26.11.2018 இல் சென்னையில் கழகக் கருத்தரங்கில் மருத்துவர் தாயப்பன் உரையிலிருந்து:

ஈழத் தமிழர்களுக்கு இரண்டு வகையில் நாம் ஆதரவினைக் காட்டுகிறோம். ஒன்று நமது தொப்புள் கொடியான தமிழர் என்ற ஆதரவு; மற்றொன்று இனம் என்ற எல்லையைக் கடந்து மனிதர் என்ற கண்ணோட்டத்தில் அவர்களுக்கான உரிமைகளுக்கு ஆதரவு. இன அழிப்புப் போரில் இனப்படு கொலைக்குள்ளான அவர்களுக்கு இதுவரை எந்த நிவாரண நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 40 ஆண்டுகளாக எவரையும் விசாரணையின்றி சிறையிலடைக்கும் பயங்கரவாத சட்டம் அங்கே அமுலில் இருக்கிறது. அது ஒரு இராணுவச் சட்டம். எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு காலம் ஒரு பயங்கரவாதச் சட்டம் நீடித்து இருந்தது இல்லை. இராணுவம் ஆக்கிரமித்த நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பித் தரப்படவில்லை. உளவியல் ரீதியாக அழுத்தத்திற்கும் தோற்கடிக்கப்பட்டோம் என்ற மனநிலைக்கும் உள்ளான அம்மக்களின் படைப்பாற்றல் திறன் முழுமையாக முடங்கி விட்டது.

thayappan kolathoor mani and viduthalai rajendranஈழத் தமிழர்களின் திறன், படைப்பாற்றலுக்கு உதாரணம் கூற வேண்டுமானால் சுனாமி பேரழிவை இரண்டே மாதங்களில் விடுதலைப் புலிகள் மறு சீரமைப்பு செய்து மக்களுக்கு மறுவாழ்வு தந்ததைக் குறிப்பிடலாம்.

ஈழ விடுதலைப் போர் தொடங்கி சுமார் 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த இடைக் காலத்தில் 25 நாடுகள் தனிநாடுகளாகிவிட்டன. ஈழத் தமிழர்கள் கோரும் சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை சர்வதேசம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஆட்சிக்கு வந்த சிறிசேனா 100 நாட்களில் ஈழத் தமிழர்களுக்கு சீரமைப்பு நடவடிக்கைகளை செய்து முடிப்பேன் என்று உறுதி கூறினார். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. அவர்கள் அதிகாரப் போட்டியில் சிக்கிக் கொண்டு அவர்களுக்கான ‘சீரமைப்பு’ அரசியலைத்தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா - ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. இந்தியா என்றால் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பார்ப்பன ஆளும் அதிகார வர்க்கம் தான் தீர்மானிக்கிறது.

சட்ட எரிப்புப் போராட்ட வரலாற்றில் ஒரு  செய்தி வருகிறது. திருச்சி குளித்தலையில் பெரியார் - பார்ப்பனர்களை குத்தச் சொன்னார்; வெட்டச் சொன்னார் என்று பேசியதற்காக பெரியார் மீது ஒரு வழக்குப் போடப்பட்டு சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்க விடாமல் முன்கூட்டியே அவர் கைது செய்யப்படுகிறார். அப்போது பிரதமர் நேரு பேசவிருந்த கூட்டத்துக்கு  அரசு வழக்கறிஞர் நீதிபதி ஆகியோர் அழைக்கப்படுகிறார்கள். அவர்களை வைத்துக் கொண்டு பெரியாரைப் போன்ற தேச விரோதிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நேரு பேசுகிறார். அவர் பேசியதற்குப் பிறகு சட்டத்தை எரித்தப் போராளிகளுக்கான தண்டனைக் காலத்தை 9 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை உயர்த்தி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினார்கள்.

ஆளும் பார்ப்பன வர்க்கம் எப்படி செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. 

இங்கே நக்கீரன் கோபாலை தேச விரோத சட்டத்தில் கைது செய்ய ஆளுநர் மாநிகையிலிருந்து புகார் தரப்படுகிறது. நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோ, திருமாவளவன் எல்லோரும் நீதிமன்றம் விரைகிறார்கள். இவர்கள் இயக்கங்களின் தலைவர்கள். போராட்டக் களத்தில் நிற்பவர்கள். ஆனால் ஒரு பத்திரிகை ஆசிரியராக நீதிமன்றம் சென்ற ‘இந்து’ இராமை அழைத்து நீதிபதி கருத்து கேட்கிறார். அவர் பேசிய பிறகு, ரிமாண்ட் செய்ய மறுத்து நீதிபதி விடுதலை செய்கிறார். இந்த வாய்ப்பை நீதிமன்றம் ஒரு பார்ப்பனரல்லாதாருக்கு வழங்கி யிருக்குமா என்பதுதான் சிந்திக்க வேண்டிய கேள்வி.

