“எல்லா உயிரினங்களும் மறைந்து போய்விட்டால் ஆத்மார்த்தமான சூன்யத்தில் சிக்கி மனிதன் மரணமடைவான். உயிரினங்களுக்கு சம்பவிப்பது எல்லாவற்றையும் மனிதனும் அனுபவிப்பான். எல்லாம் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை. பூமிக்கு வருவது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் வரும்” - ஒரு அமெரிக்கப் பழங்குடியினப் பழமொழி.

அருணாசலப் பிரதேசம் இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான இடம். இன்று காடுடன் சேர்ந்து வாழும் சில ஆதிவாசிப் பிரிவினரின் நம்பிக்கைகளுக்கும், பறவை விலங்குகளின் விற்பனையை நடத்தி வரும் கடத்தல்காரர்களுக்கும், உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்கப் போராடும் ஆர்வலர்களுக்கும் இடையில் அருணாசலப் பிரதேசம் போராடிக் கொண்டிருக்கிறது.

பசுமை எழில் கொஞ்சும் மாநிலம்

இம்மாநிலத்தின் நிலப்பரப்பில் 80% வனப்பகுதியே. பசுமை மாறாக் காடுகள், உயரமான மண் மேடுகள், நதிகள், பள்ளத்தாக்குகள் இவற்றுடன் இமயமலைச் சிகரங்கள் நிறைந்து காணப்படும் இங்கு உயிர்ப் பன்மயத் தன்மையின் செழிப்புமிக்க அடையாளங்களாக ஐநூற்றிற்கும் மேற்பட்ட பறவை இனங்கள், ஆயிரக்கணக்கான அபூர்வ தாவரங்கள் வாழ்கின்றன. அனைவரையும் இங்கு ஈர்ப்பது பறவைச் சுற்றுலா.Nishi tribal lightenedமேற்கு காமெங் (Western Kameng) மாவட்டத்தில் உள்ள கழுகு முட்டை சரணாலயம், பாசிகட் (Pasighat) மாவட்டத்தில் உள்ள டேயிங் எரிங் (Daying Ering) நினைவு வனவிலங்குகள் சரணாலயம், நம்தப்பா (Namdapha) தேசிய பூங்கா உட்பட எட்டு வன உயிரி சரணாலயங்கள், ஒரு அலங்கார மலர்ப் பூங்கா, இரண்டு தேசியப் பூங்காக்கள் உள்ளன.

வேட்டைத் திருவிழா

இங்கு வாழும் ஒரு சில ஆதிவாசி இனங்கள் வேட்டைத் திருவிழாக்கள் நடத்துகின்றன. வேட்டைத் திருவிழாவில் கொல்லப்பட்ட விலங்குகள், பறவைகள் வரிசை வரிசையாகத் தொங்க விடப்படுகின்றன. பறக்கும் அணில், கலீச் பெசண்ட், சிவப்பு செம்போத்து (Red pheasant), மான், கீரி போன்றவை இன அழிவை சந்திக்கும் அபூர்வ உயிரினங்கள். இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய ஆதிவாசி இனமான ஆதி (Adi) இன மக்களுக்கு நவம்பரில் டோரங், மார்ச்சில் உனைங் ஆரான், ஜனவரியில் டிஷாங் ஆகியவை முக்கியத் திருவிழாக்கள். இவற்றுடன் திருமண விழாக்களும் முன்காலம் முதலே இவர்களால் வேட்டையாடலுடன் கொண்டாடப்படுகின்றன.

முன்பு மூங்கில் பொறிகளைப் பயன்படுத்தி உயிரினங்கள் பிடிக்கப்பட்டன. பிறகு ஏர் கன் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி மக்கள் வேட்டையாடினர். இதனால் நிமிட நேரத்திற்குள் ஏராளமான உயிரினங்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டன. இதனுடன் சேர்ந்து வன உயிரினங்களின் இறைச்சிக்கான சந்தையும் வளர்ந்தது. இவர்களின் வேட்டையாடும் திறனைச் சுரண்ட வன உயிரினங்களைக் கடத்துபவர்களும் வரத் தொடங்கினர்.

வேட்டையாடுதலில் இருந்த பாரம்பரிய நம்பிக்கையின் கட்டுப்பாடுகளை சில ஆதிவாசிகள் பணத்திற்காக காற்றில் பறக்கவிட்டனர். இவர்கள் எந்த நேரமும் கையில் துப்பாக்கியுடன் உலா வந்தனர். குழந்தைகள்கூட குறைந்த காசுக்காக கண்ணில் தென்பட்ட பறவைகளை சுட்டு வீழ்த்தினர்.

