வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர்த் தொட்டி கடந்த 30.01.2015 அன்று இரவு உடைந்தது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். இல்லை, இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போல் கடந்த 18.03.2014 அன்று ஈரோடை மாவட்டம் பெருந்துறை தொழிற்பேட்டையில், சாய ஆலை கழிவுநீரை தூய்மைப்படுத்தும் ஆலையில் உள்ள தூய்மைப்படுத்தும் தொட்டியில் உள்ள குழாய் வாழ்வில் பழுது ஏற்பட்டதை சரிசெய்ய முயன்ற ஏழு தொழிலாளர்கள் கழிவுநீர்க் குழாய் மூலம் வெளியேறிய நச்சுவளியால் இறந்துள்ளனர். இல்லை, படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இதுபோன்ற சாவுகள் (படுகொலைகள்) நடைபெறுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே தமிழகத்தில் இதுபோல் பலமுறை நடந்துள்ளது. ஈரோடை மாவட்டத்தில் மட்டும் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சாய ஆலை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் மட்டும் 100 பேர் வரை இறந்துள்ளனர்.

ஒருவர் இருவர் என சாவு இருந்தால் வெளியே தெரியாமலேயே மறைந்து விடுவதும், இடர்தொகை என்ற பெயரில் ஏதோ சிறிது தொகை கொடுத்து செய்தியே தெரியாமல் மறைத்து வருகின்றனர், இப்படுகொலை செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள்.

இறப்புக்கு உள்ளான பலரும் வடமாநிலங்களைச் சார்ந்தவர்களாகவும் மற்றும் வெளி மாவட்டம் சார்ந்தவர்களாகவும் இருப்பதாலும், இவர்களுக்கான தொழிலாளர் அமைப்புகளும் வலுவாக இல்லாமல் இருப்பதாலும் இப்படுகொலைகள் யாரும் கேட்பாரின்றி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகமெங்கும் தோல் ஆலை, சாய ஆலை உட்பட பல்வேறு மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டும் விசவாயு (நச்சுவளி) தாக்கி 800 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஒரு பட்டியல் தெரிவிக்கிறது.

நம் தாய் தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலை என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

மனிதன் எப்போது விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினானோ, அப்போது முதல் விலங்கின் இறைச்சியினை உணவாக உண்டுவிட்டு, தோலைப் பதப்படுத்தி, தனது பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தான்.

ஈரோடையில் இன்று செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகள், 1990களுக்கு முன்பு தோலைப் பதப்படுத்த ஆவாரம்பட்டை, கடுக்காய் கொட்டை, பெருநெல்லி கொட்டை, சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை முதன்மையாக வைத்தே பயன்படுத்தினார்கள். இந்த முறையில் தோலைப் பதப்படுத்த 40 நாட்கள் வரை தேவைப்படும்.

தோலைப் பதப்படுத்திய பிறகு வரக்கூடிய கழிவுகள், வேளாண்மைக்கு எருவாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

'ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு' என்ற உணவு சுழற்சியாக உழவர்கள், தோல் கழிவுகளை எடுத்துச் சென்று தங்களது காட்டில், தோட்டத்தில் உள்ள மரங்களைச் சுற்றி எருவாக போடுவார்கள். தென்னை உட்பட அனைத்து மரங்களிலும் காய்பிடிப்பு (காய்ப்பு) மிக நன்றாக இருக்கும்.

ஆனால் இன்று ராணிப் பேட்டையில் தமிழக அரசால் மூடப்பட்ட தொழிற்சாலைகளில் மட்டும் சுமார் 1.30 லட்சம் டன் குரோமியக் கழிவு உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொதுக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் பல ஆயிரம் டன் எடையுள்ள கழிவுகள் உள்ளன. இவற்றை அப்புறப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திணறி வருகின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை.

