புவி வெப்பமடைதலால், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வது குறித்து, பல நாடுகள் கவலை அடைந்துள்ளன. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் இப்போது உருகி வருகின்றன. மெல்ல மெல்ல கடல் மட்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. மாலத்தீவு விரைவில் கடலுள் மூழ்கும் அபாயம் தோன்றியிருக்கிறது. மாலத்தீவு தன் மக்களைக் குடியேற்றிப் பாதுகாக்க வெளிநாட்டில் இடம் வாங்குகிறது. 2050- க்குள் இந்தியாவில் மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் பல நாடுகளின் நிலப்பகுதிகள் கடலுள் மூழ்குவதால் 150 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரம் ஜகார்த்தா இடம் மாற்றப்பட இருக்கிறது. அதை ஒட்டிய கடற் பகுதியில் ஓராண்டுக்கு 1.5 சென்டிமீட்டர் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. 2050 இல் ஜகார்த்தா கடலில் மூழ்கும் என்று ஆய்வாளர் ஹென்றி ஆண்ட்ரியாஸ் கணித்துள்ளார்.இந்தோனேசியாவின் சில பகுதிகளில் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் அடிப்படையில் கணக்கிட்டால், 10 ஆண்டுகளில் 2.5 மீட்டர் கடல் மட்டம் உயர்ந்து,250 அளவில் ஜகாத் தான் முற்றிலுமாக காணாமல் போகும். அவ்வாறெனில், ஜகார்தாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, கொச்சி போன்ற நகரங்கள் ஒன்பது ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவிற்கு கடலில் மூழ்கும் என்று தினமலர் ஏடு 7 நவம்பர் 2021 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடல் மட்ட நீர் உயர்வால் 50 பெரிய கடற்கரை நகரங்கள் கடலில் மூழ்கும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. 2030-க்குள் மும்பை, கொல்கத்தாவுக்கு தெற்கே உள்ள சுந்தரவனக் காடுகள், கொல்கத்தா, ஒடிசாவில் கட்டாக், குஜராத் கடற்கரையோர நகரங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்குக் கடலுக்குள் மூழ்கும். 2100-ல் கடற்கரை நகரங்கள் அனைத்துமே கடலுள் மூழ்கும் அபாயம் காத்திருக்கிறது.
இன்றிலிருந்து 30 ஆண்டுகளுக்குள் ஆயிரக்கணக்கான குட்டித் தீவுகள் கடலுள் மூழ்கி விடும். ஏனெனில், ஒரு வருடத்திற்கு 270 பில்லியன் டன் பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன. கிரீன்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் உருகினால் கடல் மட்டம் 7 மீட்டர் உயர்ந்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கும் ஹவாய்க்கும் நடுவில் பசிபிக் கடலில் உள்ள துவாலு (Tuvalu) என்ற தீவு -நாடு மிகப்பெரும் அச்சத்தில் இருக்கிறது. அதிலிருந்த ஒன்பது தீவுகளில் இரண்டு தீவுகள் மூழ்கி விட்டன. மீதி உள்ளவை கடல் மட்டத்திலிருந்து மூன்று மீட்டர் உயரத்தில் உள்ளன. மாலத்தீவுகள், மார்ஷல் தீவுகள், ஃபிஜி தீவுகள், சமோவா தீவுகள் - அனைத்தும் கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தூரத்தில் இல்லை.
இந்திய நகரங்கள் குறித்து அமெரிக்காவின் நாசா (National Aeronautics and Space Administration) ஓர் எச்சரிக்கையை அளித்துள்ளது. 2050-இல் 12 இந்திய நகரங்கள் கடலுள் மூழ்கும் என்று கூறியுள்ளது. அதுவும் 2.7 மீட்டர் அளவு ஆழத்துக்கும் கீழ் மூழ்கும் என்று தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி, சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, மங்களூர், கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.
2024 ஆகஸ்ட் 4 அன்று மாலைமலர் இதழ் ஒரு செய்தியை வெளியிட்டது. 2040-ல் சென்னையின் நிலப்பரப்பில் 7% கடலுள் மூழ்கும் என்று தெரிவிக்கிறது.
