கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகமுழுவதும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் சில பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்கள் ஆங்காங்கே அப்படியே பூமியில் புதைக்கப் படுகிறது அல்லது கடலில் கொட்டப்படும் அவலநிலை தான் உள்ளது என்பதை நாம் அறிவோம். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிளாஸ்டிக் கழிவுகள் சிதைவடைய (decompose) கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் எடுக்கும். தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஒரு வகை பூஞ்சைகள் சில மாதங்களில் பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு சிதைவடையச் செய்கிறது.
அமேசான் வனப்பகுதியில் இருக்கும் 'Pestalotiopsis microspora' என்ற ஒரு வகை பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை மக்கச் செய்து அதை உண்பதாகத் தெரிவித்துள்ளனர் Yale University -யின் நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள். ஒரு கட்டுப்படுத்த சோதனைக் கூடத்தில் Polyester Polyurethane (PUR) -ஐ உணவாக உட்கொள்ளும் பூஞ்சைகள் (Fungi) அதிகமாக வளரச் செய்து இந்த சோதனையை நிகழ்த்தி உள்ளனர்.
"இந்த வகை பூஞ்சைகள்/ காளான்கள் இரண்டு மாதத்தில் சிறிய அளவிலான பிளாஸ்டிக்கை மக்கச் செய்து கரிம உரமாக (organic compost) மாற்றுகிறது. எதிர்காலத்தில் இந்த முறையைப் பயன்படுத்தி அதிகளவில் பிளாஸ்டிக் குப்பைகளை சூழலியலுக்கு ஏற்றவாறு மாற்ற முடியும்" என்றார்கள்.
Polyester Polyurethane (PUR) எனும் மூலக்கூறுகள் தான் உலகளவில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுவது ஆகும். (https://loe.org/shows/segments.html?programID=20-P13-00003&segmentID=5)
மற்றொரு ஆய்வு என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு நெதர்லாந்தின் யுட்ரெச்ட் பல்கலைக் கழக நுண்உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் (Utrecht University in the Netherlands) பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு வளர்த்த காளான்களை மனிதர்கள் உண்ணும் உணவாக மாற்றினார்கள். அதற்காக அந்தப் பல்கலைக்கழக பேராசிரியர் Han Wösten பரிசும் பெற்றார். "இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகளும் அடங்கும். அதே வேளையில் இந்த பிளாஸ்டிக் குப்பைகளை வைத்து காளான் வளர்ப்பு என்பது ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி. சுற்றுச்சூழல் மாசுபடுதல் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் உணவுத் தேவைகளை இவ்வகையான காளான்கள் ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும்" என்றார் அவர். (https://www.uu.nl/en/news/prestigious-braunprize-for-converting-plastic-into-food)
ஆனால், சூழலியல் ஆர்வலர்களால் மற்றொரு கேள்வி எழுவது என்னவென்றால், "இவ்வாறு காளான்களை/ பூஞ்சைகளை வளர்ப்பது பிளாஸ்டிக் உற்பத்தியை கட்டுப்படுத்துமா? இல்லை, அவர்கள் தொடர்ந்து பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்துமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனா ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது, "தங்கள் நாட்டில் இறக்குமதி ஆகும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு இனி தடை விதிக்கப்படும். தங்கள் நாடு இனிமேல் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கப் போவதில்லை. பிளாஸ்டிக் குப்பைகளை கையாளுவது சிரமமாக இருப்பதாகவும், மறுசுழற்சி செய்ய அதிக செலவுகள் பிடிக்கிறது. அதற்காகவே இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று அறிவித்தார்கள். உலக நாடுகளில் இருந்து தோராயமாக 70% -க்கு மேல் பிளாஸ்டிக் குப்பைகள் சீன நாட்டிற்குத் தான் மறுசுழற்சிக்காகச் செல்கிறது. அதில் அதிகப்படியாக அமெரிக்கா மட்டும் 700,000 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சீனாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீன நாடு ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் டன் குப்பைகளை இறக்குமதி செய்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவின் இந்தத் தடைக்கு பிறகு வளர்ந்த நாடுகள் இப்போது பிற ஆசிய நாடுகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
வளர்ந்த நாடுகளில் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் ஆசியாவின் பிற நாடுகளில் குறிப்பாக மலேசியா, வியட்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது.
"இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 15 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் உற்பத்தியாகிறது. இதில் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர மீதமுள்ளவை மறுசுழற்சிக்கு உட்படுத்தப் படுவதில்லை" என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டக் குழு (United Nations Development Programme (UNDP) India). இது இந்தியாவின் Waste management system சரியாக செயல்படாததே காரணம் என்பது வருத்தமான செய்தி.
சூழலியலைப் பாதுகாக்க ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய வாழ்வியலை நோக்கிப் பயணிக்கும் நிலை வர வேண்டும்.
- பாண்டி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
முதலாண்மைப் பொருளாதாரம், அதன் விளைவாகத் தொடர்ந்து பெருகும் நுகர்வு ஆகியவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால் அதன் கடுமையான தீய விளைவுகளை நாம் விரைவில் எதிர்கொள்ள வேண்டும். இது தொடர்பான சில அண்மைச் செய்திகளின் தொகுப்பு.
------------
2019 செப்டம்பர் முதல் ஆச்த்ரேலியாவில் எரிந்து வரும் காட்டுத் தீ சுமார் ஒரு கோடியே எண்பது லட்சம் ஏக்கர் பரப்புள்ள காடுகளைப் பொசுக்கியுள்ளது. 25 பேர் உயிரிழந்துள்ளனர். நூறு கோடிக்கும் அதிகமான விலங்குகளும் பல வகையான மரங்களும் பிற புதலிகளும் ('தாவரங்கள்') கருகிச் செத்துள்ளன. இந்தத் தீயின் கடுமையால் பல பகுதிகளில் சூழல் மாறியிருக்கிறது.
---------
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 946 கோடி கிலோ நெகிழிக் கழிவுகளை உருவாக்குகிறது. இதில் நாற்பது விழுக்காடு சேகரிக்கப்படுவதில்லை. இந்த ஆண்டு (2020-இல்) நெகிழிப் பயன்பாடு 2000 கோடி கிலோவைத் தாண்டி விடும் என்று அஞ்சப்படுகிறது.
2014 சூன் முதல் 2019 மார்ச் வரையான இடைவெளியில் இந்திய அரசு இயற்கைக் காடுகளில் ஒரு கோடியே பதினெட்டு லட்சத்து முப்பதாயிரம் மரங்களை வெட்டுவதற்கு ஆணையிட்டது (அல்லது அனுமதித்தது). அவற்றுக்கு ஈடு செய்தல் எனும் பெயரில் ஒரு கோடி மரக் கன்றுகளை நட்டது; ஆனால், அவற்றில் பல ஓரினப் பயிர்கள், உயிரினப் பன்மயத்துக்கு அவற்றால் குறிப்பிடத்தக்க பயனில்லை.
https://www.indiaspend.com/how-india-managed-its-forests-water-waste-in-2019/
---------
அறிவியல் அறிஞர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
1) அம்மோனியா பாஃச்பேட், யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களையும் 'பூச்சி மருந்து' என்று நாம் தவறாகக் குறிப்பிடும் உயிர்க் கொல்லிகளையும் வேளாண்மையில் பயன்படுத்துதல்;
2)காடுகளை அழித்தல் அல்லது காடுகளில் சாலை, வேலி, கட்டடங்கள் ஆகியவற்றை அமைத்துக் காடுகளைத் துண்டாடுதல்;
3) ஒலி, ஒளி மாசு உண்டாக்குதல் (எ.கா. தேவையில்லாமல் விளக்கெரித்தல்);
4) ஓரிடத்தின் சூழலுக்கு ஒவ்வாத உயிரினங்களை வேறிடங்களில் இருந்து கொணர்ந்து வளர்த்தல்;
5) நீர் நிலைகளில் அளவுக்கதிகமாக மீன் பிடித்து அவற்றின் எண்ணிக்கையையும் வகைகளையும் பெருமளவு குறைத்தல்;
6) போக்குவரத்து, மின் சாதனங்கள், வீடுகள், உடைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வரம்பற்ற நுகர்வு காரணமாக நிலம், நீர், காற்று ஆகிய அனைத்தையும் தொடர்ந்து மாசுபடுத்துதல்;
இவற்றின் விளைவாக உலகளவில் பூச்சி இனங்களும் விலங்கு, புதலி ('தாவர') வகைகளும் மிக வேகமாக அழிந்து வருகின்றன. பூச்சி வகைகளில் 40%-க்கும் மேற்பட்டவற்றின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளது; மூன்றில் ஒரு பங்கு பூச்சியினங்கள் அழியுந் தருவாயில் உள்ளன.