வேலூர் மாவட்டத்தில் தோல் கழிவால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க சுற்றுச்சூழல் மறு சீரமைப்புப் பணி தொடங்க வேண்டும் என கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் இதுவரை நடைமுறைப் படுத்தவில்லை. மாவட்ட நிர்வாகத்தின், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், அதன் காசுக்கு விலை போன அதிகாரிகளின் அலட்சியமே உண்மையில் விபத்துக்குக் காரணம்.

noyyal river

கழிவுநீர் சாக்கடையான நொய்யல் ஆறு

சாயத்தொழில், துணிகளுக்கு சாயம் ஏற்றுவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வரும் தொழில்களாகும். ஆனால் 1990 வரை சாயப்பட்டறை கழிவுகளால், மனிதர்களுக்கு எவ்வித இடரும் ஏற்பட்டது இல்லை. நீர்நிலைகள் நாசமானது இல்லை. விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது இல்லை. ஆறுகள், குளங்கள், ஏரிகள் செத்துப் போனது இல்லை. ஏனெனில் அப்பொழுதெல்லாம் சாயத்தொழிலுக்கு மரபு சார்ந்த பொருட்கள் குறிப்பாக மஞ்சள் போன்றவற்றை வைத்து பயன்படுத்தப்பட்டது. வேதியியல்(ரசாயனம்) வைத்து உருவாக்கப்பட்ட சாயப் பொருட்கள் பயன்பாடு என்பது அறவே இல்லை.

5000 ஆண்டுகளுக்கு மேலான நீண்ட, நெடிய நாகரீகத்திற்கு சொந்தக்காரர்கள் ஆன இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழ்மக்கள், இயற்கையை கடவுளாக வணங்கும் தமிழகம் இன்று வெளிநாட்டுக் கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் புதிய பொருளியல் கொள்கை என்ற பெயரால் போடப்பட்ட GATT (காட்) ஒப்பந்தப்படி கட்டற்ற முறையில் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக நாடு திறந்து விடப்பட்டது.

இதன் விளைவாக சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளில் உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி என்பது மாற்றப்பட்டு ஏற்றுமதிக்கான உற்பத்தி என்பது முதன்மையாக மாற்றப்பட்டது. விரைவான உற்பத்திக்காக தோல் தொழிற்சாலைகளிலும், சாயத்தொழிலிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக இன்று எண்ணற்ற பாதிப்புகளை நாம் சந்தித்து வருகிறோம்.

திருப்பூர் சாயஆலைக் கழிவுகளால் வரலாற்றுப் புகழ்பெற்ற காவிரியின் துணைஆறான நொய்யல் ஆறு செத்தே போய் விட்டது. நொய்யல் ஆற்றின் குறுக்கே 1992ல் கட்டி முடிக்கப்பட்ட ஒரத்துப் பாளையம் அணையில் சாய ஆலையின் கழிவுநீர் தேங்கியது. இதனால் அணையில் இருந்து வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட நீரால் அனைத்து வேளாண் நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் இருந்து அனைத்து கிணறுகளும், ஆழ்குழாய்க் கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. மேலும் நொய்யல் ஆற்றுநீர் செல்லும் வழித்தடத்தில் சாய ஆலை கழிவுநீர் செல்வதால் ஆற்றின் இருகரையிலும் உள்ள கிணறுகளும், ஆற்றில் நீர் செல்லும் போது பலகல் தொலைவு வரை உள்ள அனைத்து கிணறுகளும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறியது. இதனால் உழவர்கள் ஆற்றில் தண்ணீரைத் திறந்து விடாதே எனப் போராடி 1996 முதல் நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை திறக்கப்படாமலேயே இருந்தது.

அணை திறக்கப்படாததால் ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றியுள்ள எண்ணற்ற சிற்றூர்களும், வேளாண் நிலங்களும் பாழாய்ப் போய்விட்டது. சாயச்சாலை கழிவுநீரால் நொய்யல் ஆறு காவேரி ஆற்றுடன் கலக்கும் கரூர் மாவட்டம் புகளூர் வரை ஆற்றின் இருபக்கம் உள்ள நிலத்தடி நீர் மாசடைதல், குளங்கள் மாசடைதல் என அனைத்து நீராதாரமும் கெட்டு விட்டது. இது எப்போது, எத்தனை ஆண்டுகளில் இயல்பான நிலை அடையும் என்பது தெரியாத நிலையே உள்ளது.

