பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை உலகம் இப்போது உணரத் தொடங்கியுள்ளது.

டுங்கர்வாடியில் கழுகுகள்

கழுகுகள் மரணத்தின் மறுவடிவமாக மக்களால் கருதப்படுகின்றன. வானில் கழுகுகள் வட்டமிட்டால் இறந்த உடல் அருகில் எங்கோ உள்ளது என்பதன் அடையாளம் அது என்று கருதப்பட்டது. மென்மையான சிறகுகளோ, உரோமமோ இல்லாத தலை, சதையைப் பிய்த்து குத்திக் கிழித்தெடுப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும் கத்தி போன்ற கூர்மையான அலகு, அதன் வடிவம் போன்றவை பார்ப்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துபவை.

ஆனால் இயற்கையில் இந்தப் பறவைகள் ஆற்றும் பணியை இன்னும் மனிதகுலம் முழுமையாக உணரவில்லை. இறந்த உடல்களை உண்பதன் மூலம் இவை பலதரப்பட்ட நோய்கள் பரவுவதைத் தடுக்கின்றன. தெற்கு மும்பை வழியாக பயணிப்பவர்கள் அந்த மாநகரத்தின் நடுவில் ஒரு அடர்ந்த காடு இருப்பதை கவனிக்காமல் போக முடியாது! மலபார் குன்றுகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஏக்கரில் டுங்கர்வாடி (Doongerwadi) என்று அழைக்கப்படும் இந்தக் காடு அமைந்துள்ளது.vulture 650மும்பையில் பார்சி சமூகத்தினரில் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் நடக்கும் புனித இடம் இது. நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்காசியாவில் இருந்து பார்சிகள் இந்தியாவுக்கு குடியேறிய காலத்தில் மும்பையில் மலபார் குன்றுகள் முழுவதும் வனப்பகுதியாக இருந்தது என்று “ராஜ்பவன்ஸ் இன் மகாராஷ்டிரா” என்ற நூலில் சதாசிவ் கோரக்ஷகார் (Sadashiv Gorakshakar) கூறுகிறார். 18ம் நூற்றாண்டின் கடைசி வரை புலியும் கழுதைப்புலியும் நரியும் கழுகுகளும் இந்த காட்டில் வாழ்ந்து வந்தன.

பிரிட்டிஷ் இந்தியாவில் 1870ம் ஆண்டிற்குப் பிறகு மலபார் குன்றுகள் மும்பையில் பெரிய செல்வந்தர்களின் குறிப்பாக பார்சிகளின் காலனியாக மாறியது.

1672ல் பார்சிகளின் சவ அடக்கம் நடக்கும் சாந்தி கோபுரம் என்ற பொருள்படும் டோமாஸ் (tower of silence) அல்லது டக்மா (dakhma) டுங்கர்வாடியில் நிறுவப்பட்டது. இறந்தவர்களின் உடலை வல்லூறு அல்லது பிணம் தின்னி கழுகுகளுக்கு உணவாக கொடுக்கும் சோரோஸ்ட்டிரியன் (Zoroastrian) முறை கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் இருந்தது என்று கிரேக்க வரலாறு கூறுகிறது. ஆனால் இதை ஹிராட்டடஸ் (Herodotus) என்ற கிரேக்க அறிஞர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய குறிப்புகளில் முதல்முறையாக ஆவணப்படுத்தினார். பார்சி மத நம்பிக்கையின்படி பார்சிகள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய “ஆகாய அடக்கம்” (Sky burriel) என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். நெருப்பு, நீர் அல்லது மண்ணில் உடல்களை அடக்கம் செய்வது இயற்கையை களங்கப்படுத்தும் என்று பார்சிகள் நம்புகின்றனர்.

உடல்களை இயற்கை வழி அடக்கம் செய்ய எழுப்பப்பட்ட கோபுரங்கள் பெரும்பாலும் ஒரே வடிவமைப்புடன் கட்டப்பட்டன. இவற்றின் மேற்கூரை சமதளமாக இருக்கும். இது மூன்று பகுதிகளை உடையது. இறந்த ஆண்களின் உடல்கள் வெளிப்புற வளையப் பகுதியில் வைக்கப்படுகின்றன. பெண்களின் உடல்கள் நடுப்பகுதியிலும் குழந்தைகளின் உடல்கள் உட்புறப் பகுதியிலும் வைக்கப்படுகின்றன. எலும்புகள் சூரிய ஒளி மற்றும் காற்றால் வெளிரச் செய்யப்படுகின்றன. மீதி மக்கி கரித்தூள், மணலால் சிதைக்கப்பட்டு கடலுக்கு சென்று சேர்கின்றன.

