அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
அச்சமூட்டும் வகையில் இமயமலை உருகுவதால் இந்தியா உட்பட தெற்காசியாவில் கடும் காலநிலை பாதிப்புகள் ஏற்படும் என்று பிரிட்டனைச் சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் கூறுகின்றன. சமீப பத்தாண்டுகளில் இங்கு, முன்பு பனிப்பாறைகள் விரிவடைந்து உருவான குறுகிய பனிக்காலம் (Little Ice Age) எனப்படும் 400-700 ஆண்டுகளில் சராசரியாக இருந்ததைக் காட்டிலும் இப்போது பத்து மடங்கு வேகமாக உருகுகிறது.
சுருங்கும் இமயம்
இங்கு உள்ள பனிப்படலங்கள் உலகின் மற்ற இடங்களைக் காட்டிலும் வேகமாகச் சுருங்குகின்றன. இதனால் உருவாகும் பனிக்கட்டிகளின் இழப்பு வரலாறு காணாத ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை 'சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்' (Scientific Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறுகிய பனிக்காலத்தில் இருந்த 14,798 பனிப்படலங்கள் அதே அளவு மற்றும் பனிப்பரப்புடன் செயற்கை மாதிரிகளாக உருவாக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் பனிப்படலங்களின் 40% பனிப்பரப்பு சுருங்கியுள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். 29,000 சதுர கி.மீ. பரப்பில் இருந்த பனிச்சிகரங்கள் இன்று 19,600 சதுர கி.மீ. என்ற அளவிற்குச் சுருங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இமயமலையில் இன்று உருகி ஓடியிருக்கும் பனிக்கட்டிகள் மத்திய ஐரோப்பிய ஆல்ப்ஸ், காக்கசஸ் (Caucasus) மற்றும் ஸ்காண்டிநேவியா பகுதியில் இருக்கும் பனிப்பரப்புகளின் ஒட்டுமொத்த அளவிற்குச் சமம்.
இதனால் 0.92 மி.மீ. முதல் 1.38 மி.மீ. அளவிற்கு உலகக் கடல்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கடந்த பல நூற்றாண்டுகளில் இல்லாத அளவு இப்போது இமயமலையில் பனி உருகுவது இந்த ஆய்வுகள் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது என்று இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடர்பு ஆசிரியர் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழக புவியியல் பள்ளித் துணைத்தலைவர் டாக்டர் ஜோனתן காரிவிக் (Dr. Jonathan Carrivick) கூறுகிறார்.
மனிதத் தூண்டல்களால் நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் காரணமாகவே பனி உருகுதல் இந்த அளவு துரிதகதியில் சமீப ஒரு சில பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளது என்று காரிவிக் கூறுகிறார். ஆர்க்டிக், அண்டார்டிகாவிற்கு அடுத்து உலகில் மிகப்பெரும் பரப்பில் பனிப்பாறைகள் இமயமலையில் உள்ளன. இதனால் இது 'உலகின் மூன்றாவது துருவம்' (Third Pole) என்று அழைக்கப்படுகிறது.
இந்த அதிதீவிர உருகுதல் பிரம்மபுத்திரா, கங்கை, சிந்து போன்ற மிகப் பெரிய நதிகளின் நீரை நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கிறது. உணவு மற்றும் ஆற்றல் தேவைக்கு இவர்கள் இந்நதிகளையே நம்பியுள்ளனர். ஆய்வாளர்கள் டிஜிட்டல் பிம்பங்கள், உயரப்படுத்தப்பட்ட மாதிரிகளை (Elevated Digital Elevation Models) பயன்படுத்தி ஆய்வுகளை நடத்தினர்.
இதன் மூலம் 700 ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் இருந்த பனிப்பரப்புகளின் மாதிரிகள் உருவாக்கப்பட்டு ஆராயப்பட்டன. இதில் பழைய பனிப்பாறைகளின் முனை (Ridge) மற்றும் பனிப்படலத்தின் எல்லைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் அன்றிருந்த பனிப்படலங்கள் இன்று உள்ளதுடன் ஒப்பிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
பனிப்படலங்களின் கன அளவு மற்றும் அவற்றின் அடர்த்தியில் ஏற்பட்ட மாறுதல்கள் கணக்கிடப்பட்டு பனிக்கட்டிகளின் இழப்பு பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அமைவிடம், வளிமண்டலத்துடன் உள்ள தொடர்பு காரணமாக கிழக்கு நேபாளம், பூட்டானின் வட பகுதியில் உருகுதல் வேகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டது.
