புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எழுதிய ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பிலும், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பிலும் இரண்டு சிறுகதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. "இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்" எனத் தொடங்கும் கதை, "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்" மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பி தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார்.
இறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக "நாடும், மசிரும்" என முடிக்கிறார்.
ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, "இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்" என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் "இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை" எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்திருப்பதும், அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.
இரண்டு கதைகளுமே அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிருத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’ ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது.
1987க்கு முன், 1987க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின் இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட சர்வதேச சக்திகளின் பாத்திரம், இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட கட்சிகளும், தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிருத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிருத்துகிறது.
தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துவமளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.
ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யாக அடியெடுத்து வைத்துள்ளது; மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.
தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிருத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிருத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிருத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?
தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது. சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ, செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?
தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே, ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கனைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்? தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெடுமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன், ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்! என அறைகூவல் விடுக்கலாம்.
கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்தி கோவணத்தை உரியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே- 17 இயக்கம் முன்னெடுக்காமல், பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?
தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகளாக வெளிப்படுத்த உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் கலை வடிவங்கள்தான் பகடி, கேலி, கிண்டல். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல் ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.
போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும், பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?
இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி, வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்.
- மீ.த.பாண்டியன் (