‘A Wednesday’ இந்திப் படத்திலிருந்து மறு ஆக்கம் செய்து எடுக்கப்பட்ட உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் இன்னமும் அதிக வன்முறையுடன் நுண்மையான அதிகாரத்தையும் மதவாதத்தையும் பார்வையாளனுள் நுழைக்கும் படமாகச் செயல்படுகிறது.
தீவிரவாதிகள் குண்டு வைத்து மக்களைக் கொல்கின்றனர். போலீசில் பிடிபட்டால்கூட, பிணைக் கைதிகளாக மக்களைப் பிடித்தோ, பயணிகளைக் கடத்தியோ தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மிஸ்டர் பொதுஜனம் 3 இஸ்லாமியத் தீவிரவாதிகளைப் போலீஸ் உதவியுடன் கடத்தி மக்களைப் பயத்தின் பிடியில் இருந்து மீட்க அவர்களைக் குண்டு வைத்தும் சுட்டும் கொல்கிறார்.காமன் மேன், யாரப்பா இந்த மன்மதக் குஞ்சு? ‘வெகுஜனம்’ என்று பார்த்தால் இவர் அரசியல் சட்டம் வகுத்துள்ள ஓட்டுப்போடும் வாய்ப்புள்ள ஒரு மனிதனைத்தான் சொல்கிறார். “தக்காளி வாங்கிட்டுப் போய் வீட்டுல நிம்மதியா துன்னனும்” என்பதே இவர் நோக்கம். எண்ணற்ற பிரிவினைகளை ஏற்படுத்தியுள்ள சாதியத்தையோ, அந்த எந்தப் பிரிவிலும் இடம்பெற இயலாத கடைக்கோடி மக்கள், கால் தூசியிலும் கீழாய் மதிக்கப்படும் சூத்திரர்கள், ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை மக்கள், இவர்கள் காமன் மேன் வகையறாவிற்குள் வருவதில்லை.
‘மக்கள்’ என்று பார்த்தால்...?
மக்கள் என்றால் ஓர் அரசு, நாட்டிற்கு உட்பட்ட ஜனங்கள். இந்த மக்கள் எனும் பதமே அவர்கள் தாழ்நிலையோர், ஒடுக்கப்பட்டோர் என்ற அர்த்தத்தை உரைக்கிறது. இவர்கள் எப்போதும் ஆளப்பட வேண்டியவர்கள். ஆள்பவரைத் தேர்ந்தெடுப்பதே இவர்கள் பணி; அவர்களின் வழிகாட்டுதலுக்கும் அவர்களின் சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் போலீசிற்கும் அடங்கி நடக்க வேண்டிய நபர்களுடைய கூட்டத்தின் ஒரு அலகுதான் இந்தப் பொதுஜனம்.
இந்த அலகுகள் வெவ்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டு தனக்கான அடையாளத்தை, மதம், உழைக்கும் வர்க்கம், இனம், மொழி என்பதன் கீழ் அரசுக்கெதிராய்த் திரளும்போது, அரசு இவர்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தி இவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்று சித்தரித்து இவர்களை அழித்து ஒழிக்கப் பார்க்கிறது.
இந்திய அரசு X காஷ்மீர் மணிப்பூர், நாகா தீவிரவாதிகள்
ஜார்கண்ட் (சல்வாஜல்தும்) X மாவோயிஸ்ட்
இலங்கை அரசு X புலிகள்
அமெரிக்கா X கம்யூனிச, இஸ்லாமியத் தீவிரவாதிகள்
இவர்களைக் கையாள்வதற்கு எந்தச் சட்டமும் நீதி, நேர்மை, தர்மம், நியாயம், வழக்கு, எதுவும் தேவையில்லை என்று கூறுகிறது.
இதைத்தான் நாம் சனநாயக அழித்தொழிப்பு, மனித உரிமை மீதான தாக்குதல், பாசிசம் என்கிறோம்.
