கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
கிரீன்லாந்தில் பனிப்பாறைகளின் (Ice Sheets) நகரும் வேக வளர்ச்சி (Acceleration) 1990 காலகட்டத்திற்குப் பிறகு மிகவும் அதிகரித்திருக்கிறது.
ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இதன் நகரும் வேக வளர்ச்சி அளவு இரண்டு மடங்கு அதிகரித்து வருகிறதாம். 1990 காலகட்டத்தில் கடலுக்குள் சென்ற பனிப் பாறைகளின் அளவு 33 பில்லியன் டன்கள் இருந்ததாகவும், அவை தற்போது 254 பில்லியன் டன்களாக அதிகரித்திருப்பதாகவும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதுவரை கிரீன்லாந்தில் கிட்டத்தட்ட 4 டிரில்லியன் டன்கள் கணக்கில் பனிப் பாறைகள் உருகி கடலுக்குள் சென்றிருக்கிறது. இது தோராயமாக ஒரு சென்டி மீட்டர் அளவு புவியின் கடல் மட்டம் உயர்வுக்குச் சமம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு சென்டி மீட்டர் அளவு என்பது குறைவாக இருக்கலாம், ஆனால் மெதுவாக உயர்கிறது என்பது தான் யதார்த்தம்.
நமது கிரகத்தைச் சுற்றி ஒரு சென்டி மீட்டர் கடல் மட்டம் உயர்வு என்பது, கடற்கரையை ஒட்டி வாழும் சுமார் 6 மில்லியன் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் ஆன்ட்ரிவ் செப்பர்ட் (Andrew Shepherd). இவர் லீட்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் (Leeds University).
இந்த மாற்றத்தை விஞ்ஞானிகள் Ice Sheet Mass Balance Inter Comparison Exercises IMBIE என்று அழைக்கின்றார்கள். இது Journal Nature-ல் வெளியாகி உள்ளது.
பூமியில் இரண்டாவது பெரிய அமைப்பைக் கொண்ட பனிப் பாறைகள் மாற்றத்திற்கு உள்ளாவது (pace of change) நமக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடிப்பதாகவும், இதனால் அடுத்த ஒரு மில்லியன் ஆண்டுக்குள் தோராயமாக 20 அடி வரை கடல் மட்டம் உயரலாம் என்கிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலைக் குழு கணித்ததை விட, கிரீன்லாந்தில் பனிப் பாறைகளின் உருகும் வேகம் அதிகமாக இருக்கிறது. அடுத்த 2100-க்குள் கிரீன்லாந்தில் உருகும் பனிப் பாறைகளால் கடல் மட்டம் உயர்வதின் அளவு 16 சென்டி மீட்டராக இருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு புறம் அண்டார்டிகா பனிப் பாறைகள் நகர்வதன் மூலமும் கடல் மட்டம் உயர்வது அதிகரிக்கும் என்றும், இதற்கு அடிப்படை புவியின் வெப்பம் அதிகரிப்பதே என்றும் கூறுகிறார்கள்.
உலகில் மிகப் பெரிய பனிப் பாறைகள் அடங்கிய தீவுப் பகுதி கிரீன்லாந்து ஆகும். இந்த பனிப் பாறைகள் ஓராயிரம் ஆண்டுகள் பொழிந்த பனியினால் ஆனது. இப் பனிப் பாறைகளின் அளவை அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியின் அளவோடு ஒப்பிடுகிறார்கள். மேலும் இதன் நடுப்பகுதி ஒரு மைல் தொலைவுக்கு தடிமனான கட்டமைப்பு உடையதாக இருக்கிறது.
வெளிப்புற வெப்பம் உயர்வால் இந்தப் பாறைகள் தன்னுள் வெடித்து வெளியேறுவதும் நடக்கிறது. 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடுகையில் கிரீன்லாந்தில் பெரும்பாலான பகுதிகளின் வெப்பநிலை 2℃ (3.6 Fahrenheit) அதிகரித்து இருக்கிறது. மேலும் உலகில் வேகமாக வெப்பநிலை அதிகரித்து வரும் பகுதியாக இதை சுட்டிக் காட்டி "வாசிங்டன் போஸ்ட்" ஆய்வு அறிக்கை வெளியிட்டது.
