கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனித இனத்தின் முன்னோர் என்று கருதப்படும் குரங்கினங்களில் அழியும் நிலையில் உள்ள உரங்கோட்டான்கள் சட்டப்படி பாதுகாக்கப்பட்டாலும், சட்டவிரோதமாக அவை போர்னியோ (Borneo) தீவில் அவை கொல்லப்படுவது அதிகரிக்கிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. போர்னியோவில் கடந்த ஐந்து முதல் பத்தாண்டுகளில் 30% கிராமங்களில் இது தொடர்கிறது.ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கொலைகாரர்
இந்த உயிரினங்களை பாதுகாக்க அருகாமைப் பகுதிகளிலேயே பல திட்டங்கள் செயல்படுகின்றன என்றாலும் இந்த அழிவு வேலை தொடர்கிறது. உரங்கோட்டான்கள் அதிக அளவில் வாழும் இந்தோனேஷியாவில் கலிமண்ட்டன் (Kalimantan) பகுதியில் உள்ள 79ல் 30 கிராமங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து ஒருவர் உரங்கோட்டானைக் கொல்கிறார் என்று இது பற்றி நடத்தப்பட்ட கள ஆய்வு கூறுகிறது. நானூறு கிராமங்களில் வாழும் மக்களிடம் இதற்கான நேர்முக ஆய்வுகள் நடந்தன.
கடந்த பத்தாண்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை உரங்கோட்டான்கள் கொல்லப்பட்டுள்ளன என்று முந்தைய ஆய்வுகள் கூறின. இப்போது வனப்பகுதிகளில் 100,000 என்ற எண்ணிக்கைக்கும் குறைவாகவே இந்த உயிரினங்கள் வாழ்கின்றன. பெண் உரங்கோட்டான்கள் ஒவ்வொரு ஆறு முதல் எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஒரு குட்டியை ஈணுகிறது.
போர்னியோ தீவு மலேசியா, புருனை (Brunei) மற்றும் இந்தோனேஷியாவிற்கு நடுவில் சிதறியிருக்கும் ஒரு தீவுப்பகுதி. தீவின் மூன்றில் ஒரு பகுதி இந்தோனேஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2020-2021 காலத்தில் ஒரு சமூக வளர்ச்சி அமைப்பு இந்த நேர்முகங்களை நடத்தியது. “உங்கள் கிராமத்தில் ஒருவர் உரங்கோட்டானை கொல்வது பற்றி எப்போது உங்களுக்குத் தெரிந்தது?” போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.
“இவை நேரடியாகக் கொல்லப்படுவதில் பல விதங்கள் உள்ளன. சமூகரீதியில் இது சிக்கலானது. இது அதிர்ச்சி தரும் செய்தி” என்று குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளரும் ஆய்வுக்குழுவின் தலைவருமான எமிலி மாசிங்ஹாம் (Emily Massingham) கூறுகிறார். இவை பல்வேறு காரணங்களுக்காகக் கொல்லப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மக்கள் பயத்தின் காரணமாக இவற்றைக் கொல்கின்றனர். தோட்டங்கள், வயல் பகுதிகளுக்குள் இவை நுழைவதால் கொல்லப்படுகின்றன.
கொல்லப்படும் தாய் அனாதையாக்கப்படும் குழந்தை
தாய் உரங்கோட்டான்கள் கொல்லப்படுகின்றன. இதனால் அனாதையாக்கப்படும் குட்டிகள் பிடிக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன. அல்லது காட்சிப்பொருளாக பயிற்சி அளிக்கப்பட்டு காட்சிக்கூடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. பணப்பயிர் தோட்டங்களுக்குள் இவை சில சமயங்களில் நுழைவதால் கொல்லப்படுகின்றன. இறைச்சி மற்றும் உடற்பகுதிகளுக்காகவும் கொல்லப்படுகின்றன.
எண்ணைப்பனை வளர்ப்புக்காக இவற்றின் வாழிடப்பகுதிகளான பாதுகாக்கப்பட்ட காடுகள் அழிக்கப்படுவது இவற்றை மனிதக் குடியேற்றங்களை நோக்கி விரட்டுகிறது. ”இவற்றைப் பாதுகாப்பதற்காக நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் இவை கொல்லப்படுவது பற்றிய உண்மையான விவரங்களுக்கு முரணாக உள்ளது. பாதுகாப்பு செயல்திட்டங்கள் மக்களிடையில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று சூழல் பாதுகாப்பு அறிவியல் & செயல்முறை (journal Conservation Science and Practice) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை கூறுகிறது.
இத்தகைய திட்டங்களால் இவற்றைக் கொல்லும் மக்கள் மனப்போக்கில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை என்று மாசிங்ஹாம் கூறுகிறார். இவை மெதுவாகவே இனப்பெருக்கம் செய்கின்றன, நீண்ட நாள் உயிர் வாழ்கின்றன. அதனால் ஒரு உரங்கோட்டான் கொல்லப்படுவது கூட இவற்றின் எண்ணிக்கையை வெகுவாகப் பாதிக்கிறது.