- பரிதி
- விவரங்கள்
- பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
முதலாண்மைப் பொருளாதாரத்தின் உபரி ஈட்டும் வெறியால் புவி தொடர்ந்து சூடேறிக் கொண்டுள்ளது. நிலம் – நீர் – காற்று - உயிரினங்கள் அனைத்தும் மாசடைந்து வருகின்றன. வெதண நிலை (தட்ப வெப்ப நிலை) மாற்றத்தின் விளைவாகக் கடும் வறட்சி, வெள்ளம், புயல் ஆகியன அதிகரித்து வருகின்றன.
இவற்றின் கடுமை தொடர்ந்து உயர்வதைக் கட்டுப்படுத்துவதற்குப் பல்வேறு தளங்களில் நாம் செயல்பட வேண்டும். இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தோன்றிய காலம் முதல் 21-ஆம் நூற்றாண்டு முடிவதற்குள் புவியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை மொத்தம் 1.5 செல்சியசுக்கு மேல் சூடேறாமல் தடுப்பது மேற்படிச் செயற்பாடுகளில் முதன்மையான ஒன்று. அதற்குப் பசுங்குடில் வளிகளின் நிகர வெளியீட்டை 2050-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் நிறுத்துவது இன்றியமையாதது. சூழலியல் அறிஞர்களின் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.
ஆனால், நிலக்கரி, (கன்னெயம் - பெட்ரோல், டீசல் உள்ளிட்ட) கனிம எண்ணெய்கள், எரி வளி (natural gas) ஆகிய துறைகளுக்கு அரசுகள் தொடர்ந்து பேராதரவு அளித்து வரும் நிலையில் மேற்கண்ட குறிக்கோளை எட்ட இயலாது.
உலகளவில், கனிம எரிபொருள் ஆற்றல் பயன்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தரப்பட்ட நிதியுதவி 2015-ஆம் ஆண்டு 5,30,000 கோடி டாலராகவும், 2017-இல் 5,20,000 கோடி டாலராகவும் இருந்தது! இரண்டு ஆண்டுகளில் வெறும் பத்தாயிரங் கோடி டாலர் குறைந்தது. 2017-ஆம் ஆண்டு தரப்பட்ட நிதியுதவி அந்த ஆண்டின் மொத்த உற்பத்தியில் 6.4 விழுக்காடு ஆகும். (இவை IMF - The International Monetary Fund எனப்படும் நாட்டிடை நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள்.)
அந்தத் துறைகளிலுள்ள பெரு நிறுவனங்களின் அரசியல் பொருளாதாரச் செல்வாக்கு எவ்வளவு வலிமையானது என்பதை இது காட்டுகிறது.
மேற்கண்ட நிதியுதவியை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்:
(1) எரிபொருள்களுக்கு நாம் தரும் விலையைக் கட்டுப்பாட்டில் வைப்பதற்கென நேரடியாகத் தரப்படும் நிதியுதவி.
கனிம எண்ணெய், எரி வளி, நிலக்கரி ஆகிய துறைகளுக்கு 2010-17 காலக்கட்டத்தில் 'நேரடி' நிதியுதவி எந்த அளவு இருந்தது என்பதைப் பின்வரும் படம் காட்டுகிறது (படம் 1). ஒரு பேரல் (சுமார் 161 லிட்டர்) தூய்மைப்படுத்தாத கனிம எண்ணெயின் இறக்குமதி விலை உலகச் சந்தையில் எந்த அளவு இருந்தது என்பதைக் கரும்புள்ளி காட்டுகிறது.
(2) மேற்கண்ட எரிபொருள்களை அகழ்ந்தெடுத்தல், உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லுதல், பயன்படுத்துதல் ஆகிய அனைத்து நிலைகளிலும் நிகழும் சூழல் கேடுகளால் உலகுக்கு நேரும் செலவினங்களின் பண மதிப்பு.
