சிரிக்க வைத்தும் சந்தோஷப்படுத்தியும் காண்பவர்களின் மனம் கவர்பவை கொலையாளித் திமிங்கலங்கள். இவை ஓர்க்கா (Orca) என்றும் அழைக்கப்படுகின்றன. 21ம் நூற்றாண்டு முதலே காட்சிப் பொருட்களாகவும், மற்ற அவசியங்களுக்காகவும் மனிதன் இவற்றை அதிகம் பயன்படுத்தத் தொடங்கினான்.

1970களில் உலகெங்கும் பெரும் எண்ணிக்கையில் இவை வேட்டையாடப்பட்டன. பிடிக்கப்பட்டவற்றில் பல திமிங்கலங்கள் காட்சிப்பொருளாக செயற்கை நீர்நிலைகளில் விடப்பட்டன. இவை அதிபுத்திசாலிகள் என்பதால் இவற்றை பயிற்சி கொடுத்து காட்சிப்படுத்துவது எளிது.

கிஸ்காவில் இருந்து ஆரம்பம்

கிஸ்கா என்ற புகழ்பெற்ற கொலையாளித் திமிங்கலம் விடுவிக்கப்படுவதற்கு முன்பே மரணமடைந்தது. லலீடா ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய திமிங்கலங்களில் ஒன்று. அக்டோபர் 1979ல் அட்லாண்டிக் கடற்பகுதியில் ஐஸ்லாந்திற்கு அருகில் கிஸ்கா (Kiska) என்ற பெண் திமிங்கலம் அதன் மூன்றாவது வயதில் பிடிக்கப்பட்டது. உலகில் தனிமையில் வாடிய முதல் திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் இது, கனடா நயாகரா நீர்வீழ்ச்சி பகுதியில் இருக்கும் மெரைன் லேண்ட் (Marine land) என்ற கடல்வாழ் உயிரினங்களின் காட்சி சாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் அங்கு இது தனிமையில் வாழ்ந்தது. அப்போது அடைக்கப்பட்ட கண்ணாடிக் கூண்டில் இடித்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட இதன் படங்கள் உலகம் முழுவதும் உள்ள சூழல் ஆர்வலர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது மார்ச் 9, 2023ல் பாக்டீரியா தொற்றினால் மரணமடைந்தது.killer whale orcaலலீடா (Lolita) என்ற பெண் திமிங்கலம் உலகில் ஐம்பதாண்டுகளுக்கும் மேல் பிடிக்கப்பட்டநிலையில் வாழும் திமிங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இது 1970ல் பசுபிக் கடலில் ப்யூகிட் சவுண்ட் (Puget Sound) என்ற இடத்திற்கு அருகில் பிடிக்கப்பட்டது. 57 வயதான இதை விடுதலை செய்வது பற்றிய செய்திகள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது 52 ஆண்டுகள் ப்ளோரிடா கடல் காட்சிக்கூடத்தில் காட்சிப் பொருளாக வாழ்கிறது. இதன் ஆரோக்கியம் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்ததால் இதை விடுதலை செய்ய காட்சிக்கூட நிர்வாகிகள் முடிவு செய்தனர். பயிற்சி கொடுத்து பராமரிக்கப்படும் உலகின் மிக வயதான கொலையாளித் திமிங்கலம் இதுவே. விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு இதன் உடல் நலத்தைக் கண்காணிக்க வாஷிங்டனுக்கும் கனடாவிற்கும் இடையில் இருக்கும் ஒரு கடல் சரணாலயத்தில் தங்க வைக்க திட்டமிடப்பட்டது. 1966ல் பிறந்த லலீடா ஆண்டுக்கணக்கில் காட்சிக் கூடத்தில் ஊழியர்கள் கொடுக்கும் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தது. இதனால் சரணாலயத்தில் வைத்து திமிங்கல நிபுணர்களால் இதற்கு இரை பிடிக்கக் கற்றுத் தரப்பட்டது. புதிய சூழ்நிலையில் தன்னை இது தகவமைத்துக் கொள்ளும்வரை இதன் நடவடிக்கைகளை நிபுணர்கள் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

