sembarapakkam 550

மெல்ல கண்களை மூடி கொள்ளுங்கள்…. பறவைகள் இறக்கைகளை விரிப்பது போன்று கைகளை விரியுங்கள் சிறிய அழகிய வானப்பாடி பறவையை மனக்கண் முன் கொண்டு வாருங்கள்… அந்த வானப்பாடியாய் மாறுவதாக கற்பனை செய்யுங்கள்… சட்டென்று வானப்பாடியாய் செங்குத்தாக வானில் உயரப் பறக்க தொடங்கி வீட்டீர்கள்.. ஆஹா..பறப்பது எவ்வ்வளவு ஆனந்தமானதொரு அனுபவம்…. குளிர்ச்சியான பஞ்சு போன்ற ஒன்றில் மோதி அதிலேயே மிதக்க தொடங்கி வீட்டீர்கள்… மெல்ல கண்களை திறந்தால் செங்கல்பட்டு மாவட்டத்தின் (இன்றைய காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள்) வானத்தில் மாசி மாத வெண்பொதி மேகங்களில் சுகமானதொரு சவாரியில் இருப்போம்.

உயிர்த்துடிப்புள்ள அற்புதமானதொரு பெரும் ஜீவனை பூமியில் அங்கிருந்து காண முடியும்!

அடர்நீலம் பாய்ந்த உயிர்களைப் பேணிக் காக்கும் அமுதான நன்னீரால் நிரம்பிய 3700 ஏரிகள்…

அவைகளை குறுக்கும் நெடுக்குமாக இணைக்கும் நாடிநரம்புமண்டலங்களாய் துடித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற கால்வாய்கள்….

அன்பொழுக்கும் கரங்களால் பச்சைப் போர்த்திய பச்சை வயல்கள், சோலைகள் விரிந்த பரப்பில் கோடிக்கணக்கான உயிர்களை உயிர்ச்சூழலை அணைத்துக் கொண்டிருக்கும் பாலாறு, கொசத்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு, ஆரணி ஆறுகள்….

சுருளும் அலைகளை விரித்தும் சுருக்கியும் அதன் இதயமாய் துடித்துக் கொண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி…

இயற்கையும் பழந்தமிழர்களும் இணைந்ததால் ஆயிரம் ஆண்டுகளாய் சீரளமையுடன் வனப்பும், எழிலும் நிறைந்த ஏரிகள், ஆறுகள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் வலைப்பின்னல் அமைப்பு என்ற பெரும் ஜீவன் தான் அது..!!

உற்சாகம் ததும்பி வழிய வானம்பாடியாய் இன்னிசை பொழிந்து வட்டமடித்து கொண்டு பேருவகையில் காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் வலைப்பின்னல் ஏரிகளை பேருவையுடன் கொண்டாட தொடங்குவோம் என்பதுதான் உண்மை!!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சீரிளமையுடன் தாய்மையுடன் உயிர்களை பேணி பாதுகாத்த இந்த ஏரிகள் அமைப்பு என்ற பெரும் ஜீவனை கடந்த 30 ஆண்டுகளில் மைய-மாநில ஆட்சியாளர்கள் சீர்குலைத்து வருகின்றனர்.

அதன் உயிர்நாடி நரம்புகளை உருவி வெட்டி நசித்து நாசம் செய்தனர். அதன் உடலின் அங்கங்களான பல ஏரிகளை அதிவேக வளர்ச்சி என்ற பெயரில் ஆக்கிரமித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பெருமுதலாளிகளுக்கும் விற்று ஒன்றுமில்லாமல் அழித்து கொண்டு வருகின்றனர். அதன் கவின்மிகுந்த மேனி எங்கும் நிறைந்து இருந்த அமிழ்தினும் மேலான நன்னீரில் இராசயன தொழிற்சாலை கழிவுகளை கலந்து அதில் இருந்த எண்ணற்ற நீர்த்தாவரங்களை, பல்வகைகள் மீன்கள், தவளைகள், நீர்பூச்சிகள், நுண்ணுயிரிகளை அழித்து விட்டனர். பறவைகள் கூட அதை அருந்த முடியாமல் நன்னீரினை விஷமாக்கி வருகின்றனர். மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் வற்றாமல் அள்ளி தந்து அன்னமிட்ட அதன் கைகளான ஆறுகளை, ஓடைகளைகளை, இணைப்பு கால்வாய்களை பேராசையால் திமுக – அதிமுக - காங் – பிஜேபி கட்சிகளின் ஆதிக்க சக்திகள் நாசம் செய்தனர்…செய்து கொண்டிருக்கின்றனர்.

துடிதுடிக்க தனது உயிர் சிதைக்கபடுவதற்கு எதிரான, இயற்கையின் கர்ப்பப்பையை குலைப்பதற்கு சிறு எதிர்ப்பு தான் ஏரிகள் வலைப்பின்னல் அமைப்பு தொடுத்த சென்னை பெருவெள்ளம் பேரிடராகும். ஏரிகள் அமைப்பின் அங்கங்கள் அறுபட்டு, காயங்களில் வழிந்த சீழ்தான் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளமாகும். ஏரிகள் அமைப்பு என்ற பெரும் ஜீவன் ஏகாதிபத்திய நலன்களுக்காக,, இந்திய பெருமுதலாளிகளின் இலாப வேட்டைக்காக வதைப்படுவதை மவுனமாக கையாலாகமல் பார்த்து கொண்டிருந்த சிங்கார சென்னை மக்களின் மீது கோபம் கொண்டு மாமழை செய்த மிகச்சிறிய ( ஆமாங்க சத்தியமாய் சொல்றேன். சதாரணமான மழைதான்.) எச்சரிக்கை இந்த பேரிடராகும்.

ஆனால், அம்மா, அன்னை , தாய் .. போன்ற சொற்களின் பொருண்மையை, அன்பை, உள்ளார்ந்த அர்த்ததை அநர்த்தமாக்கிய அதிமுக ஆட்சி.. அம்மா ஆட்சியானது செய்ய வேண்டியதைச் செய்யாமல், சட்டக் கடமைகளை ஆற்றாமல் இருந்ததை மறைக்க ‘வரலாறு காணாத மழை’ . . . ‘ஒரேநாளில் பெய்த பேய் மழை’ . . . ‘நூற்றாண்டில் பெய்த மழை’ . . . . என்று இந்த 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க ஓட்டு வாங்கும் சித்துவேலைகளில் இறங்கி உள்ளார்.

இந்த ஏரிகள் வலைப்பின்னல் அமைப்பின் இதயமாய் துடித்துக் கொண்டிருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியை பெருவெள்ளத்திற்க்கான குற்றவாளியாக,, வில்லனாக திமுக-வும், எதிர் கட்சிகளும், பல ஊடகங்களும் சித்தரித்து கொண்டிருக்கின்றன. அப்படியானதொரு மனநிலைக்கு, கருத்துருவாக்கத்திற்கு தமிழக மக்களை திட்டமிட்டு தள்ளி உள்ளனர்.. இயற்கையும், மாமழையும், செம்பரம்பாக்கம் ஏரியும்தான் சில நூறு மக்கள் சாவதற்க்கும், 20 இலட்சங்களுக்கும் மேலான சென்னைவாசிகள் வாழ்வாதாரங்களை இழப்பதற்க்கும், பல இலட்சம் கோடிகள் ரூபாய் மதிப்பிலான மனித உழைப்பின் செல்வங்கள் சொத்துகள் நாசமாவதற்கு காரணமாக்கப்படுவதை எப்படி நாம் புரிந்து கொள்வது..? அதற்கான புரிதலை செழுமைப்படுத்த இந்த கட்டுரை தொகுப்பு முயற்சி…

அதிலும்ம் குறிப்பாக வில்லனாக சித்தரிக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை பற்றிய வரலாற்று, சூழலியல், புவிவியல் கண்ணோட்டத்தை விளங்கி கொள்வதற்க்கான சிறு முயற்சிதான் இது!

புவி உயிர்க்கோளம்….

இயற்கைதான் மனிதனை உருவாக்கியது. மனிதன் இயற்கையை ஒர் அங்கமானவன். இயற்கைய்யின் வரலாற்று வளர்ச்சிப் போக்கின் தொடர்ச்சியில் தான் இன்றைய மனித சமூகமும்,, அதன் நாகரீக வாழ்வும் தொடங்கியது. ஆகவே இயற்கையை மனிதனால் வெல்ல இயலாது.. இயற்கையை வீழ்த்தி வெற்றி கொள்ள வேண்டும் என்கின்ற கண்ணோட்டமே அடிப்படையில் தவறானது. இயற்கையை வெல்ல வேண்டும் என்பது முதலாளித்துவத்தின் …குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையின்,, இலாபவெறியின் வெளிப்பாடாகும்.. மனித வாழ்க்கை என்பது இயற்கையில் இருந்து விலகியதாக, முற்றிலும் வேறுபட்டதாக,, பகையானதாக இருக்க இயலாது. இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் இடையிலான முரண் இயக்கத்தினை புரிந்து கொள்வது, இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் இடையிலான முரண்களை ( நட்பு – பகை முரண்களை ) அறிந்து செயல்களை திட்டமிடும் உலகளாவியதொரு கண்ணோட்டம் வேண்டும். இயற்கையை மனித நேயப்படுத்துவது, மனிதனை இயற்கை மயப்படுத்துவது என்பதான அந்த கண்ணோட்டத்தினை நமது எழுத்துக்கள், படைப்புகள், விவாதங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

இந்த கண்ணோட்டத்திற்கு வளப்படுத்துவதாக இன்றைய 21ஆம் நூற்றின் அறிவியல் வல்லுநர்கள், சூழலியலாளர்கள் இப்புவிக்கோளத்தை உயிர்க்கோளம் ( BIO-SPHERE) என்ற சொல்லாட்சிக்குள் கொண்டுவந்துள்ளது காட்டுகின்றது. காற்று, நீர், தட்பவெப்பசூழல் ஆகியன இந்த உயிர்க் கோளத்தின் அடிப்படைகளாகும். இவைகள் மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்ததும், ஒன்றுக்குள் ஒன்று இணைந்ததுமாகும். இன்னும் விரிவாக புவிக்கோளத்தை நான்கு பெரும் பிரிவுகளாக நிலமண்டலம் (Lithosphere), நீர்மண்டலம் (Hydrosphere), வளிமண்டலம் (Atmosphre), உயிரியல் மண்டலம் (Bioshpre) என்பனவாக நாம் புரிந்து கொள்ளுவதற்கு வகைப்படுத்தலாம். இவை ஒவ்வொன்றும் சில துணைப்பிரிவுகளையும் கொண்டுள்ளன. நிலமண்டலத்தினுள் புவிச்சரிதம்(Relief), மண்(Soil), ஆகியனவும், நீர்மண்டலத்தில் மேற்பரப்பு நீர்(Surface water), தரைக்கீழ் நீர் (Underground water), கடல்கள்(Oceans) ஆகியனவும் அடங்கும். வளிமண்டலம் எனும்போது அதனுள் வானிலை காரணிகளும் (Climate) அடங்கும். உயிரியல் மண்டலத்தினுள் இயற்கைத்தாவரம் (Natural Vegetation), விலங்கினங்கள், பறவையினங்கள், பூச்சியினங்கள், நுண்ணுயிர்களின் வாழ்க்கை (Animals life) ஆகியனவும் மனிதனின் வாழ்வும் அடங்கும்.