இந்தச் செலவுகளை மேற்படி நிறுவனங்கள் ஈடு செய்ய வேண்டும். ஆனால், அவற்றின் பண-அரசியல் வலு காரணமாக அவை இந்தக் கேடுகளைப் பற்றிக் கண்டுகொள்வதில்லை. பொது மக்களும் அரசாங்கங்களும் தத்தம் தேவை, வசதி ஆகியவற்றைப் பொருத்துச் சூழல் கேடுகளைக் கையாள்கின்றன. அதற்கு ஆகும் செலவுகள் நிலக்கரி - எண்ணெய்த் துறை நிறுவனங்களுக்கு நாம் தரும் மறைமுக நிதியுதவி ஆகின்றன.
புது எண்ணெய்க் கிணறுகள், சுரங்கங்கள் ஆகியவற்றைத் தேடிக் கண்டறிவதற்கு அந்தத் துறைகளிலுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் அரசுகள் 2.4 மடங்கு (240%) அதிகம் செலவிடுகின்றன! (http://priceofoil.org/fossil-fuel-subsidies/)
மேற்கண்ட நேரடி நிதியுதவி, மறைமுக நிதியுதவி இரண்டும் எந்த அளவுக்கு உள்ளன என்பதைப் பின்வரும் படம் காட்டுகிறது (படம் 2).
3) எண்ணெய், நிலக்கரி வளங்களைக் கைப்பற்றுதல், தொடர்ந்து தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் ஆகிய நோக்கங்களுக்காகப் பல்வேறு அரசுகள் - குறிப்பாக வல்லரசுகள் - தம் ராணுவங்களை மேன்மேலும் பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்தல், உலகெங்கும் பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளால் சூழல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கோடிக் கணக்கான மக்கள் தம்முடைய வாழ்வாதாரங்களை இழக்கின்றனர். இதுவும் நிறுவனங்களுக்குத் தரப்படும் மறைமுக நிதியுதவியே!
இவை மட்டுமின்றி, கடன் மற்றும் வரிச் சலுகைகள், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் எண்ணெய்க் கிணறு ஆராய்ச்சி - மேம்பாடு, நீராதாரம், போக்குவரத்து, மக்களுடைய உடல்நலம் - மருத்துவம் ஆகிய துறைகளில் அரசுகள் செய்யும் செலவுகள் உள்ளிட்டவையும் அத்துறைகளிலுள்ள நிறுவனங்களுக்கு நாம் தரும் மறைமுக நிதியுதவிகளே. இவை மேற்படிக் கணக்கில் வரவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்!
இந்த எரிபொருள்களைப் பயன்படுத்துவதன் விளைவாக நிகழும் உலகப் பசுங்குடில் வளி வெளியீட்டில் சுமார் 87 விழுக்காட்டுக்கு அவற்றை வெளியிடுவோர் எந்த வகை இழப்பீட்டையும் தருவதில்லை!
கனிம எரிபொருள் ஆற்றல்களைப் பயன்படுத்துவதால் நேரும் மொத்தச் செலவு எவ்வளவு, அந்த வணிகத்தில் உள்ள நிறுவனங்கள் எவ்வளவு உபரி ஈட்டுகின்றன என்பன குறித்து நுகர்வோருக்குத் தெரிவதில்லை. ஆகவே, உலகைக் கெடுக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்தோ மாற்று எரிபொருள் துறைகளைக் குறித்தோ மக்களும் அரசுகளும் போதுமான அக்கறை செலுத்துவதில்லை.
நெகிழிகள் கனிம எரிபொருள்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. 2018-ஆம் ஆண்டு உலகளவில் உற்பத்தி செய்யப்பட்ட நெகிழிகளின் எடை ஏறக்குறைய முப்பத்தாறு கோடி டன்! (https://www.statista.com/statistics/282732/global-production-of-plastics-since-1950/)
இதற்கு அரசுகள் பெரிய அளவில் நல்கை ('மானியம்') தந்துவிட்டு, 'நுகர்வைக் குறை, மறு சுழற்சி செய்!' என்பது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.