அரசே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. நமக்கு மிச்ச மீதியிருக்கும்... இருப்பதாய்க் காட்டப்படும் சொற்ப உரிமைகளின் கழுத்தை இறுக்கி நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் வெட்னஸ்டே இயக்குநரின் வழிவந்த கமலஹாசன் போன்றோர் நீங்கள் இறுக்குவது மென்மையாக இருக்கிறது. பலத்துடன் அழுத்தி ஒரேயடியாக இந்த உரிமைகளைக் கொன்று விடுங்கள் என்கிறார்கள்.
ஒரு நடைமுறைக்காக, அரசுக்கு ஏன் எதிர்ப்பு வருகிறது என்று நியாயமாய்ப் புரிந்து கொள்ளாமல், அதைத் தீர்ப்பதற்கான வழி வகைகளை ஆராயாமல்,
நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என வேர்களைக் கண்டறியாமல், குடல்வாலா? வெட்டிவிடு... கர்ப்பப்பையா? கழட்டிவிடு... மார்பகமா? அறுத்துவிடு... சிறுநீரகமா? மாற்றி விடு... என உடனடித் தீர்வுகளை அள்ளிவீசுகின்றார் அலோபதி மருத்துவம் போல.
“அரசே வன்முறையுடன் செயல்படுகின்றது. மக்கள் விரோத அரசாய் இருக்கிறது. மனித உரிமைகளைக் காலில் போட்டு நசுக்குகின்றது” என்று புலம்பிக் கொண்டிருக்கையில் கொலைஞர் கமல்... “என்ன அரசு இது... கையாலாகாத்தனமாயிருக்கிற அரசு, பிரச்சனை பண்ணினால் ஒழிக்க வேண்டியதுதானே! பூவா தலையா சுண்டி நெற்றியில் போட்டுத்தள்ளி (இரத்தப் பொட்டு வைத்து தலைப்பகுதியில் பிரச்சனை பண்ணும் 200 காஷ்மீர்த் தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ள வேண்டியதுதானே) பிரச்சனைகளை உடனடியாகத் தீர்க்க வேண்டியது தானே...” என்று காமன் மேனாகிச் சாதிக்கிறார்.
சீட்டுக் குலுக்கித் தேர்ந்தெடுக்கும் கனவான் காமன் மேன் அவர்களே...
இனயத்துல்லா, அப்துல்லா, அகமதுல்லா மட்டும் தான் கிடைப்பார்களா? கிடைத்த கரம்சந்தும்... தீவிரவாதிகளுக்கு, அதுவும் இஸ்லாமியத் தீவிரவாதி களுக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து சப்ளை செய்தவர். ஏன்? அத்வானி, சுப்ரமணிய சாமி, ஜெயேந்திரர், ஹர்சத் மேத்தா, மோடி, சாத்விக் ரிதம்பரா,... கிடைக்க மாட்டார்களா? அரசு நியமித்த கிருஷ்ணா கமிசன் அறிக்கை, கோத்ரா அறிக்கை, தெகல்காவால் அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள். ஆனந்த்பட்வர்த்தனின் ராம் கி நாம், கோவை குண்டு வெடிப்பிற்குக் காரணமான நவம்பர் கலவரம் பற்றிய மனித உரிமைக் குழுவின் அறிக்கைகள் என எதுவுமே காமன் மேனுக்குத் தட்டுப்படாதா? ஏகப்பட்ட சிம் கார்டுகள், மொபைல் போன், ஒரு லேப்டாப், சில மென் பொருள்களைக் கொண்டு அரசு, உளவுத் துறைப் பிரிவுகள் அனைத்துக்கும் டிமிக்கி கொடுப்பவர், போலீசை மிரட்டித் தீவிரவாதிகளைக் கடத்திக் குண்டு வைத்துக் கொல்பவர். தீவிரவாதிக்கு மட்டும்தான் குண்டு கிடைக்குமா? நாலு வாரத்தில் திட்டம் தீட்டி, கொலை செய்து தடயமில்லாமல் தப்பிப்பவர்.
