தெற்காசிய நகரங்களில் காற்றுமாசு, நூறாயிரக்கணக்கானோரின் முன்கூட்டிய மரணங்களுக்கு (Pre-mature deaths) காரணமாகிறது என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. நாளுக்குநாள் அதிகரிக்கும் காற்றுமாசு, கடந்த 14 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்துவரும் வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் 1,80,000 பேர் அகால மரணமடையக் காரணமாக இருந்தது என்று பெர்மிங்ஹாம் மற்றும் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் காற்றுமாசினால் 2.4 மில்லியன் மனிதர்கள் முற்றிலும் தவிர்க்கக்கூடிய அகால மரணங்களுக்கு இரையாகின்றனர். மாசுப்பொருட்கள் திட, திரவத் துளிகள் அல்லது வாயு நிலையில் காணப்படுகின்றன. இதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் உடனடியாகத் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
ஆண்டுதோறும் இந்தியாவில் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, சூரத், புனே மற்றும் அகமதாபாத் நகரங்களில் காற்றுமாசினால் நூறாயிரக்கணக்கானோர் முன்கூட்டியே இறக்கின்றனர். தரவுகளில் இருக்கும் பழுதுகளை அகற்றி, உலகளவில் 46 பெருநகரங்களில் ஆய்வுக்குழுவினர் மாசின் தரத்தை ஆராய்ந்தனர். ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் நாசா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முகமையின் செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளிலிருந்து 2005 முதல் 2018 வரை பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கனக்ரி (Conakry), தாரெஸ் சலாம், இபாடன் (Ibadan), கடுனா (Kaduna), கம்பாலா, கானோ (Kano), கார்டூம் (Khartoum), கிகாலி (Kigali), கின்ஷாசா (Kinshasa), லாகோஸ், லிலாங்வே (Lilongwe), லுவாண்டா (Luanda), லுபும்பாஷி (Lubumbashi), லுசாக்கா, மொம்பாசா (Mombasa), என்ஜமினா (Ndjamena), நைரோபி, நியாமி (Niamey), வாகாதூகு (Ouagadougou) ஆகிய ஆப்பிரிக்க நகரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சூரத், புனே ஆகிய இந்திய நகரங்களுடன், வங்கதேசத்தில் சிட்டகாங், டாக்கா மற்றும் பாகிஸ்தானில் கராச்சி நகரங்களில் காற்றுமாசு மனிதர்களின் உயிர் பறிக்கும் அளவிற்குப் பீதியூட்டும் வகையில் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா, மணிலா, நாம் பென் மற்றும் யாங்கூன் (Yangon); மத்திய கிழக்கில் ரியாத், சனா நகரங்கள் மாசினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
'சயன்ஸ் அட்வான்சஸ்' (Science Advances) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கட்டுரை, காற்றின் தரம் குறைவதால் இந்நகரங்களில் வாழ்பவர்கள் அதிக நச்சுக்காற்றிற்கு ஆளாகி அகால மரணம் அடைகின்றனர் என்று கூறுகிறது. இந்த இறப்புகள் கிராமப்புறங்களை விட நகரங்களிலேயே அதிகம் சம்பவிக்கின்றன. ஆய்வு நடத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் அதிக அளவில் ஆபத்தான நேரடி மாசிற்கு ஆளாகின்றனர்.
இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நச்சுக்களின் அளவு அதிகரிக்கிறது. 14% நைட்ரஜன் டை ஆக்சைடு, 8% பி.எம் 2.5 (PM 2.5 - Particulate matter) நுண்துகள்கள், 12% அமோனியா, 11% அதிவிரைவு வினைபுரியும் தன்மையுடைய ஆவியாகும் வேதிப்பொருட்கள் போன்றவை இப்பகுதிகளில் ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கின்றன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதிகரிக்கும் மாசிற்கு, பெருகும் தொழிற்சாலைகள் வெளிவிடும் ரசாயனப் பொருட்கள், பெருகி வரும் போக்குவரத்து, கரி மற்றும் விறகு எரித்தல் மற்றும் கழிவுகளை எரித்தல் ஆகியவை காரணமாகின்றன.
முன்பு வேளாண் கழிவுகளை எரித்தல், காடு அழிப்பு போன்றவை காற்றுமாசிற்கு முக்கியக் காரணமாக இருந்தன என்றாலும், இப்போது வெப்பமண்டல நாடுகளின் நகரங்களில் பெருகிவரும் போக்குவரத்து அகால மரணங்களுக்கு முக்கியக் காரணமாக மாறியுள்ளது என்று கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானியும், பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு விஞ்ஞானியும், ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியருமான கார்ன் வோரா (Karn Vohra) கூறுகிறார்.
தெற்காசிய நகரங்களில் காற்று மாசிற்கான முக்கியக் காரணம் போக்குவரத்தால் உருவாகும் நச்சுப்புகை மற்றும் அதில் கலந்துள்ள பொருட்களே. உலகின் மற்ற பல நகரங்களில் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் காற்றுமாசு, இப்பகுதிகளில் ஆண்டுதோறும் நிகழ்கிறது. இந்நகரங்களில் ஆய்வுக்காலத்தில் மக்கள் தொகை 1.5 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஆய்வு செய்யப்பட்ட 46 நகரங்களில், 40 நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடும், 33 நகரங்களில் பி.எம் 2.5 நுண்துகள்களும் அதிகரித்துள்ளன. தெற்காசிய நகரங்களில், குறிப்பாக டாக்காவில் 24,000 பேர், இந்திய நகரங்களில் 1,00,000 பேர் காற்றுமாசினால் முன்கூட்டியே உயிரிழக்கின்றனர்.
ஆப்பிரிக்க நகரங்களில் மேம்படுத்தப்பட்ட சுகாதாரப் பணிகள் காற்றுமாசினால் நிகழும் மரணங்களைக் குறைக்க உதவியுள்ளன என்று ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாகக் கருதப்பட்டிருந்தது போல இல்லாமல், விரைவான தொழிற்துறை வளர்ச்சியால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளை உணர்ந்ததால் இப்பகுதியில் இன்று காற்றுமாசிற்கு அது காரணமாக அமையவில்லை என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியரும், கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழக புவியியல் விஞ்ஞானியுமான இலாய்ஸ் மேரைஸ் (Eloise Marais) கூறுகிறார்.
மாறிவரும் உலகச் சூழ்நிலையில் காற்றுமாசிற்கான காரணங்களும் மாறுவதையே இது எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வுகள் பெர்மிங்ஹாம் பல்கலைக்கழக முனைவர் திட்ட உதவித்தொகை நிதியுதவியுடன் நடத்தப்பட்டன. ஆய்வு முடிவுகள் வெப்பமண்டல நகரங்களில் காற்றுமாசைக் குறைக்க நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியாளர்களுக்கு உதவும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்