மக்களின் தொடர்ந்த போராட்டத்தால் அரசு தற்போது அறமன்றத் தீர்ப்புப்படி ஒரத்துப்பாளையம் அணையைச் சுற்றி உள்ள நிலங்களும், இந்த நீரைப் பயன்படுத்தி பாசனம் செய்த நிலங்களுக்கும் வேளாண் செய்ய முடியாததற்காக ஒரு சிறுதொகையை நட்ட ஈடு கொடுத்து வருகின்றது. சாய ஆலை கழிவுநீரால் ஒரு ஆறு செத்துப் போன வரலாற்றுக் கொடுமை இங்குதான் நடந்தது.

மிகப்பெரிய வளர்ச்சி, வேலைவாய்ப்பு எனக் கூறி சென்னிமலை, பெருந்துறை ஒன்றியத்தில் உழவர்களிடம் இருந்து 2700 குறுக்கம் (ஏக்கர்) நிலம் பிடுங்கி எடுக்கப்பட்டு, தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. ஆனால் பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளோ உலகில் முன்னேறிய நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள சிகப்பு வகை ஆலைகளான தோல் தொழிற்சாலை, சாய ஆலை, இரும்பு தொழிற்சாலை, கல்நார் (ஆஸ்பெக்டாஸ்) தொழிற்சாலை, வேதியியல் தொழிற்சாலை போன்ற மிகவும் நாசகரமான தொழிற்சாலைகளே.

பெருந்துறை தொழிற்பேட்டை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோல், சாயத் தொழிற்சாலைகள் மூலம் சென்னிமலை ஒன்றியத்தின் பெரும்பகுதியும், பெருந்துறை ஒன்றியத்தில் பல ஊர்களின் நீராதாரமும் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விட்டது. சென்னிமலை ஒன்றியத்தில் 400 குறுக்கம் (ஏக்கருக்கு) மேல் நேரடி பாசனம் கொண்ட பாலதொழுவு குளம் முழுக்க நஞ்சாகி விட்டது.

ஓடைக்காடு குளம், சுள்ளிமேடு குளம் உட்பட பல குளங்கள் சாயநீர் தேங்கும் இடமாக மாறிவிட்டன. மக்களுக்குப் புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.

பெருந்துறை தொழிற்பேட்டைச் சுற்றி உள்ள நீராதார அழிவால் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட உள்ளூரில் கிடைப்பதில்லை.

கரூர் சாய ஆலைகளால் அமராவதி ஆறும், ஈரோடு - பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாய ஆலைகளால் காவேரி ஆறும் நஞ்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகின்றது. தமிழகத்தின் 17 மாவட்டங்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் காவேரி ஆறுகளில் சாய ஆலை கழிவுநீர் கலந்து வருகின்றது.

தோல் தொழிற்சாலைகள்...

தமிழ்நாட்டில் வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்தான் தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதில் வேலூர் மாவட்டம்தான் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைக் கொண்டதும், மிகப் பெரும் அளவிலான தோல் ஏற்றுமதியைக் கொண்டதுமாகும்.

