு மக்கள் புலியின் இந்த அந்தஸ்தை மறுப்பதன் மூலம் புலி பற்றி வேறு விதமான கதையாடல்களை முன் வைப்பதன் மூலம், இந்த அநீதியான வரலாறு பற்றிய தங்கள் கருத்துகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். மேற்கு வங்காளத்தில் குடியேற உரிமை கோரிய ஏழை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, எப்படி சுந்தர்பான் தீவு மக்கள் இன்னும் தங்கள் மனதில் கொண்டுள்ளனர், ஏன் அந்த அகதிகளின் வேண்டுகோள் அலட்சியமாகப் புறக்கணிக்கப்பட்டது என்று அவர்கள் கருதுகின்றனர் என்பதைக் கண்டறிய இக்கட்டுரை முயல்கிறது.

இதுபற்றி ஆய்வு செய்ய நான், சுந்தர்பான் தீவுகளுக்கு வந்தபோது மரிச்ஜாப்பியில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களினாலேயே புலிகள் மனிதர்களைத் தின்பவைகளாக மாறிவிட்டன என்று என்னிடம் சொல்லப்பட்டது. மரிச்ஜாப்பி சம்பவங்களுக்கு முன்பு மக்களும் புலிகளும் ஒருவிதமான இணக்கமான உறவு கொண்டிருந்தனர் என்று தீவு மக்கள் கூறினர். மரிச்ஜாப்பிக்கு பின்புதான் மனிதர்களைப் புலிகள் வேட்டையாடத் தொடங்கிவிட்டன என்று அவர்கள் சொன்னார்கள். புலிகளின் இந்த திடீர் மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு என்று அவர்கள் நம்புகிறார்கள். அரசின் வன்முறையால் சுந்தர்பான் காடுகளின் புனிதம் கெடுக்கப்பட்டது முதல் காரணம். சுந்தர்பான் காடுகளில் புலிகள் மனிதர்களைவிட மேன்மையானவை என்ற கருத்திற்கு, மரிச்ஜாப்பி சம்பவங்களுக்குப் பின்பு தரப்பட்ட அழுத்தம் இரண்டாவது காரணம்.

கொடூரமும், மூர்க்கமுமான முறையில் அகதிகள் விரட்டியடிக்கப்பட்டதும், அதற்குப் பிறகு புலிகளைக் காக்க அரசு எடுத்த நடவடிக்கைகளும் புலிகளுக்கு அதீத தன்னம்பிக்கையை கொடுத்து விட்டன என்று கிராம மக்கள் விளக்கினர். தங்களை முதன்மையானவைகளாகக் கருதிக் கொண்ட புலிகள், கிராம மக்களை தங்களுக்கான இரைகளாக பார்க்கத் தொடங்கி விட்டன.

கிராம மக்கள் விவரிக்கும் வரலாற்றில், புலிகள் மனிதத் தன்மை கொள்வது பற்றிய அச்சம் எனக்கு மர்மமானதாகத் தோன்றியது. ஒருவரது "உயர் சாதி' அடையாளமானது இயற்கை குறித்த அவரது கற்பனையான பார்வையின் மூலம் வெளிப்படுகிறது. வங்காளி "உயர் சாதி'யினர் இந்தப் புலிகள் மீது பற்று கொண்டுள்ளனர். இந்தப் பற்றானது மன்னர் கால, காலனியாதிக்கத்திற்கான வேட்டை காட்சிகளுடனும், தேசிய விலங்கு என்ற புலியின் தற்போதைய அந்தஸ்துடனும் இணைந்துள்ளது. இந்த உணர்வுகள் சுந்தர்பான் காடுகளை உலக Heritage site மற்றும் Prime tiger area என்று அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தப் பயன்படுகிறது.

புலிகள் மனிதத் தன்மை பெற்று தேசிய விலங்கு எனப்படும் "உயர் சாதி' அடையாளமாகக் கொள்ளப்படுவது தீவு மக்களால் மறுக் கப்படுகிறது. அவர்கள் முற்றிலும் வேறு விதமான புலி பற்றிய ஒரு சித்திரத்தைத் தீட்டுகின்றனர். கிராம மக்களின் வர்ணனை புலி பற்றி காலனியாதிக்க கால, தேசியவாத மாய பிம்பங்களாக கிழித்தெறிகிறது. மக்கள் காட்டும் சித்திரம், இந்தப் புலிகளின் மென்மை யான, தன்னிச்சையாக பிறருக்கு தீங்கு விளை விக்காத தன்மை, மரிச்ஜாப்பியின் ரத்தம் தோய்ந்த நிகழ்வுகளால் மனிதனைத் தின்பதாக மாற்றி விட்டது என்று காட்டுகிறது.

