இயற்கையையும் மனித வாழ்வையும் சிதைக்கும் முதலாண்மைப் பொருளாதார முறைமையைக் ('முதலாளித்துவம்' - capitalism) கைவிட்டு அனைவருடைய அடிப்படைத் தேவைகளையும் நிறைவு செய்யவல்ல பொதுவுடைமைப் பொருளாதார முறைமையை உலகம் முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதே சூழலியல் பேரழிவைத் தடுக்கும்.

wind millமுதலாண்மைப் பொருளாதாரத்தில் நிறுவனங்களுடைய உபரி ('லாப') வெறிக்காக இயற்கை வளங்களும் மனித உழைப்பும் சூறையாடப்படுகின்றன. மனிதருடைய தேவைகளைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே போனால்தான் நிறுவனங்கள் உபரி ஈட்ட முடியும். ஆகவே, தேவைகளைக் குறைப்பதற்கு மாற்றாகப் பிற 'தீர்வுகள்' முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்த ஆங்கிலக் கட்டுரையொன்றின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் வருமாறு:

------------

புவியின் இயற்கைச் சூழல் மிக, மிக மோசமாகக் கெட்டுவிட்டது. அதன் ஆபத்துகளைப் பற்றி நாள்தோறும் செய்திகள் வருகின்றன. அது குறித்து அரசாங்கங்கள் உடனடியாக 'ஏதாவது' செய்ய வேண்டும் என்கிற குரல்கள் அறிவியலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளில் இருந்தும் வலுக்கின்றன.

குறிப்பாக, சூழலைக் கெடுக்காத 'பசுமைத் தொழில்நுட்பத்தை' வரவர அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. (அப்படிச் செய்தால் நம் தேவைகளைக் குறைக்க வேண்டியதில்லை என்கிற நம்பிக்கை தொடர்ந்து நமக்கு ஊட்டப்படுகிறது. கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை!)

ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும்போது (அ) இயற்கைச் சூழல் பெருமளவு கெடுகிறது; (ஆ) மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

------------

‘பசுமைத் தொழில்நுட்பத்தின் சூழல் கேடுகள்’ குறித்த சில எடுத்துக்காட்டுகளை முதலில் பார்க்கலாம்.

  1. காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை (wind turbine) ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 900 டன் எஃகு, 2,500 டன் கான்க்ரீட், 45 டன் நெகிழி (plastic) ஆகியன தேவைப்படுகின்றன.
  1. ஒரு டன் எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான கனிமங்களை அகழ்ந்தெடுப்பதற்கு 780 கிலோ நிலக்கரி தேவைப்படுகிறது.
  1. ஒரு டன் கான்க்ரீட் உற்பத்தி செய்கையில் ஒன்றே கால் டன் கரி-ஈருயிரகை (carbon dioxide) வெளியாகிறது. (இது நம் புவியைச் சூடாக்கும் பசுங்குடில் வளிகளில் ஒன்று.)
  1. கதிரொளியில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் தகடுகளை (solar panels) உற்பத்தி செய்வதற்கு வழக்கமாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் nitrogen trifluoride வளியை வெளியிடுகிறது. இது மிக மோசமான பசுங்குடில் வளிகளில் ஒன்று; கரி-ஈருயிரகையைவிட 17,200 மடங்கு வீரியமுள்ளது; எழுநூறு ஆண்டுகளுக்கு வளிமண்டலத்தில் தாக்குப் பிடிக்கக் கூடியது!
  1. உயர்மின் அழுத்தத்தில் மின்னுற்பத்தி மற்றும் தொடரமைப்பு மூலம் பரப்பி வழங்கும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துவதற்கு sulphur hexafluoride எனும் வளி தேவைப்படுகிறது. இது கரி-ஈருயிரகையை விட 23,500 மடங்கு வீரியமுள்ளது; வளி மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கக் கூடியது. 2017-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் (European Union) ஒன்றிய அரசியத்திலும் (The United Kingdom) ஆலைகளில் இருந்து கசிந்த இந்த வளியின் பசுங்குடில் தாக்கம் பதினேழு லட்சம் கார்கள் வெளியிடும் புகையின் பசுங்குடில் தாக்கத்துக்கு ஈடானது!
  1. நாம் பயன்படுத்தி வீணாக்கும் பொருள்களில் மிகச் சிறு பங்கு மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது; மறுசுழற்சி செய்வதற்கும் நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. எ.கா. ஓராண்டில் உலகளவில் மொத்தம் சுமார் 36 கோடி டன் நெகிழி உற்பத்தியாகிறது; ஆனால், வெறும் ஒன்பது விழுக்காடு நெகிழி மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.