லலீடாவின் தாய் என்று கருதப்படும் ஓஷன் சன் (Ocean sun) என்ற 90 வயதிற்கும் மேலான திமிங்கலம் தன் கூட்டத்துடன் இப்போதும் கடலில் சுதந்திரமாக வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. விடுதலை செய்யப்பட்ட லலிடா தாயைச் சந்திக்கும் முன்பே உடல் நலக் குறைவினால் மரணமடைந்தது.

ஜானி டெப் (Johnny Depp), லின்சி லோஹன் (Lindsay Lohan), ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford), எல்ட்டன் ஜான் (Elton John), ஜூலியா லெவி (Julia-Levy) போன்ற பல பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் இத்திமிங்கலத்தின் விடுதலைக்காக எர்த் லேண்ட் என்ற அமைப்புடன் இணைந்து போராடினர். ஆனால் சுயநலம் மிக்க சிலரின் மனிதத் தன்மையற்ற செயல்களால் இது போல கைதியாக்கப்படும் பல திமிங்கலங்களும் மனிதச் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே உயிரை விடுகின்றன.

கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் இவை டால்பின் இனத்தைச் சேர்ந்த உயிரினங்கள். சிறிய கூட்டங்களாக வாழ்கின்றன. ஆண் திமிங்கலங்களின் உடல் எடை 9,800 கிலோ வரை இருக்கும். பெண் திமிங்கலங்களின் உடல் எடை ஆணை விடக் குறைவாக இருக்கும். கண்ணாடியைப் பார்த்து தங்களை அடையாளம் கண்டுபிடிக்கும் அபூர்வ ஆற்றல் உடைய ஒரு சில உயிரினங்களில் இவையும் ஒன்று.

கண்ணாடிக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு காட்சிப்பொருட்களாக வாழும் இவற்றின் விடுதலைக்காக சூழல் போராளிகள் நீண்ட காலம் போராடி வருகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு 1860களில் கூண்டில் அடைக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது தொடங்கியது. இந்த வகையில் இரண்டு பெலூகா (beluga) திமிங்கலங்களே முதலில் லாஃப்ரடோர் கடற்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு நியூயார்க் காட்சிக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இவற்றை சர்க்கஸ் கம்பெனி முதலாளி டி டி பேர்னம் வாங்கினார். 1870களில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏராளமான பெலுகா திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை சர்க்கஸ் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் சில மட்டுமே அதிக நாட்கள் உயிர் வாழ்ந்தன.

ஜூலை 1865ல் நியூயார்க்கிற்கு வந்த இரண்டு பெலுகா திமிங்கலங்கள் காட்சிக்கு நடுவில் இறந்தன. 1930களில் பயிற்றுவிக்கப்பட்ட டால்பின்கள் காட்சிப்பொருட்களாக புகழ் பெறத் தொடங்கின. அப்போது முதல் பாட்டில் மூக்கு (bottle nose) திமிங்கலங்கள் காட்சிப் பொருட்களாயின. கூண்டுகளில் அடைக்கப்படும் இவை சில சமயங்களில் தாக்குதல் குணத்தையும் வெளிப்படுத்துவது உண்டு.

கடல்நீர் மாசு, வேட்டைக்காரர்கள் போன்றவற்றில் இருந்து காட்சிக்கூடங்களில் செயற்கை நீர்நிலைகளில் இவை பாதுகாப்புடன் வாழ முடியும் என்றாலும், இது இவற்றிற்கு மனிதன் வழங்கும் தூக்குத் தண்டணையாகவே கருதப்படுகிறது. இன்று கோடிக்கணக்கில் பணம் ஈட்டித் தரும் ஒரு தொழிலாகவே இது போன்ற செயற்கை நீர்நிலைகளில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது நடக்கிறது.