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கிராம மக்களிடையில் இந்த உயிரினங்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி கேட்கப்பட்டது. ஆனால் 40% கிராமத்தவர் மட்டுமே இந்த உயிரினங்களை அவற்றின் இயல்பான போக்கில் மனிதர்களின் குறுக்கீடுகள் இல்லாமல் வாழ விடுவதே சிறந்தது என்று கூறினர். 2000-2019 காலத்தில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உலகில் வனச்சூழலில் போர்னியோ மற்றும் சுமத்ரா பகுதிகளில் மட்டுமே வாழும் இந்த இனக் குரங்குகளை அழிவில் இருந்து காக்க ஒதுக்கப்பட்டது.
புறக்கணிக்கப்படும் அல்லது முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படும் இவற்றின் நேரடிக் கொலைச் சம்பவங்களைக் குறைக்க அல்லது தடுக்க உருவாக்கப்படும் திட்டங்கள் மக்கள் சமூகங்களுடன் இணைந்த அனுகுமுறையில் நிறைவேற்றப்பட வேண்டும். இவற்றைப் பாதுகாக்க ஏராளமான நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அந்த நிதி போதுமான அளவுக்கு சமூகங்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.
இந்த உயிரினங்கள் வாழும் பெரும்பாலான கிராமங்களும் வனச்சூழலை நம்பிய வாழ்வாதார அடிப்படையில் இயங்குகின்றன. இதனால் இங்கு எப்போதும் பதற்றம் நிலவுகிறது.
“இந்த ஆய்வு முடிவுகள் வேதனை அளிப்பவை. அதிர்ச்சி தருபவை. இன்னமும் நேரடிக் கொலைச்சம்பவங்கள் உரங்கோட்டான்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது” என்று டொரான்டோ யார்க் (York) பல்கலைக்கழகத்தின் உரங்கோட்டான் நிபுணர் டாக்டர் ஆண்ட் ரஸன் ( Dr Anne Russon) கூறுகிறார்.
மறைக்கப்படும் கொலைகள்
“வருத்தமளிப்பதாக இருந்தாலும் இந்த முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டவையே. சட்டப்படி பாதுகாக்கப்பட்டு அழியும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் வேட்டையாடப்படுவது பற்றிய விவரங்களைச் சேகரிப்பது கடினம். இவற்றின் கொலைகள் கட்டுக்கதைகளாக்கப்படுகின்றன. வெளியில் சொன்னால் பாதிக்கப்படுவோம் என்ற பயம் அல்லது வெளியில் உள்ளவர்களால் தவறாக நினைக்கப்படுவோம் என்ற எண்ணத்தால் கிராமவாசிகள் இவை கொல்லப்படுவது பற்றிய செய்திகளை வெளியுலகிற்கு மந்தகதியிலேயே சொல்கின்றனர்.
இதனால் இவற்றின் வேட்டையாடலால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் உண்மை நிலையை வெளிப்படுத்த இயலவில்லை. உண்மையான கொலை பற்றிய எண்ணிக்கை விவரங்கள் அதிகமாக இருக்கலாம்” என்று கடந்த 27 ஆண்டுகளாக போர்னியோ உரங்கோட்டான்களைப் பற்றி ஆய்வுகளை நடத்தி வரும் மிஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ மார்ஷல் (Prof Andrew Marshall) கூறுகிறார்.
இப்போதுள்ள நிலையில் உரங்கோட்டான்களின் நிலைமை மோசமாகவே உள்ளது. இதில் எந்த முன்னேற்றமும் உண்மையாக ஏற்படவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். புதிய பலனளிக்கக்கூடிய உரங்கோட்டான் பாதுகாப்புத் திட்டங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்தப் படாவிட்டால் இந்த அற்புத உயிரினங்கள் நம் வாழ்நாளிலேயே முற்றிலும் அழிந்து போய்விடும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கழிவுநீரில் கலந்துள்ள மருந்துப் பொருட்கள், பூச்சிக்கொல்லிகள், தொழிற்சாலை வேதிப்பொருட்கள் போன்ற மாசுகளை வடிகட்டி சுத்தப்படுத்தி பாதுகாப்பான நீராக மாற்ற நீர் வாழ் நுண்ணுயிரினங்களான (crustaceans) வகையைச் சேர்ந்த உண்ணிகளைப் (Fleas) பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். "இதற்காக டைசன் சுத்திகரிப்புக் கருவி (Dyson vacuum cleaner) மாதிரியில் உயிரி உபகரணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகப் பயனுள்ளது” என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர் மற்றும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் கார்ல் டியர்ன் (Prof Karl Dearn ) கூறுகிறார்.(Photograph: blickwinkel/Alamy)
நடைமுறையில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுநீரில் உள்ள எல்லா நச்சுகளையும் அகற்றுவதில்லை. இதனால் இந்த மாசுகள் நதிகள், நீரோடைகள், பாசன வாய்க்கால்களில் கலக்கின்றன. இது அந்த சூழல் மண்டலங்களைப் பாதிக்கிறது, உணவையும் நீரையும் நஞ்சாக்குகிறது. ஆனால் பயன்பாட்டில் இப்போது உள்ள நீர் வடிகட்டிகள் அனைத்தும் அதிக செலவு பிடிக்கக் கூடியவை. கார்பனை அதிகமாக உமிழ்பவை. இவை தங்களைத் தாங்களே மாசுபடுத்திக் கொள்ளும் இயல்புடையவை. இதனால் விஞ்ஞானிகள் கழிவு நீரை சுத்தப்படுத்த உதவும் இயற்கை வடிகட்டிகள் பற்றி ஆராயத் தொடங்கினர்.