மௌனமான கிராமங்கள்

பறவைகள் இல்லாத கிராமங்கள் நிசப்தமாயின. உயிரினங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. அவை வம்சமிழந்து அழிவை நோக்கிச் சென்றன. 2002-2005ல் 53 இனப் பறவைகள் மிதமிஞ்சிய வேட்டைக்கு இரையாகின என்று மேற்கு அருணாசலப் பிரதேசத்தில் வாழும் மூன்று ஆதிவாசி சமூகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறின.

வெப்ப மண்டலச் சூழலியல் (Journal of Tropical ecology) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின்படி வேட்டையாடப்படுபவற்றில் ஐந்து இனங்களைச் சேர்ந்த பறவைகள் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) சிவப்புப் பட்டியலிலும், ஐந்து இனங்கள் வருங்கால ஆபத்தில் உள்ள உயிரினங்களின் பட்டியலிலும், ஓர் உயிரினம் அழிவின் விளிம்பில் உள்ளவற்றின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளவை.

புதிய முயற்சி

வனமும் வனப்பொருட்களும் ஆதிவாசிகளின் உரிமை. காட்டை தங்கள் சொந்த வீடாகக் கருதும் ஆதிவாசிகளை அங்கிருந்து விரட்டாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தி காட்டின் காவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். ஆதிவாசி இனத் தலைவர்களின் ஆய் பானே கபாங் குழுவுடன் வேட்டைக்கு எதிரான பேச்சுகள் நடந்தன.

2015ல் இதன் ஒரு பகுதியாக ஆதிவாசி இனத் தலைவர்கள் மாநில வனத்துறையினரால் அஸ்ஸாம் காசிரெங்கா சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆதிவாசித் தலைவர்கள் பழமையான சம்பிரதாயங்களைக் கைவிட முடிவு செய்தனர். கிராமங்களின் உயிர்ப் பன்மயத் தன்மையைக் காப்பாற்ற உறுதி எடுத்தனர்.

இருவாயன் கூடுகளை தத்து எடுக்க வாருங்கள்

இருவாயன் அல்லது இருவாய்ச்சி பறவை (hornbill) உள்ள ஒரு காடு முழுமையுடையது என்று சொல்லப்படுவதுண்டு. பழங்களைத் தின்று விதைகளை வெகுதூரம் வரை பரவச் செய்வதால் இவை காட்டின் விவசாயிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் 1972 வன உயிரிப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ள இப்பறவை அருணாசலப் பிரதேசத்தின் மாநிலப் பறவை.

2018ல் சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள உயிரினங்களின் பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. இப்பறவைகளின் அழிவிற்கு இம்மாநிலத்தின் முதன்மை ஆதிவாசி நைஷி (Nissi) இனத்தவரின் வேட்டையாடலே காரணம். இவர்களின் தலைப்பாகையில் இப்பறவையின் அழகான பெரிய மஞ்சள் நிற அலகு அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. பறவையின் இறைச்சி, இறகுகளை இவர்கள் பயன்படுத்தினர்.

பறவைக்கூடு

வேட்டைக்காரர்களையே பாதுகாவலர்களாக மாற்ற சூழலியலாளர்கள் முயன்றனர். இதன் பலனாக 2011ல் இருவாயன் பறவைக்கூடு தத்து எடுக்கும் திட்டம் (Hornbill Nest Adoptation Programme HNAP) தொடங்கப்பட்டது. இதற்காக நைஷி ஆதிவாசித் தலைவர்களின் கோரா-ஆபே சங்கம் மற்றும் வனத்துறையுடன் இணைந்து இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (Nature Conservation Foundation) பாடுபட்டது.

சூழலியலாளர் அபராஜிதா தத்தா 1995 முதல் இப்பறவையைக் குறித்து நடத்திய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் செயல்பட்டது. பறவையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட ஆதிவாசிகளுக்கு அறக்கட்டளை பிரதிபலன் தரத் தொடங்கியது. 2020ல் பாதுகாக்கப்பட்ட 40 கூடுகளில் இருந்து 152 பறவைக் குஞ்சுகள் பிறந்தன!

யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம்

இம்மாநிலத்தில் இப்பறவைகளின் கூடுகளை யார் வேண்டுமானாலும் தத்து எடுக்கலாம். இதற்குக் கட்டணம் மாதம் ரூ 6000. பாதுகாக்கப்படும் பறவையின் குடும்பத்தைப் பற்றிய விவரங்கள் அடங்கிய இரண்டு அறிக்கைகள் ஆண்டுதோறும் அனுப்பப்படும். இத்திட்டம் கூடுகளைப் பாதுகாக்கும் ஆதிவாசிக் குடும்பத்திற்கு சம்பளம் கொடுக்க அறக்கட்டளை கண்டுபிடித்த வழி.