உருகும் மலையில் உருவாகும் ஏரிகள்
உருகி ஓடும் நீர் பெருமளவில் சேகரிக்கப்பட்டு புதிய ஏரிகள் அதிகமாக உருவாகின்றன. இவை மலையடிவாரத்தை அடையும்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உருகுதல் வேகமாக நடைபெறும்போது அதிக நீர்வரத்து காரணமாக இந்த ஏரிகளின் அளவு பெரிதாகிறது. பனிப்பாறை ஒன்றில் ஏற்படும் பனி இழப்பு மற்றவற்றையும் பாதிக்கிறது. இடிபாடுகளுடன் உள்ள பாறைகள் தங்கள் எடையை இழக்கின்றன. இதனால் எதிர்பாராத நேரங்களில் இவை உருண்டு விழுகின்றன.
இவ்வாறு பனிப்படலங்களில் உருவாகும் விரிசல்கள் மூலம் ஏற்படும் சேதத்தால் அவற்றின் கன அளவில் 46.5% இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தம் இருக்கும் 7.5% பனிப்படலங்களில் இது நிகழ்ந்துள்ளது என்று காரிவிக் கூறுகிறார். பல நூறாண்டுகளில் காணப்படாத சூழல் சீரழிவை இன்று இங்கு வாழும் மக்கள் சந்திக்கின்றனர் என்று டண்டி (Dundee) பல்கலைக்கழக புவியியல் மற்றும் சூழலியல் துறை மூத்த விரிவுரையாளர் சைமன் குக் (Simon Cook) கூறுகிறார்.
எங்கோ காணாத் தொலைவில் இருக்கும் ஆர்க்டிக்கிலும் அண்டார்டிகாவிலும் வெப்பம் அதிகரிக்கிறது, உலகம் முழுவதும் இருக்கும் கடல்கள் சூடாகின்றன என்றெல்லாம் கேட்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்தோம். ஆனால் இன்று? காலநிலை மாற்றம் நம் வீட்டு வாசற்படியில் வந்து நிற்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உலக மக்கள்தொகையின் 96% மக்களையும் புவி வெப்ப உயர்வு ஏதேனும் ஒருவிதத்தில் பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. காலநிலை மையம் (Climate Central) என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வுகளில் இது தெரியவந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 96% அதாவது 760 கோடி மக்களையும் வெப்ப உயர்வு பாதித்துள்ளது. வெப்ப மண்டலப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிப்பவர்களை இது ஒரே மாதிரி பாதிக்கிறது.
1021 நகரங்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடந்தன. சமோவா, பலாவ் நகரங்களில் வெப்ப உயர்வு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மற்ற இடங்களை விட இப்பகுதிகளில் 4 முதல் 5 மடங்கு வெப்ப உயர்வு அதிகமாகக் காணப்பட்டது. லாகோஸ், மெக்சிகோ நகரம், சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் இது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.
70 ஆண்டு கால காலநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, 'மாறிவரும் காலநிலை குறியீடு' (The Climate Shift Index) என்ற ஒன்றையும் இந்த அமைப்பு தயாரித்துள்ளது. இதன்படி 26 நகரங்களில் 2021 அக்டோபர் முதல் 250-265 நாட்களுக்கு இடையில் உலகளாவிய சராசரி புவி வெப்ப உயர்வு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கடல்கள் சூடாகின்றன
கிழக்காப்பிரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய இடங்களை மையமாக வைத்து 26 நகரங்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல இடங்களிலும் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்குச் சுற்றிலும் இருக்கும் கடல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கடல்நீர் மட்ட உயர்வு தீவு நாடுகளுக்கு, குறிப்பாகப் பசிபிக் மற்றும் கரீபியன் பகுதியில் இருக்கும் நாடுகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 'டுவாலு' என்ற பசிபிக் தீவு நாடு வரும் ஆண்டுகளில் முழுவதுமாகக் கடலில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உமிழும் கார்பனால் உயரும் புவியின் வெப்பநிலையால், சூழல் சீரழிவிற்கு எந்தவிதத்திலும் காரணமில்லாத இதுபோன்ற சிறிய தீவுநாட்டு மக்கள் பாதிக்கப்படுவது, பூமியில் இன்று நம் கண் முன்னே நிகழ்ந்து வரும் பெரும் காலநிலை அநீதியாகும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
உணவை வடிகட்டி உண்ணும் திமிங்கலங்கள் தினமும் மில்லியன் கணக்கான நுண் பிளாஸ்டிக் துகள்களை உண்பதாகப் புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இக்கண்டுபிடிப்பு பூமியில் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் உயிரினங்களாக அவற்றை மாற்றியுள்ளது. நீலத்திமிங்கலங்கள் நாளொன்றிற்கு 10 மில்லியன் துண்டுகளை உண்கின்றன. இதன்படி கணக்கிட்டால் மூன்று அல்லது நான்கு மாதங்களில் இவை 1 பில்லியன் துண்டுகளை உணவுடன் விழுங்குகின்றன.