மேலும், மறு சுழற்சி செய்வதற்கு ஆகும் செலவில் தொண்ணூறு விழுக்காட்டுக்கும் மேற்பட்ட தொகை மக்களுடைய வரிப் பணத்தில் இருந்து பெறப்படுகிறது! (https://www.theguardian.com/environment/2018/feb/05/big-business-not-taxpayers-should-pay-to-clean-up-plastic-waste)
ஏழைகளுக்கு உதவும் நோக்கில் தான் எரிபொருள் துறை நல்கைகள் வழங்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால், வசதி அதிகமுள்ளவர்களே ஒப்பீட்டளவில் கனிம எரிபொருள்களை அதிகம் பயன்படுத்துகிறோம்; அதன் தீய விளைவுகள் ஒப்பீட்டளவில் ஏழைகளையே மிக அதிகம் பாதிக்கின்றன. ஆகவே, அரசுகளுக்கு உண்மையாகவே ஏழை எளியோர் மீது அக்கறை இருக்குமானால் அவர்களுக்குப் பிற வகைகளில் உதவுவது இன்றியமையாதது.
கனிம எரிபொருள்களின் கேடுகளுக்கு ஏற்ப அவற்றின் விலையை முடிவு செய்வதன் மூலம் சூழல் கேடுகளைப் பெருமளவு குறைக்க முடியும். எடுத்துக்காட்டாக, 2015-இல் அவ்வாறு செயல்பட்டிருந்தால் பசுங்குடில் வளி வெளியீட்டை 28 விழுக்காடு குறைத்திருக்கலாம்; வளி மண்டல மாசு காரணமான இறப்புகளை 46 விழுக்காடு குறைத்திருக்கலாம்; அதன் நிகரப் பொருளாதாரப் பலன் உலக மொத்த உற்பத்தியில் 1.7 விழுக்காடு அதிகரித்திருக்கும் என்று நாட்டிடை நாணய நிதியம் கணித்துள்ளது.
கல்வி, உடல்நலம் ஆகிய துறைகளில் தரமான, அனைவருக்கும் ஒரே மாதிரியான வசதி வாய்ப்புகளை உருவாக்குதல்; இயற்கைக் காப்பு, வேலை வழங்குதல் ஆகியவற்றை முழு அக்கறையுடன் செயல்படுத்துதல் ஆகியவை மட்டுமே ஏழை எளியோரைக் காக்கும். கனிம எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் நல்கைகளைப் பெருமளவு குறைப்பதன் மூலம் மேற்படிக் குமுக நலத் திட்டங்களுக்குப் போதுமான நிதியை அரசுகள் திரட்ட முடியும்.
அது மட்டுமின்றி, உலகப் பொருளாதார முறைமையில் ஒட்டுமொத்த மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இயற்கை வளப் பயன்பாட்டு உரிமை மற்றும் பயன்படுத்தும் விதம், நம் உணவு முறை, போக்குவரத்து, கேளிக்கை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் புரட்சிகர மாற்றங்கள் தேவை. இதுவே நாம் எதிர்கொண்டுள்ள அனைத்து வகைச் சிக்கல்களுக்கும் சரியான, முழுமையான தீர்வாக அமையும். இது மிகக் கடினமானது, நம் வாழ்க்கைத் தரத்தை வெகுவாகக் குறைத்து விடும் என்கிற தவறான, மாயையான கருத்துகள் நம் மனங்களில் மிக ஆழமாக விதைக்கப்ட்டு வேரூன்றியுள்ளன.
ஆனால், நாம் எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரழிவில் இருந்து மீள்வதற்கு இப்போதுள்ள பொருளாதார முறைமையில் தீர்வு இல்லை.
முதன்மை மேற்கோள்: Umair Irfan, "Fossil fuels are underpriced by a whopping $5.2 trillion", 2019 May 17, 2019, https://www.vox.com/2019/5/17/18624740/fossil-fuel-subsidies-climate-imf
- விவரங்கள்
- நவாஸ்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஆஸ்திரேலியா! பெயரைக் கேட்டாலே பெரும்பாலான இளசுகளுக்கு கங்காருகளும், இன்னும் சில பெருசுகளுக்கு இந்தியன் படத்தின் 'டெலிபோன் மணி போல்' பாட்டும், வெகு சிலருக்கு ஈழ அகதிகளின் வாழ்விடமும் என அவரவர்களின் நிலைக்கேற்ப நினைவில் வந்து போகும்.