அப்படியே தடயம் கிடைத்தாலும் ஐ.ஐ.டி. டிராப் அவுட் அம்பியும், கடலை தின்னு கொட்டாவிவிடும் இன்ஸ்பெக்டரும் (ஹி ஈஸ் கிரேட்) என்று தேசபக்தி கீதம் பாடி அவரை நழுவ விடுவர்.
கண்டுபிடிக்க வேண்டும் (ஈகோவிற்காக) என்று அலையும் கமிசனர் மோகன்லால், அரசு மற்றும் காமன்மேன் கமலஹாசன் அனைவருக்கும் ஒரே நோக்கம்தான். தீவிரவாதிகள் கொல்லப்படவேண்டும். அரசுக்கெதிராய் மக்கள் கிளர்ந்தெழும் போது அவர்களுக்குத் தலைமையேற்பவர்கள் தீவிரவாதத் தலைமையாகவும் பயங்கரவாதியாகவும் அடையாளம் காட்டப்பட்டு அழித்து ஒழிக்கப்படுவர், பட வேண்டும். அப்போது ஒரே புள்ளியில் இம் மூவரும் (அரசு/போலீஸ்/கொலைகாரன்) ஒன்றிணையும்போது குற்றவாளியான கமல் - கிரேட் மேன், தைரியசாலி, திறமைசாலி வீரனாகி சட்டம், குற்றம், பழி, தண்டனை ஆகியவற்றிலிருந்து மறைக்கப்பட்டு தப்புவிக்கப்படுவார்.
எல்லாக் கமல் படத்திலும் கக்கூஸ் வருவதும் அங்கே தன் ஜிப்பைக் கழற்றி ஏற்றுவதும் இந்தப் படத்திலும் இருக்கிறது. ( அது என்ன கக்கூஸ் சீன், கமலுக்கு சென்டிமெண்ட் சீனா?) என்ன டாய்லெட்டுப்பா அது? போலீஸ் ஸ்டேசன் டாய்லெட்டா? ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாய்லெட் மாதிரி இருக்குது. மக்கள் உள்ளே போனாலே உருவியயடுக்கிற போலீஸ் ஸ்டேசன்ல தலைவர் கமல் பெரிய பையைத் தூக்கிட்டுப் போய் பதட்டமில்லாமல் குண்டு வைக்கிறாராமா? ஏற்கனவே வர்ற மக்களைத் திருடன் மாதிரி பார்க்குற போலீஸ், இனி குண்டு வைக்கிற தீவிரவாதி மாதிரியும் பார்க்க ஆரம்பிக்கும்.
ஆர்.டி.எக்ஸ் பாமினை ஸ்டேசன்ல கண்டறிஞ்சவுடனே கமலின் வார்த்தைகள்... இப்பத் தெரிஞ்சுதா மாரார்? குண்டு வெச்சவன் குப்பனோ சுப்பனோ இல்லீன்னு... அப்போ காமன் மேன் இல்லன்னு கமலின் வாதம். “பிற்பாடு நான் ரேசன் கடையில் புழுத்த அரிசி வாங்க கடைசியா நிக்கிற முகம்” னு மாறுது.
கமல் நிபந்தனைகளைக் கமிசனருடன் பேசும் போது மாரார், குண்டு, வெடிக்காம இருக்கனும்னா அதுல இருக்கிற வயர்கள்ல பச்சை வயரைக் கட் பண்ணிட்டு மத்த இரண்டையும் கனெக்சன் குடுங்க.
இது தெளிவாக குண்டு வெடிப்புடன் தொடர்புடைய பச்சை நிறத்தை (முஸ்லீம் தீவிரவாதம்) வெட்டிவிட்டு பிறவற்றை இணையுங்கள் என்று தொனிக்கும்படியாக வசனங்கள் உள்ளன.
இதில் வெட்னஸ்டே படத்துல வெளிப்படறது அதிகார வர்க்கத்தோட குறுக்கீடு எதுவும் இல்லாம நேரடியாக முதல்வர், கமிசனர் இரண்டு பேருடைய உரையாடல்ல பணயக் கைதிகளை ஒப்படைப்பது, கொலை செய்வது (போலி மோதல் கொலை) என்பது முடிவாகிறது.