ஆக, நம் ஆற்றல் தேவையைக் குறைக்காதிருத்தல், சூழல் மாசு தொடர்பான சட்டதிட்டங்களைச் சரியாக நடைமுறைப்படுத்தாதிருத்தல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் தொடர்தல் உள்ளிட்ட காரணங்களின் விளைவாக நம் இயற்கைச் சூழல் கேடுகள் தொடர்ந்து பெருகுமேயன்றி (பசுமைத் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதால் மட்டும்) குறைந்துவிடப் போவதில்லை.

சூழலியல் கேடுகளுக்குப் பசுமைத் தொழில்நுட்பத்தைத் தீர்வாக முன்வைக்கும் தவறான போக்கின் விளைவாக மூன்று பெருஞ்சிக்கல்கள் தொடர்ந்து பெருகி வருகின்றன.

  1. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள் பயன்பாட்டைப் பெருக்குவதற்குப் பல பத்தாண்டு கால அவகாசம் தரப்படுகிறது. (அதாவது, குறைந்தது 2050-ஆம் ஆண்டு வரை இப்போதைய ஆற்றல் உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தலாம் என்கிற கோட்பாடு அனுமதிக்கப்படுகிறது.) நம் சூழலை மிக மோசமாகக் கெடுக்கும் பசுங்குடில் வளிகளைத் தொடர்ந்து வெளியிடுவதை இந்தப் போக்கு நியாயப்படுத்துகிறது.
  1. ஆற்றல் உற்பத்தி மற்றும் வழங்கும் துறைகளில் உள்ள மிகப் பெரும் நிறுவனங்கள் புது வகை ஆற்றல் உற்பத்தியில் கால் பதிப்பதற்கு இது வாய்ப்பளிக்கிறது. அதன் மூலம் அந்நிறுவனங்களின் வருமானமும் உபரியும் ('லாபம்') குறையாமல் இருப்பதற்கு இது உதவுகிறது.
  1. நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற புதைபடிவ ஆற்றல்களுக்கு மாறாகப் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வகைகளுக்கு மாறும்போது அதற்குத் தேவையான கனிமங்கள், மாழைகள் (minerals and metals) போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்த வேண்டும். அந்தச் செயற்பாடுகள் இயற்கைச் சூழலை மிக மோசமாகப் பாதிக்கின்றன; மனிதர் உள்ளிட்ட பல கோடி உயிர்களுடைய வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கின்றன. இதற்குச் சில எடுத்துக்காட்டுகள் வருமாறு.

அ) கினிக் குடியரசு (The Republic of Guinea) ஆப்ரிக்கக் கண்டத்தின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் ஒன்று. உலக பாக்சைட் (bauxite) கனிமத்தில் முப்பது விழுக்காடு அந்தச் சிறிய நாட்டிலுள்ளது. இரும்புக் கனிம வளமும் அந்நாட்டில் மிகுந்துள்ளது. அதே சமயம், நாட்டின் பரப்பளவில் 98 விழுக்காட்டில் இயற்கைக் காடுகள் உள்ளன. மின்னூர்திகள், மின் கம்பிவடங்கள் (cables) போன்றவைற்றை உற்பத்தி செய்வதற்கு அலுமினியம் தேவை. அதற்கு பாக்சைட் கனிமம் மூலப்பொருள். காற்றாலை உற்பத்திக்கும், சாலைகள், கட்டடங்கள் போன்ற நகர்ப்புறக் கட்டுமான வசதிகளை நிறுவுவதற்கும் எஃகு பெருமளவு தேவை. இவற்றுக்காக அலுமினியம், இரும்பு ஆகியவற்றின் தேவை பெருகும்போது கினி நாட்டின் இயற்கைக் காடுகள் என்ன ஆகும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