இந்தியாவிலேயே முதன்முதலாக இங்குதான் பெரிய அளவில் தோல் உற்பத்திக் கூடங்கள் தொடங்கப்பட்டன. கர்நாடக நவாபின் காலத்தில் இது தொடங்கப்பட்டது. ஆங்கிலேயருக்கு அதிகமான தோல் காலனிகள் (ஸூ) தேவைப்பட்டதால், 18-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனியின் பிரதிநிதியான ராபர்ட் கிளைவ், கர்நாடக நவாபான சந்தா சாகிபுடன் இணைந்து வேலூர் மாவட்டத்தில் இதனைத் தொடங்கினார். தோல் உற்பத்திக்குத் தேவையான மாட்டுத் தோலை இப்பகுதி முஸ்லிம்கள் அதிகம் கைவசம் வைத்திருந்து தோல் வணிகம் பெரிய அளவில் செய்து வந்தனர். அவர்களுக்கு இதற்கான உற்பத்திச் சூத்திரங்களை ஆங்கிலேயர்கள் கற்பித்தும், நவாப் ஆங்கிலேயர்களுக்கு உறுதுணையாக இருந்ததால் இப்பகுதியில் தோல் பதப்படுத்தும் தொழில் வேகமாக வளர்ந்தது.

மேலும், மூலத் தோலை தொட்டிகளில் சுண்ணாம்புடன் நீறவைத்து அதனைப் பதனிடுவதற்காகத் அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தண்ணீர் தேவையும் இருந்தது. தனது வாழ்வாதாரத்திற்காக எந்த சொத்தும் (நிலம் உட்பட) ஏதுமற்றவர்களாகவும் இப்பகுதி மக்கள் இருந்ததால் சுகாதாரமற்ற இந்தத் தொழிலில் ஈடுபட தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டனர். வேலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகள் இதற்கு சாதகமாக அமைந்தது. மற்றவர்கள் தொடத் தயங்கும், அருவறுப்பாக கருதப்படும் மாட்டுத் தோலை இவர்கள் குறைந்த கூலியைப் பெற்றுக்கொண்டு, பிரிட்டிஷாருக்குப் பதனிட்டுக் கொடுத்தனர். இந்த நிலை இங்கு இன்று வரை தொடர்கிறது.

1990களுக்குப் பின்பு உள்நாட்டு தோல் மட்டும் இன்றி ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுக்க இருந்தும், இந்தியாவின் பல பகுதியில் இருந்தும் தோல் பதப்படுத்த தமிழகம் கொண்டு வரப்படுகிறது.

1990களுக்குப் பின்புதான் தோலைப் பதப்படுத்த வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் மூலம் தோலைப் பதப்படுத்த 40 நாள் ஆகும் என்பதிலிருந்து 3 நாட்கள் (72 மணிநேரம்) போதுமானது என மாறியது. கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் நஞ்சுத்தன்மையுள்ள குரோமியம் போன்ற பல வேதியியல் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதன் மூலம் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் ஆண்டு முழுவதும் மூன்று பருவமும் சாகுபடி நடக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 730 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட (வருடம் 300 நாட்கள் பாசனத்திற்கு நீர் செல்லும்) காளிங்கராயன் கால்வாய் முழுக்க நஞ்சாக மாறி விட்டது.

காளிங்கராயன் கால்வாயில் தொடர்ந்து தோல் ஆலைகளின் கழிவுநீர் கலந்து வருவதால் இக்கால்வாயில் 11 வகை மீன்கள் இருந்தது மாறி தற்போது 1 வகை மீன் மட்டும் கிடைக்கின்றது. காளிங்கராயன் கால்வாய் பாசனப்பகுதியில் நெல்நடவு செய்யும் பெண்களின் தோல் கழிவு நீரால் நேரடியாக பாதிக்கப்படுவதால் கைகளில் மண் எண்ணெயைப் பூசிக்கொண்டு நடவு செய்கிறார்கள்.

காளிங்கராயன் கால்வாய் மூலம் கழிவுநீர் காவிரி ஆற்றில் நேரடியாகக் கலக்கின்றது. இதனால் கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் ஆற்றில் எடுக்கும் நீரால் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரப்பப்படுகின்றது.

ஆம்பூர், வாணியம்பாடி தோல் ஆலை கழிவுகளால் பாலாறு பாழாகி விட்டது. பாலாற்றில் ஆற்றுமணலே தன்மை மாறிவிட்டதால் வேலூர் மாவட்ட ஆற்றுமணலை எடுத்துக் கட்டிடம் கட்டக் கூடாது என அரசு உத்திரவிட்டு இருந்தது.

palar river pollution

பாழாகிய  பாலாறு

திண்டுக்கல் தோல் தொழிற்சாலையால் திண்டுக்கல் நகரமே கழிவுநீர் நகரமாகி ஊரே நரகமாகி விட்டது.