ஆனால் உன்னைப் போல் ஒருவன் படத்தில் ரொம்ப செயற்கையாக ஒரு புது முரண் உருவாக்கப்படுகிறது.
ஒரு சமகாலத் தன்மை வாய்க்கவும் கருணாநிதி குரல்ல கரகரன்னு பேசி, தலைமைச் செயலாளரையும் அதே மாதிரி உருவாக்கி யிருக்கிறார்கள். நிர்வாக அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்திற்கு அடங்கின மாதிரியும், போலீஸ், சட்டம், ஒழுங்கு அதிகாரத்திற்கு எதிராகவும் இருக்கிற மாதிரி ஒரு ஈகோ மோதல் போலியாக உருவாக்கப்படுகிறது. அரசியலும் நிர்வாகமும் பொறுப்பிலிருந்து நழுவி சமய சந்தர்ப்பத்திற்கேற்ப நடந்து பச்சோந்தித் தன்மை உடையதாய்க் காண்பிக்கப்படுகிறது. அதே நேரத்தில் போலீஸ் துறையோ மக்கள் நலத்திற்காக ஆபத்தை எதிர்நோக்கி உயிரைப் பணயம் வைத்துச் செயல்படத் தயங்காதவர்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். வாச்சாத்தி/சின்னாம்பதி/பத்மினி கொலை/தாமிரபரணி படுகொலைகள்/ வீரப்பன் கொலை/ போலி மோதல் கொலைகள் என எல்லாப் பிரச்சனைகளிலும் சந்தி சிரித்துப் போன போலீசோட மானத்தையும் தொப்பையையும் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியைக் கொலைஞர் கமலஹாசன் செய்திருக்கிறார்.
பொதுவாக ரீமேக் படங்களின் வசனத்தைத் தமிழில் மாற்றிக் கொண்டு வருவாங்க. இங்கு கொலைஞர் இதை மட்டும் செய்யலை. அதற்குப் பதிலா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசியல் தலைமைக்கும் அழுகிப் போன ஈரல் போலீசுக்கும் புதுசா இமேஜ் கிரியேட் பண்றார்.
ஆரிப் என்ற முஸ்லீம் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை மனிதத் தன்மையற்று நடமாடும் ரோபோ போன்று படைத்து, குற்றம் சாட்டப்பட்டவரைச் சித்திரவதை செய்து உண்மை அறிய முயலும்‘பயங்கரவாத ஒழிப்புப் படை’யின் அடியாளாகக் காட்டுகிறார்.
பஞ்சாப், ஆந்திரம், ஒரிஸ்ஸா என்று விளைச்சல் அதிகமாயுள்ள பல மாநிலங்களில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு பஞ்சத்தால் மாள்கையில், 70 கோடி பேருக்கும் மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கும் கீழ் சம்பாதித்துக் குடும்பம் நடத்துகையில் கல்வி, மருத்துவம், உணவு, உறையுள் எதுவுமில்லாமல் ஏங்கித் தவிக்கையில், காமன் மேனுக்கு அதைப் பற்றிக் கவலையில்லாமல், ஆடம்பர ஐந்து நட்சத்திர, டாடாவின் ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு வருத்தப்பட்டுக் கேட்கிறார். மேற்கு வாசல் பற்றி எரிகிறது. யார் பேசினீர்கள்? என்று
குஜராத் கலவரத்தில் முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்கள் வயிறு கிழிக்கப்பட்டு, குழந்தை வாள்நுனியில் வெட்டப்பட்டது என்பது அனைத்து கோப்புகளிலும் பதிவாகியிருக்க, கமலோ ( அந்த இடம் குஜராத், அரசு பிஜேபியின் மோடி அரசு, சுற்றி இருந்தவர்கள் குஜராத் போலீஸ், வன்முறையாளர்கள், ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வலதுசாரித் தீவிரவாதிகள்) எல்லா உண்மை களையும் மறைத்து, வட இந்தியாவில் ஓரிடம் என்று புகை மூட்டமாய்ச் சொல்லி அந்தப் பெண், ஏன் முஸ்லீம்தானா, பிரிட்டிசாகவோ, பிரெஞ்சாகவோ, ஜெர்மனிப் பெண்ணாகவோ இருந்தால், உங்களுக்குக் காப்பாத்தனும்னு தோணாதா? என்று முஸ்லீம் பெண்ணின் கொலையைச் சாமர்த்தியமாக, பொதுவான ஒரு பெண்ணுக்கு நடந்ததாய்க் காட்டியிருக்கிறார்.