இந்த உயிர்க்கோளத்தில் 50-100 இலட்சம் வரையிலான உயிரின வகைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயிரின வகைகளின் பல இலட்சம். பல கோடிகள் ஆண்டுகள் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் இன்றைய உச்சமாக மனித உயிர் இருக்கின்றது. உயிரினப் பாரம்பரியத்தின் பரிணாமத்தில் இன்றைய நிலையில் உள்ள மனிதன் தோற்றம் பெற்று மனித வாழ்வை ஆரம்பித்ததிலிருந்து புவிக்கோளத்தின் சகல கூறுகளின் மீதும் தன் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றான். மனிதகுல சமூகவாழ்வின் வரலாற்றுப் போக்கில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் வெவ்வேறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே புவித்தொகுதிக் கூறுகளை தன் தேவைக்குரிய வளங்களாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டு வந்தமையை அறியமுடிகின்றது. புவித்தொகுதியும் மனிதர்களின் தேவைக்குரிய இயற்கை வளங்களை நீண்ட நெடுங்காலமாக அவர்கள் வாழ்வுக்காக எப்பிரச்சனையுமின்றி வழங்கி வந்தது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனித குலத்தின் இயற்கைக்கு மாறான வளப்பாவனை அதிகரிப்பும் மனிதர்களின் பேராசைக்குரிய அதிவேகத்தொழில்நுட்ப வளர்ச்சிகளும் புவித்கோளத்தின் வளங்களை பெருமளவு சுரண்டின. வீண்விரயமாக்கின. விஷமாக்கின. இதனால் வளங்கள் அழிந்தன. தேவைக்கு அதிகமாக இயற்கைவளங்கள் பயன்படுத்தப்பட்டதால் வளப்பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு இருகின்றது. முதலாளிய சமூக வளர்ச்சி போக்கில் அதுவும் ஏகாதிபத்தியமாக மாற்றம் அடைந்த பிறகு நீடித்த வளர்ச்சி என்பதற்கு மாற்றாக துரித வளர்ச்சி, மிகைஅதிக இலாபம் என்பதாக திட்டமிட்டு மாற்றப்பட்டு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டன. இதனால் புவிக்கோளத்தின் காற்று, நீர், தட்பவெப்பச் சூழல் இன்று பெரும் அபாயத்தில் உள்ளது. இந்த பேரண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான கோள்களில் உயிர்ச்சூழல் உள்ள கோளம் இந்த புவி மட்டும்தான்… !! பல ஆயிரம் இலட்சம் கோடி மைல்கள் அப்பால் உள்ள விண்மீன் மண்டலங்களில் உயிர்ச்சூழல் இருக்கலாம் என்று வானவியல் இயற்பியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.. அதை பயன்படுத்துவது என்பதும், பூமி அழிந்தால் மனிதர்கள் அங்கு குடியேறி விடலாம் என்பது எட்டா கனிக்கு கொட்டாவி விட்ட கதையாகவே இருக்கும்.. இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது முட்டாள்தனமாகும்.

எனவே, பகுத்தறிவு, வரலாற்று உணர்வு, சனநாயக விழிப்புணர்வு, விடுதலை வேட்கை, அறிவியல் உளப்பாங்கு,, சமூக சிந்தனையுடையதாக நுண்ணறிவுடன் பரிணாம வளர்ச்சியடைந்துள்ள மனிதனுக்கு இந்த உயிர்க்கோளத்தின் உயிர்ச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய உள்ளார்ந்த கடமையும், பொறுப்பும் உள்ளது. அதாவது புவிக்கோளத்தின் அடிப்படையான காற்று, நீர், தட்பவெப்பச் சூழல் தொடர்ந்து வருங்கால தலைமுறைகளுக்கும், உயிரினங்களுக்கும் நீடித்திருக்கும் வகையிலான, இயற்கை வளங்களை வரையறைக்கு உட்பட்டு பயன்படுத்துவதும், மீளமைப்பதுமான வகைகளில் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை முறைமைகளை, விழுமியங்களை மனித சமூகம் மேற்க்கொள்ள வேண்டும்.  .

நீர்மேலாண்மையும் பழந்தமிழர்களும் 

இப்படி வளம்குன்றாமல் இயற்கையை முறைப்படுத்தி, வளப்படுத்தி பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். 21ஆம் நூற்றாண்டில் உயிர்க்கோளம் என்பதை தனது அனுபவ பட்டறிவினால் நீரின்றி அமையாது உலகு என்று பிரகடப்படுத்தினர்.

“நீரின்று அமையாது உலகெனில் யார்யார்க்கும்

வானின்று அமையாது ஒழுங்கு”.

என்பார் நம் முப்பாட்டனார் திருவள்ளுவர். நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை கிடையாது. வான் மழை இல்லாமல் சமூக ஒழுங்கு நிலை பெறாது என்பது இதன் பொருள்.. எவ்வளவு திண்மைமான தீர்க்க தரிசனம்.!!

அறிவியல் ரீதியாக இந்த புவி உயிர்க்கோளத்தில் உயிர்ப்ப்பின் மையமான ஆதாரமாக இருப்பவை காற்றும், நீருமாகும். உயிர்களின் தோற்றத்திற்கு நீரை அடிப்படையாகும். மனிதன் தோன்றியது காடுகளில் என்றாலும் மனித குலம் நாகரிக வளர்ச்சி நோக்கி நன்னீர் நிலைகளான ஆற்றங்கரைகளிலும், ஆற்றுப்படுகைகளிலும்தான் முன்னேறியது!

மனிதர்களுக்கும் . ஏனைய அனைத்து உயிர்களுக்கும் கூட தூய்மையான காற்று, நன்னீர், இருப்பிடம் மிகவும் இன்றியமையாதது ஆகும்.. காற்றையும், நன்னீரையும் மனிதனால் உற்பத்தி செய்ய முடியாது. வணிக சரக்காக எந்த தொழிற்சாலைகளுலும் உற்பத்தி செய்ய இயலாது. எவ்வளவுதான் பிரமாண்டமானதாக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இருப்பினும் இதை சாத்தியமாக்குவதற்கு இயலாது. எனவே, இயற்கையின் கொடையான காற்றையும், நன்னீரையும் மனிதர்கள் பலவேறு வழிகளில் சேமித்து மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதே உண்மை என்பதனை உணர்ந்து செயல்பாடுகளை மனித குலம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

விட் போகல் ( Kar August Witifogel) என்ற ஜெர்மானிய வரலாற்றாய்வாளர் மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகளை மூன்று காலகட்டங்களாக பிரிக்கின்றார். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்த முதலாவது காலம் “மழை நாகரிகம்”. மழை நீரைக்க் குளங்க்களில் தேக்கி வைத்துத் தேவைப்படும்பொழுது பயன்படுத்திய இரண்டாவது கட்டம், அது “ நீர்நிலை நாகரிகம்”. வளர்ச்சி அடைந்த மூன்றாவது நிலையில் பாசனக் கட்டுமானங்கள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்கள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவில் பாசனமும், வேளாண்மையும் நடபெறும் . அது “ நீரியல் நாகரிகம் “ என்று குறிப்பிடுவதாக முனைவர் பழ.கோமதிநாயகம் தனது நூலில் விவரிக்கிறார்.

பல்வேறு சமூக அமைப்புகளின் வளர்ச்சி நிலைகளையும் பண்டைய புராதான பொதுவுடமை சமூகத்தில் இருந்து முதலாளிய சமூகம் வரை இந்த பிரிவுகளில் காணலாம்.

முதலாளியம் ஏகாதிபத்தியமாக ஊதி பெருத்து…. இன்றைக்கு சூறையாடும் முதலாளியமாக அகோரமாக சீரழிந்து போய் கொண்டு இருக்கின்றது. கார்ப்பரேட் முதலாளியமும், அதன் எடுபிடிகளாக இருக்கும் இந்தியா போன்ற நாடுகளின் சூறையாடும் பெருமுதலாளியம் இணைந்து “புட்டிநீர் நாகரிகம்” என்பதான சீரழிந்த நாகரிகத்தை கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக உலகம் எங்கும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தண்ணீர் ஒரு விற்பனை பண்டம், வணிகப் பொருள் என்பதாக திட்டமிட்டு மாற்றி வருகின்றனர்.

இந்த தண்ணீர் அரசியலை எப்படி புரிந்துக் கொள்வது..?

“பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்காதே!” என்பார்கள் நமது முன்னோர்கள். இன்றோ தண்ணீருக்காகப் பணத்தைச் தண்ணீராக செலவழிக்க வேண்டிய சூழல்!. தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ என்பதிலிருந்து மாறி அடிப்படைத் ‘தேவை’ என வரையறுக்கப்பட்டுவிட்டது. பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி, மக்களின் இறப்பில் இலாபம் தேடுகின்றன உலகப் பன்னாட்டு நிறுவனங்கள். இனி, ‘பணம் இருப்போருக்கே தண்ணீர் உண்டு’ என்ற கொடுமையான நிலைமையை உலக வங்கியும், உலக வர்த்தக அமைப்பும் உருவாக்கியுள்ளன.

        உலகின் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தையும், மூலதனச் சுரண்டலையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரையும் விட்டுவைக்கவில்லை. ‘டப்லின்’ நகரத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு, “நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே, இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும்” - என்று தீர்மானம் நிறைவேற்றியது.

