1. 20 தமிழகக் கூலித் தொழிலாளர்கள் ஆந்திரக் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட பிரச்சனையில் அதிமுக தலைமையிலான தமிழக அரசும் திமுகவும் உரிய வகையில் செயல்பட்டனவா?

ஜாமீனில் வெளிவந்திருக்கும் ‘மக்கள் முதல்வரும்’, ‘மக்கள் முதல்வருக்காக’ நீதிமன்ற வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் பினாமி முதல்வரும் அமைச்சர்களும் கோவில் கோவிலாகச் சுற்று வதிலும், யாகம் வளர்ப்பதிலும் மக்கள் பணத்தையும் அரசு கஜானாவையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த 20 குடும்பங்களுக்கு 3 லட்ச ரூபாய் வழங்கியதோடும் சந்திரபாபு நாயுடுவிற்கு கடிதம் எழுதியதோடும் தங்கள் கடமை முடிந்துவிட்டதாக மவுனம் காக்கிறார்கள்.

பிழைப்புக்காக வேலை தேடி இடம்பெயரும் மக்களுக்கு வாழ்வாதாரத்தை உத்தரவாதப் படுத்தாத, கடந்த சில ஆண்டுகளாக செம்மரக் கடத்தலில் நடைபெறும் கொலைகள் மற்றும் சிறை, சித்தரவதைகளைச் சந்திக்கும் பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைமையை கண்டுங்காணாமலும் இருக்கின்ற அரசுகளாகத் தான் இரண்டு கழக அரசுகளும் இருந்திருக்கின்றன. அதுதான் இந்தப் பெரும் படுகொலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. போலி மோதல் கொலைகளைப் பொருத்தவரை கடந்த காலங்களில் செம்மரக் கடத்தல் விவகாரம் உள்ளிட்டு மற்ற பல விசயங்களில் ஆந்திர அரசோடு இங்கிருக்கின்ற அதிகார வர்க்கத்திற்கும் கழக பிரமுகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதென்பது இன்னும் வெளிவராத உண்மையாகும். அதனால் தான் இவர்கள் பாம்பும் சாகாமல், தடியும் ஒடியாமல் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருக் கிறார்கள். அதனால், மக்களை ஏமாற்ற ஸ்டாலின் தமிழக அரசைக் குற்றம் சாட்டுவதும், அதற்கு பன்னீர்செல்வம் பதில் அளிப்பதுமாக லாவணி பாடுகிறார்கள்.

2. நியூட்ரினோ, மீத்தேன் போன்ற பெரிய திட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது எந்தளவுக்கு பயன் அளிக்கும்?

நீதிமன்றத்தை நாடுவது பயன் அளிக்காதது மட்டுமல்ல, போராட்டத்திற்கு எதிராக கருத்துக்களை உருவாக்கவும் நீதிமன்றத் தீர்ப்புகள் வாய்ப்பளித்-திருக்கின்றன. அண்மைய எடுத்துக் காட்டுகளான ஸ்டெர்லைட், கூடங்குளம் அணுமின்நிலைய வழக்குகள் மக்கள் மத்தியில் போராட்டத்திற்கு எதிரான கருத்துக்களை உருவாக்க அரசால் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மீத்தேன் திட்ட எதிர்ப்பு, பெருந்துறை கோகோ கோலா ஆலை எதிர்ப்பு மக்கள் போராட்டங்கள் அரசையும் பெருநிறுவனங்களையும் பணிய வைத்துள்ளன. எதை நாம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், மக்கள் போராட்டங்களின் வடிவங்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அதுதான் மக்களின் சனநாயகப்பூர்வமான அரசியல் பங்கேற்பை உத்தரவாதப்படுத்துவதாகவும், அப்போராட்டம் தோல்வி-யடைந்து கோரிக்கை வெல்லப்படா- விட்டாலும், மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் வாயிலாக அரசு மற்றும் ஆளும் கும்பலின் சனநாயக விரோத தன்மையைப் புரிந்து கொள்ளவும், பிற போராட்டங்களின், மக்கள் கோரிக்கைகளின் சனநாயக தன்மையைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

