பெட்ரோலியப் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் போல உயிரி பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே. உயிரி பிளாஸ்டிக்குகள் என்று அழைக்கப்படும் இவை முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது விரைவாக மக்கும் என்று கூறப்பட்டது, பாராட்டப்பட்டது. ஆனால் இவைகளும் பெட்ரோலியப் பொருட்கள் தரும் பிளாஸ்டிக்குகள் போலவே தீமை செய்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. இத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இம்முடிவை ஆராய்ந்து உறுதி செய்துள்ளனர்.plastic 700உயிரி பிளாஸ்டிக்குகள் சோளம், அரிசி, சர்க்கரையில் உள்ள ஸ்டார்ச்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வேகமாக மாறும் நவ நாகரீக ஆடைகள், ஈரம் போக்கும் பொருட்கள் (Wetwipes), ஸ்ட்ராக்கள், வெட்டு பொருட்கள் மற்றும் வேறு பல தரப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

ஆனால் இவை உறுப்பு சேதம், உடலியக்க செயல்பாட்டில் மாறுதல், இதயக் கோளாறுகளை உண்டாக்கும் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலைத் தன்மையில் மாற்றம், குளுக்கோஸ் அளவில் வேறுபாடு போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. உயிரி பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகளை ஆராய விஞ்ஞானிகள் முதல்முறையாக சுண்டெலிகளில் பரிசோதனைகளை நடத்தினர்.

“ஆரம்பத்தில் கருதப்பட்டது போல இவை பாதுகாப்பானவை இல்லை. ஆரோக்கியத்திற்கு உதவுபவை அல்ல” என்று ஆய்வின் இணை ஆசிரியர் யொங்க்ஃபெங் டென் (Yongfeng Deng) கூறுகிறார்.

2024ல் மட்டும் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டன. வரும் ஐந்தாண்டுகளில் இந்த அளவு இருமடங்கிற்கும் கூடுதலாக இருக்கும் என்று இத்தொழில்துறை வணிகத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

பெட்ரோலில் இருந்து உருவாக்கப்படும் பிளாஸ்டிகுகள் போல உயிரி பிளாஸ்டிக்குகளும் சிதைவடைந்து நுண் பிளாஸ்டிக்குகளாக மாறுகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அதிக அளவில் தோய்க்கும்போது உயிரி பிளாஸ்டிக் ஆடைகள் இவ்வாறு சிதைவடைகின்றன. இந்த நுண் துகள்கள் உணவு மற்றும் நீருடன் கலக்கின்றன. உயிரி பிளாஸ்டிக்குகளால் வெவ்வேறு அளவுகளில் மாசுபட்ட உணவு மற்றும் நீரைப் பயன்படுத்திய சுண்டெலிகளின் குழுக்களையும், மாசுபடாமல் இருந்த உணவு மற்றும் நீரை எடுத்துக் கொண்ட சுண்டெலிகள் அடங்கிய மற்றொரு குழுவையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.

பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் போல உயிரி பிளாஸ்டிக்குகளின் நுண் துகள்கள் சுண்டெலிகளின் கல்லீரல், கர்ப்பப்பை மற்றும் குடல் திசுக்களில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது தவிர எலிகளின் மூளையில் புண்கள் (microlesions) ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. காயமடைந்த அல்லது சேதமடைந்த திசுக்களால் இந்த புண்கள் ஏற்படுகின்றன. கூடுதலான உயிரி பிளாஸ்டிக்குகளால் எலிகளின் உடற்பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.

இந்தப் பொருட்கள் அன்றாட செயல்பாடுகளின் சீரிசை சுழற்சியை (circadian rhythms) பாதிக்கின்றன. இவற்றால் குடல் நுண்ணுயிரிகளில் சமநிலையற்ற தன்மை ஏற்படுகிறது. மரபணுக்களையும் உயிரி பிளாஸ்டிக் துகள்கள் பாதிப்பது தெரிய வந்தது. பிளாஸ்டிக்குகளால் மாசுபடாத உணவு மற்றும் நீரைப் பயன்படுத்திய எலிகளில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த ஆய்வு, பிளாஸ்டிக்குகள் போலவே உயிரி பிளாஸ்டிக்குகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உயிரி பிளாஸ்டிக்குகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். இன்றைய மனித வாழ்வில் பிளாஸ்டிக்குகள் சமையலறைப் பொருட்கள் முதல் ஆடைகள் வரை பல்வேறு அன்றாடப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. பிளாஸ்டிக்குகள் போலவே உயிரி பிளாஸ்டிக்குகளையும் விவேகத்துடன் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2025/may/13/starch-based-bioplastic-petroleum-plastic-study?

சிதம்பரம் இரவிச்சந்திரன்