        ‘தி ஹேக்’ நகரத்தில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலக நீர்மன்ற மாநாடு, வெளியிட்ட அறிக்கையில், உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். அந்த அறிக்கையில், “நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டிமிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்படவேண்டும்” – என்று தெளிவுறுத்தினர்.

        நமது இந்திய நடுவண் அரசின் தேசிய நீர்க்கொள்கை அறிக்கையின் 13 ஆவது பத்தியில், “எங்கெல்லாம் பொருத்தமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் திட்டமிடல், மேம்பாடு, மேலாண்மை எனப் பல்வேறு வகைகளில் நீராதாரத் திட்டங்களில் தனியார்துறை பங்கேற்பு ஊக்குவிக்கப்படலாம் என்றும், தனியார்துறைப் பங்கேற்பானது, புதுமையான சிந்தனைகளை அறிமுகப்படுத்தவும், நிதியாதாரங்களை உருவாக்கவும், தொழில் முறையிலான மேலாண்மையைக் கையாளவும், சேவையை திறமாக மேம்படுத்தவும், நுகர்வோரின் பொறுப்பை அதிகரிக்கவும் உதவலாம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் குறிப்பிட்ட நிலைமைகளைப் பொருத்து நீராதார வசதிகளின் கட்டுமானம், அவற்றைச் சொந்தமாக்குதல், குத்தகைக்கு அளித்தல், மாற்றுதல் என்று பல்வேறு முறைகளில் தனியார் துறைக்கு இடமளிப்பது குறித்து ஆராயப்படும்” –என்று தண்ணீரைத் தனியார்மயப்டுத்த வக்காலத்து வாங்குகிறது.

இப்படியாக “புட்டிநீர் நாகரிகம்” என்பதான சீரழிந்த நாகரிகத்தை நோக்கி தமிழ்நாடு கடத்தப்பட்டு செல்வதை அனுமதிக்கலாமா..?

இந்த நிமிடத்தில் ஒரு சின்ன குழாயை திருகி நீர் பிடிக்கும் “புட்டிநீர் நாகரிகம்” காலத்தில் தமிழ்ச் சமூகம் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. மறதி நோய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது தமிழ்ச்சமூகத்தை..

உலகமயமாக்கலுக்கு முன்.. உலகமயமாக்கலுக்கு பின் என்று தண்ணீருக்கான அரசியலை பற்றிய புரிதலை பிரித்து தமிழ்ச்சமூகத்தின் நீர் மேலாண்மை வரலாற்றை, அதன் பின்னுள்ள அரசியலை விளங்கி கொள்ள வேண்டி உள்ளது

90களுக்கு பின்பான உலகமயமாக்கல், தனியார்மயமாக்கலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய நீரை சேமிக்கும் நுட்பங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுடன் கூட்டு சேர்ந்து திமுக- அதிமுக- காங்கிரஸ் –பி.ஜே.பி ஆட்சியாளர்கள்- பெரும் அதிகாரிகள் வளர்ந்து விட்டு இருக்கின்றனர். அறிவியல்… முன்னேற்றம்.. வளர்ச்சி, வல்லரசு என்று இவைகளை பற்றி கதைகளையும், பொய்களையும் அள்ளி விட்டுக் கொண்டும், அதனால் பெரும்பணத்தை கொள்ளை அடித்து கொழுத்து உப்பிபோய் இவர்கள் திரிகின்றனர்..

புதிய நீரை சேமிக்கும் நுட்பங்கள் உலகமயமாக்கலுக்கு பின்:

.1. பிளாஸ்டிக் புட்டி நீர்…. பல்வேறு கார்ப்ப்ரேட் கம்பெனிகள் ஓசோன் வாட்டர், மினரல் வாட்டர் .என்று பல பெயர்களில் இந்த பாட்டில் நீர்கள் உள்ளன.

2. கேன் வாட்டர்.. சென்னை உள்ளிட்ட பெரு-நிறு நகரங்களில் குடிநீர், சமையல் வேலைகளுக்கு இதைதான் பயன்படுத்துகின்றனர்.

3.லாரி வாட்டர்…. சென்னை உள்ளிட்ட பெரு-நிறு நகரங்களில் எல்லா தேவைகளும் குண்டி கழுவது உள்ளிட்ட இந்த நீர்தான் பயன்படுத்தப்படுகிறது.

4.வாட்டர் பாக்கெட் - தமிழ்நாட்டின் எல்லா பெட்டி கடைகளும் குறிப்பாக,டாஸ்மார்க் கடைகளிலும் கிடைக்கும் குடிநீர்

5. அம்மா புட்டி குடிநீர் – ஜெயா அரசின் சாதனையாக முக்கியமாக இது பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது..இனி தண்ணீர் என்பது மக்கள் உரிமை அல்ல. பணம் கொடுத்து வாங்கும் சர்வீஸ்(PAID SERVICE) என்ற பன்னாட்டு கார்ப்பரேட்- உலக வங்கி திட்டத்திற்க்கா வடிவமைக்கப்பட்ட திட்டம். பன்னாட்டு கம்பெனி அடிவருடிகளான அம்மா ஆட்சியின் குயபுத்தி திட்டம் அம்மா புட்டி குடிநீர்

6.டேப் வாட்டர்.. ஒரு சின்ன குழாயை திருகி நீர் பிடிப்பது..சென்னை மக்கள் தொகையில் கால் பங்கு மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது..

என்பதான “புட்டிநீர் நாகரிகம்” தமிழ்நாட்டில் தனியார்மயமாக்கல் விளைவாக தமிழக மக்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றது.

ஆனால்…. தமிழ்நாட்டில் மழை நீரை சேமிக்க ஏரிகள் மட்டுமல்ல….அதாவது உலகமயமாக்கலுக்கு முன்.. 80 - களுக்கு முன் மழை நீரை சேமிக்கும் நுட்பங்கள்:

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.
(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்களைக் கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம். 
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) – குளம், ஏரி, முள்ளம்களின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை- தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள் ஆகும்..

.(48) முள்ளம் ..செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய்களில் மீன் பிடிக்க அமைக்கப்படும் நீர்தேங்கும் அமைப்பு தெற்கு மலையம்பாக்கத்தில் இந்த அமைப்பு இருந்தது... 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு இது படிப்படியாக விவசாயத்துடன் அழிக்கப்பட்டு விட்டது

இவைகளை தவிர இன்னும் தமிழ் இலக்கியங்களில், கல்வெட்டுகளில் பலவகையான நீர் நிலைகள் , நீரை சேமிக்கும் நுட்பங்கள் விவரிக்கப்படுகின்றன.

நீர் இன்று அமையாது உலகு ..என்பதை வெற்று வாய் சவடால் சொல்லாக அல்ல.. பழம் தமிழர்கள் எப்படி நீரையும், அதை சேமிக்கும் தொழில் நுட்பங்களை அறிவியல்பூர்வமாக புரிந்து கொண்டு செயல்பட்டார்கள் என்பதற்கு இந்த நுண்ணிய கட்டமைப்புகள் வரலாற்றுச் சாட்சிகளாக கட்டியம் கூறுகின்றன.

நீரை பற்றி வளமான பொருண்மை நிறைந்த வாழ்வியலை தமிழ் சமூகம் கொண்டு இருந்தது… இதற்கு அடிப்படையான காரணம் இயற்கையோடு இணைந்த பழந்தமிழர் வாழ்வியல்முறை.. அய்ந்திணை கோட்பாட்டு புரிதல்கள் இருந்தன.

இந்த அனுபவ அறிவியல் நுண்ணறிவினால் ..

வடகிழக்கு பருவ காற்றினால் இரண்டு மாதங்களில் அதுவும் பெருமளவு புயல்காற்று மழையினால் தமிழ்நாட்டிற்கு நீர் கிடைக்கிறது.. தென்மேற்கு பருவ காற்று போல் சமச்சீராக தொடர்ச்சியாக இல்லாமல் மிகச்சில நாட்களில் சில மணிநேரங்களில் வடகிழக்கு பருவ மழை கொட்டி விடும் இயல்புடையது. இப்படி பொழியை பெய்யும் மழை நீர் வேகமாக ஓடி கடலில் கலந்து மனிதர்களுக்கு பயன்படாமல் போகின்றது. இந்த யதார்த்தை உணர்ந்து வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க இத்தகைய தொழில்நுட்ப அறிவியல் கட்டுமான நீரியல் அமைப்புகளை பழந்தமிழர்கள் உருவாக்கினார்கள். பல நூறு ஆண்டுகளாக உழவு தொழிலையும், கால்நடை வளர்ப்பையும் பெருக்கி செழிப்பாக்கினர். இதன் மூலம் வாழ்வாதார செல்வங்களை பெருக்கி பெருவாழ்வு வாழ்ந்தார்கள். குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்தனர். பல்லூயிர் இயற்கைச் சூழலை வளமாக்கி பெருக்கினர்.

(இவற்றில் உள்ள சாதிய, வர்க்கரீதியிலான முரண்கள், பங்கீடுகள் தனியாக புரிந்த கொள்ள வேண்டி உள்ளது என்பதை மட்டும் இங்கு குறிப்பிட்டு விட்டு … … ) இனி ஏரிகள் பொறியமைப்பையும் செம்பரம்பாக்கம் ஏரியை பற்றி காண்போம்!!

தமிழ்நாட்டின், தமிழக மக்களின், நமது முன்னோர்களின் பெருமைகள், பாரம்பரியம் என்பது கங்கை கொண்டான், கடாரம் வென்றான் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றிகளை கொண்டாடுவதல்ல.. 

sembarapakkam 551மனித நாகரிக வளர்ச்சிக்கான அவசியமான சூழல் கட்டமைப்புகள், நுண்ணிய பொறியமைப்புகளை தங்கள் உழைப்பு திறனால், அறிவு நுட்பத்தால் கண்டறிந்தது மேம்படுத்தியதுதான் கொண்டாடப்பட வேண்டும். மருத்துவம், கட்டிடம், விவசாயம், கால்நடை..என்று பலப்பல அறிவார்ந்த நுண்ணிய பொறியமைப்புகள்.. , என்று எண்ணற்ற துறைகளில் நமது முன்னோர்களின் மகத்தான பங்களிப்புகள் வரலாற்றின் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கின்றன.