புதிய தலைப்பாகை

காட்டுடன் நைஷி இனத்தவருக்கு இருந்த ஆத்மார்த்தமான உறவு புரிந்து கொள்ளப்பட்டது. தலைப்பாகையில் பறவையின் அலகிற்கு மாற்று வழி கண்டுபிடிக்கப்பட்டதால் இத்திட்டம் வெற்றி பெற்றது. இதில் இந்திய வன உயிரி அறக்கட்டளையினர் (Wildlife Trust of India WTI) பெரும்பங்கு வகித்தனர்.

பறவையின் அலகு போலவே தோற்றமளிக்கும், ஆனால் அதைவிட நீண்டநாள் உழைக்கக்கூடிய கண்ணாடி நாரிழையால் ஆன அலகுடன் கூடிய தலைப்பாகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த முறையில் அலகுகள் தயாரிக்கும் தொழில் ஆதிவாசிகளின் வருமான மார்க்கமாக மாற்றப்பட்டது.

மாநிலத்தின் பகே (Pakke) புலிகள் காப்பகத்திலும் அருகில் உள்ள காடுகளிலும் இன்று இப்பறவையின் கூடுகளை தாராளமாகக் காணலாம். இரவு நேரங்களில் இவற்றின் நூற்றுக்கணக்கான பறவைகளை இன்று சர்வசாதாரணமாகக் காண முடியும். கூடுகளைப் பார்க்க, அவற்றைப் படமெடுக்க ஏராளமானோர் இங்கு வருகின்றனர். சூழல் சுற்றுலாவின் மூலம் ஆதிவாசிகளுக்கு வருமானம் கிடைக்கிறது.

துப்பாக்கி ஒப்படைக்கும் திட்டம்

வேட்டையாடுவதைத் தடுக்க அரசு 2021ல் துப்பாக்கிகளை ஒப்படைக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதுவரை 2400 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு சில வாரங்களுக்குள் கிராமங்களில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. வீடுகளுக்கு அருகிலும், காட்டிலும் பறவைகள் மீண்டும் வர ஆரம்பித்தன. மைனா, கிளி, குயில், புல் புல், குருவி, புறா, பருந்து போன்றவை கூட்டமாக வந்தன. காட்டில் பறவைகளின் சங்கீதம் கேட்க ஆரம்பித்தது.

வன உயிரினங்களைக் கொல்வது, பிடித்து வைப்பதற்கு எதிராக சட்டங்கள் உள்ளன. வேட்டை, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, நஞ்சு வைத்து மீன்களைக் கொல்வது சட்டவிரோதம். ரூ 25,000 வரை இதற்கு அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை கிராம வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதிவாசிகளிடையில் கல்வியறிவு பெற்ற சூழல் விழிப்புணர்வு உள்ள புதிய தலைமுறையினர் வேட்டைக்காரர்களைப் பிடிக்க, உட்காடுகளில் காவலிற்குச் செல்ல தாமே முன்வந்து தயாராகின்றனர்.

வன அழிவு

2002-2019ல் அருணாசலப்பிரதேசத்தில் 1,100 சதுர கி மீ பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டன என்று உலக வனக் கண்காணிப்பு அமைப்பு (Global Forest Watch) 2020 அறிக்கையில் கூறியுள்ளது. சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுதல், பழங்குடியினருக்கு இடையில் ஏற்படும் கலவரங்கள், விவசாயத்திற்காக காடுகளை அழித்தல், வனங்களை பணப்பயிர் தோட்டங்களாக மாற்ற அழித்தல் போன்றவை இதற்குக் காரணம்.

2021ல் கண்டுபிடிக்கப்பட்ட சாம்பல் நிற அலகு பாஃப்லர் (Greybilled babblar), 2022ல் கண்டுபிடிக்கப்பட்ட ரோஸ் பிஞ்ச் (three banded rose pinch , பகன் லியாச்சியா (Bugun Liochchiya) உள்ளிட்ட பல புதிய பறவையினங்கள் சமீபத்தில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

அன்பு செலுத்தும் இயற்கையின் அம்சங்களான மரம், செடி, கொடி, பறவை, விலங்குகளை மனிதன் நேசிக்கத் தொடங்கினால் இயற்கையும் அவனை நேசிக்கும். உயிரினங்கள் இல்லாத உலகில் மனிதனும் உயிருடன் இருக்க முடியாது. ஏனென்றால் பூமிக்கு சம்பவிப்பது எல்லாம் பூமி புத்திரர்களுக்கும் சம்பவிக்கும்!

மேற்கோள்: https://www.mathrubhumi.com/environment/columns/nature-future-column-on-aarunachal-pradesh-anti-poaching-prject-1.8318787

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It