உதவிக்கு வரும் உண்ணிகள்
இதற்காக சூழலுக்கு நட்புடைய, அதிக செலவில்லாத, சுலபமாக அளக்க உதவும் நீர் வாழ் உண்ணிகளைப் பயன்படுத்துவது பற்றி ஆராய்ந்தனர்.
"டாஃப்னியா (Daphnia) குடும்பத்தை சேர்ந்த இந்த உயிரினங்கள் உண்மையில் உண்ணிகள் இல்லை. இவை நானூறுக்கும் மேற்பட்ட நுண் உயிரினங்கள். இவை நுண் கழிவுகளை வடிகட்டுகின்றன. பாக்டீரியாக்கள், பாசிகள் போன்றவற்றை சிதைவடையச் செய்கின்றன. பரவசம் ஏற்படுத்தும் கண்டுபிடிப்பு இது” என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக சூழல்இயல் பேராசிரியருமான யுயிசா ஆர்சீனி (Luisa Orsini) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை Journal Science of the Total Environment என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
பொது சுகாதாரத் துறையினருக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சில மாசுப்பொருட்களை நுகரும் நானூறு வகை நீர் வாழ் உண்ணி இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆராயப்பட்டன.
டிக்ளொபினாக் (diclofenac) என்ற கூட்டு மருந்துப்பொருள், அட்ரெசின் (atrazine) என்ற பூச்சிக்கொல்லி, கன உலோகம் ஆர்சினிக் மற்றும் நீரால் பாதிக்கப்படாத ஆடைகள் தயாரிக்கப் பயன்படும் தொழிற்சாலைக் கழிவுப்பொருள் எஃப் ஓ எஸ் (FOS) என்ற சங்கிலித்தொடர் பாலிமர் போன்ற மாசுகளை வடிகட்ட சரியான உண்ணியினத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். இந்த உண்ணிகளின் கருப்பைகள் இணைக்கப்பட்ட பேழைகள் தடாகங்களின் அடிப்பகுதியில் படிந்துள்ள மண்ணில் விடப்பட்டன.
உண்ணிகளின் கருவில் இருந்து முட்டைகள் உருவாகி பொரியும் சூழ்நிலை வரும்வரை ஆய்வாளர்கள் காத்திருந்தனர். உகந்த சூழ்நிலை வராவிட்டால் இவை செயலற்ற நிலையில் பல நூறாண்டுகள் வரை அப்படியே கிடக்கும். நீர் நிலைகளில் மாசுகள் மிக அதிகமாக கலந்திருக்கும்போது மற்றும் மாசுகள் இல்லாத சமயங்களிலும் ஆய்வாளர்கள் கருப்பைகளை நீருக்கடியில் விட்டு ஆராய்ந்தனர்.
ஆய்வகத்தில் உண்ணிகளின் இனப்பெருக்கம்
1900, 1906, 1980 மற்றும் 2015 ஆகிய மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ”வேதிப்பொருட்களை வடிகட்டும் பணியில் மிகச்சிறந்த முறையில் இவை செயல்படுகின்றன” என்று ஆர்சீனி கூறுகிறார். இந்த ஆய்விற்கு முன்பு விஞ்ஞானிகள் ஆய்வகத்தில் குளோனிங் முறையில் உண்ணிகள் கூட்டத்தை இனப்பெருக்கம் செய்தனர். அவற்றின் மரபணு கட்டமைப்பு மற்றும் நீடித்து வாழும் பண்பிற்கான திறன்கள் (survival skills) ஆராயப்பட்டது.