இவற்றில் முக்கியமானது ஏரிகள், அதன் இணைப்பு கால்வாய்கள், வடிகால்கள், நீர்நிலைகளின் ஒருங்கிணைந்த பொறியமைப்புகள் ஆகும். பெரும்பாலும் வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தமிழ்நாட்டில் நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்தனர். தமிழ்நாட்டின் பெரும்பகுதிகள் கடினப் பாறைகளால் ஆனது. இந்தப் பாறைகளில் தண்ணீர் சுலபமாக இறங்கி சென்று சேராது. அது ஒரு நீண்ட செயல். இயற்கையாகவே, தமிழகத்தின் புவியியல் அமைப்பின்படி நிலத்தடியில் நீர் இருப்பது மிகவும் குறைவு. இப்போது நாம் உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டுகாலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் தமிழ்நாட்டில் சேமிக்கப் படுவதில்லை. மழை நீர் 26 % அளவிற்கு பூமியில் ஊறினால்தான் நிலத்தடி நீர் ஊறும். இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் நம் முன்னோர்கள் பயன்படுத்தி நீரை தோக்கி வைக்கும் சிறப்பான ஏரிகள் அமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள் . ஆகவே, மனித உழைப்பின், நமது முன்னோர்களின் மாண்புறு படைப்புகளில் மகத்தானதொன்று போற்றப்பட வேண்டியதாக அவர்கள் உருவாக்கிய ஏரிகளும்-ஆறுகளும்-தாங்கல்களும்- கால்வாய்களும்-குளங்களும் இணைந்த நன்னீர் அமைப்பு முறைமையாகும்..

அதனினும் மகத்தானது அவர்கள் இயற்கையை மனிதநேயமாக்கியதும், மனிதனை இயற்கைமயமாக்கியதுமாகும். செயற்கையான குளங்களை இயற்கையான ஆறுகளுடன், இணைத்த நல்வினைப் பயன்தான் இன்று நாம் பயன்படுத்தும் தமிழ்நாட்டின் நீராதாரங்களாக தொடர்ந்து பலனளித்து கொண்டிருக்கின்றன.

ஏரிகள் பொறியமைப்பும் செங்கல்பட்டு மாவட்டமும்

தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர ஊருக்கு ஊர், கிராமத்திற்கு கிராமமென்று கோயில் குளங்கள், ஊருணிகள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டதொரு நீர்சேமிப்பு! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம் என்பதில் இருந்து நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் சிறப்பை, பெருமதிப்பை கணக்கிட்டு, நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஏரிகள் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில் (இன்றைய காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்கள்) 3700 ஏரிகள் இருந்தன. பாலாறு, கூவம் ஆறு, குசஸ்தலை (குறத்தி அல்லது கொற்றலை) ஆறு, ஆரணி ஆறு என்று இந்த மாவட்டங்களிலும் சென்னையிலும் பாயும் ஆறுகள் இந்த 3700 ஏரிகளுடன் எண்ணற்ற வரத்து-போக்குக் கால்வாய்கள் மூலம் இயற்கையாகவும், மனித உழைப்பின் – அறிவின் பயனாக நீரியல் கட்டுமான பொறியியல் நுட்பத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன.

இன்னும் குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் குடிநீர் ஆதாரம் மற்றும் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக மதுராந்தகம், தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, திருபெருமந்தூர் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரி, சோமங்கலம் ஏரி, மதுரமங்கலம் ஏரி மற்றும் கொளவாய் ஏரிகள் உள்ளன.

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தாமல் ஏரி, காஞ்சி நகரப் பகுதியில் செல்லும் வேகவதி ஆறு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட எல்லைகளில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஏரியும், பிள்ளைப்பாக்கம் ஏரியும் சவுத்திரி கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளன..

இந்த மாவட்டத்தின் மையப்பகுதியில் செல்லும் பாலாறு நதி காஞ்சிபுரம், வாலா ஜாபாத், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாகக் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தில் கடலில் கலக்கிறது. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரையொட்டி செல்லும் நீஞ்சல் மடுவு கால்வாயில் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. திருப்போரூர் வட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தின் ஒரு பகுதி ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கொளவாய் ஏரிக்குச் சென்று, புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள கலங்கல் வழியாக நீஞ்சல் மடுவில் கலக்கிறது. பெருங்களத்தூர், நந்திவரம், மண்ணிவாக்கம், ஆதனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏரிகளின் உபரி நீர் மணிமங்கலம் வழியாக அடையாற்றில் கலக்கிறது.

.உத்திரமேரூர் ஏரியின் உபரி நீர் இரண்டு பகுதிகளாக வெளியேறுகின்றன. இதில் ஒரு பகுதி தண்ணீர் சங்கிலி தொடராக அப்பகுதியில் உள்ள கிராம ஏரிகளை அடைந்து கரிக்கிலி, வெள்ளப்புத்தூர், கட்டியாம்பந்தல், வேடந்தாங்கல் ஏரிகளை நிரப்பி கிளியாறு மூலம் மதுராந்தகம் ஏரியை அடைகிறது. மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் மீண்டும் கிளியாற்றில் வெளியேறுகிறது. இவ்வாறு வெளியேறும் தண்ணீர், கடப்பேரி, விழுதமங்கலம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்கு நடுவே பயணித்து ஈசூர் கிராமத்தில் பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது.இவை தவிரத் திருப்போரூர் வட்டத்தில் உள்ள 17 ஏரிகள், சென்னை புறநகர் பகுதிகளாகக் கருதப்படும் கேளம்பாக்கம், தையூர், கோவளம் வழியாகப் பக்கிங்காம் கால்வாயில் கலக்கின்றன.

தற்போதைய தொடர் மழையில் ( 2015, டிசம்பர் ) முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இந்த அனைத்து ஏரிகளும் உள்ளன.. 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரிகள் மாரமத்து செய்து சீரமைக்கப்படாததால் இவைகளின் கரைகள் பலவீனமாக இருக்கின்றன. இந்த மாமழையினால் சில ஏரிகள் உடைப்புகள் ஏற்பட்டன. மேலும் இந்த மாவட்டங்களில் மத்திய-மாநில அரசுகளின் புதிய பொருளாதார கொள்கை காரணமாக இந்த ஏரிகள் பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகள் அல்லது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் செய்யும் தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதிலும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் திட்டமிட்டு இந்த தொழிற்சாலைகள் கட்டப்பட்டு உள்ளதை சதாரணமானது என்று கடந்து செல்ல முடியாது. ஏரிகளில் உள்ள நீரை இலவசமாக எடுத்து பயன்படுத்தவும், ஆலை கழிவுநீரை எந்த வரையறை இல்லாமல் ஏரிகளில் கலக்கவும், நாளடைவில் ஏரிகளையை ஆட்சியாளர்கள் – அதிகாரிகள் துணையுடன் ஆக்கரிமிப்பது என்ற மூன்று சதிதிட்டங்கள் இதில் உள்ளன..

இந்த மாமழையில் ( 2015, டிசம்பர் ) ஏரிகள் நிரம்பியதால் நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தங்கள் தொழிற்சாலைகளை பாதுகாக்க, தங்கள் சுயநலனுக்காக இந்த ஏரிகளில் திட்டமிட்டு செயற்கையாக உடைப்புகளை ஏற்படுத்தி விட்டுள்ளனர். அல்லது ஏரி நீரை பல வழிகளில் வரைமுறை இல்லாமல் அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகத்தின் துணையுடன் திறந்து விட்டனர். சென்னை பெருவெள்ளத்திற்கு இப்படியாக தொழிற்சாலைகள் நிர்வாகங்கள் காரணமாக இருந்ததை பற்றி ஓட்டு கட்சிகளே, ஊடகங்களோ தப்பி தவிறியும் வாயை திறக்க வில்லை.

இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் 587 ஏரிகள், ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 649 ஏரிகள் என 1,236 ஏரிகள் உள்ளன. மாவட்டப் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில் 337 ஏரிகள் கொசஸ்தலை ஆறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ளன. ஆரணி ஆற்றின் வடிநில உப கோட்டத்தின் கீழ் 250 ஏரிகள் உள்ளன. சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, சோழவரம், புழல் ஆகிய 3 ஏரிகள் தவிர மற்ற ஏரிகள், மழைக்காலத்தில் சங்கிலி தொடர் ஏரிகளாக நிரம்பி உபரி நீர் கூவம், கொசஸ்தலை, ஆரணி, நந்தியாறு நதிகள் மூலம் எண்ணூர், நேப்பியர் பாலம், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடலில் கலக்கின்றன.

செம்பரம்பாக்கம் ஏரி 

செம்பரம்பாக்கம் ஏரி சென்னைக்கு சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கின்றது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருபெருந்தூர் வட்டத்தில் பூந்தமல்லி, குன்றத்தூர் அருகில் உள்ள பழம் பெரும் ஏரியாகும். புவியியல் அமைப்பின்படி காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் கிழக்கு திசை கடைகோடி மையத்திலும் , சென்னை மாவட்டத்தின் தென்மேற்கின் துவக்கத்திலும் இந்த ஏரி அமைந்துள்ளது. , பாலாறு, கூவம், ஆரணி, கொற்றலை ஆறுகளும், காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களின் 3700 ஏரிகளும் இறுதியில் நேமம் ஏரி, திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளுடன் அனைத்து திசைகளிலும் வலைப்பின்னல்களாய் இணைக்கப்பட்டு உள்ளன. , பின் அங்கிருந்து அதாவது திருபெரும்ந்தூர் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் உபரி நீரானது முறையே 1.சவுத்திரிகால்வாய் 2. புதிய பங்காரு கால்வாய் 3.கம்ப கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது. மேட்டு நிலப்பரப்பில் இருந்து கடற்கரை நோக்கி சரியும் நில அமைப்பினைப் புரிந்து, எந்த செயற்கையான உந்துவிசையும் செலுத்தாமல் இயற்கையாக நீரின் பண்பான பள்ளத்தை நோக்கி பாயும் இயல்பை திறமையாகப் பயன்படுத்தி இந்த பெரும் வலைப்பின்னல் நீர்மேலாண்மை அமைப்பு இயக்கப்பட்டன. இந்த இணைப்பு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான இயற்கை நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். இந்த இயற்கையான நீரோடும் விசையை தன்வயபடுத்தி மாபெரும் நீர்பாசன கட்டமைப்பை பழந்தமிழர்கள் உருவாக்கி பல நூற்றாண்டுகள் பயன்படுத்தினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து ஏரிகளின் உபரிநீர் திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் மூலமும், திருவள்ளுர் மாவட்டத்தின் ஏரிகளின் உபரிநீர் நேமம் ஏரி வழியாகவும் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இப்படியாக தங்கள் அனுபவத்தினால் புரிந்து முறைப்படுத்தி இயற்கை தன்வயப்படுத்தி வளமும், வாழ்வையும் செம்மையாக்கும் அறிவியலை கண்டார்கள் நம் பழந்தமிழர்கள்..ஆனால் இன்றைய மத்திய-மாநில ஆட்சியாளர்கள் தங்களது ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளால், தீங்கான கார்ப்பரேட் அறிவியல் முறைமையினால் இயற்கையை நாசப்படுத்தி நீராதாரங்களை ஆக்கிரமித்து சென்னையில் பெரு வெள்ளத்தை - பேரிடரை ஏற்படுத்தியுடன் மட்டுமல்ல  அந்த பேரிடரிலும் உதவி, மீள்கட்டுமானம், மீள்குடியமர்வு என்ற பெயர்களில் பெரும் கொள்ளை இலாபம் பார்க்க முயல்கின்றனர்.