உடலை உயிரினங்களுக்கு உணவாகக் கொடுப்பதே சிறந்தது என்று பார்சிகள் நம்புகின்றனர். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியம் உள்ள நம்பிக்கையின்படி பார்சிகள் தங்கள் உறவினரின் உடலை கோபுரத்தின் உச்சியில் சவ அடக்கத்திற்காக கிடத்துகின்றனர். உடல்களை உண்ண கழுகுகள் கூட்டமாக வானில் இருந்து வந்து இறங்கும்.

2006ல் மும்பையில் கழுகுகளின் எண்ணிக்கை 97% அளவிற்கு கவலையூட்டும் விதத்தில் குறைந்ததை பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) ஆவணப்படுத்தியது.

மும்பையில் வானில் இருந்து கழுகுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் காணாமல் போயின! இதனால் உண்டான பக்கவிளைவுகள் மிகப் பெரியதாக இருந்தது. டுங்கர்வாடியில் நிசப்தமான கோபுரத்தின் உச்சியில் சவங்கள் அனாதையாகக் கிடந்தன. கழுகுகள் ஏறக்குறைய இல்லாமல் போயின. உடல்களைத் தின்ன வரும் பருந்துகள் மற்றும் காக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் சிறிய பறவைகளான அவற்றால் ஒரு மனித உடலை முழுமையாக உண்ண முடியவில்லை!

பாதி உண்ட நிலையில் கிடந்த உடல்கள் அழுகி துர்நாற்றம் வீசின. சுற்றுப்புறவாசிகள் புகார் கூறினர். பார்சி சமூகத்தினரை இந்த விஷயம் உணர்வுப்பூர்வமாக சங்கடத்தில் ஆழ்த்தியது. ஒரு பிரிவினர் தங்களுக்கு மின் மயானம் போதும் என்று கூறினர். பாரம்பரியவாதிகள் நிம்மதி இழந்தனர். பிரச்சனை பெரிய விவாதமாக மாறியது. பார்சி பஞ்சாயத்து உடல்களை உலர்த்த பெரிய சூரிய ஒளி பிரதிபலிப்பு உலர்த்திகளை நிறுவியது.

ஆனால் மழைக்காலத்தில் இவை போதுமான அளவுக்கு செயல்படவில்லை. பார்சி சமூகத்தினரும் அரசும் சூழல் செயல்பாட்டாளர்களும் பிரச்சனையைத் தீர்க்க வழி தேடி அலைந்தனர். கால்நடைகளின் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் டிக்ளோஃபெனாக் ((diclofenac) ) என்ற வலி நிவாரணி மருந்தின் பயன்பாடே கழுகுகளின் இன அழிவிற்கு காரணம் என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் இருக்கும் கழுகுகள் மறையத் தொடங்கின.

இது பற்றி ஆய்வுகள் நடந்தன. கால்நடை சிகிச்சையில் வலி நிவாரணி மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டு பிறகு அவைகள் இறந்தபின் அவற்றின் உடலை உட்கொள்ளும் கழுகுகளின் உடலிலும் சென்று சேர்ந்தது. இதனால் கழுகுகளுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோயால் அவை இறந்தன. 2006ல் இந்த மருந்தின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 90களில் இலட்சக்கணக்காக இருந்த கழுகுகள் 2006 காலத்தில் வெறும் ஒரு சில ஆயிரங்களாக சுருங்கின!

இந்தியக் கழுகு என்று அறியப்படும் நீண்ட அலகுள்ள வல்லூறு (Long billed vulture), வெந்நிற வல்லூறு (White-backed vulture) ஆகிய இரண்டு இனங்கள் அன்று மும்பையில் சர்வசாதாரணமாக இருந்தன. குளிர்காலத்தில் நகருக்கு வலசை வரும் க்ரிஃபன் வல்லூறு (griffon vulture) என்றொரு இனமும் அப்போது இருந்தது. 2007ல் மும்பையில் 11,000 ஓரியண்ட் வெண்ணிற கழுகுகள், 45,000 நீண்ட அலகுள்ள கழுகுகள் மற்றும் 1000 ஸ்லெண்டர் (slender vulture) கழுகுகள் இருந்தன என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

ஆய்வுகளும் பாதுகாப்பு முயற்சிகளும்

2012ல் இந்த இனங்களின் எண்ணிக்கை குறையும் வேகம் மாறியது என்று பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் கூறியது. 2015ல் மீண்டும் ஆய்வு நடந்தது. அப்போது 6,000 ஓரியன் வெண்ணிற வல்லூறுகள், 2,000 நீண்ட அலகுடைய வல்லூறுகள், 1000 ஸ்லெண்டர் வல்லூறுகள் இருந்தன என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. கழுகுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை. கவலை தொடர்ந்தது.