பனிப் பாறைகள் உருகுவதன் காரணமாக கிரீன்லாந்தின் ஒரு சில பகுதிகளை இழந்ததாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் பொழியும் பனியின் அளவிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கிரீன்லாந்தில் மீதமிருக்கும் பனிப்பாறைகளும் வேகமாக நகர்ந்து கடலில் மூழ்கும் அல்லது இரண்டாக உடைந்து நகரும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.
இந்த தொடர் நிகழ்ச்சியால் பனிப்பாறைகளின் கன அளவும் எதிர்பார்த்ததை விட அதிகமாக குறைகிறது. மேலும் மேலும் கிரீன்லாந்தின் வடபகுதியில் உள்ள பனிப் பாறைகளின் (glaciers) பனிக்கட்டியை இழக்கிறோம்.
இந்த புதிய ஆய்வானது 26 வெவ்வேறு செயற்கைக் கோள்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆராய்ந்து பார்த்ததாகவும் ஆராய்ச்சி நடத்திய 89 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- பாண்டி
(நன்றி: 'தி பாஸ்டன் குளோப்', 10.12.2019)
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
வெதண நிலை ('தட்ப வெப்ப நிலை', சூழலியல்) மாற்றங்கள் தொடர்பான ஒன்றிய நாடுகளவையின் 25-ஆவது கருத்தரங்கம் (The UN Climate Change Conference COP 25) இம்மாதம் 2-13 தேதிகளில் ஃச்பெயின் (Spain) நாட்டுத் தலைநகர் மெட்ரிட் (Madrid) நகரில் நடைபெறுகிறது.
உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கானோர் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
புவியின் இயற்கைச் சூழல் அழிவின் விளிம்பில் இருக்கிறது; அதில் இருந்து மீள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவது கருத்தரங்கின் முதன்மை நோக்கம்.
ஆனால், கருத்தரங்கை நடத்துவதற்குத் தேவையான நிதியுதவி யாரிடமிருந்து வருகிறது?
ஃச்பெயின் நாட்டின் பங்குச் சந்தையில் பதிவு செய்துள்ளவற்றில் 35 மிகப் பெரிய நிறுவனங்களிடமிருந்து தான்! அவை ஒவ்வொன்றும் இருபது லட்சம் யூரோ நிதியுதவி அளித்தால் 90 விழுக்காடு வரி விலக்குத் தருவதாக அந்நாட்டு அதிபர் அறிவித்தார். அந்நிறுவனங்களில் பல பெட்ரோலியம், எரி வளி, கழிவுகள், தண்ணீர் வணிகம் உள்ளிட்ட துறைகளில் உலகளவில் பெரியவை. கருத்தரங்குக்குச் செய்யும் 'நிதியுதவி' அந்த நிறுவனங்கள் வரி விலக்குப் பெறுவதற்கு மட்டுமின்றி, நற்பெயர் ஈட்டித் தம் களங்கங்களை மறைப்பதற்கும் பேருதவியாக இருக்கும்.
மேற்படிக் கருத்தரங்கில் ஒன்றிய நாடுகளவையின் செயலகத் தலைவர் (Secretary-General) ஆற்றிய உரையிலிருந்து சில தகவல்களும் கருத்துகளும் வருமாறு:
நம் முன்னர் இரண்டு வழிகள் உள்ளன; அடுத்த பத்தாண்டுகளுக்குள் அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்: முதல் வழி உலகிலுள்ள அனைவருடைய வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்குவது. நாம் நம் வாழ்முறையை மாற்றிக் கொள்ளாமல், எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அந்த வழியில் பயணிப்போம்.