தோல், சாய ஆலைகளால் யாருக்கு லாபம்...:

தோல் தொழிற்சாலை, சாய ஆலை மூலம் நாட்டிற்கு அன்னிய செலவாணி அளவற்று கிடைக்கின்றது. தொழில் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என்றெல்லாம் சொல்லப்படுகின்றது.

ஆனால் உண்மையில்

1. பாலாறு, நொய்யல் ஆறு, பவானி ஆறு, அமராவதி ஆறு (கரூர் சாயப்பட்டறையால்) காவிரி ஆறு, காளிங்கராயன் கால்வாய் என அனைத்தும் நஞ்சாகி வருகின்றது.

2. நொய்யல் ஆறு செத்த ஆறு என உலகிற்கு அறிவிக்கப்பட்டு விட்டது.

3. பல பாசனக் குளங்கள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் அழிந்து வருகின்றன.

4. ஈரோடை, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தடுக்கி விழுந்தால் மருத்துவமனை என சொல்லும் அளவுக்கு மக்களுக்கு பல்வேறு நோய்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

5. இந்த ஆலை இயங்கும் மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு கேன்சர் நோயாளிகளாக மாற்றப்பட்டு உள்ளனர்.

6. ஈரோடை மாவட்டத்தில் உள்ள மக்கள் மிக அதிக அளவு மலட்டு தன்மை உள்ளவர்களாக மாற்றப்பட்டு ஈரோட்டில் எங்கு பார்த்தாலும் மலடு நீக்கும் மய்யங்களாக உள்ள நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது

7. சாயச்சாலை, தோல் தொழிற் சாலைகளில் பணியாற்றும் எண்ணற்ற வெளியூர்த் தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வந்து இனம் புரியாத நோயை வாங்கிச் செல்கின்றனர். இது பற்றி முழு விவரம் இல்லை.

8. ராணிப்பேட்டை தோல் தொழிற் சாலைகளில் 10 பேர் இறந்துவிட்டதாலேயும், பெருந்துரை-சிப்காட் சாய ஆலைகளில் 7 பேர் இறந்துவிட்டதாலேயும், பலர் பாதிக்கப்பட்டதாலும் செய்தி வெளி வந்து உள்ளது. ஆனால் வெளியே வராத சாவுகள் ஏராளமாக உள்ளன.

9. தோல் ஆலை, சாய ஆலை தொழிலாளர்களுக்கு அமைப்பு ஏதும் இல்லை. வெளியூரைச் சேர்ந்தவர்கள் அதிகம். எனவே தனி ஆளாக இறக்கும் போது ஏதாவது காரணம் சொல்லி ஆலை நிர்வாகத்தால் மறைக்கப்பட்டு விடப்படுகின்றது.

10. இப்பகுதியில் வேளாண்மை முழுக்க அழிக்கப்பட்டு விட்டது.

நமது தமிழ்க் குமுகம் இவ்வளவு விலை கொடுத்து, அழிவைச் சந்தித்து தான் சாயஆலை, தோல்ஆலை மூலம் அயலகச் செலாவணி பெறப்படுகின்றது.

தூய்மைசெய் ஆலைகள்:

சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் E.T.P., C.E.T.P., எனப்படும் தனியார் தூய்மைசெய் ஆலைகள், பொது தூய்மைசெய் நிலையம் அமைத்துக் கழிவுநீரை தூய்மை செய்வதாகக் கூறிக் கொள்கின்றன. ஆனால் இது உண்மையில்லை என்பதே பல்வேறு நடைமுறைகள் காட்டும் உண்மையாகும்.