புலிகளின் இந்த மாற்றத்தை குறிப்பிட்டுக் காட்டுவதன் மூலம், கிராம மக்கள், தங்களை ஒதுக்கித் தள்ளிய வரலாற்றின் மறக்கப்பட்ட பகுதிகளை திரும்பப் பெற முயல்கிறார்கள். தாழ்த்தப்பட்ட "நிம்னோ பர்கர்' மக்களைவிட, புலிகளை உயர்வாகக் கருதிய நகர்ப்புற மேல்தட்டு மக்கள், தங்களுக்கு இழைத்த அநீதியை வெளிச்சம் போட்டுக் காட்டப் பயன்படுத்துகிறார்கள்.

II

1977இல் இடது முன்னணி அரசு ஆட்சிக்கு வந்தபோது, அதன் அகதி ஆதரவாளர்கள் அது முன்பு அளித்த வாக்குறுதிகளை நம்பி, தாங்கள் குடியேறியிருந்த பகுதிகளில் தங்கள் உடைமைகளை விற்றுவிட்டு மேற்கு வங்காளம் திரும்பினர். மொத்தத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அகதிகள் தண்டகாரண்யாவிலிருந்து திரும்பினர். அவர்கள் அரசு தமது வாக்குறுதியை மதிக்கும் என்று எதிர்பார்த்தனர். மாநிலம் பொருளாதார ரீதியில் புத்துயிர் பெறுவதை அகதிகள் வந்து குவிவது தடுத்துவிடும் என்று எண்ணிய அரசு, அவர்களை வலுக்கட்டாயமாக திருப்பியனுப்பத் தொடங்கியது.

ஆனால், பல அகதிகள் மேற்கு வங்காளத்திற்கு பல்வேறு பகுதிகளுக்கு வெற்றிகரமாக தப்பிச் சென்றனர். அவற்றில் ஒன்று சுந்தர்பான் காடுகள். அங்கே அவர்களுக்கு குடும்ப உறவினர்கள் இருந்தனர். மீன்பிடி தொழில் செய்வதன் மூலம் பிழைத்துக் கொள்ள வாய்ப்பிருந்தது. அந்த ஆண்டு மே மாதம் முதல் "உத்பாஸ்டு உன்யான்ஷிப் சமிதி' என்ற அமைப்பின் தலைவரான சதீஷ் மண்டல் என்பவரின் தலைமையில் 30 ஆயிரம் தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அகதிகள், மரிச்ஜாப்பி தீவுகளுக்குச் சென்று அங்கே ஒரு குடியேற்றத்தை ஏற்படுத்தினர். இந்த அமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சியின் அகதிகள் தொடர்பான பணிகளைச் செய்யும் திட்டத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒன்றாகும்.

மரிச்ஜாப்பி – மேற்கு வங்காள சுந்தர்பான் வடகோடியில் உள்ள காடுகள் நிறைந்த ஒரு தீவு. அதில் 1975 இல் மாங்குரோவ் காடுகள் அழிக்கப்பட்டு, அரசு வருவாயை அதிகரிப்பதற்காக தென்னை, புளிய மரங்கள் நடப்பட்டன. மரிச்ஜாப்பி மாங்குரோவ் காடுகள் நிறைந்துள்ள தீவு அல்ல. ஆனால், இப்படி ஒரு குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலை மாநில அரசுக்கு இருக்கவில்லை. “சுந்தர்பான் அரசு ரிசர்வ் காடுகளின் பகுதியான மரிச்ஜாப்பியை அகதிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்துள்ளனர். அதனால் வனச் சட்டங்களை மீறியுள்ளனர். அகதிகள் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறும் எண்ணத்துடன் வந்துள்ளனர். அதன் மூலம் காடுகளில் உள்ள மூலாதாரமான வளங்களை நாசமாக்குகிறார்கள் மற்றும் சுற்றுச் சூழல் சமநிலையைக் குலைக்கிறார்கள்'' என்று அரசு கூறியது.