நிலைத்த, நீடித்த வாழ்க்கைக்கு அடிகோலுவது இரண்டாவது வழி. அதில் சென்றால் பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவளி ஆகிய புதைபடிவ ஆற்றல்களை நிலத்தடியில் விட்டு வைப்போம். அப்படிச் செய்தால் மட்டும் புவி 1.5 பாகை செல்சியசுக்கு மேல் சூடேறுவதைத் தடுக்கும் வாய்ப்புள்ளது. அதைவிட அதிகமாகச் சூடேறினால் அதன் விளைவுகள் மிக, மிக மோசமாக இருக்கும் என்பதைச் சூழலியல் அறிஞர்கள் ஐயத்துக்கு இடமின்றி நிறுவியுள்ளார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. வளிமண்டலத்தில் பசுங்குடில் வளிகளின் அளவு மிக அதிகமாகிவிட்டது. (சுமார் முப்பது முதல் ஐம்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வாறு இருந்தபோது புவி மேற்பரப்பு வெப்ப நிலை இப்போது இருப்பதைவிடச் சுமார் 2-3 பாகை அதிகமிருந்தது; கடல் மட்டம் இப்போது இருப்பதைவிடப் பத்து முதல் இருபது மீட்டர் அதிகமிருந்தது.)
இதன் விளைவுகளைக் கண்கூடாகப் பார்க்கிறோம். வறட்சி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் கடுமை அதிகரித்து விட்டது. புவியின் வட, தென் முனைப் பகுதிகளில் பனி மிக வேகமாக உருகி வருகிறது. க்ரீன்லாந்துப் பகுதியில் சூலை மாதம் மட்டும் 17,900 கோடி டன் உறைபனி உருகிவிட்டது. ஆர்டிக் பகுதியில் எப்போதும் இருந்த உறைபனி எழுபது ஆண்டுகள் முன்கூட்டியே உருகி வருகிறது. அண்டார்டிகா கண்டத்திலுள்ள உறைபனி பத்தாண்டுகளுக்கு முன்னர் உருகியதைவிட மும்மடங்கு வேகமாக உருகி வருகிறது.
கடல் மட்டங்கள் எதிர்பார்த்ததைவிட வேகமாக உயர்கின்றன. உலகின் மிகப் பெரிய நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்கள் கடற்கரைகளில் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வளிமண்டலத்தில் சேரும் கரி-ஈருயிரகையில் (CO2) கால் பங்குக்கும் மேற்பட்டதைக் கடல்கள் உள்வாங்கிக் கொள்கின்றன; வளிமண்டலத்திலுள்ள உயிர்வளியில் (oxygen) பாதிக்கு மேற்பட்டதைக் கடல்களே உருவாக்கித் தருகின்றன.
அத்தகைய பெரும்பயன் தரும் கடல்கள் நம் தவறான செயல்பாடுகளால் சூடேறுவது மட்டுமன்றி மாசு நிறைந்து வருகின்றன. அவற்றில் கரையும் கரி-ஈருயிரகையின் அளவு கூடுவதால் கடல் நீர் மேலும் புளித்தமாகிறது. அதன் விளைவாகப் பல்லாயிரங் கோடி நீர்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
ஆனால், உலக நாடுகள் நிலக்கரி, பெட்ரோல் உள்ளிட்ட புதைபடிவ ஆற்றல் பயன்பாட்டைக் குறைப்பதற்கு பதில் அதிகரித்து வருகின்றன. ஆற்றல் உற்பத்தியில் மட்டுமன்றி வேளாண்மை, போக்குவரத்து, நகர வடிவமைப்பு, கட்டுமானத் துறை (சிமென்ட், எஃகு, உள்ளிட்ட துறைகள்) போன்ற அனைத்துத் துறைகளிலும் நாம் இப்போது பயணிக்கிற வழி ஆபத்தானது.
நம் தொழில்துறைகளில் உடனடியான அடிப்படை மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நமக்கு எதிர்காலம் உள்ளது.
