கொத்துக் கொத்தாய்க் கொன்றவன் போற்ற
கொடுங்கோலனுக்கு நற்சான்று கொடுக்க
பத்து மாக்களாய்ப் பயணம் கொண்டு
பட்டாடை போர்த்தும் பன்றியர் பாரடா!
கத்தும் பூக்களின் கதறல் கேளா
கழுத்து அறுந்த உடல்கள் காணா
செத்து வதங்கும் வதைமுகாம் நோக்கா
செவ்வி கொடுக்கும் நரியர் பாரடா!
எத்தன் வீசிய எச்சில் இலையை
எடுத்துச் சுவைத்து மென்று குதப்பி
புத்தரின் விழியைப் பிடுங்கிய சிங்களப்
புரட்டரை உலகின் உச்சியில் வைக்கிறார்
பொத்திக் கொடுத்த பரிசில் மயங்கி
புதைத்த உயிர்களை மூடி மறைக்கிறார்
பெற்ற வயிற்றைக் கழிப்பிடமாக்கி
பேணிய தாயைப் பரத்தை என்கிறார்.
அத்து மீறிய வெற்றிச் செருக்கே
அழிவது அறியா பாழ்நிலை இருளே
இத்தரை விட்டே ஒழிவது உறுதி
இட்லர் போன்றே மாய்வது உறுதி
எத்துணை இடர்கள் வரினும் விடுதலை
இயக்கம் மறைவது இல்லை: கெடுதலை
விதைக்கும் இரண்டகர் கூட்டம்
வாழ்ந்ததாய் வளர்ந்ததாய் வரலாறு இல்லை.