மும்பையில் கழுகுகளுக்கு இரண்டு விதமான மரணங்கள் சம்பவித்தன! ஒன்று ஒரு குறிப்பிட்ட பறவையினத்தின் மரணம். இது மனிதன் ஏற்படுத்திய காரனங்களால் நிகழ்ந்தது. மற்றொன்று மூவாயிரம் ஆண்டு நீண்டு நின்ற ஒரு பாரம்பரிய சம்பிரதாயத்தின் மரணம். ஒரு உயிரினத்தின் அழிவு மனிதனின் சமூக வாழ்வை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டே இது. பார்சி சமூகத்தின் சடங்கு முறை தடைபட்டதையும் கழுகு இனத்தின் அழிவையும் கண்டு டுங்கர்வாடி வனத்தை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க ஆரம்பித்தது.

வலிமையான அந்த பார்வைக்கு முன்னால் டுங்கர்வாடியை வட்டமிட்ட ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்கள் நிசப்தமாயினர்! மும்பை நகர சமூகம் தங்களுக்கு பக்கத்தில் இருந்த காட்டை, அதில் வாழும் கோடானுகோடி உயிர்களை பரந்து விரிந்த ஆழமான அர்த்தத்தில் காண ஆரம்பித்தது.

2017ல் மும்பையில் பசுமை கட்டிடங்களை நிர்மாணிப்பது பற்றிய உரையாடலில் ஈடுபட்டிருந்த நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியர், நகர்ப்புற சூழலியலாளர், சூழல் மற்றும் சமூகம் என்ற இணைய வாசல் அமைப்பின் விஞ்ஞானியுமான ஆன் ரெய்டுமார்க்கெர் அவர்களுக்கு (Anne Rademacher) மும்பை டுங்கெர்வாடியில் அழிந்து கொண்டிருக்கும் கழுகுகள் பற்றி ஆராய அழைப்பு வந்தது.

“உயிப் பன்மயத் தன்மையின் காவல் கோட்டையே டுங்கெர்வாடி. மும்பை நகரம் வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடின் பெரும் பகுதியை இந்த காடே உறிஞ்சுகிறது. நகரம் ஏற்படுத்தும் ஒலி மாசைக் குறைக்கிறது. மழை நீரை வீணாக்காமல் தடுத்து மண்ணுக்குள் இறக்குகிறது. காட்டின் பரிசுத்தமான அர்த்தத்துடன் சூழல் முக்கியத்துவத்தை டுங்கெர்வாடி உணர்த்துகிறது” என்று அவர் கூறுகிறார்.

தேசிய செயல் திட்டம்

பார்சி சமூகத்தின் சூழலியலாளரும் சூழல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான அமைப்பின் (Centre for Environment Research & Education) தோற்றுனருமான டாக்டர் ராஷ்னே டுங்கர்வாடியில் நாட்டுப்புற மரங்களையும் குத்து செடிகளையும் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பித்தார். 2015ல் நடப்பட்ட 7092 மரக்கன்றுகள் இன்று பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. வல்லூறுகளை அழிவில் இருந்து மீட்க தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கால்நடைகளுக்காக தயாரிக்கப்படும் புதிய ஸ்டீராய்டு, வீக்கம் ஏற்படுத்தாத மருந்துகள் சந்தைக்கு வருவதற்கு முன்பே அவற்றை கழுகுகளில் பரிசோதிக்க வேண்டும் என்று கழுகுகள் பாதுகாப்பு செயல் திட்டம் அறிவுறுத்தியுள்ளது. பல மாநிலங்களில் இந்த உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய உதவும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆசிய கிங் வல்லூறு பாதுகாப்பு மையம் உத்தரப்பிரதேசத்தில் மஹராஜ்கஞ்ச் (Maharajganj) மாவட்டத்தில் ஜடாயு மையம் என்ற பெயரில் செயல்படுகிறது.

2023 பிப்ரவரியில் மேற்கு வங்காளத்தில் பர்சா புலிகள் சரணாலயத்தில் இருபது கழுகுகள் வளர்க்கப்பட்டு பிறகு காட்டிற்குள் விடப்பட்டன. பாம்பே இயற்கை வரலாற்று சங்கம், வனத்துறை, ஆய்வு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 2024 ஜனவரி புள்ளிவிவரங்களின்படி டிசம்பர் 2023ல் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவில் 308 கழுகுகள் வாழ்கின்றன என்று தெரிய வந்துள்ளது.

இந்த உயிரினங்களைக் காக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று காணாமல் போய்க் கொண்டிருக்கும் கழுகுகள் மீண்டும் முன்பு போல வானில் வலம் வரும் காலம் விரைவில் வரட்டும்.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It