1. 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும். உலகில் இதுபோன்ற தொழில்நுட்பம் எங்கும் இல்லை என்பதே உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் சாய ஆலைகள் உச்சஅறமன்றத் தீர்ப்பு அடிப்படையில் மூடப்பட்டபோது அனைத்து ஆலைகளும் 0% கடைப்பிடிக்க முடியாது என வெளிப்படையாகவே அறிவித்தன.

2. தூய்மைசெய் ஆலைகளில் கழிவுநீரின் வாடை போக்குவது, நிறத்தை மாற்றுவது, கழிவுநீரின் உப்பின் தன்மையை குறைப்பது என்பது மட்டுமே நடைபெறுகிறதே ஒழிய, 0% தூய்மைசெய் என்பதே முழுப் பொய்யாகும்.

3. தூய்மைசெய் ஆலைகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக இருந்து பணப் பயன் (கையூட்டு) அடைந்து வருகின்றனர் என்பதே உண்மையாகும். ஈரோடு, திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பல இலக்க உருவாய் கையூட்டு பணம் கைப்பற்றப்பட்டதே இதற்குச் சான்று

4. மாசுபடுத்தும் ஆலைக்கு எதிராக நேர்மையாக செயல்பட்டால் அதிகாரிகள் அரசால் மாற்றத்துக்கு உள்ளாகின்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆர். ஆனந்தக்குமார் அவர்கள் கழிவுநீரை சுத்தம் செய்யாமல் வெளியேற்றியதற்காக தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்ததால் 2011ஆம் ஆண்டு ஒரே நாளில் பணிமாற்றம் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து ஈரோட்டில் பல்வேறு விவசாய அமைப்புகளும், மக்கள் அமைப்புகளும் போராடின.

ஈரோடு மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளர் மலையாண்டி அவர்கள் சாய ஆலை, தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக தமிழக அரசால் 2011ல் பணிமாற்றப்பட்டார்.

கட்சிகளின் சுற்றுச்சூழல் கொள்கை:

தமிழகத்தில் செயல்படும் ஆண்ட, ஆளும் எந்த கட்சிக்கும் சுற்றுச்சூழல் சிக்கல் பற்றி எந்தக் கொள்கையும் கிடையாது. சிக்கல் வந்தால், மக்கள் போராடினால் ஓடிவந்து உடன் நின்று கொள்வது என்பது மட்டுமே அரசியல் கட்சிகளின் நடைமுறையாக உள்ளது. உண்மையில் இவர்களில் பெரும்பான்மையோர் இயற்கையை அழிக்கும் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதே உண்மை.

தோல் மற்றும் சாய தொழிற்சாலை கழிவுநீரை பற்றியக் கொள்கையில் திருப்பூர், ஈரோடை, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டக் கழிவுகளை குழாய் மூலம் கடலில் கொண்டு சென்று விடுவது எனப் பல கட்சியினரும் பேசி வருகின்றனர். கடல் என்ன அனைத்து கழிவுகளையும் கொட்டும் குப்பைத்தொட்டியா என்பதை யாரும் உணரவில்லை.

கடல் மூலம் மக்களுக்கு உறுதி செய்யப்பட்டு கிடைத்து வரும் சத்தான குறைந்த விலையில் மீன் உணவும், எண்ணற்ற தேவைகளும் மனித குலத்திற்கு கிடைக்கின்றது என்பதைக் கூட உணராதவர்களாகவே இக்கட்சிகள் அடிப்படையில் உள்ளன.

நிறைவாக...

செவ்வாய் கோளுக்கும், சந்திரனுக்கும் மனிதன் குடியிருக்க முடியுமா என செயற்கைக்கோள் அனுப்பி ஆய்வு செய்யும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தனது கால்நடைகளின் தோலைப் பதப்படுத்தவும், இயல்பாக ஒரு துணிக்கு சாயம் போடவும் தெரியாமல் இருக்கிறார்களா...

அவர்களது மண், அவர்கள் நாட்டின் நீராதாரம், அவர்கள் நாட்டின் மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளன வளர்ச்சி பெற்ற நாடுகள்.