இவ்வாறு இவை உண்ணும் பிளாஸ்டிக் துண்டுகளின் எடை 230 கிலோகிராம் முதல் 4 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது அதிக மாசு உள்ள மற்றும் எதிர்காலத்தில் அதிக கழிவுகள் உண்டாகக்கூடிய இடங்களில் இவை ஒரு நாளைக்கு 150 கிலோ வரை பிளாஸ்டிக்கை உண்ணும் என்று கணிக்கப்படுகிறது.
கலிபோர்னியா கடற்கரைப் பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றாலும், உலகின் மற்ற பகுதிகள் இதைவிட மோசமாக மாசுபட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நீல, ஃபின் (Fin) மற்றும் கூன்முதுகு (Humpback whale) ஆகிய பாலீன் (Baleen) வகை திமிங்கலங்கள் வடிகட்டி மூலமே உணவு உண்பவை. இறால் போன்ற சிறிய வகை ஒட்டுமீன்கள் (krill) மற்றும் மீன்களின் மூலமே இவை நீரில் கலந்துள்ளதைக் காட்டிலும் பெருமளவிலான நுண் பிளாஸ்டிக் கழிவுகளை உண்கின்றன.
கிரில் எனப்படும் ஒட்டுமீன்களின் அளவிலேயே நுண் பிளாஸ்டிக் துகள்களும் இருக்கின்றன. இந்த வகை உயிரினங்களின் பிளாஸ்டிக் கழிவு நுகர்வு பற்றி நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவே. இந்த உயிரினங்கள் வடிகட்டியில் தங்கும் நுண் துகள்களை உணவு என்று விழுங்குகின்றன. இத்துகள்கள் மற்றும் நச்சு ரசாயனங்கள் இவற்றின் உடலில் கொழுப்பு இருக்கும் ப்ளப்பர் (blubber) பகுதியில் சேருகின்றன என்று முந்தைய ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நிம்மதியில்லாமல் வாழும் கடல் அரசர்கள்
இத்தகைய பிளாஸ்டிக் நுகர்வினால் இவற்றிற்கு ஏற்படும் பாதிப்பு பற்றி இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை. கடலில் வாழும் பாலூட்டிகளில் மிகப்பெரிய விலங்குகளான இவை வேட்டை, ஒலி மாசு, கப்பல்கள் இடித்து உயிரிழப்பது போன்ற மனிதக் குறுக்கீடுகளிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இவை கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கையில் பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கலிபோர்னியாப் பல்கலைக்கழக ஃபுல்லர்டன் (Fullerton) ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் தலைமை ஆசிரியர் டாக்டர் ஷைரல் கஹேன்-ரப்போர் (Dr. Shirel Kahane-Rapport) கூறுகிறார்.
கலிபோர்னியா கடற்பகுதியைக் காட்டிலும் வட கடல், மத்திய தரைக்கடல் மற்றும் தென்கிழக்காசிய கடல்கள் அதிகமாக மாசடைந்துள்ளன. இப்பகுதிகளில் வாழும் திமிங்கலங்கள் அமெரிக்காவின் மேற்குக் கரை கடற்பகுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்படும் என்று ஸ்டான்ஃபோர்டு (Stanford) பல்கலைக்கழக ஆய்வாளரும், ஆய்வுக்குழு உறுப்பினருமான டாக்டர் மேத்யூ சேவோகா (Dr. Matthew Savoca) கூறுகிறார்.