சென்னை நகரின் குடிநீர்த் தேவையை முக்கியமாக பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 மி.க.அடிகள் mcft) ..அதாவது 24 அடிகள் உயரம் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தேக்கப்படும்.. .இந்த ஏரியின் பரப்பளவு 13 ஆயிரம் ஏக்கர்.. இதன் கரையின் நீளம் 9.5 மைல்கள்..இதன் நீர்பரப்பளவு 9.5 சதுர மைல்கள் (John P. Mencher, Agriculture and Social Structure in Tamil Nadu, Bombay, நூல்.. இதில் சுதந்திரமான நீர்பிடிப்பு பகுதி 77.13 சதுர கிலோமீட்டர்களும், துணை நீர்பிடிப்பு பகுதி 357.42 கிலோமீட்டர்களும் கொண்டுள்ளது என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. கடல் மட்டத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி 85 அடிகள் உயரத்தில் இருக்கின்றது.

செம்பரம்பாக்கம் ஏரியில் எட்டு நீர்பாசன மதகுகளும், இதிலிருந்து செல்லும் பதினைந்திற்கும் மேற்ப்பட்ட பாசன கால்வாய்களும் இருந்தன. அவைகள் பூந்தமல்லி மதகு, மேப்பூர் மதகு, செட்டி மதகு அல்லது மணப்பாக்கம் மதகு, கோண மதகு அல்லது மலையம்பாக்கம் மதகு, பெரிய மதகு, குன்றத்தூர் மதகு, நத்தம் மதகு, சிறுகளத்தூர் மதகு போன்றவைகளாகும். இந்த நீர்பாசன மதகுகள் இன்று எந்த பராமரிப்பும் இன்றி சிதலமடைந்து கொண்டிருக்கின்றன.. இந்த பாசன கால்வாய்கள் அனைத்து கட்சிகளிலும் உள்ள அதிகாரம் படைத்தவர்களால், அல்லக்கைகளால் குறிப்பாக திமுக, அதிமுக க்ட்சிகளின் உள்ளூர் மட்ட தலைவர்க்ளால் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி சுருக்கி வருகின்றன. ஒரு சில கால்வாய்கள் காணமலே போய் விட்டன. பொதுபணித்துறை நிர்வாகமும் இந்த ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இவைகளில் இருந்து சென்ற பதினைந்து பாசனகால்வாய்கள் 37 கிராமங்களில் உள்ள 13,223 ஏக்கர்கள் விவசாய நிலங்களுக்கு சென்றன. பல ஆயிரம் டன்கள் உணவுப்பொருள்களை உற்பத்திச் செய்தன. முப்போகமும் செந்நெல் விளையும் இந்த பூமி இன்று வளர்ச்சியின் பெயரில் கான்கீரிட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன.

இயல்பாகவே கடின பாறை நிறைந்த இப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர் நிலத்திற்குள் ஊறுவதற்கு செம்பரம்பாக்கம் ஏரியின் பிரமாண்டமான நீர்பிடிப்புத் தொகுப்பு காரணமாக இருந்து கொண்டிருக்கின்றது. தொண்டை மண்டலத்தின் வளமான பகுதியான செம்பரம்பாக்கம் ஏரி,, நேமம் ஏரி, திருபெரும்ந்தூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரிகளின் நீர்பாசன மிகுந்த பல்லாயிரம் ஏக்கர்கள் விரிந்த விவசாய பகுதிகளாகும். சென்னை மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக சோறு போட்டது தஞ்சை தரணி அல்ல. இந்த ஏரிகளின் இந்த விவசாய பகுதிகளாகும். இந்த வரலாறும், உண்மையும் இன்று மறக்கடிக்ப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன. 

2015 சென்னை செயற்கைப் பேரிடர்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பரப்பு பகுதி திருவள்ளுவர் மாவட்டத்திலும், நீர்பாசன பகுதி காஞ்சிபுரம் மாவட்டத்திலும், உபரிநீர் வடிகால் பகுதி சென்னை மாவட்டத்திலும் இருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரி கொசஸ்தலை ஆறு வடிகால் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், ஏரியின் நீர் சென்னை குடிநீர் வழங்கல்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழும் உள்ளன. இப்படி பல நிர்வாகங்கள் இதில் இணைந்துள்ளதால் காஞ்சிபுரம் , சென்னை மாவட்டங்களின் ஆட்சியாளர்கள் இணைந்துதான் உபரிநீர் வெளியேற்றம் பற்றி திட்டமிட வேண்டி உள்ளது.

தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஆறு கலங்குகள் உள்ளன. இதில் அய்ந்து கண்கள் கொண்ட புதிய கலங்கு 80களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. 19 கண்கள் கொண்ட கலங்கும் உள்ளது. இந்த இரு கலங்குகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர்தான் வழுதலம்பேடு வழியாக திருநீர் மலை அருகில் அடையாறில் கலக்கின்றது. அங்கிருந்து அனகாபுத்தூர், விமான நிலையம், மணப்பாக்கம், ஈக்காடு தாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் வழியாக கடலில் சென்று இந்த உபரிநீர் கலக்கின்றது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டு தரை கலங்குகள் வெங்காடு ஏரி அருகில் குன்றத்தூர் – திருபெருமந்தூர் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி குறிப்பிட்ட ( 23 அடிகள் )கொள்ளளவு வந்தவுடன் இந்த இரண்டு தரை கலங்குகள் வழியாக தானாகவே உபரிநீர் வெளியேறும். இந்த உபரிநீரும், சோமங்கலம் ஏரி உபரி நீரும் வேறு இரு ஓடைகள் வழியாக திருமுடிவாக்கம் வழியாக அடையாற்றில் கலக்கும்.. இந்த இரண்டு தரை கலங்குகள் வெளியேற்றிய உபரி நீரை இந்த 2015 பேரிடரில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீராக அரசோ, பொதுப்பணிதுறையோ, எதிர்கட்சிகளோ, ஏன் எந்த ஊடகங்களும் கூட ஒரு பொருட்டாக கணக்கில் கொள்ளவில்லை.. விவாதத்தில், செய்திகளில் வரவில்லை. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரியின் பரந்து இருந்த நீர்பிடிப்பு பகுதிகள் புறம்போக்கு நிலங்கள் என்ற பெயரில் ஹீண்டாய் பன்னாட்டு கம்பெனிக்கும், பன்னாட்டு கம்பெனிகளின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிக்கு தமிழக அரசால் ஆக்கரமிக்கப்பட்டு தாரைவாக்க்கப்பட்டு உள்ளது. போருர் இரட்டை ஏரிகளில் ஒன்றை இராமசந்திரா மருத்துவ கல்லூரிக்கு உடையார் என்ற தனிநபர் ஆக்கிரமிக்க எம்.ஜி.ஆர் ஆட்சி எப்படி துணை போனதோ அதேபோல்தான் இங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு தெரியாமல் பொதுபணிதுறையும், தமிழக அரசும் தொடர்ந்து மறைத்து வருக்கின்றன.

அய்ந்து கண்கள் கொண்ட புதிய கலங்கும், 19 கண்கள் கொண்ட கலங்கும் வெளியேற்றிய 30,000 கனஅடிநீர் உபரிநீர் மட்டுமே செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீராக கணக்கில் கொள்ளப்பட்டு இன்றுவரை விவாதத்தில், செய்திகளில் இருப்பது தகவல்கள், புள்ளிவிவரங்கள் போதாமையை உணர்த்துவதாக இருக்கிறன.. எப்படி 30,000 கனஅடிநீர் உபரிநீர் ஒரு இலட்சம் கன அடிநீராக,, 1 ½ கனநீருக்கும் மேலானதாக மாறியது..? பெரு வெள்ளம் அடையாற்றில் எப்படி வந்தது. என்பன ஆயிரம் டாலர் கேள்விகளா என்ன..? உண்மையை பகுத்தறிவுடன் அணுக வேண்டும்..அவ்வளவே..!!

 சில பொறியாளர்கள் செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவு பற்றி தவறான தகவல்களை அளிக்கிறார். செம்பரம்பாக்கம் ஏரி மொத்த கொள்ளளவு 364.5 கோடி கனஅடி (3645 மி.க.அடிகள் mcft) என்பது பொதுபணித்துறை செம்பரம்பாக்கம் ஏரியில் நிரப்பி வைக்கும் அளவைத்தான் குறிக்கின்றது. அதாவது செம்பரம்பாக்கம் ஏரி 24 அடிகள் என்பதும் ஏரியில் நிரப்பி வைக்கும் அளவைக் குறிக்கின்றது.. உண்மையில் செம்பரம்பாக்கம் ஏரி 40 அடிகள் வரை உயரம் உடையது.. 30 அடிகள் மேல் செம்பரம்பாக்கம் ஏரி நீரை தேக்கி வைக்க முடியும்… 1976 க்கு முன்பு வரை 22 அடிகள் நீர் தேங்கி வைக்கப்பட்டது. பின்பு ஏரியின் கரைகள் தொடர்ந்து பல சமயங்களில் மக்கள் கோரிக்கைகளை, போராட்டங்களை தொடர்ந்து பல ஆட்சியாளர்களால் பலப்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டது. ஆனாலும் கூட 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைக்க பொதுபணித்துறை இன்றுவரை முயற்சி செய்ய வில்லை. உண்மையில் 30 அடிகளுக்கு மேல் நீரைத் தேக்கி வைக்கமுடியும்.என்பது செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள சின்ன குழந்தைக்கு கூட தெரியும்..