2100-ஆம் ஆண்டுக்குள் புவியின் வெப்பநிலை 1.5 பாகைக்கு மேல் உயராதிருக்க வேண்டுமானால் 2010-2030 காலக்கட்டத்தில் நாம் வெளியிடும் பசுங்குடில் வளிகளின் அளவை 45 விழுக்காடு குறைக்க வேண்டும்; 2050-க்குள் அவற்றை வெளியிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்த முயற்சியை அனைத்து நாடுகளும் தொடங்கியிருந்தால் பசுங்குடில் வளி வெளியீட்டை ஆண்டுக்கு 3.3 விழுக்காடு குறைத்தால் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், இப்போது ஆண்டுக்கு 7.6 விழுக்காடு குறைக்க வேண்டும்!
பாரிசில் சென்ற ஆண்டு ஒப்புக் கொண்டவாறு அரசுகள் நடக்கவில்லை. குறிப்பாக, பொருளாதாரத்தில் உயர்நிலையிலுள்ள (G20) நாடுகள் தம் பொருளாதார முறையில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இப்போதைய நிலை நீடித்தால் 2100 வாக்கில் புவியின் வெப்பநிலை 3.4-3.9 பாகை உயர்ந்துவிடும். அதன் விளைவுகள் கற்பனை செய்ய இயலாத அளவு மோசமாக இருக்கும்.
ஆகவே, இயற்கைக்கு எதிரான நம் போரை உடனடியாக நிறுத்துவது இன்றியமையாதது.
1. https://truthout.org/video/police-halt-activist-led-toxic-tour-of-corporate-polluters-sponsoring-cop25/
2. https://www.un.org/sg/en/content/sg/statement/2019-12-02/secretary-generals-remarks-opening-ceremony-of-un-climate-change-conference-cop25-delivered
- பரிதி
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிடில் நடைபெற்று வரும் 'உலக நாடுகள் காலநிலை மாநாட்டில்' ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் (Antonio gutierrez), புவி வெப்பமடைதலுக்கு எதிராக எடுத்த சபதத்தில் எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டோம் என்று உறுதியளித்தார்.
உலகத்தில் அறிவியல் பூர்வமாக இருக்கும் ஞானமும், தொழில்நுட்ப அறிவும் புவி வெப்பமடைவதைத் தடுப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக அதற்கான நடவடிக்கை இல்லை.
2019, டிசம்பர் 2-13 வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் 2015-பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை நிறைவேற்ற எந்தவிதமான நடவடிக்கை எடுக்கப் போகிறோம், கடல்நீர் உயர்வதால் பாதிக்கப்படும் நாடுகள் நிலை மற்றும் பிற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை குறித்து விவாதிக்க உள்ளார்கள்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் குளோரோபுளோரோ கார்பன்ஸ் (greenhouse gases) நமது வளிமண்டலத்தில் ஏற்கனவே உள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட இவைகளால் வெப்பநிலை, துருவ பனிப்பாறைகள் உருகுவது, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் உலகத்தில் அதிகமாக இந்த வாயுக்களை வெளியேற்றும் நாடுகள் இதற்கு எதிராக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்தாகத் தெரியவில்லை.
தற்போது 70 நாடுகளுக்கு மேல் காலநிலை மாற்றத்திற்கு எதிராக, தேவையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். 2050க்குள் கிரீன்ஹவுஸ் கேஸ் வெளியேறுவதை தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களுக்கு அரசு அனுமதி தரக்கூடாது எனவும் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
இதில் மறைமுகமாக 'பசுமை தொழில்நுட்ப' மின்சாரம் உற்பத்தி செய்து நமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சாராம்சம் உள்ளது. அணு உலைகள் சம்பந்தமாக பேசப்படவில்லை. அப்படியென்றால் அணுஉலை மின்சாரம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஏற்பாடா?.