மீடியா பெண், கமிசனர் மோகன்லாலிடம் படம் எடுப்பது என்பது எனது உரிமை எனும்போது அவர் சொல்லும் வசனம்.
“உனது உரிமை எனது செருப்புக்குச் சமம்.”
“நீ யார்?” என்ற கேள்விக்கு அவள் வரிசையாகப் பதில் சொல்கையில்,
“நான் பெண், இந்தியன், ஊடகவியலாளர்.”
அதற்கு இந்திய தேசிய இராணுவத்தின் சிறப்புப் பதவி அந்தஸ்து பெற்ற மோகன்லால் சொல்வது, ஐ லைக் தட் ஆர்டர். அந்த வரிசைக் கிரமம் எனக்குப் பிடித்திருக்கிறது.
ஏன், “படமெடுப்பது எனது உரிமை” என்று சொல்லும்போது கோபப்படுகிற போலீஸ் கமிசனர், இந்தியன் என்று சொல்லும்போது உச்சி குளிர்கிறாராம். அவர்கள் விரும்புவது கேள்வி கேட்காத பிரஜையான ரோபோக்கள், அவர்களுக்குத் தமிழனோ, காஷ்மீரியோ, நாகாலாந்து மக்களோ தேவையில்லை. அந்த வரிசை அவர்களுக்குப் பிடிக்காதது.
ஹே ராம் படத்தில் கமலஹாசன் காந்தியைச் சுட்ட கோட்சேயின் நியாயங்களை ஆர்.எஸ்.எஸ் சைவிடச் சிறப்பாகப் பேசறதுக்கான ஒரு வாய்ப்பை உருவாக்கினார். தேசபிதாவைக் கொன்ன கோட்சேவுக்கே வாய்ப்பளிக்கிற கமல், விருமாண்டியில மனித உரிமையாளருக்குப் பேட்டி கொடுக்கிற கமல், கோவை/மும்பை/குஜராத்தில் அப்பாவி முஸ்லீம்கள் பலர் பத்தாண்டுகளுக்கும் மேல் எந்தக் குற்றமும் செய்யாம சிறையில் வாடும்போது, அவர்களுக்கு என்ன வேண்டியிருக்கு புண்ணாக்கு “ஹ்யூமன் ரைட்ஸ்?” என்று போலீஸ் ரைட்ஸ் பேசுகிறார்.
குஜராத்தில் கலவரத்தின் போது, இசுலாமியர் வசிக்கும் இடங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன. ஊடகங்கள், இந்துக்கள் பலர் கொல்லப்படுகின்றார்கள் என்று பொய்ச் செய்திகளை வெறிகொள்ளும் அளவிற்குப் பரப்பின. அரசு/ போலீஸ்/சமூக விரோதிகள்/மதவெறியர்கள் என்ற கூட்டில் ஊடகங்களும் சேர்ந்து கொள்ள கரப்பான் பூச்சிகள் கக்கூசை விட்டு வெளியேறா வண்ணம் அடிக்கப்பட்டன. (ஏன் கமிசனர் உங்கள் வீட்டில் கக்கூசில் இருக்கும் கரப்பான பூச்சி கிச்சனுக்குள் வந்தா, அடிச்சுக் கொல்லாம என்ன பண்ணுவீங்க?) கொல்லப்பட்டன. எரித்து அழிக்கப்பட்டன. கும்பல் கும்பலாக - குடும்பம் குடும்பமாக - குழந்தை, பெண்கள், வயோதிகர் என்ற பேதமற்று... இலங்கையிலும் அப்படித்தான்... எல்லா மனித உரிமைகளும் அற்றுப்போய் பல நாட்டு இராணுவங்களின் உதவியுடன் விண்ணிலிருந்தும் குண்டு மழை பொழிய இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு சொந்த நாட்டிலே அகதிகளாய், ஏதிலிகளாய் மின் தடுப்பு வளையங்களுக்குள் கண்ணீர் வற்றி, வயிறு உலர்ந்து நடைப்பிணங்களாய், கரப்பான் பூச்சிகளாய்த் திரிகிறார்கள். இவர்களைக் கொல்வோம். இவர்கள் குரல்களை எதிரொலிப்பவர்களைக் கொல்வோம் என்று முழக்கமிடுகிறார் கமலஹாசன் என்னும் கலைஞன்.