இந்த உயிரினங்களின் சுத்திகரிப்பு ஆற்றலை அறிய முதலில் ஒரு நீர் வாழ் உயிரினங்களுக்கான காட்சிக்கூட தொட்டியிலும், பிறகு 100 லிட்டர் நீரிலும், 2000 லிட்டர் கொள்ளளவு உடைய உண்மையான நீர் சுத்திகரிப்புத் தொட்டியிலும் விடப்பட்டு ஆராயப்பட்டது. பின்னர் 21 மில்லியன் லிட்டர் கொள்ளளவுடைய நீர் சேகரிப்புத் தொட்டியில் ஆராயப்பட்டது.
ஆய்வுக்கூடத்தில் உண்ணிகள் 90% டிக்ளொபினாக் மருந்து கூட்டுப்பொருளையும், ஆர்சினிக்கின் 60 சதவிகிதத்தையும், 59% அட்ரெசினையும், 50% எஃப் ஓ எஸ்ஸையும் உறிஞ்சின. இந்த உயிரினங்கள் ஆய்வகத்தில் செயல்பட்டது போலவே வெளிப்புற சூழலில் ஒரு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் செயல்பட்டன.
“இது அற்புதமானது. 50% எஃப் ஓ எஸ் மாசை நடைமுறையில் இப்போது உள்ள வேறெந்தப் பொருளும் நீக்கவில்லை. அல்லது வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தவில்லை” என்று ஆர்சீனி கூறுகிறார். இப்போது உள்ள மற்ற அணுகுமுறைகள் அனைத்தும் விலை உயர்ந்தவை. இத்தகைய முறைகளில் நச்சுத் தன்மையுள்ள துணைப்பொருட்களும் உருவாகின்றன.
“உண்ணிகள் நீடித்து வாழக்கூடியவை. அவற்றின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கக்கூடிய சத்துப்பொருட்களின் அளவைப் பொறுத்து அவை குளோனிங் முறையில் சுயமாக இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன. தங்களைத் தாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்கின்றன. தேவைக்கேற்ப பெருக்கமடைகின்றன. அல்லது எண்ணிக்கையில் குறைகின்றன. இவை வெவ்வேறு வகையான வாழிடச் சூழல்களில் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன.
இவற்றை பலதரப்பட்ட சூழல்கள் மற்றும் பலவிதமான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். இந்த முறை மலிவானது. நடுநிலை கார்பன் உமிழ்வு (Carbon neutral) உடையது என்பதால் இதை உயர் தரமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தலாம். குறைவான உட்கட்டமைப்பு உடைய வளரும் நாடுகளில் இம்முறை மிகப் பயனுடையது. இதனால் இந்த புதிய சுத்திகரிப்பு முறை இத்துறையில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
மரபணுத் தொழில்நுட்பம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சூப்பர் டாஃப்னியா (Daphnia) உண்ணிகளை உற்பத்தி செய்து அவற்றை மிக அதிக நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் குறிப்பிட்ட வேதிப்பொருளை வடிகட்ட, சுத்திகரிக்கப்பட வேண்டிய மாசுகளை இலக்காகத் தேர்ந்தெடுத்து அகற்றும் இந்த உண்ணிகளின் திறனை மேம்படுத்தலாம்.
நான் டாஃப்னியா உண்ணிகளின் மிகப்பெரிய விசிறி” என்று இண்டியானா பல்கலைக்கழக சூழல் நச்சு உயிரியல் துறை பேராசிரியர் ஜோசப் ஆர்ஷா (Joseph R Shaw) கூறுகிறார்.
மாசுகளை அகற்ற உதவும் இந்த அற்புத உயிரினங்கள் மனிதகுலத்திற்கு இயற்கை கொடுத்திருக்கும் மிகப்பெரிய வரம். வானமே இதன் எல்லை!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மனிதச் செயல்களால் பூமியில் அழிந்த பறவைகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த 120,000 ஆண்டுகளில் மட்டும் 12% பறவையினங்களை மனிதன் அழித்துள்ளான் என்று இந்த புதிய ஆய்வு கூறுகிறது. இது முன்பு கணக்கிடப்பட்டதை விட இரு மடங்கு அதிகம். 1,430 பறவையினங்கள் 120,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ப்ளெஸ்ட்டோசின் (Pleistocene) காலத்தில் இருந்து மனிதனின் செயல்களால் இன அழிவை சந்தித்துள்ளன.
இது குறித்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. புதைபடிவ தரவுகள், இதர ஆவணங்கள் மூலம் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை 640 என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் அழிவு பற்றி எந்த விவரமும் பதிவு செய்யப்படாதவையும் அடங்கும். இவற்றை விஞ்ஞானிகள் இருள் இன அழிவு (dark extinction) என்று அழைக்கின்றனர்.