எதிர்ப்புக் குரல்கள்

1970களின் பாதியுடன் கூண்டுகளில் அடைத்து இந்த உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவதை எதிர்த்து கடும் விமரிசனங்கள் எழுந்தன. தொடர்ந்து 1972ல் கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. வாஷிங்டன் கொலையாளித் திமிங்கலங்களைப் பிடிப்பதை தடை செய்த முதல் மாகாணமாக மாறியது. 1976ல் இது நடைமுறைக்கு வந்தது.

ஆனால் உலகளவில் இவற்றை சிறைப்படுத்தி செயற்கை நீர்நிலைகளில் காட்சிப்படுத்துவது இன்றும் பல நாடுகளில் தொடர்கிறது. 1940களில் கடல்வாழ் உயிரினங்கள் காட்சிப்படுத்தப்படுவது பிரபலமாக இருந்தது. இந்த உயிரினங்களின் வாழிடச் சூழலை செயற்கையாக உருவாக்குவது சுலபமானதில்லை என்று விமரிசகர்கள் கூறுகின்றனர். பிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தும்போது இவை எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது பற்றிய ஓர் ஆய்வு சில உண்மைகளைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

டால்பின் மற்றும் திமிங்கலங்கள் ஒவ்வொரு நாளும் 40 முதல் 100 மைல் வரை பயணம் செய்பவை. செயற்கையாக உருவாக்கப்படும் நீர்நிலைகளில் இதில் ஒரு சதவிகிதம் கூட பயணிக்கும் வசதி இவற்றிற்கு இருப்பதில்லை. மன இறுக்கம், அழுத்தம் போன்ற உளவியல்ரீதியான பிரச்சனைகளை இவை எதிர்கொள்கின்றன.

பாட்டில் மூக்கு டால்பின்கள் செயற்கை நீர்நிலைகளுக்கு எடுத்துச் செல்லப்படும்போது உயிரிழக்க 6% அதிக வாய்ப்பு உள்ளது. பயிற்றுவிக்கப்பட்ட கொலையாளித் திமிங்கலங்கள் உலகெங்கும் பெருமளவில் உயிரிழக்கின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 2015ல் 39 காட்சிக்கூடங்கள் இருந்தன. இவை 2019ல் 76 ஆக அதிகரித்துள்ளன.

இதுவரை உள்ள புள்ளிவிவரங்கள்படி உலகம் எங்கும் 174 காட்சிப்பொருட்களாக இருந்த கொலையாளித் திமிங்கலங்கள் மரணமடைந்துள்ளன. அமெரிக்காவில் இருக்கும் கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் மட்டும் பயிற்சி பெற்ற 18 கொலையாளித் திமிங்கலங்கள் சிறைபட்டு வாழ்கின்றன.

கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்பட்டாலும் இவை இதுவரை மனிதர்களைத் தாக்கியதாக செய்திகள் இல்லை. பிரம்மாண்டமான கிரேட் வொயிட் சுறாக்களை (Great white shark) உணவாக உட்கொள்ளும் ஒரே ஒரு உயிரின வகை இவை. இவை நீலத் திமிங்கலங்களை தாக்குவதுண்டு. 14 கொலையாளித் திமிங்கலங்கள் கூட்டமாக சேர்ந்து நீலத் திமிங்கலத்தைத் தாக்கிய செய்திகள் உண்டு.

பெங்குவின்கள், சீல்கள், மற்ற திமிங்கலங்களை உணவாக இவை உட்கொள்கின்றன. சமூக விலங்குகளான இவை கூட்டமாகச் சேர்ந்தே எதிரியைத் தாக்குகின்றன. இவை பெரிய திமிங்கலங்களை வேட்டையாடுவதால் கொலையாளித் திமிங்கலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை டால்பின் குடும்பத்தில் பிரம்மாண்ட உடல் அமைப்பு உடையவை. உடலின் நிறம் கறுப்பும் வெள்ளையும் கலந்து காணப்படும். கருவுற்று 17 மாதங்களுக்குப் பிறகே இவை பிரசவிக்கின்றன. ஒரு பிரசவத்தில் ஒரு குட்டியை ஈணுகின்றன.