ஆ) உலக கோபால்ட் (cobalt) கனிமத்தில் அறுபது விழுக்காடு கினியின் அருகிலுள்ள காங்கோ நாட்டில் (The Congo) உள்ளது. கைப்பேசிகள், மின்னூர்திகள் உள்ளிட்ட பல மின்சாதனங்களில் இன்றியமையாத பங்கு வகிக்கும் மின்கலன்களைச் (batteries) செய்வதற்கு கோபால்ட் தேவை. காங்கோ நாட்டுக் கோபால்ட் சுரங்கங்களில் கொத்தடிமை நிலையில் சுமார் 35,000 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் தொழிலாளர்கள் உழல்கின்றனர். சுரங்கங்களின் விளைவாகப் பல்லாயிரக் கணக்கான பரப்பில் காடுகளும் வேளாண்மையும் ஒழிந்தன. இந்நிலை தொடர்ந்தால் காங்கோ நாட்டின் அடர்ந்த மழைக் காடுகள் ஒரேயடியாக அழிவது உறுதி.

ஆப்ரிக்கக் கண்டம் கனிம வளம் மிகுந்தது. ஆகவே, உலகின் பிற பகுதிகளில் உள்ள புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தேவைக்கு பலியாகப் போவது ஆப்ரிக்கக் கண்டமே. (இது ஏற்கெனவே உள்ள நிலைமைதான்; இன்னமும் மோசமாகப் போகிறது.)

இ) உலக லித்தியத் தேவையில் (lithium) பாதியை நிறைவு செய்வதற்குப் போதுமான லித்தியக் கனிம வளம் தென்னமெரிக்காவின் பொலீவியா (Bolivia), சிலி (Chile) நாடுகளில் கடல் மட்டத்தில் இருந்து 3,600 மீட்டர் உயரத்திலுள்ள உப்புப் படுகைகளில் உள்ளது. (lithium-ion மின்கலத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு இந்த ஆண்டு வேதியியல் நோபல் பரிசு கிடைத்தது நினைவிருக்கலாம்.) பொலீவியாவின் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசுகளின் ஆதரவுடன் அண்மையில் நடந்த சதிப் புரட்சியில் பொலீவியாவின் சோசலிச அரசு கவிழ்க்கப்பட்டுப் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமான அரசு ஆட்சியில் உட்காரவைக்கப்பட்டுள்ளது. லித்தியம், செம்பு போன்றவற்றை அகழ்ந்தெடுத்துத் தூய்மைப்படுத்தும் சுரங்கத் தொழிலால் மண்ணும் நீரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. மேலும், வறட்சிப் பகுதிகள் அதிகமுள்ள இந்த நாடுகளின் சில பகுதிகளில் முக்கால் பங்கு நன்னீர் சுரங்கத் தொழிலுக்கு மடை மாற்றிவிடப்படுகிறது.

மேற்கண்ட கனிமங்களைப் பயன்படுத்திப் பசுமைத் தொழில்நுட்பக் கருவிகள், இயந்திரங்கள் போன்றவற்றைச் செய்வதற்கும் பெட்ரோலிய ஆற்றல் பெருமளவு தேவைப்படுகிறது.

நம் தேவைகளைப் பெருமளவு குறைப்பதற்கேற்ற வாழ்முறையையும் வேலை முறையையும் செயல்படுத்துவது தான் சரியான தீர்வாகும்.

 [மேற்கண்ட தகவல்கள், கருத்துகள் அடங்கிய மூலக் கட்டுரை: Godwin Vasanth Bosco, "The Idea That 'Green Technology' Can Help Save the Environment Is Dangerous", The Wire, 2019 Dec 02, https://thewire.in/environment/the-idea-that-green-technology-can-help-save-the-environment-is-dangerous

- 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)

Pin It