“டோடோ (dodo) போன்ற நன்கறியப்பட்ட பறவையினங்களின் அழிவு பற்றி நமக்குத் தெரியும். ஆனால் நமக்குத் தெரியாத பறவையினங்களின் அழிவு பற்றி அறிந்து கொள்ள இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன” என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும் இங்கிலாந்து சூழல் மற்றும் நீரியல் மையத்தின் (Centre for Ecology&Hydrology) சூழலியல் மாதிரி வடிவமைப்பாளருமான டாக்டர் ராப் குக் (Dr Rob Cooke) கூறுகிறார்
இது வரை அறியப்படாத பறவையினங்களின் அழிவை கணக்கிட குக் மற்றும் அவருடைய ஆய்வுக் குழுவினரும் புள்ளியியல் மாதிரியைப் பயன்படுத்தி, அழிந்தது பற்றி தெரிந்த (known extinct) 640 பறவையினங்களை விரிவுபடுத்தி ஆராய்ந்தனர்.
நமக்குத் தெரியாமல் அழிந்த பறவையினங்களே இல்லாத நியூசிலாந்து நாட்டின் இனங்களை அளவுகோலாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இது வரை கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவங்கள், பறவை உற்றுநோக்கல்களை அடிப்படையாகக் கொண்டு அழிந்த பறவையினங்கள் பற்றிய முழுமையான விவரங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ள நியூசிலாந்தை சுழிநிலைப்புள்ளியாகக் (zero point) கொண்டு அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. ஆவணப்படுத்தப்படாத, உற்றுநோக்கப்படாத எந்த ஒரு பறவையினமும் அந்நாட்டில் இல்லை.
நியூசிலாந்து தரவுகளைப் பயன்படுத்தி ஆய்வுக் குழுவினர் ஒரு தீவில் வாழ்ந்திருக்கக்கூடிய பறவையினங்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டனர். பிறகு ஆய்வுக் குழுவினர் இந்த எண்ணிக்கையில் இருந்து அழிந்தது பற்றி தெரிந்த மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பறவையினங்களின் எண்ணிக்கையைக் கழித்து அழிந்தவற்றின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் கணக்கிட்டனர். இதன் மூலம் இன அழிவிற்கு உள்ளான கண்டுபிடிக்கப்படாத இனங்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டுள்ளது.
தீவு வாழ் பறவைகள்
தீவுகளில் வாழும் வலசை மேற்கொள்ளாத பறவைகள் சுலபமாக வெளியில் செல்ல முடியாது என்பதால் இந்த ஆய்வுகள் அவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டன. இன அழிவைப் பற்றி அறிய தீவுகளே மிகச் சிறந்த இடங்கள் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். செல்ல வேறு இடங்கள் இல்லையென்பதால் 90% இன அழிவும் தீவுகளிலேயே நிகழ்ந்துள்ளது. ”வன அழிவு, மிதமிஞ்சிய வேட்டையாடுதல், அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு உயிரினங்களே பறவையினங்கள் அழிய முக்கிய காரணம்.
"இந்த ஆய்வில் அழிந்ததாக கணக்கிடப்பட்டுள்ள 1,430 பறவையினங்கள் மிகக்குறைவான கணிப்பே. இந்த அளவு இரண்டாயிரமாக இருக்கலாம்” என்று குக் கூறுகிறார். இயற்கையான இன அழிவுகளின் வேகத்தை விட 100 மடங்கு அதிகமாக மனிதச் செயல்களால் கிழக்கு பசுபிக்கில் முதுகெலும்பி உயிரினங்களின் பேரழிவு அலை வீசிய 14ம் நூற்றாண்டில் முக்கிய முதன்மை இன அழிவு சம்பவங்கள் நடந்தன. இது மனிதக் குடியேற்றங்களால் ஏற்பட்ட காடுகளின் அழிவு, ஆக்கிரமிப்பு உயிரினங்களின் அறிமுகம் போன்றவற்றால் உண்டானவை.
அதிக எண்ணிக்கையிலான பறவையினங்களின் அழிவு, அந்த இனங்கள் பற்றிய நமது புரிதல், அவற்றின் உயிர்ப் பன்மயச் செழுமை, சூழல் பன்மயத்தன்மை, பரிணாம வரலாற்றிற்கு பேரிழப்பு என்று ஆய்வுக்கட்டுரை கூறுகிறது. “நாம் உணர்வதைக் காட்டிலும் உலகம் இப்போது வெறுமையாக உள்ளது. இழக்கப்பட்ட இவை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது” என்று குக் கூறுகிறார். பரந்து விரிந்த சூழலில் இவை ஆற்றும் முக்கிய பங்கும் இழக்கப்பட்டு விட்டது.
