அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
இலைகளில் இயற்கையாக நடக்கும் ஒளிச்சேர்க்கையைப் பார்க்கும்போதெல்லாம் வேதியியல் வல்லுநர்களுக்குப் பொறாமையாக இருக்குமாம். ஓரறிவுகூட இல்லாத பயிரினங்கள் மிகச் சுலபமாக காற்றிலுள்ள கரியமில வாயுவை - நுரைப்பஞ்சு தண்ணீரை உறிஞ்சுவது மாதிரி உறிஞ்சி - அவற்றை சக்கரையாக மாற்றிக் கொள்வதைக் கண்டு அவர்களுக்கு வியப்பும் பொறாமையும்.
இயற்கையைக் காப்பி அடிக்கும் கலைக்கு பயோ மிமிக்ரி என்று பெயர். நேனோ டெக்னாலஜிபோல பயோ மிமிக்ரி அல்லது பயோ மிமட்டிக்ஸ் என்ற அறிவியல் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த யூகென் ஷாங் மற்றும் ஜாக்கி யின் என்போர் இலைகளின் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் காற்றிலுள்ள கரியமில வாயுவைத் திரட்டி மீத்தேன் என்கிற எரிவாயுவை (சாண எரிவாயு- வாகனங்களுன்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாம்) தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்கள் கண்டுபிடிப்பில் மையமானது ஹெட்டிரோ சைக்ளிக் கார்பீன் என்ற கிரியா வூக்கியும் ஹைட்ரோ சிலேன் என்ற ஆர்கனோ சிலிக்கான் வகை ஆக்ஸி தணிப்பியுமாகும். கிட்டத்தட்ட கிரியாவூக்கியும் ஆக்ஸிதணிப்பியும் இலைகளின் ஒளிச்சேர்க்கை திட்டத்தை ஒத்தே செயல்படுகின்றன. இந்த செய்தியைக் கேட்டதும் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது. சீக்கிரமே மனிதன் மாசுபடுத்தாத எரிசக்தியை அடைந்து விடுவான் என்ற நம்பிக்கைதான் காரணம்.
- முனைவர். க. மணி (
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஓர் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே 2 ஆயிரம் டன் பாதரசம் உலகின் வெவ்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் இன்று பயன்படுத்தப்படும் வெவ்வேறு விதமான 3 ஆயிரத்தும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்க பாதரசம் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. ஆனால் பாதரசம் ஏற்படுத்தும் பாதிப்புகள் சுற்றுச் சூழலில் மட்டுமல்ல, உடல் நலனிலும் தலைமுறை தலைமுறையாய் தொடர்பவை ஆகும் என்பது வேதனைக்குரிய உண்மை ஆகும்.
நீர்ம நிலையில் உள்ள ஒரே கன உலோகம் பாதரசம் ஆகும். பாதரசம் வெண்மை நிறமுள்ளதாக இருக்கின்றது. இது இங்குலிகத்தாதுவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு தூய்மையாக்கப்படுகிறது. இது பளுமானி, அழுத்தமானி, தெர்மாமீட்டர் ஆகியவற்றால் நீர்மமாக நிரப்பப்படுகின்றது. பூச்சி மருந்துகள், எலக்ட்ரானிக் உபகரணங்கள், பல்புகள் ஆகியவற்றின் உற்பத்தியில் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
பாதரசம் பல் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் அயோடைடு, தோல் நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மெர்க்குரிக் குளோரைடு கரைசலுடன் பொட்டாசியம் அயோடைடை சேர்க்க மெர்க்குரிக் அயோடைடு உருவாகின்றன.
பாதரசம் புற ஊதாக்கதிரின் மூலமாக செயல்படுகின்றது. பாதரச ஆவி விளக்கின் குமிழில் உள்ள பாதரச ஆவியில் மின்சாரத்தைச் செலுத்த நீல நிற ஓளியைத் தருகின்றது. இந்த விளக்கு மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகின்றது. மெர்க்குரிக் ஆக்சைடு கண் அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுகின்றது.
பாதரச கூட்டுப் பொருட்கள் மருத்துவ பலன்களைக் கொண்டுள்ளன. எனினும் பாதரசம் விஷத்தன்மை மிக்கது. பாதரசத்தால் தண்ணீரைக் குடித்தால் நரம்பு மண்டலம் பாதிப்படைகின்றது. மேலும் சுவாச மண்டலமும் சிறுநீரக மண்டலமும் மெல்ல செயல் இழக்கும் அபாயமும் உள்ளன. இந்த பாதிப்புகள் அடுத்த தலைமுறைக்கும் தொடர்கின்றன.