சில சட்ட வல்லுனர்களாலும், நிபுணர்களாலும், லாபி அரசியல் செய்துவருபவர்களாலும், தேர்தல் நல அரசியல் செய்பவர்களாலும் நீதிமன்றத்தின் ஊடாக, சட்டப் போராட்டத்தின் ஊடாக தற்காலிக தோற்ற ரீதியான வெற்றிகளைப் பெற்றாலும், அத்தோற்றபாட்டு வெற்றிகள் அவர்கள் அரசியலில் அடையாளப்பட உதவுமே தவிர மாற்று அரசியலுக்கு உதவாது. அரசின் கொள்கை முடிவு என நீதிமன்றம் கைவிரித்தவுடன், மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்படுவார்கள், அடையாள,‘சனநாயக, சமாதான‘ அரசியல் வாதிகள் பச்சையாகக் கடையை மூடிவிடுவார்கள். சனநாயகஅரசியலுக்கான மாற்று முயற்சிகளுக்கு தொடர்ந்து குறைபிரசவம் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அதேசமயம், நீதிமன்ற நடவடிக்கைகளை நாம் முற்றாக புறக்கணிக்கவும் இல்லை. அடையாள அரசியலின் பித்துக்குளித்தனத்தைத்தான் நாம் எதிர்க்கிறோம். மக்கள் போராட்டங்களின் ஊடாக புதிய சட்ட வரைவுகளைக் கொள்கை முடிவுகளைக் கொண்டுவருவதை விட்டுவிட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு மக்களைக் கட்டுப்படுத்துவதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

3. தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சில இனவாதிகள் பெரியாரின் புகைப்படங்களை எரிப்பது பற்றி?

புதிய வகை அரசியல் கோமாளிகளான இவர்கள் மக்கள் அடித்தளமோ அரசியல் அடித்தளமோ இல்லாதவர்கள். இவர்களில் பல ரகத்தினர் உள்ளனர். வினோதமான வரலாற்று இனக் கண்டுபிடிப்புகளைச் செய்பவர்கள், அவர்களைச் சுற்றி சீடர்குழாம் விசிறிகள் எனப் பலர் உள்ளனர். இதில் ஒரு சில ரகத்தினர் ஆபத்தான ஆர்.எஸ்.எஸ். கூட்டாளிகள்; சாதிய சக்திகளை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியான வரலாறு உண்டென்றாலும் முந்தைய காலத்தில் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதில்லை.

ஆனால், தற்போது திடீர் திடீர் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஊடகங்களிலும் முக நூலிலும் அதிர்வலைகளை உண்டாக்க முயற்சிக் கிறார்கள். காரணம், தற்போதைய தமிழக அரசியல் நிலைமை அவர்களுக்கு சில வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஈழப் போர் தோல்வி, ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலை, அதில் திராவிட முன்னேற்றக் கழகங்களின் துரோகம் , ஒட்டுமொத்த அரசியல் இயக்கங்களின் மக்களைத் திரட்டி எதிர்கொள்ள முடியாத கையறு நிலை போன்றவை எல்லாம் 2009 க்குப் பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்த பெரும் எண்ணிக்கையிலான இளைஞர் மத்தியில் தோ மனப் பான்மையை உருவாக்கி உள்ளது. இது எல்லா சிக்கலையும் தமிழர் ஙீ அன்னியர், தமிழர்களுக்கு எதிராக எல்லாம் இருக்கிறது என்ற அரசியல் கருத்துக்கு சமூக விளைநிலமாக மாறியுள்ளது. இதைத்தான் இந்த இனக்குழு சாதிய வாதிகள் ‘தமிழர் அரசியல்’ என்ற பெயரில் ‘திராவிடம் தான் அனைத்திற்கும் காரணம்’, ‘பெரியார் என்ற கன்னடர் தான் நம் இனம் வீழ்வதற்கான கருத்தை உருவாக்கினார்’ என தங்கள் கருத்துக்கு விளைநிலத்தைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.

இது தோல்விவாதத்தில் இருந்து வரும் அற்பத்தனமான கருத்து. இது திராவிட அரசியலின் சிக்கல்களை நேர்மையாக விமர்சித்து சமூகத்தின் சனநாயக வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் மாறாக மக்களைச் சாதியாகவும் இனமாகவும் பிரித்து வெறுப்பை ஊட்டும் பிற்போக்கு அரசியலுக்கும் இனக்குழு அரசியலுக்கும் பாசிச இந்துத்துவ அரசியலுக்கும் ஐந்தாம் படையாக வேலை செய்கிறது.

Pin It