திமிங்கலங்களுக்கு மட்டுமல்லாமல் நமக்கும் இது ஒரு கெட்ட செய்தியே. மனிதகுலமும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் உண்ணும் காட் (Cod) அல்லது சால்மன் (Salmon) அல்லது மற்ற வகை மீன்களையே அவைகளும் உண்கின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் பெரும் எண்ணிக்கையில் சூழலில் கொட்டப்பட்டு அவை பூமியை மாசடையச் செய்கின்றன. எவரெஸ்ட் சிகரம் முதல் ஆழ்கடல் வரை 1,500 வன உயிரினங்கள் பிளாஸ்டிக்கை உண்கின்றன.
மனிதர்கள் இந்த நுண் துண்டுகளை உணவு, நீர் மற்றும் காற்றின் மூலம் உட்கொள்கின்றனர். நுண் பிளாஸ்டிக்கள் மனித இரத்தம், நுரையீரல், தாய்ப்பாலில் கலந்திருக்கின்றன என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நீல, ஃபின் மற்றும் கூன்முதுகு வகைகளைச் சேர்ந்த 191 திமிங்கலங்களில் கருவிகள் (tags) பொருத்தப்பட்டு அவற்றின் 36,000 முக்குதல்கள் ஆராயப்பட்டன. வான்வழி ஆளில்லா விமானங்கள் மூலம் அவற்றின் வாயை அடையும் நீரின் அளவு கண்டறியப்பட்டது. நீரியல் கருவிகள் மூலம் நீரில் இரையின் அடர்த்தி கணக்கிடப்பட்டது. இரையில் இருந்த நுண் பிளாஸ்டிக் துகள்கள் நீர் ஆய்வு (water column) மற்றும் முந்தைய ஆய்வு விவரங்கள் மூலம் மதிப்பிடப்பட்டன.
பாலீன் வகை திமிங்கலங்கள் நுண் பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் காணப்படும் ஆழ்கடலின் 50-250 மீட்டர் பகுதியிலேயே பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருக்கும் தங்கள் உணவைப் பெரும்பாலும் உண்கின்றன. நீலத் திமிங்கலத்தை விடச் சிறிய கூன்முதுகு திமிங்கலங்கள் அன்றாடம் கிரில்களை உண்ணும்போது 4 மில்லியன் நுண் துகள்களையும், ஆன்சோவிஸ் (Anchovies) போன்ற மீன்களை உண்ணும்போது நாள்தோறும் 200,000 துகள்களையும் உட்கொள்கின்றன.
இந்த மதிப்பீடுகள் ஒவ்வொரு விநாடியும் மாறக் கூடியவை என்பதால் இந்தக் கணக்குகள் துல்லியமானவை இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கரையில் யானை முதல் கடலில் திமிங்கலம் வரை மனிதன் உருவாக்கிய பிளாஸ்டிக் என்னும் மாசு அவனை மட்டுமல்லாமல் உயிருள்ள எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்கிறது என்பதையே இந்த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிலத்தில் வாழும் மரங்களின் திசுக்களிலும் நானோ பிளாஸ்டிக்குகள் கலந்துள்ளன என்று சமீபத்தில் நடத்தப்பட்ட புதிய ஆய்வுகள் கூறுகின்றன. மரங்களின் வேர்களும், வேர்தூவிகளும் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி வைத்திருப்பதை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இதனால் மரங்களின் அடிப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுத்துகள்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கடல்கள், துருவப்பகுதிகள் முதல் எவரெஸ்ட் மலைச்சிகரம், வளிமண்டலத்தின் ட்ரோப்போஸ்பியர் வரை பூமியில் இன்று நுண் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் பரவியுள்ளன.
இப்போது மரங்களின் திசுக்களில் நானோ பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி தரும் செய்தி என்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆம்ஹெஸ்ட் (Amherst) ஸ்டாக்பிரிட்ஜ் (Stockbridge) விவசாயப் பள்ளி (UMASS) சூழல் விஞ்ஞானி பௌஷன் ஷிங் (Paoshan Xing) மற்றும் ஷாண்டாங் (Shandong) பல்கலைக்கழக ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேறுபட்ட சூழ்நிலையில் நானோ பிளாஸ்டிக்குகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றி இன்னும் தெளிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. குறிப்பாய் இவை விவசாய நிலங்கள் மற்றும் மண் பரப்புகளில் செயல்படும் விதம் பற்றி அதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஷிங் தலைமையிலான சீன ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர்.