தீவிரவாதிகள் கோழைகள், உயிர் பயம் கொண்டவர்கள். ஒரு காமன் மேனைவிட எந்த விதத்திலும் புத்தி அதிகமில்லாதவர்கள், சுயநலமிகள், வாய்ப்புக் கிடைத்தால் கைகழுவித் தப்பியோடுபவர்கள், குற்றவாளிகள், காமவெறியர்கள். இந்த பிம்பங்களைத் துல்லியமாக நான்கைந்து இடங்களில் பதிவு பண்ணியிருக்கிறார்கள்.
1. அப்துல்லாவின் மூணாவது மனைவிக்கு வயது 16. அப்போது அவருக்கு ஒன்பது மாத கர்ப்பம். அவள் அழகாயிருப்பா.
(அப்துல்லா 15 வயதுப் பெண்ணைக் கட்டிய குற்றவாளி. ஏற்கனவே இரண்டு மனைவி இருக்க, அழகுக்காக மூன்றாவதைக் கட்டி 15 வயதில் கர்ப்பிணியாக்கிய காமாந்தகன்.)
2. நாலு பேரை ஜீப்பில் ஏறச் செய்யும் போது, ஆரிப் ஒருவரைப் பிடித்து வைத்துக் கொள்ள அவனை விட்டுவிட்டு மூவரும் தப்பிச் செல்ல முடிவு எடுக்கின்றனர்.
(இவர்கள் சுயநலமிகள்/கைகழுவித் தப்பியோடுவார்கள்.)
3. காமன் மேன் நான்கு வாரத்தில் திட்டம் தீட்டி ஒரு பெரிய பிரச்சினையைப் பண்ணியிருக்கிறார். இதை விடவா தீவிரவாதிகள் இருக்கின்றனர்?
4. இறுதியாக ஆரிப், அப்துல்லாவைக் கொல்வதற்கு முன் அவன் சாவிற்கு உண்மையிலேயே பயப்படுவதால்தான் வீரமுள்ளவனாகப் பிதற்றுகிறான் என்று உளவியல் ரீதியாகக் கிண்டலடித்துச் சுட்டு வீழத்துகிறான்.
(நினைவு கூரவும்: குருதிப்புனல் படத்தில் இதேபோல் தீவிரவாதி ஒருவன் போலீஸ் அதிகாரியின் மைனர் பெண்ணைக் கெடுக்க முயற்சிப்பதாய் ஒரு காட்சி வரும்.)
செய்யற ஒரு பாத்திரமின்னாலும் அதோட ஒன்றி வித்தியாசம் தெரியாம இருக்கிறதுதான் சிறந்த நடிப்புக்கான அடிப்படை இலக்கணம். தனது தற்பெருமையாலும் அகம்பாவத்தினாலுமே பாத்திரத்தின் பாவத்தைச் சிதைப்பவர் கமல். உள்ளுறை ஆற்றல் ஒன்றுமில்லாமல், கலாச்சார வேரும், அனுபவமும் பிடிபடாமல் வெறும் மேற்கைப் பிரதியயடுத்த இந்த வியாபாரக் குப்பைகளுக்கு, உலக சினிமாவின் முக்கிய வியாபாரக் கேந்திரமான ஹாலிவுட்டில் கூட மதிப்பிருக்காது. இது இங்கிருக்கிற அரைகுறைகளை மிரட்டுவதற்குப் பயன்படுத்தப் படுமே தவிர, கலையுலகின் உரைகல்லில் தேய்த்தால் நிற்காத படைப்புக்களாகவே இனங்காணப்படும்.
