புர்கா திரைப்பட விமர்சனம்

கணவனை இழந்த நஜ்மா, வீட்டில் தனியாக இருக்கிறார். 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்யும் சூர்யா, கலவரத்தில் அடிபட்டு நள்ளிரவில் நஜ்மா வீட்டுக் கதவைத் தட்டுகிறார். அவருக்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றுகிறார் நஜ்மா. மறுநாள் விடைபெறுகிறார் சூர்யா. ஒரு நாள் முழுவதும் நஜ்மாவிற்கும் சூர்யாவிற்கும் நடைபெறும் உரையாடல்தான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

பெண்களை அடிமைப்படுத்துவதில் மதங்களிடையே வேறுபாடு இல்லை. அனைத்து மதங்களும் பெண்களை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில்தான் அணுகுகின்றன. ஆணுக்கு இல்லாமல் பெண்களுக்கு மட்டுமான சடங்குகளை மதங்கள் ஏற்படுத்துகின்றன. இவற்றைத் துணிச்சலாக எடுத்துரைத்திருப்பதாலேயே படத்தின் இயக்குநருக்குப் பாராட்டைத் தெரிவிக்கலாம்.

இஸ்லாமிய மதத்தில், கணவன் இறந்த பிறகு, மனைவி அவளது கணவன் கருவைத்தான் சுமக்கிறாளா என்பதை அறிய ‘இக்தாத்’ என்னும் கொடுமையான வழக்கம் பின்பற்றப்படுகிறது. நான்கு மாதங்கள் வீட்டிற்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் சடங்கு அது. கருப்பையைச் சுமப்பதாலேயே பெண்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்றால் அந்தக் கருப்பையை அறுத்தெறிய வேண்டும் என்று பெரியார் சொன்னதில் தவறேது ? நான்கு மாதங்கள் வீட்டிற்குள்ளேயே அவதிப்படும் ஒரு பெண்ணின் துயரம் சிறந்த முறையில் இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.burqa 530”1500 வருசத்துக்கு முன்னால், அறிவும் வளரவில்லை, அறிவியலும் வளரவில்லை. அப்போது கொண்டு வந்த விதிமுறைகளை இன்னும் ஏன் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்க வேண்டும் ?” என்று ஓரிடத்தில் கேட்கப்படும் கேள்வி நம்மைச் சிந்திக்க வைக்கிறது.

“ஓர் இலக்கியம் எந்தக் காலத்தில் எழுதப்படுகிறதோ, அந்தக் காலகட்டத்தின் சூழலில் நின்றுதான் விமர்சனம் செய்ய வேண்டுமேயல்லாது, இருபது நூற்றாண்டுகளுக்குப் பின்னால் வந்து நின்று கொண்டு அதனை இன்றைய நிலையோடு ஒப்பிட்டு ஆய்வு செய்வது பொருத்தமாக இருக்காது” என்கிறார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் (குறள் வானம், பக்கம் 67). அது இந்த இடத்திலும் பொருந்துகிறது. மதம் சார்ந்ததோ அல்லது தத்துவம் சார்ந்ததோ எவை என்றாலும் அவற்றை அந்தந்தக் காலத்தினோடு பொருத்திப் பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டும். அது வள்ளுவராக இருந்தாலும் சரி, புத்தராக இருந்தாலும் சரி, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று சீர்தூக்கி அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர முன்னோர்கள் சொல்லி விட்டார்கள் என்று எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது மூடத்தனம். “என்றைக்கோ எழுதிய சட்டங்கள் எப்படி எல்லாக் காலத்திலும் பொருந்தும் ?” என்ற வசனம் எல்லாரையும் சிந்திக்க வைக்கும் வசனம்.

இவ்வாறு பல்வேறு சிந்தனைகளோடு, மதத்தை மறுத்து மனிதத்தைத் தூக்கிப் பிடிக்கும் இத்திரைப்படம், ஓரிடத்தில் சறுக்கி இருக்கிறது. ”மதத்தில் பிரச்சினை இல்லை, மனிதர்கள்தான் பிரச்சினை; மதம் சொல்வதைப் புரியாமல் மனிதர்கள் செய்கிறார்கள்” என்ற வசனம் மதத்தைக் காப்பாற்ற முயற்சி செய்வதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. மற்றபடி மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களை, சடங்குகளை நேர்மையாக விமர்சனம் செய்வதில் இத்திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.

ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பே, இஸ்லாம் மதத்தில் உள்ள புர்கா வழக்கத்தைக் கண்டித்து, தந்தை பெரியார் பேசியுள்ளதையும் இங்கு நினைவுகூர வேண்டும்.

”துருக்கி நாட்டிலும் முகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக்கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும் ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏககாலத்தில் ஒரு புருஷனுக்குமேல் கட்டிக் கொண்டு வாழக் கூடாது என்ற கொள்கையும்.... வழங்கப்பட்டு வருகிறது” (குடிஅரசு, 08.01.1928) என்றவர் பெரியார்.

வழக்கம் போல, மத அடிப்படைவாதிகள் இப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பதே இத்திரைப்படம் மதத்தை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளது என்பதற்குச் சான்றாகும்.

எல்லா மதங்களும் பெண்ணுரிமைக்கு எதிரானவையே. பெண்ணுரிமைக்கு எதிரான சடங்குகளைக் கேள்வி கேட்கும் இத்திரைப்படம் வரவேற்கத்தக்கதே.

Pin It