பாதரசம் போன்று எத்தனையோ ஆயிரக்கணக்கான வேதிப் பொருட்கள் நன்மையும் தீமையையும் கொண்டுள்ளன என்பதில் விஞ்ஞான உலகம் குழம்பிப் போய் உள்ளது.
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
அரும்பொருள் காட்சியகத்திற்குள் டிக்கெட்டைக் கொடுத்துவிட்டு நுழைந்ததும் அழகிய இளவயது ஜப்பான் பெண் வந்து "நான் உதவட்டுமா? நான் இந்த மியூசியத்தின் வழிகாட்டி" என்றாள்.
அவளைக் கவனிக்கும்போது பேசுகிறாள். கவனிக்காமல் இருந்தாலும், முகத்தை திரும்பிக் கொண்டாலும் பேச்சை நிறுத்திவிடுகிறாள். குறும்புத்தனமாக யாராவது அவளைத் தொட்டுவிட்டால் முகம் சுளிக்கிறாள்.
இவள் பெயர் ஈவ்-1 (Eve-1). கொரியா ரோபாடாலஜிஸ்டுகள் தயாரித்துள்ள பெண் ரோபாட். மனித தலைமுடி, சருமம், நேர்த்தியான உடை... சட்டென்று யாருக்கும் அது எந்திரம் என்பது தெரியாது. முகத்தில் 15 வகையான பாவங்களை இவள் வெளிப்படுத்துகிறாள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க இவளை வீட்டுக்கு வாங்கிச்செல்லலாம்.
கலைக்கதிர், ஜூலை 2008
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- வீ.கிருஷ்ணகுமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
“தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்” (குறள் - 202)
ஒரு தீய செயல் தனிப்பட்ட பாதிப்பில் மட்டும் முடிவதில்லை. மேலும், ஒரேயொரு பாதிப்போடும் அது நின்றுவிடுவதும் இல்லை; அதேபோல ஒரேயொரு பாதிப்பை மட்டும் ஏற்படுத்துவதும் இல்லை. அது மேலும் பல்வேறு வகையான தீய விளைவுகளை உருவாக்கும் என்பதுதான் இந்தக் குறள் கூறும் உண்மை. இதனையே நேர்மறையாகக் கொண்டோமானால், ஒரு சிறிய நற்செயல் தொடர்ந்து நிற்காமல் பெரிய நல்விளைவை ஏற்படுத்தும் என்பதுதான் நிதர்சனம். இதனைத்தான் முற்றிலுமாக இந்தப் பட்டாம்பூச்சி விளைவு விளக்குகிறது.
பட்டாம்பூச்சி விளைவு என்பது குழப்பவியல் (Chaos Theory) சார்ந்த ஒரு முக்கியமான கருத்தாகும். ஒரு நிகழ்வின் தொடக்க நிலையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றம் என்பது, காலப்போக்கில் மிகப்பெரிய அல்லது எதிர்பாராத விளைவுகளை உருவாக்கக்கூடும் என்பதே இந்த விளைவு கூறும் உண்மை. இதன் உண்மைத் தன்மை குறித்துத் திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள், தான் நடித்த 'தசாவதாரம்' படத்தில், மனிதர்களால் ஏற்படுத்தக்கூடிய சிறிய சிறிய தவறுகள்தான் உலகத்தின் பெரும் அழிவுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது என்பதை விளக்க, சுனாமி பேரலை எழுவதற்கான காரணத்தைக் காரணகாரியத் தொடர்போடு விளக்கியிருப்பார். மேலும், சின்னச் சின்ன தவறுகளைப் பட்டாம்பூச்சியின் சின்னச் சின்ன இறக்கைகளின் அசைவின் மூலம் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.
இதனைப் பாமர மக்கள் உச்சரிக்கும் ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற பழமொழியோடும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சேமிப்பிற்கான நல்ல பழமொழி என்றாலும் கூட, தற்காலச் சூழலில் தீமைக்கும் இதனைப் பொருத்திப் பார்ப்பது பொருந்தும். ஆகவே, ஒரு சிறிய தவறு முதலில் அழிவை உருவாக்குவதில்லை; அவையெல்லாம் சேர்ந்தே உலகின் மிகப்பெரும் அபாயமாக மாறிவிடுகிறது.