நீர் தேக்கம் - நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள ஹூண்டாய் மோட்டார் கம்பெனி போன்ற பெரும் கம்பெனிகள், சிப்காட் வளாகம், ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இருப்பதால் 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைத்தால் அவைகள் நீரில் மூழ்கி விடும். அதனால்தான் 24 அடிகளுக்கு மேல் நீரை தேக்கி வைத்தால் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விடும் என்ற பச்சை பொய் திட்டமிட்டு இந்த ஆக்கிரமிப்பாளர்களா பரப்ப படுகின்றது. ஊடகங்கள் இதற்கு துணை போகின்றன . முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் உடைந்து விடும் என்ற கேரள அரசின் கதைதான் இங்கும் தமிழக அரசால் கடைபிடிக்கப்படுகின்றது. 30 அடிகள் வரை நீரை தேக்கினால் இந்த கார்ப்பரேட தொழிற்சாலைகள் ஆக்கிரம்பிக்கப்பட்டுள்ள நீர்பிடிப்பு பகுதிகள் மூழ்கும் என்பதால் ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் கார்ப்பரேட் லாபிக்கு அடிபணிந்து நீரைத் தேக்க மறுக்கிறார்கள்.. இதனால் சென்னை மக்களின் பலகோடி கன அடிகள் குடிநீரை விரயம் செய்கின்றனர்.. இயற்கை அளிக்கும் பெருமதிப்புள்ள மழைநீர் வளத்தை வீணாக உபரிநீராக்கி கடலில் கலக்க விடுகின்றனர். கோடை காலங்களில் சென்னை மக்கள் குடிநீருக்கு அலைய காரணமாக ஆட்சியாளர்கள்-அதிகாரிகள் கார்ப்பரேட் லாபியர்கள் இருக்கின்றனர்.

chennai water supply system

அரசு எந்திரத்தின் செயலற்ற தன்மைக்கு சப்பைக்கட்டும் விதமாக முன்னாள் பொறியாளர் மிகச்சிலர் செம்பரம்பாக்கம் ஏரி 29 ஆயிரம் கன அடிகள் மட்டும் வெளியேற்றும் திறன் உடையது என்கிறார்கள். 23 அடிகள் கொள்ளளவு இருக்கும் பொழுது ஏரி 29 ஆயிரம் கன அடிகள் வெளியேற்றும். ஆனால், 25, 27 அடிகள் கொள்ளளவு இருக்கும் பொழுது செம்பரம்பாக்கம் ஏரி 29 ஆயிரம் கன அடிகளா வெளியேற்றும்…? விசையும் அதிகரிக்கும் அதிக அளவு நீர் வெளியேறும் என்பதுதான் உண்மை.. நீரின் உயரம் அதிகமானால் வெளியேறும் நீரின் அளவு மாறுபடும் 16 அடிகள் கொள்ளளவு இருக்கும் பொழுது திறந்தால் 29 ஆயிரம் கன அடிகளுக்கு குறைவாகவே உபரி நீர் வெளியேறும்.. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரி இரு கலங்குகளிலும்( 25 வழிகள்) 25 அடிகள் வரை உயரம் உடையது கிடையாது.. நீரின் கன அடிகள் வெளியேற்றம் (உயரம் X அகலம் X நீளம் = ) கன அளவு பொறுத்து மாறுபடும் என்பது எட்டாம் வகுப்பு பாடம். 2015 டிசம்பரில் இரு கலங்குகளின் வெளிபுறத்தில் ஏற்பட்ட மண்சரிவுகள் இந்த அதிகப்படியான 29 ஆயிரம் கன அடிகள் மேல் நீரை வெளியேற்றப்பட்டதற்குச் சாட்சிகளாக உள்ளன. மேலும் வெங்காடு இரண்டு தரை கலங்குகள் வழியாக தானாகவே பல ஆயிரங்கள் கன அடிகள் உபரிநீர் வெளியேவதை பொதுபணித்துறையும், கட்சிகளும், ஊடகங்களும் எந்த கணக்கிலேயே கொண்டு வந்து சொல்வதில்லை.. இப்படி மக்களிடம் உண்மையை விளக்க வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அரை உண்மைகளை, புளுகுகளை, புள்ளிவிவர திசைத்திருப்பல்கள் சித்து வேலைகளை செய்கின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரி பழைய வரலாறு

1000 ஆண்டுகளாக மனிதர்களுக்கு, தமிழர்களுக்கு சோறு போட்ட செம்பரம்பாக்கம் ஏரி எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்ற வரலாறு நம்மிடம் கிடையாது. பல்லவர் ஆண்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று தமிழ் வளர்ச்சி கழகம் வெளீட்டுள்ள தமிழக நீர்வளம் என்ற நூலிலும், இன்னும் சிலர் 12 ஆம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவுமான குறிப்புகள் உள்ளது.. அதுவும் முழுமையான வரலாற்று தகவல் இல்லை. நடிகை பிறந்த நாளை அறிந்துள்ள சமூகம் நடிகன் பிறந்த நாளுக்கு பெருவிழா எடுக்கும் ஊடகங்கள் செம்பரம்பாக்கம் ஏரியின் வரலாற்றை கற்றுக் கொடுப்பது கிடையாது.. இதுவரை எந்த பொதுபணிதுறை அதிகாரிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் எழுத வில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு- சூழலியல் கல்வியின் யாதார்த்த நிலைமையாக உள்ளது. இந்த அளவிற்குதான் நமக்கு கற்பிக்கப்ப்டும் கல்விமுறை நடைமுறைகளோடு இணையாது தனியாக அந்தரத்தில் தொங்கி கொண்டு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேம்ஸ் நதி, அமோசான், கங்கை நதி பற்றிய பாடங்கள் இங்கு நிறைய உண்டு. ஆனால் இங்குள்ள இயல்பு வாழ்வியலோடு இணைந்த செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, அடையாறு, ஆரணியாறு, பாலாறு, கொற்றலை(குசஸ்தலை ஆறு போன்றவைகளின் வரலாற்றை, உயிர்சூழலை, நீராதாரத்தை கற்பிக்கும் பாடங்கள் பாட நூல்களில் உள்ளதா..? எந்த பாட திட்டத்திலும் இல்லை… இதுதான் இன்றைய பரிதாபகரமான தமிழக கல்வி முறை.. பேரிடரின் பொழுது பெருவெள்ளம் இயற்கையால் நிகழ்ந்தது என்று அனைவரும் நினைப்பதற்கு இந்த வாழ்வியலோடு பொருந்தாத கல்வி முறையும் ஒரு காரணியாக உள்ளது.

 பாலாறு நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் அதன் பாசனப் பகுதிகளுக்கு வளம் சேர்ந்தாக இலக்கிய வரலாற்று குறிப்புகள் உண்டு. எடுத்துக்காட்டாக 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெரியபுராணம் என்ற நூலை எழுதிய பெரும்புலவர் சேக்கிழார் செம்பரம்பாக்கம் ஏரியின் தலைவாசலில் உள்ள குன்றத்தூரில் பிறந்து வாழ்ந்து… மறைந்தவர். இவர் கட்டிய சிவலாயமும், அதில் ஏராளமான கல்வெட்டுகளும் உள்ளன. இவரை புகழ்ந்து சேக்கிழார் புராணம் எனும் “திருத்தொண்டர் புராண வரலாறு” என்ற  நூலை பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார் எழுதி உள்ளார். அந்த நூலில் குன்றத்தூரில் பாலாறு பாய்ந்து வளம் சேர்த்த வரலாற்று தகவல் உள்ளது.


பாலாறு வளம்சுரந்து நல்க மல்கும்
பாளை விரி மணம்கமழ்பூஞ் சோலைதோறும்
காலாறு கோவியிசை பாட நீடு
களிமயில் நின்று ஆடுமியல் தொண்டை நாட்டு

நாலாறு கோட்டத்துப் புலியூரக் கோட்ட
நன்றிபுனை குன்றைவள நாட்டுமிக்க
சேலாறு கின்றவயல் குன்றத் தூரில்
சேக்கிழார் திருமரபு சிறந்ததன்றே!”

 
இப்பாடல் பாலாறு நீரினால் வளம் சுரந்து வயல்கள் செழித்த குன்றத்தூர் என்கின்றது.. புலியூர் கோட்டம் என்பது இந்த பகுதிகளின் பெயராகும். செம்பரம்பாக்கம் ஏரிக்கு கடந்த நூற்றாண்டுகளில் வேறு பெயர் இருந்து இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஏனெனில், நடைமுறையில் செம்பரம்பாக்கம் கிராமத்திற்கு இந்த ஏரியினால் பயன் பெரிதளவு கிடையாது. பிற்காலத்தில் .. ஆங்கிலேயர் காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி என்று பெயர் மாற்றப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது.

பல நூற்றாண்டுகளாக பாலாற்று நீரை காவிரிப்பாக்கம் ஏரிக்கு கொண்டு செல்ல நம் முன்னோர்கள் கால்வாய் வெட்டி பயன்படுத்தினர். வெள்ள காலங்களில் கொரம்பு போன்ற தற்காலிக தடுப்பணைகளை அமைத்து பாலாற்று நீரை இந்த ஏரிக்கு கொண்டு சென்றனர். இதை கிழக்கிந்திய கம்பெனியர்கள் 1854ஆம் ஆண்டில் 8,66,144 ரூபாய் செலவில்  நிரந்தர அணையாக கட்டி மேம்படுத்தினார்கள். இந்த அணையில் இருந்து காவிரிப்பாக்கம் ஏரி, மகேந்திரவாடி ஏரி, தூசி மாமண்டூர் ஏரி, சக்கரமல்லூர் ஏரிகளுக்கு பாலாற்று நீர் கொண்டு செல்வதற்கு அப்பொழுது கால்வாய்கள் வெட்டப்பட்டது. இந்த ஏரிகளில் இருந்து சங்கிலி தொடராக 200 ஏரிகள் நிரம்புமாறு இணைக்கப்பட்டன. இந்த பாலாற்று அணைக்கட்டு நீரானது கம்பகால்வாய் மூலம் திருபெருமந்தூர் ஏரி வரை பாய்ந்தது. இந்த திருபெருமந்தூர் ஏரியின் உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு  சவுத்திரி கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

பாலாற்று அணைக்கட்டு நீர் மற்றொரு கால்வாய் மூலம் திருவள்ளுர் மாவட்டத்தின் பல ஏரிகளை நிரப்பி இறுதியில் கொற்றலை ஆற்றில் கலக்கும்படி இணைக்கப்பட்டு இருந்தது. இந்த கொற்றலை ஆறு பூண்டி நீர்தேக்கத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. இப்படி பாலாற்று நீர் செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி நீர்தேக்கத்துடன் இணைந்து சென்னைக்கு குடிநீராக பயன்படுகின்றது.