ஜெர்மனி நாடு அவர்களுடைய அனைத்து அணு உலைகளையும் 2022க்குள் மூடிவிடப் போகிறார்களாம். இந்த உலைகளில் இருக்கும் 28,000 (Cubic meters) அணுக் கழிவுகளை எங்கே பாதுகாப்பாக புதைத்து வைக்கலாம் என விஞ்ஞானிகள் இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். அதிபயங்கர ரேடியோஆக்டிவ் கதிர்கள் இந்தக் கழிவுகள் மூலம் வெளியேறலாம். இதன் தாக்கம் அடுத்த மில்லியன் ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்திருக்கிறோம்.
காற்றாலை மின்சாரம், கதிரொளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவது (சோலார்) போன்றவற்றை முன்னிலைப் படுத்த வேண்டும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.
விழிப்புணர்வு யாரிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் மக்களிடம் இருந்தா... அரசுகளிடமிருந்தா?.
இப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் பருவநிலை மாற்றம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இது நல்ல ஒரு மாற்றம் கூட.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் தேவைகளைக் குறைத்து புதிய வாழ்வியலைத் தொடங்குவதன் மூலம் புவி வெப்பமடைவதைத் தவிர்க்க முடியும். நாம் வளரும் இதே சூழலில் நமது குழந்தைகளுக்கும் சூழலியல் கற்று கொடுக்க வேண்டும்.
மறுசுழற்சியின் முக்கியத்துவத்தையும் இளைய தலைமுறைக்குக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது.
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இயற்கையையும் மனித வாழ்வையும் சிதைக்கும் முதலாண்மைப் பொருளாதார முறைமையைக் ('முதலாளித்துவம்' - capitalism) கைவிட்டு அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்யவல்ல பொதுவுடைமைப் பொருளாதார முறைமையை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதே சூழலியல் பேரழிவைத் தடுக்கும்.
முதலாண்மைப் பொருளாதாரத்தில் நிறுவனங்களுடைய உபரி ('லாப') வெறிக்காக இயற்கை வளங்களும் மனித உழைப்பும் சூறையாடப்படுகின்றன. மனிதருடைய தேவைகளைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே போனால்தான் நிறுவனங்கள் உபரி ஈட்ட முடியும். ஆகவே, தேவைகளைக் குறைப்பதற்கு மாற்றாகப் பிற 'தீர்வுகள்' முன்வைக்கப்படுகின்றன.
இது குறித்த ஆங்கிலக் கட்டுரையொன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் வருமாறு:
------------
புவியின் இயற்கைச் சூழல் மிக, மிக மோசமாகக் கெட்டுவிட்டது. அதன் ஆபத்துகளைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வருகின்றன. அது குறித்து அரசாங்கங்கள் உடனடியாக 'ஏதாவது' செய்ய வேண்டும் என்கிற குரல்கள் அறிவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளில் இருந்தும் வலுக்கின்றன.
குறிப்பாக, சூழலைக் கெடுக்காத 'பசுமைத் தொழில்நுட்பத்தை' வரவர அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. (அப்படிச் செய்தால் நம் தேவைகளைக் குறைக்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கை தொடர்ந்து நமக்கு ஊட்டப்படுகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!)
ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும்போது (அ) இயற்கைச் சூழல் பெருமளவு கெடுகிறது; (ஆ) மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
------------
‘பசுமைத் தொழில்நுட்பத்தின் சூழல் கேடுகள்’ குறித்த சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்க்கலாம்.
- காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை (wind turbine) ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 900 டன் எஃகு, 2,500 டன் கான்க்ரீட், 45 டன் நெகிழி (plastic) ஆகியன தேவைப்படுகின்றன.
- ஒரு டன் எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 780 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது.
- ஒரு டன் கான்க்ரீட் உற்பத்தி செய்கையில் ஒன்றே கால் டன் கரி-ஈருயிரகை (carbon dioxide) வெளியாகிறது. (இது நம் புவியைச் சூடாக்கும் பசுங்குடில் வளிகளில் ஒன்று.)
- கதிரொளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை (solar panels) உற்பத்தி செய்வதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் nitrogen trifluoride வளியை வெளியிடுகிறது. இது மிக மோசமான பசுங்குடில் வளிகளில் ஒன்று; கரி-ஈருயிரகையைவிட 17,200 மடங்கு வீரியமுள்ளது; எழுநூறு ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் தாக்குப் பிடிக்கக் கூடியது!