பட்டாம்பூச்சி விளைவின் உருவகம்
நேபாளம் போன்ற பல உலக நாடுகளில் ஏற்படும் பெரும் வெள்ளப்பெருக்கும், மனித அழிவும், பொருளாதாரப் பின்னடைவும் நம்மால் ஏற்பட்டது என்பதை கண்டிப்பாக மனித சமூகம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இயற்கையான ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அசைவு, தொலைதூரத்தில் ஒரு புயலை உருவாக்கும் அளவுக்கு வலிமையான மாற்றத்தைத் தொடக்க நிலையில் ஏற்படுத்துமா? என்றால், அதன் அர்த்தம் உண்மையில் ஒரு பட்டாம்பூச்சி ஒரு புயலை உருவாக்குகிறது என்பதல்ல; இந்தச் சின்ன விளைவுதான் ஆரம்பநிலையில் வானிலை போன்ற சிக்கலான அமைப்புகளில் சிறிய வேறுபாட்டை அடைந்து, பின்னர் பெரிய நிகழ்வுகளாக மாறி வளரக்கூடும் என்பதை விளக்கும் உருவகம்தான் அது.
மேலும், இந்த உருவகத்திற்கு வலுசேர்க்கும் விதமாக வானிலை ஆய்வாளரான எட்வர்ட் லோர Lorenz (Edward Lorenz) அவர்களின் வானிலை மாதிரி ஆய்வுகளுடன் இந்தக் கருத்தானது முதலில் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, பின்பு 1960களில் பிரபலமானது. அதில் எட்வர்ட் லோர Lorenz கூறும்போது, “தொடக்க நிலைகளில் ஏற்படுத்தும் மிகச்சிறிய வேறுபாடுகள், நீண்டகால வானிலைக் கணிப்புகளில் மிகப்பெரிய வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும்” என்பதைத் தெளிவுபடுத்தினார். இதன் அடிப்படைதான் நாம் தற்போது எதிர்கொண்டு வரும் எல் நினோவின் விளைவுகளும், இனி எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளும் ஆகும்.
இயற்கையின் செயல்பாடுகள் எப்போதும் ஒரே மாதிரியான விளைவுகளைத் தருவதில்லை. கடலில் ஏற்படும் ஒரு சிறிய வெப்பநிலை மாற்றம், வளிமண்டலத்தின் இயக்கத்தை மாற்றி, பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் மழை, வறட்சி, புயல், வேளாண்மைக் குறைவு, உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனை எல் நினோ மற்றும் பட்டாம்பூச்சி விளைவு கொண்டு விளக்குவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எல் நினோ மற்றும் மனிதனின் பங்களிப்பு
எல் நினோ என்பது ஏதோ புதிதாக ஏற்பட்ட இயற்கை மாற்றம் என எண்ண வேண்டாம். மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசுபிக் பெருங்கடலின் கடற்பரப்பு வெப்பநிலை, இயல்பான நிலையிலிருந்து அதிகமாக உயர்வதைக் கொண்ட ஒரு இயற்கையான காலநிலை மாற்ற நிகழ்வு ஆகும். இந்த வெப்பநிலை மாற்றம் சிறிது சிறிதாக அதிகரித்ததன் விளைவு, நம்மைத் தற்போதுள்ள மிக மோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. எல் நினோ மாற்றத்தின் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், 2023–24 ஆம் ஆண்டுகளில் எல் நினோ மிகவும் வலுவான நிகழ்வாக இருந்தது. 2024 ஆம் ஆண்டு உலகளாவிய அளவில் எல் நினோவின் பங்கு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளையில், புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி போன்றவற்றால் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு, விவசாயம் மற்றும் கால்நடைகளால் உருவாகும் மீத்தேன், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் நைட்ரஸ் ஆக்சைடு, நீராவி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் மூலம் வெளிப்படும் குளோரோ புளோரோ கார்பன் போன்ற மனிதனின் பயன்பாட்டால் வெளியிடப்படும் பசுமைக்குடில் வாயுக்களின் நீண்டகாலத் தாக்கமும் ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
சங்கிலித் தொடர் விளைவுகள்
இதன் விளைவாக ஒரு சங்கிலித் தொடர் போல எல் நினோ விளைவுகள் நிகழ்ந்துகொண்டே வருகின்றன. அதில் ஒரு பகுதியாகப் பசிபிக் கடல் வெப்பநிலையில் மாற்றம், வளிமண்டலச் சுழற்சியில் ஏற்படும் மாற்றம், தொடர்ச்சியான மழைப்பொழிவு, சில இடங்களில் ஏற்படும் வெள்ளம் மற்றும் வறட்சி, வேளாண்மை உற்பத்தி குறைவு, அதன் தொடர்ச்சியாக உணவு மற்றும் பொருளாதார நிலைகளில் பல்வேறு நாடுகளில் ஏற்படும் தாக்கம் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இந்த நிகழ்வே ஒரு காலத்தில் எங்கோ ஏற்பட்ட மாற்றம், இன்று தொலைதூர இடங்களில் எதிர்பாராத விளைவுகளை உருவாக்குகிறது என்ற பட்டாம்பூச்சி விளைவை விளக்குகிறது. மேலும், கடலில் தொடங்கும் ஒரு மாற்றம், வானில் பயணித்து, நிலத்தில் மழையாகவும் வறட்சியாகவும் வெளிப்பட்டு, இறுதியில் மனிதனின் உணவுத் தட்டிலும் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதில் எல் நினோ என்பது உலகளாவிய காலநிலை அமைப்பை மாற்றும் ஒரு குறிப்பிட்ட இயற்கை நிகழ்வு; பட்டாம்பூச்சி விளைவு என்பது சிக்கலான அமைப்புகளில் சிறிய வேறுபாடுகள் எவ்வாறு பெரிய வேறுபட்ட விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை விளக்கும் கருத்து. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்க்கும்போது, இயற்கை அமைப்புகளின் தொடர்பும் உணர்திறனும் தெளிவாகப் புரியும்.