1987 - 2021 க்கு இடைப்பட்ட காலக்கடடத்தில், சென்னை கடல் மட்டம் 6.79 மில்லி மீட்டர் உயர்ந்து இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் 2,100-ஆம் ஆண்டளவில் 74. 7 செ.மீ அளவிற்குக் கடல் மட்டம் உயரும் என்று கணக்கிட்டுள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் அறிவியல் -தொழில்நுட்பம் -மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP - The Centre for Study of Science, Technology and Policy) , சென்னை தீவுத்திடல், மயிலாப்பூர், தமிழ்நாடு அரசின் நினைவுச் சின்னம், பள்ளிக்கரணை சதுப்பு நிலம், சென்னை துறைமுகம் உள்ளிட்டவை கடலுள் மூழ்கும் என்று எச்சரித்துள்ளது. சென்னையில் மூழ்க இருப்பதாகக் கூறப்படும் 7.29% நிலப்பகுதி என்பது 86.6 சதுர கிலோமீட்டர் ஆகும். 2060 இல் சென்னை நிலப்பரப்பில் 9.65% , அதாவது சென்னையின் 114.31 சதுர கிலோமீட்டர் கடலில் மூழ்கும்.
இவ்வாறு கடல் மட்டம் உயரும் வேகம் புவி வெப்பமயமாதல் காரணமாக இப்போது அதிகரித்து வருகிறது. 2040-ல் தூத்துக்குடியில் 10% மூழ்கும் என்று தெரிகிறது.
தமிழ்நாட்டில் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை 3029.33 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கடலுள் மூழ்கும் என்று கணித்துள்ளனர்.
காவிரிப் படுகையின் நிலை என்ன?
காவிரிப் படுகையின் அழிவு இரண்டு பங்கு வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம், காவிரிப் படுகையின் நிலப்பரப்பு மேலும் மேலும் கீழ்நோக்கி தாழ்ந்து கொண்டிருக்கிறது (subsidence ); அதே நேரம், கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நகரங்களைப் பற்றி பேசும் ஆய்வாளர்களும், அறிவியல் அறிஞர்களும், அரசியல் தலைவர்களும், ஒரு மூலையில் ஒதுங்கி இருக்கும் காவிரிப் படுகை பற்றிப் பேசுவதில்லை. இதில் வியப்பு என்னவென்றால், காவிரிப்படுகை மக்களும், காவிரி படுகையைச் சேர்ந்த அரசியல் ஆளுமைகளும் இது குறித்து சிந்திப்பதில்லை.
காவிரிப்படுகையின் பெரும் பகுதி கடல் மட்டத்தை விட ஒரு மீட்டர் அல்லது மூன்று அடி உயரத்திலேயே இருக்கிறது. இந்த மூன்று அடி உயரம் என்பது விரைவில் கடல் மட்டத்தை விடத் தாழ்ந்து போகும். காவிரிப்படுகையில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் நிலம் தாழ்ந்திருக்கிறது என்பது உண்மை. ஓஎன்ஜிசி யின் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்கள் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எண்ணெய் -எரிவாயு பெருமளவு நீருடன் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பதால், நிலத்தின் கீழே ஏற்படும் வெற்றிடத்தைச்சரி செய்ய நிலம் கீழ்நோக்கித் தாழ்கிறது.
வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டம் (2020) புதிய கிணறுகளை அமைக்க அனுமதிக்காத நிலையில், பழைய கிணறுகளை மராமத்து செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு ஒவ்வொரு கிணற்றிலும் 45 முதல் 60 நாட்களுக்கு ஓ.என்.ஜி.சி. வேலை செய்கிறது. பழைய எண்ணெய்க் கிணற்றின் வாய்க்குள் சற்றே சிறிய குழாய்களைச் செலுத்தி, 1500 மீட்டர் ஆழத்தில் பக்கவாட்டில் திருப்பி, பக்கவாட்டுக் கிணறுகளை அமைக்கிறது. அக்கிணறுகள் 3 கிலோ மீட்டர் ஆழம் வரை செலுத்தப்படுகின்றன. ஷேல் அல்லது களிப்பறையில் அக்கிணறுகள் அமைக்கப்படுகின்றன.
காவிரிப் படுகைக்கு அருகாமையில் உள்ள ஆழமற்ற கடற்பகுதி, ஆழமான கடற் பகுதியில் வேதாந்த நிறுவனமும், ஓ எம் ஜி சி நிறுவனமும் பல நூறு எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைக்க முன்னமே உரிமங்களைப் பெற்றிருக்கிறார்கள். கடலுக்குள் கிணறுகளை அமைத்தாலும் அது காவிரிப் படுகையை மிகப்பெரும் அளவிற்குப் பாதிக்கும்.
நிலத்தைக் குடைந்து எண்ணெயையும், எரிவாயுவையும் தண்ணீரோடு சேர்த்து பெருமளவுக்கு தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டிருப்பதால் முன்னமே காவிரிப் படுகையின் நிலப்பரப்பு தாழ்ந்து போயிருக்கிறது. ஓ என் ஜி சி நிறுவனம் எண்ணெய் - எரிவாயு மற்றும் தண்ணீரை தொடர்ந்து உறிஞ்சி எடுக்குமானால், காவிரிப்படுகையில் நிலம் உள்வாங்குதல் விரைவு படுத்தப்படும்.