அரசு, சுற்றுச் சூழலுக்கு முதல் இடமளித்தது. ஆனால் இந்த வாதமானது, மரிச்ஜாப்பியிலிருந்து தங்களை விரட்டியடித்ததை நியாயப்படுத்தவே கல்கத்தா ஆதிக்க சாதியினரால் வைக்கப்படுகிறது என்று கிராம மக்கள் கருதினர். இந்த குடியேற்றம் சமாளிக்க முடியாத அளவிற்கு வங்க தேசத்திலிருந்து அகதிகள் வந்து குவிவதற்கு காரணமாகிவிடும் என்ற வாதம், அடிப்படை இல்லாதது என்று கடுமையாக மறுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் கிழக்கு வங்காளத்திலிருந்து இறுதியாக வந்த அகதிகள் மாநிலத்தை விட்டு வலுக்கட்டாயமாக விரட்டியடிக்கப்பட்டனர். எனவே, மரிச்ஜாப்பியில் குடியேறியவர்கள் மாநில அரசுக்கு பொருளாதார சுமையாக இருந்திருக்க மாட்டார்கள் என்று ராஸ்மாலிக் வாதிடுகிறார்.

தண்டகாரண்யாவிலிருந்து வந்த அகதிகளோடு சுந்தர்பான் பகுதியில் உள்ள மற்ற தீவுகளிலிருந்து வந்த மக்களும் இணைந்து கொண்டனர். 1930களிலும் 40களிலும் காடுகளை அழிப்பதற்காக கிழக்கு வங்காளத்தின் குல்னாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டவர்களின் வாரிசுகள்தான் இந்தப் பெரும்பாலான தீவு மக்கள் என்பதால், அவர்கள் எளிதாக அகதிகளோடு இணைந்து கொண்டனர். தீவு மக்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளோடு நெருக்கமான ரத்த உறவு கொண்டிருந்தார்கள். இந்த உறவுகள், அடிக்கடி சென்று பார்ப்பது, நெல்லையும் காய்கறிகளையும் பரிசளிப்பது போன்ற செயல்களால் புத்துயிரூட்டப்பட்டது. சொந்த நிலமற்ற இளம் தம்பதிகள், மரிச்ஜாப்பி தீவில் குடியேறும்படி கோரப்பட்டனர். அந்தப் பகுதி காடுகள் பற்றிய தீவு மக்களின் அறிவு, அவர்கள் தாராளமாக படகுகளையும், பரிசல்களையும் அகதிகளுக்கு கடன் கொடுத்தது ஆகியவற்றின் காரணமாக, தீவு மக்களையும் தங்களோடு மரிச்ஜாப்பியில் குடியேற அகதிகள் அழைத்தனர். இதன் மூலம் அகதிகளும் பதிலுதவி செய்ய விழைந்தனர். இதனால் மரிச்ஜாப்பியில் தங்கள் பலம் அதிகரிக்கும் என்றும் அகதிகள் கருதினர்.

தங்கள் நினைவுகளை விவரிக்கும் போது தீவு மக்கள், தங்கள் குளங்கள் ஓரிரவில் அகதிகளால் காலி செய்யப்படுவது சிலருக்கு சங்கடம் அளித்தாலும், பெரும்பாலும் ஆழமான சகோதரத்துவ உறவுகள் நிலவியதை நினைவு கூர்கின்றனர். தொடக்க கால கட்டங்களில் அகதிகள் தங்கள் வாழ்வுக்காக பக்கத்து தீவுகளில் உள்ள குட்டைகளின் நீரையே நம்பி இருந்ததால் இவ்வாறு நேர்ந்தது. மரிச்ஜாப்பி தீவு 125 சதுர மைல் பரப்பளவுள்ளது. மிகப் பெரியது என்பதால் அகதிகள் தீவு மக்களையும் தங்களோடு இணைத்துக் கொள்ள மிகுந்த அக்கறை காட்டினர். கரங்கள் வரப்புகளை உயர்த் தட்டும். குரல்கள் தங்கள் கோரிக்கைகளை கல்கத்தா கொண்டு செல்லட்டும் என்று அவர்கள் விரும்பினர். இது, சுந்தர்பான் காட்டுப் பகுதி முழுவதும் உள்ள மோசமான பொருளாதார சூழலை மேம்படுத்த உதவும். வளமற்றதும், தங்களுடையது அல்லாததும், போராடுவதற்கு தகுதியற்றதுமான நிலத்திற்காக சண்டையிடுவதைவிட இது மேன்மையானது. 

– தொடரும்

தமிழில் : கோபால்   

நன்றி : 'எக்கனாமிக்அண்ட் பொலிடிகல் வீக்லி' ஏப்ரல் 23, 2005