இதற்கு நமது நாட்டை பயன்படுத்திக் கொள்கின்றன. மலிவான மனித உழைப்பு, எதற்கும் உறுதி இல்லாத வகையில் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவது, தொழிலாளிக்கும், மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்பது போன்றவற்றிற்காகவே இங்கே தொழில் தொடங்குகின்றனர்.

அறுக்கப்படும் ஆட்டிற்கு அகத்திக்கீரையை காட்டுவது போல வாழ்வியலை இழக்கும் மக்களுக்கு 'அயலகச் செலாவணி, வளர்ச்சி” என முழக்கங்கள் மூலம் அரசால் பொய்யான பிம்பம் காட்டப்படுகின்றது.

வெளிநாடுகளின் குப்பைத் தொட்டியாய் தமிழகமும், நமது நாடும் மாற்றப்பட்டு வருகின்றது என்பதே முழு உண்மையாகும்.

மேலும் இன்று அரசே 1 லிட்டர் குடிநீர் உருவாய். 10/- என விற்பனை செய்கின்றது. அப்படிக் கணக்கிடும் போது தமிழகத்தில் ஒரு டி.சட்டை(வண்ண பின்னலாடை) உருவாக்க 2700 லிட்டர் தண்ணீரும், ஒரு இணை தோல் மூலம் மூடணி(ஷு) உருவாக்க 8000 லிட்டர் தண்ணீரும் தேவைப்படுகின்றது. நமது நாட்டின் நீர்வளம் (மறைநீர் - Virtuval water) வெளிநாடுகளில் எவ்வாறு கொள்ளை அடிக்கப்படுகிறது என்பதை உணரலாம். இந்த நாட்டில் ஏழைகளின் உயிர் என்பது கிள்ளுக் கீரையாகவே கருதப்படுகின்றது.

தோல் ஆலைகள், சாய ஆலைகள் ஆகியவற்றின் கழிவுநீரை தூய்மை செய்ய எவ்வகை தொழில்நுட்பமும் இல்லாத இந்த அரசுதான், 48,000 ஆண்டுகள் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவை உற்பத்தி செய்யும் அணுஉலையை வைத்துப் பாதுகாக்கும் என சொல்லி வருகிறது.

1984ல் திசம்பர் 2 அன்று போபாலில் யூனியன் கார்பைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுவளி மூலம் 25,000 பேர் இறந்தும் எண்ணற்றோர் இன்றுவரை பாதிப்புக்கு உள்ளாகியும் வருகின்றனர். ஆனால் போபால் நச்சுஆலைக் கழிவை 30 ஆண்டுகளாகி அரசால் இன்றுவரை அகற்ற முடியவில்லை.

நமது நாட்டின் நீராதாரங்களை, (கிணறு, குளம், ஆழ்குழாய் கிணறு) ஆறுகளை சாகச் செய்த கடுமையான நச்சுத்தன்மை கொண்ட வேதியியல் பொருட்களைப் பயன்படுத்திச் செயல்படும் தோல் தொழிற் சாலை, சாயச்சாலைகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.

இந்தத் தோல் சுத்திகரிப்பு நிலையங்களை, அபாயகரமான சிகப்புவகை ஆலைகளை அதிகாரிகள் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி தெளிவாக கூறி உள்ளது. ஆனால் அந்த அதிகாரிகள் முறையாக ஆலையை சோதனை செய்தார்களா என்பதுதான் முதல் கேள்வி. ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாறு நதியில் கலக்கவில்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளித்து இருக்கிறார்களே, அது எப்படி நடந்தது? அதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட விலை என்ன?