இதுபோன்றே ஆந்திராவில் கிருஷ்ணா கோதாவரி ஆற்றுப் படுகைப் பகுதிகள் எண்ணெய் - எரிவாயுத் திட்டங்களால் 3 அடி முதல் 6 அடி வரை நிலப் பகுதிகள் தாழ்ந்து போயிருக்கின்றன. இது மிகப்பெரும் கவலையை அப்பகுதி சூழலியலாளர்களுக்கு உருவாக்கி இருக்கிறது. ஜி கிருஷ்ணராவ் என்ற ஆந்திர பிரதேச பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூகோளவியலாளர், கிருஷ்ணா - கோதாவரிப் படுகையின் உயரம் தாழ்ந்து போவது குறித்து ஆய்வு செய்தார். ஜி. கிருஷ்ணராவ் கிழக்குக் கோதாவரி பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி வரை நிலப்பகுதி உள்வாங்கி இருக்கிறது என்று அறிவித்திருக்கிறார் ( The Hindu, 23 July 2017 ) . இதை ஆய்வு செய்த ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள படுகை ஆய்வுகள் நிறுவனம் (Delta Studies Institute) தெளிவாக காணக்கூடிய அளவில் நிலத்தில் மாற்றங்கள் ( noticeable land changes) இருப்பதாக அறிக்கை அளித்தது. கிருஷ்ணா - கோதாவரி படுகையில் என்ன நிகழ்ந்திருக்கிறதோ அது காவிரிப் படுகையிலும் நிகழ்ந்திருக்கிறது.
சான்றாக, மயிலாடுதுறை உள்ளிட்ட பழைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் 165 கிலோமீட்டர் தூரம் உள்ள கடற்கரையின் நிலவியலை ஆய்வு செய்து, அதன் புவியியல் அமைப்பு குறித்து, அது ஒரு "தாழ்வான கடற்கரை மண்டலம்" (the low elevation coastal zone) என்றும், சில பகுதிகள் கடல் மட்டத்தை விடவும் தாழ்வாக இருக்கிறது (below sea level) என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் (Times of India, 19 July 2023). காவிரிப் படுகையில் பல கிராமங்கள் கடல் மட்டத்திற்கும் கீழே இருக்கின்றன என்பதை அறிய பலருக்கும் வியப்பாக இருக்கும். சில பகுதிகள் மட்டும் 5 மீட்டர் உயரத்தில் இருக்கின்றன. காவிரி படுகையில் 75% நிலப்பரப்பு நிலம் தாழ்ந்து கடலுள் மூழ்கும் நிலையை அடைந்திருக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில இதழ் ஓர் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கிறது ("submergence due to land subsidence" Times of India, 19 July 2023). அது மட்டுமின்றி, படுகையின் பல இடங்கள் கடல் மட்ட அளவிற்கே, சமமாக இருக்கின்றன ( 0 m level).
இந்நிலையில் நம் முன் உள்ள கேள்வி இதுதான். கடல் மட்டத்தை விட அதிக உயரத்தில் இல்லாத காவிரிப் படுகையில், மேலும் நிலம் உள் வாங்கினால், அதே நேரம் கடல் மட்டமும் உயர்ந்து வந்தால், காவிரிப் படுகை என்னவாகும்? காவிரிப் படுகையின் பெரும்பகுதி கடலுக்குள் போய்விடும் என்பதை எவராவது நமக்கு உணர்த்த வேண்டுமா? இப்படி ஓர் அபாயம் இருக்கிறது என்பதை இன்னமும் நாம் உணரவில்லை.
பேரழிவும், பெருந்துயரும் எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வரலாம். இன்று நிலச்சரிவு ஏற்பட்டு வயநாடு மண்ணால் மூடப்பட்டிருக்கிறது. நாளை காவிரிப்படுகை பேரழிவுத் திட்டத்தால் நிலம் உள்வாங்கப்பட்டு கடல் நீரால் மூடப்படும். இரண்டிற்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? வரலாற்றுப் புகழ் மிக்க, தமிழர்களின் பண்பாடு செழித்த , ஏராளமான தொல்லியல் சான்றுகளைத் தன் வயிற்றுக்குள் உள்ளடக்கி வைத்திருக்கக் கூடிய, இன்றளவும் தமிழ்நாட்டு மக்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கும் உணவுக்கலமாக இருக்கக்கூடிய, தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீரை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய, இந்த காவிரிப்படுகையை இழந்து விட்டால் தமிழினம் வாழுமா?
இன்று வயநாடு, நாளை காவிரிப்படுகை! காவிரிப்படுகையின் இருப்பு தமிழினத்தின் இருப்புக்கு அவசியம்!
- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு & நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்.