இரண்டு ஆண்டுகள் வரை குட்டிகள் தாய் தந்தை பராமரிப்பில் வாழ்கின்றன. கடலில் 100 முதல் 500 அடி ஆழம் வரை நீந்தும் திறன் பெற்றவை. ஆனால் கூண்டில் அடைக்கப்பட்ட இவற்றிற்கு இத்தகைய சுதந்திரம் இல்லை. இவற்றின் நீளம் 23 முதல் 32 அடி வரை இருக்கும். சராசரி ஆயுட்காலம் 50 முதல் 80 ஆண்டுகள்.

பல திரைப்படங்களில் இவை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. 2013ல் வெளிவந்த ப்ளாக் ஃபிஷ் (Black fish) என்ற திரைப்படம் ஆர்லாண்டோ கடல் உலகம் (Sea World) காட்சிக்கூடத்தில் இரண்டு பயிற்சியாளர்களைக் கொன்ற 36 வயதில் மரணம் அடைந்த உலகின் மிகப் புகழ்பெற்ற திமிங்கலம் என்று வர்ணிக்கப்படும் டிலிகம் (Tilikum) என்ற கொலையாளித் திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. 1993ல் வெளிவந்த ஃப்ரீ வில்லி (Free villy) என்ற திரைப்படம் கேக்கோ (Keiko) என்ற திமிங்கலத்தின் கதையைச் சொல்கிறது. ஒன்பது வயது சிறுவன் ஒருவன் கொலையாளித் திமிங்கலத்தின் மீது காட்டும் பாசத்தால் அதை தப்பிக்க வைப்பது பற்றிய கதை இது. 1993ல் இந்தத் திரைப்படம் வெளிவந்தது.

கிரேட் வொயிட் சுறாக்களை கதாநாயகர்களாக கொண்டு ஸ்டீபன்ஸ் ஸ்பில்பெர்க் போன்றோர் எடுத்த மூன்று திரைப்படங்களின் தொடரான 'ஜாஸ்'. உலகம் எங்கும் பிரபலமாக திரையிடப்பட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள். இவை சமூக விலங்குகள் என்பதால் கூட்டத்தை விட்டுப் பிரிந்தால் தனிமையை அனுபவிக்க நேரிடுகிறது.

சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) வகைப்பாட்டின்படி இவை அதிக ஆபத்தை எதிர்கொள்ளாத உயிரினங்களின் (Least concerned LC) பட்டியலில் உள்ளன. ஆண் திமிங்கலங்கள் 10 மீட்டர் வரை நீளம் உடையவை. பெண் திமிங்கலங்களின் நீளம் 8.5 மீட்டர். கிரீன்லாந்து போன்ற நாடுகளில் இவை இப்போதும் வேட்டையாடப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

உலகம் முழுவதும் இப்போது 50,000 கொலையாளித் திமிங்கலங்கள் உள்ளன என்று கருதப்படுகிறது. மீன் பிடி வலைகளில் சிக்கிக் கொள்வது, உணவுப் பற்றாக்குறை, கடல் மாசு, மிதமிஞ்சிய கப்பல் போக்குவரத்து போன்றவை இவை இன்று சந்திக்கும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சனைகளில் சில.

இயற்கை சமநிலையை காக்க உதவும் இந்த அதிசய உயிரினங்கள் அழிந்தால் கடல் சூழலில் பெரும் பாதிப்புகள் ஏற்படும். நாளை அது மனித நலத்திற்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சப்படுகிறது.

மேற்கோள்கள்

https://www.mathrubhumi.com/environment/features/all-you-need-to-know-about-orcas-the-killer-whales-1.8450785

&

https://killerwhales.fandom.com/wiki/Kiska

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It