பாலாற்றில் மணற்கொள்ளை அடிக்காமலும், இணைப்பு கால்வாய்களை சிதைத்து பட்டா போட்டு விற்க்காமலும், இந்த பிரமாண்டமான் நீர்மேலாண்மை பொறியமைப்பை முறையாக பராமரித்து இருந்தால் சென்னைக்கு எக்காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்காது. அண்டை மாநிலங்களில் பிச்சை எடுக்கும் அவசியம் நேரிட்டு இருக்காது.

ஆங்கிலேய அதிகாரிகளால் 1877யில் வரையப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியின் வரைபடமும்..இன்றைக்குள்ள செம்பரம்பாக்கம் ஏரி அமைப்பிற்குள்ளான மாற்றங்களுக்குமான வேறுபாடுகள் இதை நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் ஆறு கலங்குகள் இருந்துள்ளதாக இந்த வரைபடம் காட்டுகின்றன.. எம்.ஜி.ஆர் பங்களா தோட்டத்தின் அருகில் ஓடும் மணப்பாக்கம் ஓடையுடன்,, போருர் ஏரியுடன் இணைக்கப்பட்டிருந்த கலங்கு பிற்காலத்தில் பாசன மதகாக மாற்றம் கண்டது. மேலும், எண்பதாம் ஆண்டுகளில் அய்ந்து கண்கள் கொண்ட தானியிங்கி புதிய கலங்கு ஒன்று கட்டப்பட்டன. 2006 - யில் சிப்காட்டிற்க்கும், சென்னைக்கு குடிநீருக்கும் ஒரு நீர்வெளிபோக்கி கோபுரம் கட்டப்பட்டு உள்ளன. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் இருந்து கிருஷ்ணா நீர் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியுடன் இணைக்கப்பட்டு உள்ளது. 13,223 ஏக்கர் பரப்பளவு அளவிற்கு விவசாய பாசன நிலத்திற்கு நீர் வழங்கிய இந்த ஏரி இன்று முழுமையாக குடிநீருக்கான ஏரியாக, ஹீண்டாய் பன்னாட்டு கம்பெனிக்கும், பன்னாட்டு கம்பெனிகளின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதிக்கான ஏரியாக நடைமுறையில் மாற்றப்பட்டு விட்டது. அத்துடன் இந்த தொழிற்சாலைகளின் எல்லாவிதமான இராசயன கழிவுகளும் இந்த ஏரியின் குடிநீரில்தான் கலக்கப்படுகின்றன.

போருர் இரட்டை ஏரியும் செம்பரம்பாக்கம் ஏரியும்

பழைய பிரித்தானிய ஆவணங்கள் 1920யில் எடுக்கப்பட்ட வரைபட ஆதாரத்தின்படி 823 ஏக்கர்கள் பரப்ப்பளவு உள்ள போருர் இரட்டை ஏரி இருந்தது. சென்னை-பெங்களுர் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் நீர் பரப்பி நின்றதால் இதை இரட்டை ஏரி என்று காரணத்துடன் அழைத்தனர். இந்த ஏரிக்கு இரண்டு வழிகளில் நீர் வரத்துக்கள் இருந்தன. ஒன்று போருர் இரட்டை ஏரயின் மேற்கு முகமாக பரந்து விரிந்த அய்யப்பந்தாங்களில் இருந்து பூந்தமல்லி வரை இருந்த நீர்ப்பிடிப்பு பகுதி. இந்த பகுதி குடியிருப்பு பகுதியாகி விட்டதால் இங்கு பொழியும் மழைநீர் போருர் இரட்டை ஏரி வருவதில்லை.. ஆனால் அரசு திட்டமிட்டு செயலப்டுத்தினால் நீர்ப்பிடிப்பு பகுதியை வேறுவகையில் புணரமைக்க முடியும்..மற்றொன்று செம்பரம்பாக்கம் ஏரியின் பிரதான கால்வாய்களா மாங்காடு கால்வாய், மணப்பாக்கம் கால்வாய்களின் இணைப்பின் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் போருர் இரட்டை ஏரிக்கு வருகிறது. இந்த போருர் இரட்டை ஏரி நிரம்பினால் கலங்கு மூலம் நீர் வளசரவாக்கம் ஏரிக்கு ..பின் இராமபுரம் ஏரிக்கு செல்லும்படி இணைப்பு கால்வாய்களை நமது முன்னோர்கள் வடிவமைத்து இருந்தனர். வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில் குளங்கள், குட்டைகளும் இதில் அடக்கம். இந்த ஏரி நீர் போருர், மவுளிவாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் வரை பாய்ந்து இந்த பகுதிகளை நீர்வளம் மிகுந்த விவசாய பகுதிகளாக செழித்து விளங்க செய்திருந்து. இந்த வலைப்பின்னல் நீரியல் முறையினால் பரந்து விரிந்த தென்சென்னை பகுதி முழுவதும் நன்னீர் நிலத்தடி நீர்வளம் மிகுந்ததாக இருந்தது.  ஆனால் கருணாநிதி ஆட்சி காலத்தில் திமுக அரசியல்வாதிகளால்,உள்ளூர் தலைவர்களால் படிப்படியாக வளசரவாக்கம் ஏரி, இராமபுரம் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு பட்டா போட்டு விற்கப்பட்டது.

தன் பங்கிற்கு எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்த ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தன. அறக்கட்டளை என்ற பெயரில் மருத்துவ கல்லூரி தொடங்கி பெரும் பணத்தை கொள்ளை அடிக்க சாராய உடையார் போருர் இரட்டை ஏரியின் வடக்கு பகுதி முழுவது சிலநூறு பரப்பளவு ஏரியை ஆக்கிரமித்தார் . அதற்கு எம்.ஜி.ஆர்  சட்டங்களை எல்லாம் வளைந்து திரித்தி போருர் இரட்டை ஏரியின் ஒன்றை பட்டா போட்டு கொடுத்தார்.. போருர் இரட்டை ஏரி உள்ளிட்ட சென்னை மாநகருக்குள் இருந்த எட்டு ஏரிகள் பயன்பாடற்ற ஏரிகள் என்று சட்ட ஆணையை 80களில் எம்.ஜி.ஆர் ஆட்சி பிறப்பித்தது..இதற்கு தடையாக இருந்த இராமசந்திரன் போன்ற பொதுபணித்துறை அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றி விட்டு தனக்கு ஜால்ரா போடும் பொதுபணித்துறை அதிகாரிகளை எம்.ஜி.ஆர் ஆட்சி நியமித்தது. விவசாயத்திற்காக இந்த ஏரிகள் இருந்தாலும் நகரமயமாதலில் விவசாயம் மெல்ல அழிந்து போனாலும் விவசாயத்தை விட அதிக தேவை நகரமயமாதல் விளைவாக மக்கள்தொகை அதிகமாகும் பொழுது அவர்களுக்கு குடிநீர் மற்ற இதர தேவைகளுக்கு நன்னீர் தேவை அதிகம் இருக்கிறது.. இந்த எட்டு ஏரிகள் அதன் இணைப்பு கால்வாய்கள் பாதுகாக்க பட்டு இருந்தால் சென்னை மாநகர் சுயதேவைக்கான நீர் தராளமாக கிடைத்திருக்கும். ஆந்திரா மாநிலத்திடம் கிருஷ்ணா நீருக்கு கையேந்தி இருக்க தேவை இருந்திருக்காது..கடல்நீரை குடிநீராக்குகிறோம் என்று கோடிக்கணக்கில் மக்கள்பணம் வீணக்கடிப்பட்டு இருக்கிறாது. போருர் இரட்டை ஏரி என்ற இரட்டை ஏரி ஒற்றை போருர் ஏரியாக மாற்றப்பட்ட சுருக்கமான வரலாறு. போருர் இரட்டை ஏரி என்பது மக்கள் பொதுபுத்தியில் இருந்து கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆட்சியாளர்களால், ஊடகங்களால் மறக்கடிக்கப்பட்டு விட்டது.

கடந்த மாதம் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஒற்றை போருர் ஏரிக்குள் உள்ள 17 ஏக்கர் பரப்பளவு ஏரி இராமசந்திரா மருத்துவ மனைக்கு சொந்தமானது என்று பொதுபணித்துறை அதிகாரிகள் பாகம் பிரித்து கொடுக்க 20 கோடி ரூபாய் செலவில் ஏரியின் குறுக்கே மண்ணை கொட்டி தூர்க்க முயன்றனர். சுற்றுசூழல் ஆர்வலர் தயாளன் இதை சமூக வலைத்தளங்களில் பதிய, பின் அது செய்தியாக விரிவாக பகிரப்பட்டு ஊடகங்கள் கவனத்திற்கு சென்றது. அதிமுக கட்சியையும், பொதுபணித்துறை அதிகாரிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளும், மக்கள் இயக்கங்களும் போருர் இரட்டை ஏரி அழிவில் இருந்து காப்பாற்ற களத்தில் இரங்கி போராடி வருகின்றன.

 பசுமை தீர்ப்பாயம் பொதுபணித்துறைக்கு ஏரிக்குள் மண்ணை கொட்ட இடைக்கால தடை விதித்துள்ளது. சென்ற 30 ஆம் தேதி பொதுபணித்துறை அதிகாரி பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த பதில் ம்னுவில், “போருர் இரட்டை ஏரிக்குள் நீரில் அமிழ்ந்துள்ள இந்த 17 ஏக்கர் இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது என்றும் 1920யில் இருந்தே இந்த நிலம் தனியாருக்கு சொந்தமாக பட்டா போட பட்டுள்ளது என்றும், ஏரியின் நீர் தேக்கியுள்ள பகுதிகள் எல்லாம் ஏரி அல்ல..” என்று அயோக்கத்தனமாக கயவாளித்தனமாக தாக்கல் செய்து உள்ளனர்..  ஆளும் அதிமுகவிற்கும் இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கும் பொதுபணித்துறை உயர் அதிகாரிகளுக்குமான கள்ளக்கூட்டு அம்மணமாகி உள்ளது.