விதை பரவல், தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை, கழிவுகளை சுத்தப்படுத்துதல் மற்றும் எச்சங்கள் மூலம் பவளப்பாறைகளையும் நிலத்தையும் வளப்படுத்துவதில் பறவைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
தாவரங்களின் அமைப்பு, உயிர்ப் பன்மயத்தன்மை மற்றும் சூழல் மண்டல இயக்கம் ஆகியவற்றிற்கு உதவும் பெருமளவில் தாவரங்களை உண்டு வாழும் மடகாஸ்கரைச் சேர்ந்த யானைப் பறவையினத்தைச் (elephant birds) சேர்ந்த ஈபியோனிர்த்திடி (Aepyornithidae) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், வானில் பறந்து இரை பிடித்து உண்ணும் ஹாஸ்ட் ஈகிள் (Haast eagle) என்ற இனத்தைச் சேர்ந்த ஹயராயெடிஸ்மூரே (Hieraaetus moorei) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம், விதை பரவ உதவும் செஷல்ஸ் பாரகீட் (Seychelles parakeet) என்ற இனத்தைச் சேர்ந்த சிட்டாகுலா வார்டி (Psittacula wardi) என்ற அறிவியல் பெயருடைய பறவையினம் போன்றவை அழிந்த இனங்களில் அடங்கும்.
“பெரும்பாலான பறவைகள் மிகச் சிறிய எலும்புகளையே பெற்றுள்ளன. எளிதில் புதைபடிவமாவதில்லை. பல தீவுகளில் புதைபடிவங்கள் உருவாக உகந்த சூழ்நிலை இல்லை. பல இடங்களில் ஆய்வாளர்களில் பலர் பறவைகளின் புதைபடிவங்களைத் தேடுவதில்லை என்பதால் இது வரை ஆய்வாளர்கள் அழிந்த பறவையினங்களின் எண்ணிக்கையைத் தவறாக மதிப்பிட்டதில் வியப்பேதுமில்லை” என்று மான்செஸ்ட்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழக உயிர்ப் பன்மயத்தன்மை பிரிவின் மூத்த கல்வியாளர் (Reader) டாக்டர் அலெக்சாண்டர் லீஸ் (Dr Alexander Lees) கூறுகிறார்.
மெல்லுடலிகளின் அழிவும் பறவையினங்களின் அழிவும்
அழிந்த பறவையினங்களின் மதிப்பீடுகள் அழிந்த மெல்லுடலி (mollusk) உயிரினங்களின் அழிவு பற்றி சமீபத்தில் கண்டறியப்பட்ட மதிப்பீடுகளுடன் ஒத்துள்ளது. “இது அழிந்த இனங்களின் எண்ணிக்கையைப் பற்றி தோராயமாக அறிய, நாம் எவற்றை இழந்துள்ளோம் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்” என்று லீஸ் கூறுகிறார். இப்போது போல மனிதன் செயல்பட்டுக் கொண்டிருந்தால் வருங்காலத்தில் இதே போன்ற இனப் பேரழிவுகள் நமக்குத் தெரியாமலேயே தொடரும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
அதிகரிக்கும் காலநிலை மாற்றம் செலுத்தும் அழுத்தம், உணவு வளங்கள் மறைந்து கொண்டிருப்பது, காடுகளின் அழிவால் வரும் ஒரு சில நூறாண்டுகளில் 669 முதல் 739 பறவையினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என்று இதே ஆய்வுக்குழு முன்பு நடத்திய ஆய்வு முடிவுகள் எச்சரித்தன. உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் பறவைகளின் வாழிட மீட்பு போன்றவற்றின் மூலம் அழியும் இனங்களை நம்மால் காப்பாற்ற முடியும். பறவைகளின் எதிர்காலம் மனிதர்களாகிய நம் கைகளிலேயே உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு அவற்றை நம்பியில்லாமல் தன்மகரந்த சேர்க்கை முறைக்கு மாறுகின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது பிரான்சில் பூக்கும் காட்டுப்பூக்கள் சிறிய அளவில், குறைவான தேனை உற்பத்தி செய்யும் பூக்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன என்று இந்த ஆய்வு கூறுகிறது.
சுருங்கும் பூக்கள், குறையும் தேன் உற்பத்தி
மகரந்த சேர்க்கை நடைபெற உதவும் பூச்சிகள் பெரும் எண்ணிக்கையில் அழிந்து விட்டதால் இவை தங்கள் அளவைக் குறைத்து சிறிதாக பூக்கத் தொடங்கி விட்டன. பாரிஸ் நகருக்கு அருகில் இருக்கும் பூந்தோட்டங்களில் வளரும் பான்சீஸ் (Field pansies) எனப்படும், வயோலா ஆர்வென்சிஸ் (Viola arvensis)) என்ற அறிவியல் பெயருடைய பூக்கள் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் பூத்ததை விட இப்போது 10% சிறிதாக பூக்கின்றன. 20% தேனை குறைவாக சுரக்கின்றன.