- உயர்மின் அழுத்தத்தில் மின்னுற்பத்தி மற்றும் தொடரமைப்பு மூலம் பரப்பி வழங்கும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கு sulphur hexafluoride எனும் வளி தேவைப்படுகிறது. இது கரி-ஈருயிரகையை விட 23,500 மடங்கு வீரியமுள்ளது; வளி மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கக் கூடியது. 2017-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் (European Union) ஒன்றிய அரசியத்திலும் (The United Kingdom) ஆலைகளில் இருந்து கசிந்த இந்த வளியின் பசுங்குடில் தாக்கம் பதினேழு லட்சம் கார்கள் வெளியிடும் புகையின் பசுங்குடில் தாக்கத்துக்கு ஈடானது!
- நாம் பயன்படுத்தி வீணாக்கும் பொருள்களில் மிகச் சிறு பங்கு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; மறுசுழற்சி செய்வதற்கும் நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எ.கா. ஓராண்டில் உலகளவில் மொத்தம் சுமார் 36 கோடி டன் நெகிழி உற்பத்தியாகிறது; ஆனால், வெறும் ஒன்பது விழுக்காடு நெகிழி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
ஆக, நம் ஆற்றல் தேவையைக் குறைக்காதிருத்தல், சூழல் மாசு தொடர்பான சட்டதிட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தாதிருத்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்தல் உள்ளிட்ட காரணங்களின் விளைவாக நம் இயற்கைச் சூழல் கேடுகள் தொடர்ந்து பெருகுமேயன்றி (பசுமைத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதால் மட்டும்) குறைந்துவிடப் போவதில்லை.
சூழலியல் கேடுகளுக்குப் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தீர்வாக முன்வைக்கும் தவறான போக்கின் விளைவாக மூன்று பெருஞ்சிக்கல்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.
- புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் பயன்பாட்டைப் பெருக்குவதற்குப் பல பத்தாண்டு கால அவகாசம் தரப்படுகிறது. (அதாவது, குறைந்தது 2050-ஆம் ஆண்டு வரை இப்போதைய ஆற்றல் உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தலாம் என்கிற கோட்பாடு அனுமதிக்கப்படுகிறது.) நம் சூழலை மிக மோசமாகக் கெடுக்கும் பசுங்குடில் வளிகளைத் தொடர்ந்து வெளியிடுவதை இந்தப் போக்கு நியாயப்படுத்துகிறது.
- ஆற்றல் உற்பத்தி மற்றும் வழங்கும் துறைகளில் உள்ள மிகப் பெரும் நிறுவனங்கள் புது வகை ஆற்றல் உற்பத்தியில் கால் பதிப்பதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அதன் மூலம் அந்நிறுவனங்களின் வருமானமும் உபரியும் ('லாபம்') குறையாமல் இருப்பதற்கு இது உதவுகிறது.
- நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ ஆற்றல்களுக்கு மாறாகப் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு மாறும்போது அதற்குத் தேவையான கனிமங்கள், மாழைகள் (minerals and metals) போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்தச் செயற்பாடுகள் இயற்கைச் சூழலை மிக மோசமாகப் பாதிக்கின்றன; மனிதர் உள்ளிட்ட பல கோடி உயிர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கின்றன. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.