இதுவரை தாவரங்கள் நானோ பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சி எடுப்பது பற்றிய ஆய்வுகள் எவையும் தீவிரமாக நடைபெறவில்லை.
நிலத்தில் இருக்கும் பொருட்களின் பண்புகளுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களில் காணப்படுகின்றன. இவ்வாறு தாவரங்கள் பிளாஸ்டிக் துகள்களை உறிஞ்சுவது உணவு உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
பொதுவாக ஆய்வகங்களில் ஆய்விற்காகப் பயன்படுத்தப்படும் அரபிடாப்சிஸ் தல்யானா (Arabidopsis Thaliana) என்ற தாவரத்தில் நேர் மின்சுமை மற்றும் எதிர் மின்சுமை நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கட்டுப்பாடற்ற வகையில் உலகளாவிய பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு, ஒவ்வொரு ஆண்டும் பூமியில் இவை கோடிக்கணக்கில் கழிவுகளாக உருவாகக் காரணமாகிறது.
ஆய்வகத்தில் நடத்தப்பட்ட தாவர பரிசோதனைகளில், தாவரங்கள் நானோ பிளாஸ்டிக்குகளை உறிஞ்சி அவற்றைச் தன் திசுக்கள் மற்றும் மூலக்கூறு நிலைகளில் சேகரிப்பது நவீன நுண்ணோக்கி மற்றும் மரபணு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது என்று ஷிங் கூறுகிறார். நானோ துகள்களைத் தாவரங்கள் வேர் முதல் தளிர்கள் வரை உறிஞ்சுவது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கட்டுரை “இயற்கை - நானோ தொழில்நுட்பம்” (Nature Nanotechnology) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது. நானோ பிளாஸ்டிக் துகள்கள் புரதம் அல்லது வைரைஸ் போல மிக நுண்ணியவை. வானிலை மற்றும் சிதைவு இத்துகள்களின் பண்புகளை மாற்றமடையச் செய்கிறது.
இதனால் இயற்கையில் காணப்படும் நுண் துகள்கள் (environmental particles) ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் தூய நிலை பாலிஸ்டைரீன் (pristine polystyrene) நானோ பிளாஸ்டிக் துகள்களில் இருந்து வேறுபட்டவை என்று ஷிங் கூறுகிறார். இதனால் ஆய்வகப் பரிசோதனைகளின்போது இவை நேர் அல்லது எதிர் மின்னேற்றம் செய்யப்படுகின்றன.
சீனாவில் ஷாண்டங் பல்கலைக்கழகத்தில் ஷையன் ஜெங் யுயென் (Xian-Zheng Yuan) மற்றும் ஷு ஷ்வாங் வெங் (Shu-Zhuang Wang) ஆகியோர் தலைமையில் பல விஞ்ஞானிகள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஆய்விற்காக அரபிடாப்சிஸ் தாவரங்கள் வேறுபட்ட மின்சுமைகள் உடைய, ஒளிர்தன்மை உடைய நானோ பிளாஸ்டிக் துகள்கள் கலக்கப்பட்ட மண்ணில் வளர்க்கப்பட்டன. சோதனைகளுக்கு முன்னும் பின்னும் தாவரங்களின் எடை, உயரம், குளோரோபில் எனப்படும் பச்சையத்தின் அளவு மற்றும் வேர் வளர்ச்சி ஆகியவை ஆராயப்பட்டன.
ஏழு வாரங்களுக்குப் பிறகு நானோ பிளாஸ்டிக்குகள் கலந்த மண்ணில் வளர்ந்த தாவரங்களின் தாவரத்தன்மையின் நிறை (plant’s biomass) மற்றும் தாவரங்களின் உயரம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. நானோ துகள்கள் தாவர நிறையைப் பாதிக்கிறது. அவற்றின் உயரம் குறைவதுடன் வேர்கள் குட்டையாகின்றன. தாவரத்தின் நிறை குறையும்போது அது அதன் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது. இதனால் தாவரங்களில் அடங்கியிருக்கும் ஊட்டச்சத்துகள் பெருமளவில் குறையும்.