நேர்மறை மாற்றங்களுக்கான சாத்தியங்கள்
பட்டாம்பூச்சியின் இறக்கை அசைவு போன்ற ஆரம்பநிலை என்பது, சிறிய மற்றும் நல்ல தொடக்கம் எனலாம். இது வருங்காலங்களில் மிகப்பெரிய மாற்றங்களை நிகழ்த்தலாம். அதாவது நெகிழிப் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அரசின் மஞ்சப்பை நடவடிக்கை, மதுபான விற்பனைக் கூடங்களில் கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறும் முறை, போதைப் பழக்கங்களிலிருந்து இளைஞர்களை மீட்கும் சிறிய முயற்சிகள், பெண்களைப் பாதுகாக்க அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை இந்தச் சமுதாயத்தில் இனி ஏற்படவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு இந்தப் பட்டாம்பூச்சி விளைவை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
பட்டாம்பூச்சியின் விளைவுகளில் இறக்கை அசைவு புயலை உருவாக்குகிறது என்பது ஒரு கவித்துவமான உருவகம்; ஆனால், இயற்கை அமைப்புகள் ஒன்றோடொன்று எவ்வளவு நெருக்கமாக இணைந்துள்ளன என்பதை அது உணர்த்துகிறது. எல் நினோ அதற்கான நிஜ உலக உதாரணங்களில் ஒன்று. பசுபிக் பெருங்கடலில் நிகழும் மாற்றம் உலகின் வேறு மூலைகளில் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்றால், உலகம் தனித்தனி நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல; அது ஒன்றோடொன்று இணைந்த நிகழ்வுகளின் சங்கிலி என்ற உண்மை புரியவரும். அதே சமயம் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் பெரிய மற்றும் சிறிய விளைவுகளுக்கு நாடும், நாமும் ஏதோ ஒருவகையில் காரணம் என்ற உண்மையும் உணரக்கூடும்.
- முனைவர் வீ. கிருஷ்ணகுமார், உதவிப் பேராசிரியர், முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை, ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி, போடிநாயக்கனூர், தேனி மாவட்டம் – 625582
- உருகி ஓடும் இமயமலை
- உலகின் 96% மக்களைப் பாதிக்கும் புவி வெப்ப உயர்வு
- தினம் தினம் நுண் பிளாஸ்டிக் தின்னும் திமிங்கலங்கள்
- மரங்களின் திசுக்களில் நானோ பிளாஸ்டிக்குகள்
- நூறாயிரம் இந்திய உயிரைக் குடிக்கும் காற்றுமாசு
- உலகில் மூன்றில் ஒருவரை பாதிக்கும் புவி வெப்ப உயர்வு
- ஐம்பதாண்டில் அழியப் போகும் இந்தியப் பெருங்கடல் பவளப் பாறைகள்
- ஒளிச்சேர்க்கை செய்யாமல் அழியும் வெப்ப மண்டலக் காடுகள்
- இனி பேசிப் பயன் இல்லை
- "நம்மைக் கொல்ல நாமே காசு கொடுக்கிறோம்!!"
- மனிதனின் வயதை அதிகரிக்கும் அதி தீவிர வெப்பநிலை
- காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.