அ) கினிக் குடியரசு (The Republic of Guinea) ஆப்ரிக்கக் கண்டத்தின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்று. உலக பாக்சைட் (bauxite) கனிமத்தில் முப்பது விழுக்காடு அந்தச் சிறிய நாட்டிலுள்ளது. இரும்புக் கனிம வளமும் அந்நாட்டில் மிகுந்துள்ளது. அதே சமயம், நாட்டின் பரப்பளவில் 98 விழுக்காட்டில் இயற்கைக் காடுகள் உள்ளன. மின்னூர்திகள், மின் கம்பிவடங்கள் (cables) போன்றவைற்றை உற்பத்தி செய்வதற்கு அலுமினியம் தேவை. அதற்கு பாக்சைட் கனிமம் மூலப்பொருள். காற்றாலை உற்பத்திக்கும், சாலைகள், கட்டடங்கள் போன்ற நகர்ப்புறக் கட்டுமான வசதிகளை நிறுவுவதற்கும் எஃகு பெருமளவு தேவை. இவற்றுக்காக அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் தேவை பெருகும்போது கினி நாட்டின் இயற்கைக் காடுகள் என்ன ஆகும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!
ஆ) உலக கோபால்ட் (cobalt) கனிமத்தில் அறுபது விழுக்காடு கினியின் அருகிலுள்ள காங்கோ நாட்டில் (The Congo) உள்ளது. கைப்பேசிகள், மின்னூர்திகள் உள்ளிட்ட பல மின்சாதனங்களில் இன்றியமையாத பங்கு வகிக்கும் மின்கலன்களைச் (batteries) செய்வதற்கு கோபால்ட் தேவை. காங்கோ நாட்டுக் கோபால்ட் சுரங்கங்களில் கொத்தடிமை நிலையில் சுமார் 35,000 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் உழல்கின்றனர். சுரங்கங்களின் விளைவாகப் பல்லாயிரக் கணக்கான பரப்பில் காடுகளும் வேளாண்மையும் ஒழிந்தன. இந்நிலை தொடர்ந்தால் காங்கோ நாட்டின் அடர்ந்த மழைக் காடுகள் ஒரேயடியாக அழிவது உறுதி.
ஆப்ரிக்கக் கண்டம் கனிம வளம் மிகுந்தது. ஆகவே, உலகின் பிற பகுதிகளில் உள்ள புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தேவைக்கு பலியாகப் போவது ஆப்ரிக்கக் கண்டமே. (இது ஏற்கெனவே உள்ள நிலைமைதான்; இன்னமும் மோசமாகப் போகிறது.)
இ) உலக லித்தியத் தேவையில் (lithium) பாதியை நிறைவு செய்வதற்குப் போதுமான லித்தியக் கனிம வளம் தென்னமெரிக்காவின் பொலீவியா (Bolivia), சிலி (Chile) நாடுகளில் கடல் மட்டத்தில் இருந்து 3,600 மீட்டர் உயரத்திலுள்ள உப்புப் படுகைகளில் உள்ளது. (lithium-ion மின்கலத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசு கிடைத்தது நினைவிருக்கலாம்.) பொலீவியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் அண்மையில் நடந்த சதிப் புரட்சியில் பொலீவியாவின் சோசலிச அரசு கவிழ்க்கப்பட்டுப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமான அரசு ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டுள்ளது. லித்தியம், செம்பு போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்தும் சுரங்கத் தொழிலால் மண்ணும் நீரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும், வறட்சிப் பகுதிகள் அதிகமுள்ள இந்த நாடுகளின் சில பகுதிகளில் முக்கால் பங்கு நன்னீர் சுரங்கத் தொழிலுக்கு மடை மாற்றிவிடப்படுகிறது.
மேற்கண்ட கனிமங்களைப் பயன்படுத்திப் பசுமைத் தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்கும் பெட்ரோலிய ஆற்றல் பெருமளவு தேவைப்படுகிறது.
நம் தேவைகளைப் பெருமளவு குறைப்பதற்கேற்ற வாழ்முறையையும் வேலை முறையையும் செயல்படுத்துவது தான் சரியான தீர்வாகும்.
[மேற்கண்ட தகவல்கள், கருத்துகள் அடங்கிய மூலக் கட்டுரை: Godwin Vasanth Bosco, "The Idea That 'Green Technology' Can Help Save the Environment Is Dangerous", The Wire, 2019 Dec 02, https://thewire.in/environment/the-idea-that-green-technology-can-help-save-the-environment-is-dangerous
- 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்