ஆனால் 2015 டிசம்பர் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரிடர் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால், இந்த 17 ஏக்கர் ஏரிநிலம் இராமசந்திரா மருத்துவமனை கல்லூரிக்கு சொந்தமானது கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சென்னை மக்கள் விழிப்புடன் இருந்து தொடர்ந்து இதை கண்காணிக்க வேண்டும்.. இல்லையெனில் போருர் இரட்டை ஏரி காணாமல் போனது போல இந்த ஒற்றை ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு விடும்.

அடையாறு - செம்பரம்பாக்கம் ஏரிக்குமான பிணைப்பு 

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு என்ற நதி பிறப்பதாக தமிழக மக்களுக்கு சொல்லப்பட்டு வருகின்றது. இது அரை உண்மைதான். அடையாறு மற்ற நதிகளைப் போல் ஒரு குறிப்பிட்ட மலையில், ஒரு குறிப்பிட்ட ஏரியில் உற்பத்தியாவதில்லை.. சென்னைக்கு மேற்கே கூடுவாஞ்சேரி அருகில் உருவாகும் ஒடை, சோமங்கலத்தில் இருந்து உருவாகும் மற்றொரு ஓடை, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர், மலைப்பட்டு ஏரியின் உபரிநீர் ஓடை, போருர் ஏரியின் உபரிநீர் பாயும் மணப்பாக்கம் ஓடை ஆகியனவைகள் இணைந்துதான் அடையாறு என்ற நதி மழைக்காலங்களில் பெருக்கெடுக்கிறது. இத்துடன் மணிமங்கலம்,ஏரி, பெருங்களத்தூர் ஏரி , நந்திவரம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, அத்தனூர் ஏரி, அத்தனேசேரி ஏரி, சோமங்கலம் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி, வண்டலூர் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, இரும்புலியூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நாட்டரசன்பட்டு ஏரி, ஒரத்தூர் ஏரி, கண்ணந்தாங்கல் ஏரி, மாம்பாக்கம் ஏரி இன்னும் பிற ஏரிகளில் இருந்து வெளியேற்றப்ப்படும் உபரிநீரும் , இப்பகுதியில் உள்ள அனைத்து மலைகுன்றுகளில் மழைகாலங்களில் பெருகும் நீரும் இந்த அடையாற்றில் சிறு சிறு ஓடைகள் மூலம் வந்து சேருகின்றன. இதனால்தான் அடை மழை பெய்தால் உருவாகும் ஆறு என்பதால் அடையாறு என்று காரணப்பெயரை நம் முன்னோர் சூட்டி இருக்கின்றார்கள். இந்த ஏரிகள் அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் உள்ளன என்பதை ஏற்கனவே சுட்டி காட்டி உள்ளோம்.

அடையாற்றில் ஒரு இலட்சம் கன அடிநீர் எப்படி பெருக்கெடுத்தது என்பதற்கு மேற்கண்ட அனைத்தையும் ஒருங்கிணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அடையாற்றில் பெருவெள்ளம் வந்ததற்கு . செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு ஒரு காரணி மட்டுமே…  அதுவே முழுமையானது அல்ல !!

எனவே,

@ செயல்லற்ற அதிமுக ஆட்சியை, அதிகார வர்க்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சிக்க வேண்டும்.

@ ஏரிகள் வரலாற்றை , இந்த ஆறுகளின் முழுமையாக தொகுத்து இன்றைய கல்வி பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்..

@ செம்பரம்பாக்கம் ஏரி என்பது ஒற்றை ஏரி அல்ல..3,700 ஏரிக்குழைந்தைகளின் தாய். என்பதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

,இல்லையெனில் ஒரே ஒரு நாள் மழையில் வெள்ளம் வந்து சென்னை நகரை மூழ்கடித்து விட்டது என்று ஜெயா அம்மையாரும், அதிமுக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சொல்கின்ற பொய்களை மக்கள் நம்பத்தான் செய்வார்கள். அதிமுக – திமுக லாவணி கச்சேரிகளை ஊடகங்களும் அரங்கேற்றி மக்கள் விரோத கொள்கைகளை, ஆட்சி அவலங்களை மறைத்து திசை திருப்பி மக்கள் உணர்வுகளை மழுங்கடிக்கவே செய்யும்.

@ 80களுக்கு பின்பு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்பட்டு இன்று முற்றிலுமாக காஞ்சிபுரம் , திருவள்ளுர் மாவட்டங்களில் அழிக்கப்பட்டு விட்டது. செம்பரம்பாக்கம் ஏரி உட்பட பல ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து – போக்கு கால்வாய்களை ஆக்கிரமித்து இருங்காட்டு கோட்டை சிப்காட், பிள்ளைபாக்கம் சிப்காட், திருமுடிவாக்கம் சிப்காட், ஒரகடம் சிப்காட்..என்று பத்திற்க்கும் மேற்பட்ட சிப்காட்கள் சங்கிலி தொடராக கட்டப்பட்டு உள்ளன. ஏராளமான குடியிருப்புகளும் இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், வரத்து – போக்கு கால்வாய்களை பகுதிகளிலும் வரைமுறையற்றுக் கட்டப்பட்டு உள்ளன.

@ அதோடு இந்த ஏரிகள் அனைத்திலும் கடந்த 30 ஆண்டுகளுக்கு எந்த மராமத்து பணிகளும் தூர்வார்தல்களும் நடைபெற வில்லை. செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, புழல் ஏரி, நேமம் ஏரி, பிள்ளைபாக்கம் ஏரிகளில் தூர்வார்வதற்க்காக ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்கள் பணம் திமுக – அதிமுக ஆளும் கட்சியினரின் ஊழல்கள் காரணமாக அரைகுறையாகவே நடைபெற்றன என்பதற்கு ஊடக சான்றுகள் பல உள்ளன.

@ இத்துடன் அடையாறு முகாத்துவாரத்தில் தூர்வாராதது, உபரிநீரை வெளியேற்றுவதில் ஜெயா அரசின் அதிகார செருக்கு- அலட்சியம்.

@ பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் உண்டான செயற்கை அடைப்புகள்.

@ விமான நிலைய விரிவாக்கம் – வெளிவட்ட சாலை கட்டுமானங்கள்

… என்று பலவும் இணைந்து கொண்டது. ஓருங்கிணைந்த இந்த முழு பின்னணியையும் முழுமையாக இணைத்து புரிந்து கொண்டால்தான் சென்னை பேரிடருக்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியும்.. வரலாறு காணாத மழை’, ‘இயற்கையின் சீற்றம்’, ‘மூன்று மாத மழை மூன்று நாளில்’ என்று கதையாடல்களுக்குள் புதைந்து விட்டால் விதி விட்ட வழி என்று மக்கள் கருதும் துர்பாக்கிய நிலைக்குதான் கொண்டு போக முடியும்

பேரிடர் குற்றவாளிகள் யார்?

எனவே, செம்பரம்பாக்கம் ஏரி தனது மடியில் உறங்கிய சென்னை மக்களின் உயிர்களை, உடைமைகளை, செல்வங்களை நாசம் செய்ய வில்லை.

தமிழ்நாட்டை, டில்லியை ஆண்ட, ஆளும் கட்சிகளும் அவர்களின் நாசாகார உலகமயமாக்கல் கொள்கைகளும் தான் சென்னை பெருவெள்ளத்திற்கு உண்மையான காரணம்.

அம்மா, அன்னை , தாய் .. போன்ற சொற்களின் பொருண்மையை, அன்பை, உள்ளார்ந்த அர்த்ததை அநர்த்தமாக்கிய அதிமுக ஆட்சி.. அம்மா ஆட்சி அல்ல..ஸ்டிக்கர் ராணி ஆட்சியானது செய்ய வேண்டியதைச் செய்யாமல், சட்டக் கடமைகளை ஆற்றாமல் இருந்ததை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

 வரலாறுகாணாத மழை’ என்று 21 ஆம் நூற்றாண்டில் மக்களின் அறியாமையை முதலீடு ஆக்கி மீண்டும் ஆட்சியை பிடிக்க ஓட்டு வங்கி சித்துவேலைகளில் இறங்கி உள்ளதை அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

மாமழையை போற்றுவோம் என்ற தமிழ்சமூகத்தின் முழக்கத்தை கொச்சைப்படுத்தி மாமழையைப் பேரிடராக்கி சூழலியல் படுகொலை செய்த ஜெயா அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

பேரிடரை சாக்காக பயன்படுத்தி எளிய குடிசைப்பகுதி மக்களை சென்னையில் இருந்து துரத்தும் கொடும்செயலை நிறுத்தப்பட வேண்டும்.

கோடிகளில், மாட மாளிகைகளில் புரண்டவர்களை மூன்று பொட்டலம் புளியோதர சோற்றுக்கும் கையேந்த வைத்த நிலமையை கோட்டைவாசிகளும். கோபால புர கோமான்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

மானுடம் தழைத்த, மனித உறவுகள் ஓங்கிய, சாதி-மதம் கடந்து மக்கள்திரள் ஒற்றுமை வளர்ந்த, மக்கள் இயக்கங்களின் மாண்புகளை வெளிச்சம் போட்ட அந்த பேரிடர் நாட்களை ஆவணங்களாக எழுத்தில், படைப்புகளில் வடிக்கப்பட வேண்டும்

இல்லையெனில்……

மீண்டும் மீண்டும் மாமழை பெய்யும்…கோபுரங்களை, கோட்டைகளைச் சாய்த்து மண் மேடாக்கும் !!

நீரின்றி அமையாது உலகு!

மாமழை போற்றுவோம்!!

- கி.நடராசன்

உதவிய நூல்கள், கட்டுரைகள்:

பி.தயாளன்-சூழல்பேண் புதுப்பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும் கட்டுரை.

முனைவர் பழ.கோமதிநாயகம் – தமிழக பாசன வரலாறு நூல்,

பேராசிரியர் இரா.சிவசந்திரன் கட்டுரை,

தமிழ் வளர்ச்சி களஞ்சியம் நீர்வளம் தொகுதி - 2

Pin It