இந்தப் பூக்களில் இருக்கும் தேனை அருந்த பூச்சிகள் முன்பை விட குறைவாகவே வருகின்றன. அதிக தேனைச் சுரந்து பெரிய வடிவத்தில் பூத்து தங்கள் அயல் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க இப்போது அவசியமில்லை. இதனால் பூக்கள் இந்த பரிணாம மாற்றம் அடைகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.“பான்சீஸ் பூக்கள் பூச்சிகளை விட்டு விலகுகின்றன. அவற்றின் மகரந்த சேர்க்கை செய்யும் முறை மாறுகிறது. பூச்சிகளின் உதவியில்லாமல் தன் மகரந்த சேர்க்கை செயல்முறையைப் பின்பற்றுகின்றன. ஒவ்வொரு பூவும் தமக்குள்ளேயே இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இந்த செயல்முறை குறைந்த காலத்திற்கு சரியாக இருக்கும். ஆனால் வருங்கால சூழல் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் திறன் இதனால் அவற்றிடம் குறையும்” என்று பிரான்ஸின் அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தின் ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்களில் ஒருவருமான பியர் ஆலிவியா செப்டு (Pierre-Olivier Cheptou) கூறுகிறார்.
பூச்சிகளுக்காக பூக்கள் தேன் சுரக்கின்றன. இதற்குப் பதில் பூச்சிகள் மகரந்தத்தூளை அதே இனத்தைச் சேர்ந்த மற்ற பூக்களுக்கு எடுத்துச் சென்று கொடுக்கின்றன. ஒருவருக்கொருவர் பயனுள்ள விதத்தில் உதவி செய்து வாழும் இந்த சக உதவி வாழ்க்கை பில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரிணாம மாற்றத்தால் நிகழ்ந்து வருகிறது. ஆனால் பூக்களும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்களும் இப்போது ஒரு தீய சுழற்சியில் (vicious cycle) சிக்கிக் கொண்டுள்ளன.
தாவரங்கள் குறைவாக தேன் சுரப்பதால் இருக்கும் பூச்சிகளுக்கு கிடைக்கும் உணவு குறையும். இதனால் உணவு உற்பத்தி குறையும். இந்தப் பூக்கள் துரிதமாக இத்தகைய பரிணாம மாற்றத்தை அடைவது வியப்பை ஏற்படுத்துகிறது. ஐரோப்பா முழுவதும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1999 முதல் 2016 வரையுள்ள காலத்தில் பொறிகளில் சிக்கிய பூச்சிகளின் ஒட்டுமொத்த எடை 75% குறைந்துள்ளது என்று ஜெர்மனியில் உள்ள இயற்கை வள மையங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
"தாவரங்கள் ஏற்கனவே தங்களை மாற்றிக் கொள்ளத் தொடங்கி விட்டதால் மகரந்த சேர்க்கை செயல்முறையில் நிகழும் இந்த மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் எளிதில் மீட்க முடியாதவை. அயல் மகரந்த சேர்க்கை குறைவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று ஆய்வுக் கட்டுரையின் முன்னணி ஆசிரியர் மற்றும் மாண்ட்பிலியர் (Montpellier) பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வுமாணவர் சாம்சன் அக்கோக்காபிடல் (Samson Acoca-Pidolle) கூறுகிறார்.
1990 மற்றும் 2000ம் ஆண்டுகளில் தேசிய தாவரவியல் சேகரிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பான்சீஸ் செடிகளின் விதைகளை நட்டு வளர்த்து முளைக்கச் செய்யப்பட்டன. இந்த முறை உயிர்த்தெழுதல் சூழலியல் (“resurrection ecology” என்று அழைக்கப்படுகிறது. வயோலா ஆர்வென்சிஸ் பூக்களின் நான்கு இனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வுக்குழுவினர் ஆராய்ந்தனர்.
பூக்களில் நிகழ்ண்ட மாற்றம் தவிர அவற்றின் இலை அளவு, தாவரத்தின் ஒட்டுமொத்த அளவு போன்ற பண்புகள் மாறவில்லை என்று புதிய தாவரவியலாளர்கள் (journal New Phytologist) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இது குறித்த ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. பூக்கள் பூச்சிகளைக் கவர்வதை நிறுத்திவிட்டால் பிறகு ஒரு தாவரம் பெரிய அளவில் பூக்களை பூக்க வைப்பதிலும் அவற்றில் அதிக தேனை சுரப்பதிலும் ஆற்றலை வீணாக்குவதில் பொருளில்லை. இதை உணர்ந்தே தாவரங்கள் இவ்வாறு செய்கின்றன.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்த வகை பூக்களில் தன்மகரந்த சேர்க்கை 25% அதிகரித்துள்ளது என்று முந்தைய ஆய்வு கூறுகிறது. “பரிணாம மாற்றம் நம் கண் முன்பே நிகழ்கிறது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது. முன்பு மகரந்த சேர்க்கை நிகழ உதவிய உயிரினங்கள் ஏராளமாக இருந்தன. இன்று குறைந்து விட்டன. இதனால் பூக்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு அவசியமான மகரந்த சேர்க்கை வழிமுறையை மாற்றிக் கொண்டுள்ளன. இது திடுக்கிட வைக்கும் ஒன்று. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம மாற்றத்தின் மூலம் நிகழ்ந்து கொண்டிருந்த ஒன்றை கடந்த ஐம்பதாண்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தாவரங்கள் அதை நிறுத்திக் கொண்டு விட்டன” என்று லங்கஸ்ட்டர் (Lancaster)) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் பிலிப் டாங்கர்ஸ்லி (Dr Philip Donkersley) கூறுகிறார்.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் இது பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. என்றாலும் உலகம் முழுவதும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்து வருகின்றன. பனிப்பாறையின் உருகும் மேற்பகுதியைப் போன்றதே இது. தாவர உயிர்ப் பன்மயச் செழுமை நிறைந்த இடங்களில் காட்டுத் தாவரங்கள் பலவும் இது போல தங்கள் மகரந்த சேர்க்கை வழிமுறைகளை மாற்றிக் கொண்டிருக்கலாம்.