நேர்மின் சுமையுடைய பிளாஸ்டிக் துகள்கள் அதிக தீங்கு தருபவை. இதனால் இவற்றைத் தாவரங்கள் அதிகமாக உறிஞ்சி எடுத்துக்கொள்ளவில்லை. அவை ஏன் இவ்வாறு செய்கின்றன என்பது பற்றித் தெரியவில்லை என்று ஷிங் கூறுகிறார். நேர் மின்சுமை துகள்கள் நீர், ஊட்டச்சத்துகள் மற்றும் வேருடன் அதிக வினைபுரியும் தன்மையுடையவை.
மேலும் இத்துகள்கள் வேறுபட்ட மரபணு வெளிப்பாடுகள் (gene expressions) ஏற்படத் தூண்டுதலாக அமைகின்றன. செல்லில் உள்ள ஒரு மரபணுவில் இருந்து புரதம் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும்போது அதனுள் நிகழும் தகவல் பரிமாற்றமே மரபணு வெளிப்பாடு எனப்படுகிறது. இது குறித்து பெருமளவில் பயிரிடப்படும் பயிர்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர்.
வயல்வெளிச் சூழலில் இது எந்த அளவிற்கு உணவு விளைச்சல் மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் என்பது இப்போது தெரியவில்லை. சிறிய கன்றுகளிலும் நானோ துகள்களால் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராயப்பட்டது. 10 நாட்களுக்குப் பிறகு செய்யப்பட்ட ஆய்வில், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்க்கப்பட்டவற்றைக் காட்டிலும் இந்த கன்றுகளின் வளர்ச்சி நானோ துகள்களால் தடுக்கப்பட்டது தெரியவந்தது.
வேர் பாதிப்பை ஆராய விஞ்ஞானிகள் 'ஆர்.என்.ஏ மரபணு வரிசை டிரான்ஸ்க்ரிப்டாமிக் பகுப்பாய்வுக் கருவியை' (RNA-seq transcriptomic analyser) பயன்படுத்தினர். இதன் மூலம் வேர், தளிர்களில் இருக்கும் மூலக்கூறுகளின் நிலையை அறியலாம். முடிவுகள் 'பாலிமரைஸ் தொடர்வினை பரிசோதனை' (Quantitative PCR) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இத்தாவரம் 200 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் துகள்களையும் உறிஞ்சுவது கண்டறியப்பட்டது.
நிலவாழ் யானை, புலி, ஆடு, மாடு போன்றவற்றின் உணவுப் பாதையில் நுழைந்த பிளாஸ்டிக்குகள் அவற்றின் உயிரைப் பறிக்கின்றன. கடலில் கொட்டப்படும் கழிவுகள் மீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை உயிரினங்களின் உயிருக்கே உலை வைக்கின்றன. சமீபத்தில் மனித ரத்தத்திலும் நுண் பிளாஸ்டிக்குகள் நுழைந்த செய்தி வெளிவந்தது. பிளாஸ்டிக் துகள்கள் கலந்த மண், காற்று, நீர் மூலமே மனிதன் பாதிக்கப்படுகிறான் என்று கருதியிருந்த சமயத்தில் இது பேரதிர்ச்சி தரும் செய்தி.
இப்படியே போனால் தூய நீரையும் சத்துக்களையும் பயன்படுத்தி வளர்ந்து பலன் தர வேண்டிய தாவரங்கள், நாம் விவேகமில்லாமல் வீசியெறியும் பிளாஸ்டிக் கழிவுகள் சிதைந்து உண்டாகும் நுண் நானோ துகள்களை உறிஞ்சி, அவை கலந்த காய்கனிகளையே தரும். இந்நிலை தொடர்ந்தால் விரைவில் மனிதன் பிளாஸ்டிக் துகள்கள் கலந்த உணவையே சாப்பிடும் நிலைக்கு ஆளாவான் என்பது நிச்சயம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- நூறாயிரம் இந்திய உயிரைக் குடிக்கும் காற்றுமாசு
- உலகில் மூன்றில் ஒருவரை பாதிக்கும் புவி வெப்ப உயர்வு
- ஐம்பதாண்டில் அழியப் போகும் இந்தியப் பெருங்கடல் பவளப் பாறைகள்
- ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்
- இனி பேசிப் பயன் இல்லை
- "நம்மைக் கொல்ல நாமே காசு கொடுக்கிறோம்!!"
- மனிதனின் வயதை அதிகரிக்கும் அதி தீவிர வெப்பநிலை
- காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.