அண்மையில் கூத்துப் பட்டறை முத்துசாமி என்ற கலைஞர் முதிர்ந்த வயதில் முடிவெய்தினார். அவர் பல கலைஞர்களை தயார் செய்தவர். முற்போக்கானவர். கூத்துக் கலையை பரப்பிய புரட்சியாளர் என்று ஏடுகளில் செய்தி வந்தது. முறுக்கு மீசை தோற்றத்தோடு இருந்தார்.

நான்கூட அவர் முற்போக்குப் புரட்சியாளர் என்றுதான் கருதியிருந்தேன். இது அவருடைய ஒரு முகம். அவர் மறைந்த நாளில் அவரது மற்றொரு படம் வெளி வந்திருந்தது. அதில் முதுகில் பூணூலோடு தான்  அவர் இருந்தார். அது அவரின் மற்றொரு முகம்.

ஆளும் வர்க்கமான பார்ப்பன வர்க்கம், சமூகத்தில் அதிகாரச் செல்வாக்கோடு இருக்கிறது என்பதற்காகவே இதைச் சுட்டிக்காட்டினேன். அயலுறவுக் கொள்கைகளை எடுக்கும் அதிகாரத்தில்  பார்ப்பன ஆளும் வர்க்கம் இருப்பதால்தான் ஈழத் தமிழர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளும் நீதிகளும் மறுக்கப்படுகின்றன. தமிழர்களாகிய நாம் வலிமையான இனமாக மாற வேண்டுமானால் ஜாதியற்ற தமிழர்களாக வேண்டும்; ஜாதியை மறுத்து ஜாதி ஒழிப்புக்கான தமிழர்களாக செயல்பட வேண்டும் என்றார் மருத்துவர் தாயப்பன்.

சென்னையில் மாவீரர் நாள் - சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் மயிலாப்பூர் பகுதிக் கழகம் சார்பில் நவம்பர் 25ஆம் நாள் மாவீரர் நாள் சட்ட எரிப்பு நாள் கருத்தரங்கம் நவம்பர் 26 மாலை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. மயிலைப் பகுதி கழகப் பொறுப்பாளர் இராவணன் தலைமை தாங்கினார். நாத்திகன், பெரியார்-அம்பேத்கர்-ஈழப் போராளிகள் குறித்துப் பாடல்களைப் பாடினார்.

ஈழப் போரில் இன்னுயிர் ஈத்த மாவீரர்களின் நினைவாக நினைவுச் சுடரை மருத்துவர் தாயப்பன் ஏற்றினார். இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவர் தாயப்பன், ‘ஈழம் நமது கடமை’ எனும் தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகள் நினைவாக ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர். ‘பெரியாரின் இன்றைய தேவை’ எனும் தலைப்பில் விடுதலை இராசேந்திரனும், ‘சட்ட எரிப்புப் போராட்டம்’ குறித்து கொளத்தூர் மணியும் விரிவாகப் பேசினர். அரங்கம் முழுதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. அனைவருக்கும் மயிலைப் பகுதி தோழர்கள் மாட்டுக்கறியுடன் இரவு உணவு வழங்கினர்.

சென்னை கருத்தரங்கில் தோழர்கள் ஏற்ற உறுதி மொழி

“பெரியாரின் ஆணையை ஏற்று அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை 1957ஆம் ஆண்டு நவம்பர் 26ல் 10,000 பேர் எரித்து, 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை ஏற்ற கருஞ்சட்டை மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்து

கிறோம்.

சிறைக்குள்ளேயும், விடுதலையான ஒரு மாதத்துக்குள் சிறைக்கு வெளியிலும் சிறைக் கொடுமையால் உடல் நலம் பாதித்து வீரமரணத்தைத் தழுவிய 18 போராளிகளின் லட்சிய நெருப்பை நெஞ்சில் ஏந்துகிறோம்.

ஜாதி ஒழிப்புக்காக பெரியார் விட்டுச் சென்ற போராட்ட மரபை முன்னெடுக்கவும், சுயஜாதி மறுப்பு உணர்வோடு- ஜாதி ஆதிக்க- ஜாதி வெறி சக்திகளை எதிர்த்துக் களமாடவும் உறுதி ஏற்கிறோம்.

வாழ்க பெரியார்!

வீழட்டும் பார்ப்பனிய ஜாதியமைப்பு”