95 ஆம் அகவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு கடந்த ஜன. 17 ஆம் தேதி முடிவெய்தினார். 23 ஆண்டுகாலம் தொடர்ந்து மேற்கு வங்கத்தின் முதலமைச்சராக இருந்த பெருமைக்கு உரியவர் ஜோதிபாசு. நிலச் சீர்திருத்தத்தை அமுல்படுத்தி, நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்ததன் மூலம், கிராமப் பகுதியில் கட்சிக்கு வலிமையான அடித்தளம் உருவாகி, அதுவே மார்க்சிஸ்ட் கட்சியின் பலமாகத் திகழ்ந்தது. அரசு எனும் சுரண்டல் நிறுவனத்தை வெற்றிகரமாகக் கையாண்ட மார்க்சிஸ்ட்டாக ஜோதிபாசு செயல்பட்டார். கூட்டணி கட்சிகளை மோதல் போக்கின்றி வழி நடத்திச் செல்லும் சாதுர்யமும் திறமையும் அவரிடம் இருந்தது.

இந்தியாவின் பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு வந்த போது, கட்சியின் தலைமைக்குழு அதற்கு ஏற்பு வழங்கிடவில்லை. மீண்டும் பிரதமராகப் பொறுப்பு ஏற்க வி.பி.சிங்கை காங்கிரஸ் அல்லாத அணிகள் வலியுறுத்தியபோது, அதை ஏற்க மறுத்த வி.பி.சிங், ஜோதிபாசு பெயரை அப்பதவிக்கு முன் மொழிந்தது குறிப்பிடத்தக்கதாகும். ஜோதிபாசு தாம் ஏற்றுக் கொண்ட மார்க்சியத்துக்காக தனது வங்காளி அடையாளத்தை இழந்து விடாமல் உறுதியாக நின்றதே, அவரது பலமாக இருந்தது. ஆனாலும்கூட அமைச்சரவையில் தலித் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்ற விமர்சனமும், பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவினரே மேற்கு வங்கத்தில் இல்லை என்று கூறி, நீண்டகாலம் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த அவர் மறுத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

சமூகநீதிக்கு எதிரான இந்த அணுகுமுறைக்காக அவர் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கம்யூனிஸ்டுகளுக்குரிய எளிமை - அர்ப்பணிப்பு - உயர்ந்த பண்புகளுடன் பொது வாழ்க்கைக்கு பெருமை சேர்த்த தலைவராக திகழ்ந்தவர் ஜோதிபாசு.

 

Pin It