ராணிப்பேட்டையில் சம்பவம் நடைபெற்ற பொது சுத்திகரிப்பு நிலையத்தில், அனுமதி பெறாமல் 1,000 கனமீட்டர் (பத்து லட்சம் லிட்டர்) கொள்ளளவு கொண்ட திடக்கழிவு சேமிப்புத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், அதன் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இப்படியொரு தொட்டி கட்டாயம் கட்டப்பட்டிருக்கவே முடியாது. இதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், அதன் அதிகாரிகளும் உடந்தை என்பதுதான் அப்பட்டமாகத் தெரிகிறது. இதுபோல எத்தனை எத்தனையோ கேள்விகளை நமக்கு இருந்தாலும், அதற்கான பதிலும் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால், அதை வெளிப்படையாகச் சொல்ல மட்டும் நமது நாட்டில் யாரும் தயாராக இல்லை.

தமிழகத்தில் சாயக் கழிவுகளைவிட பல மடங்கு தீமை விளைவிக்கக்கூடியவை தோல் தொழிற்கூட ரசாயனக் கழிவுகள். இருந்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததற்கு காரணம்- சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளில் பெரும்பாலோனோர் ஆலை நிர்வாகத்தின் கையூட்டு பெறும் தாசர்களாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் தலையீடு மட்டும் இன்றி ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைமைகள் அனைத்தும் இந்த ஆலைக்கு துணைநின்று பணபயன் பெறுவதும், அதன் பங்குதாரராக வலம் வருவதேயாகும்.

இந்தத் தோல் கழிவுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலாறு நதியில் கலக்கப்பட்டுக் கொண்டிருந்த போதிலும், அவை அனுமதிக்கப்பட்ட அளவோடுதான் கலக்கப்படுகிறது என்று தொடர்ந்து கூறி வந்த வேலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளும், மாவட்ட நிர்வாகமும்தான் (சுரண்டல் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்) இந்த மரணங்களுக்கு முழுமையான காரணமாகும். ஆனால், அவர்களிடம் எவ்வித கேள்வியும் கேட்கப்படாமலேயே, வெறும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது மட்டும் சட்டம் வெகு வேகமாகப் பாய்கிறது. இவர்களுடன் கூட்டணி அமைத்து இருந்த அனைவரும் தண்டிக்கப் பட வேண்டும்.

இப்படி பிரச்சினை வரும் நேரத்தில் அனைவரும் வேகவேகமாகப் பேசுவதும், பின்பு அது பற்றி மறந்து போவதும் என்பதே கடந்த கால வரலாறாக உள்ளது. மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை பற்றி மாதம் ஒரு முறை நடைபெறும் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் விவசாய அமைப்பினர், சுற்க்ச்சூழல் செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்கங்களைச் சேர்ந்தவர்களை வெறும் அற்ப பதர்கள் போல, இவர்களுக்கு இதே வேலைதான், வேறு வேலையில்லை என்று மாவட்ட ஆட்சியர் உட்பட மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பார்க்கும் பார்வையாக உள்ளது. மாசுக்கட்டுப்பாடு பிரச்சினை இப்படிதான் இருக்கும், இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது என்பதும், கேட்கும் கேள்விக்கு சடங்குதனமாக ஒரு பதிலை சொல்லி தட்டிக் கழித்து விடுவது என்பதும்தான் அதிகாரிகளின் தற்போதைய நடைமுறையாக உள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்று மக்களுக்கு பொறுப்பின்றி செயல்படும் அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களை மக்கள் செயல்பாட்டாளர்கள் கண்காணிக்கும், நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மக்கள், சமூகத்தின் மீது அக்கறையற்று செயல்படும் நேர்மையற்ற அதிகாரிகள் மீது வெறும் கண் துடைப்பு நடவடிக்கை என இல்லாமல் உண்மையான நடவடிக்கை வேண்டும்.

இயற்கை வழியில், மண்ணுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தோல் ஆலை, சாய ஆலைகளில் தொழில்நுட்பங்கள் பயன்படுத்த வேண்டும்.

நமது புவியும், மண்ணும், நீரும், நாடும், உலகமும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. நமது வருங்கால தலைமுறைக்கும் சொந்தமானது என உணருவோம், செயல்படுவோம்!

நமது நாட்டை பாதுகாப்போம்.!

Pin It