அபிடேயே தேனீ பெருங்குடும்பத்தில் பாம்பஸ் இனத்தைச் சேர்ந்த பம்பிள் தேனீக்கள் (Bumble bees) அல்லது வண்டுத்தேனீக்களால் ஐரோப்பாவில் மகரந்த சேர்க்கை நடைபெறும் ஃபாக்ஸ் க்ளவுஸ் (Foxgloves) என்ற பூக்கும் தாவரம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோஸ்டரிக்கா மற்றும் கொலம்பியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இத்தாவரம் மகரந்த சேர்க்கைக்கு தேனீக்களை நம்பியில்லை. மாறாக இவற்றில் மகரந்த சேர்க்கை இப்போது ஹம்மிங் பறவைகளால் நடைபெறுகிறது.
இத்தாவரங்களில் மகரந்த சேர்க்கை நடக்க ஹம்மிங் பறவைகளுக்கு உதவும் வகையில் பூக்களின் வடிவம் மாறியுள்ளது. இது போன்ற நடைமுறையே ஆக்ரமிப்பு உயிரினங்களாக புதிய சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் குடியேறிய பல தாவரங்கள் செய்கின்றன. தன்மகரந்த சேர்க்கை செய்ய இயலாத தாவரங்கள் கூடுதலான மகரந்தத்தூளை உற்பத்தி செய்வது போன்ற வேறு வழிகளைப் பின்பற்றுகின்றன. மகரந்த சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் குறைந்துவிட்ட சூழ்நிலையில் இவை மற்ற தாவரங்களுடன் போட்டி போட வேண்டியுள்ளது.
இதனால் இனப்பெருக்கத்திற்கு வழிகாட்டியாக இருந்த மகரந்த சேர்க்கை செயல்முறையை தாவரங்கள் மாற்றிக் கொண்டுள்ளன. “தன்மகரந்த சேர்க்கை செய்யக்கூடிய தாவரங்களில் இந்த பண்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. வாழும் இடத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட இனத்தை நிலைநிறுத்த இனப்பெருக்கம் இன்றியமையாதது. இதனால் இவ்வாறு நிகழ்கிறது” என்று க்யூ (Kew) தாவரவியல் பூங்காவின் (Royal Botanic Gardens, Kew) ஆய்வாளர் பேராசிரியர் ஃபில் ஸ்டீவென்சென் (Prof Phil Stevenson) கூறுகிறார்.
பூக்களில் நடைபெறும் திடுக்கிட வைக்கும் இந்த மாற்றம் நாளை மனித வாழ்வை பல வகைகளில் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- காலத்திற்கேற்ப கோலம் மாறும் பறவைக் கூடுகள்
- பாதாளத் துயரம்
- மயான அமைதியில் இயற்கை
- இரயில்கள் ஏன் இவர்களின் வீடுகளை ஆக்ரமிக்கின்றன?
- மண் வண்டுகள்
- பாடத் துடிக்கும் நகரத்துப் பறவைகள்
- ஈ… பறக்க முடியாத ஈ
- சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்த கொசுக்கள்
- பாம்புகள்: பாயும் பகுத்தறிவும் பதுங்கும் மூடநம்பிக்கைகளும்
- இலை வெட்டும் எறும்புகள்
- காடு காக்க உதவும் கறுப்பு மரங்கொத்தி
- மனிதனைக் கொல்ல வந்தவை அல்ல பாம்புகள்!
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- காணாமல் போகும் கழுகுகள்
- இன்னும் இரண்டரை மில்லியன் பூஞ்சைகள்
- இந்தியாவின் வண்ணத்துப் பூச்சிக்கு அரேபியாவில் பாஸ்போர்ட்
- வௌவால்களுக்கு அடைக்கலம் தரும் தேவாலயங்கள்
- கொலையாளித் திமிங்கலங்கள்
- ஒரு மனிதன் ஒரு குளம் ஒரு சில தவளைகள்
- பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்