உண்மையாக மக்கள் சார்ந்தும், மண் சார்ந்தும் படங்கள் எடுப்பதைத் தவிர்த்த மணிரத்னம் போன்றோர் திட்டமிட்டு அகில இந்திய தேசியச் சந்தை உருவாக்கும் பொருட்டு உருவாக்கிய நாயகன், பாம்பே, உயிரே, ரோஜா, ஆய்த எழுத்து போன்றவை தமிழ் இன உணர்வுக்கு எதிராகவும் இந்திய தேசியப் பார்ப்பனிய பனியாக் கட்டமைப்புக்கு ஆதரவான படங்களாகவும் இருந்தன. குறிப்பாக, தமிழ் திராவிட அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினைக்கும் எதிராக வெறுப்பைக் கக்கிய படங்களாக இருவர், கன்னத்தில் முத்தமிட்டால் வெளிவந்தன.
வட இந்தியாவில் கமலஹாசன் ஊடுருவ முடியாததால் முதலிலிருந்தே தென்னிந்திய மொழிப் படங்களான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் ஒரு திராவிட தென்னிந்தியச் சந்தையை கமல் திட்டமிட்டு உருவாக்கினார். இதனாலேயே மற்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகின்ற காவிரி, பாலாறு, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு, நீர்ப் பிரச்சினைகளைப் பேசும்போதும் இலங்கைத் தமிழர் நிலை குறித்துப் பேசும் போதும் அவைகளைச் சாமார்த்தியமாகத் தவிர்த்துவிட்டு என்.ஜி.ஓ. ஸ்டைலில் கண்தானம், உடல்தானம், எய்ட்ஸ் விளம்பரம் என்று சந்தை வியாபாரத்திற்குக் குந்தகம் வராமல் பார்த்துக் கொண்டார்.
Battle of Algiers, Night over Chile, Apocalypse Now, Missisippie Burning, Battleship Potomkin என தீவிரவாதம், மக்கள் போராட்டம், அரசு உளவுத் துறையின் முறைகேடுகள், மனித உரிமை சூறையாடப்படல் எனப் பல்வேறு பிரச்சினைகள் குறித்த மிக அற்புதமான படங்கள் அரசு அதிகாரத்தையும் ஒடுக்கப்பட்டோர் சோகத்தையும் விவரிக்கையில், கமல் அரசின் அதிகாரக் குறைவையும் ஒடுக்குபவரின் தாமதத்தையும் கண்டு பொங்கியயழுகிறார்.
(பூனை பையை விட்டு வெளியே வந்தது என்பது போல, கடைசியாய் உச்சரிக்கிற வரிகள்...)
எது நடந்ததோ அது சரியாகவே நடந்தது.
இத எங்கிருந்து பிடித்து உருவி இங்கு ‘காப்பி பேஸ்ட்’ செய்கிறாய்?
இந்தப் புரட்டுதல்கள், இந்த ஊழல், இந்த அதிகாரம், இந்த துரோகம், இந்த அநியாயம் (தற்போதைய வார்த்தையில் பாசிசம்) இதுதானே 2000 ஆண்டுகளாய்த் தொடர்ந்து வருகிறது.
வரட்டும் இனியும்; எத்தனை நாள் என்று பார்த்து விடுவோம்.
இது உன்னைப் போல் ஒருவனல்ல. ஒரு அவதாரம், தசாவதாரம், நூறு அவதாரம் எடுத்தாலும் சாதிக்க முடியாததால் புதிதாக காமன் மேன் அவதாரம்.