தற்போது, அனைவரும் அங்கே பரவிக் கொண்டிருக்கும் காட்டுத் தீ, அதனால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் குறித்தும், இனி அதன் பக்கவிளைவான சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
உலகின் நுரையீரலாக காடுகள் செயல்படுகின்றது. ஆனால் கார்ப்ரேட் முதலாளிகளுக்கோ எண்ணற்ற கனிம வளங்களை எப்படி சூறையாடலாம், எப்படி பணமாக மாற்றலாம் என்றே தெரிகின்றது. சமீபத்திய அமேசான் காடுகளில் ஏற்பட்ட கட்டுக்கடங்கா காட்டுத் தீயினை அரசே முன்னின்று ஏற்படுத்தி, அதற்கு நாட்டின் வளர்ச்சி என்னும் பக்தியினை ஊட்டி அதனை எதிர்த்தவர்களை தேச விரோதிகளாகக் காட்டியதை இன்னும் மறந்திட இயலாது.
ஆஸ்திரேலியாவிலோ கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போதுவரை நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்து வரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறமாக மாறி காட்சி அளிக்கிறது. காட்டுத் தீயில் பல உயிரினங்கள் உடல் கருகி இறக்கின்றன.
"பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் தங்களை நோக்கி வரும் தீயைப் பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருக்கும். ஆனால், அதிக தொலைவு செல்ல முடியாத மற்றும் அந்தக் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரினங்கள் நிச்சயம் காட்டுத் தீயில் சிக்கியிருக்கக் கூடும்" என ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வல்லுநரும், சிட்னி பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார்.
ஆஸ்திரேலியக் காடுகளில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன வாழ்வதாக கிறிஸ் டிக்மேன் கூறுகின்றார். அப்படியிருக்கையில் இப்போது நிகழ்ந்திருக்கும் பேரழிவில் கிட்டத்தட்ட 480 பில்லியன் உயிரினங்கள் இறந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். University of Reading பேராசிரியர் டாம் ஆலிவர், "இந்த காட்டுத் தீயில் உயிரிழந்த பல்வேறு விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தி குறித்த தரவுகள் கிடைக்காததால், ஏற்கனவே அறியப்பட்ட மற்ற விலங்கினங்களின் வாழ்விட அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டே இந்த கணக்கீடு மேற்கொள்ளப் பட்டிருக்க வேண்டும்" என்று கூறுகிறார். இதுவே பொருத்தமான கருத்தாக கருதிட வேண்டும்.
Chaos Theory என்று ஆய்வாளர்களால் பேசப்படும் கருத்தியலின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீயினால் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை என நாம் ஒவ்வொருவரும் கருதி, கடந்திடுவோமானால் நம்மைவிட முட்டாள்கள் எவரும் இல்லை. 'எல்நினோ' காரணமாக அதிக மழையும், அதிக வறட்சியும் மாறி, மாறி சேதங்களை ஏற்படுத்தும் நமக்கு ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ சாதாரணமான ஒன்றென ஒதுக்கக் கூடியதல்ல.
காட்டுத் தீயினை அனைத்திட 4500க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியும், பல்வேறு கட்ட முயற்சிகளை செய்தும்கூட அந்நாட்டு அரசால் கட்டுப்படுத்திட முடியவில்லை. இயற்கையே மழைப் பொழிவினை ஏற்படுத்தினால் ஒழிய இதனைத் தடுத்திட வேறுவழியில்லை என மக்களும் #pray_for_australia என டிவிட்டரில் டிரண்டிங் ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
நமக்கும் வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை, இருக்கும் ஒரே வார்த்தை #pray_for_australiaவைத் தவிர...!
- நவாஸ்
- கிரீன்லாந்தில் வேகமாக உருகும் பனிப் பாறைகள்
- சூழலியல் - நாய் விற்ற காசு குரைக்குமா?
- புவி வெப்பமடைதல் - ஓர் எச்சரிக்கை
- சூழலியல் பேரழிவுக்குத் தொழில்நுட்பத் தீர்வுகள் போதா!
- காஸாவின் பாதிப்புகளால் சுற்றுச்சூழல் ஆபத்துகளை எதிர்நோக்கும் இஸ்ரேல்!
- பருவநிலை மாற்றமும், பேரழிவு புயல்களும்
- பருவநிலை மாற்றத்தால் உலகிற்கு பேராபத்து
- பிளாஸ்டிக்கை ஒழிப்போம்! உயிரினங்களை காப்போம்!
- ஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா?
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு