prabakaran 400பிரபாகரனால் தமிழ்நாட்டிற்கு, தமிழர்க்கு என்ன நன்மை? அல்லது தமிழ்நாட்டிற்கும், பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு?

ஒன்று

இது ஒரு வகையான Materialistic view.

வாழ்க்கை என்பது அல்லது வாழ்வின் பொருள் என்பது நாம் கல்வி கற்று, வேலைக்கு போய் பணம் பார்த்து, வீடு, கார் வசதி என்று வாழ்வது என்பதாக மட்டும் மயங்கிப் போய் விடுவதுதான்.

எல்லோரும் அப்படியாகவே நினைக்க வேண்டும். அப்படி நினைக்கத் தெரியாதவன் ஏமாளி, விவரம் தெரியாதவன் என்பதான மனவோட்டத்தின் விளைவே அது.

பொதுத் தொண்டு என்பது மற்றவர்களுக்காக வாழ்வது என்பதை ஏற்றுக் கொள்பவர்கள்தான் தலைவர்களாக, பொதுத் தொண்டில் தியாகம் செய்பவர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு பொருள் சேர்த்து, வீடு, வசதி என்று வாழத் தெரியாதவர்கள் அல்ல.

அந்த வாழ்க்கையை தன் சகோதரர்கள் வாழ, தன் சமூகம் வாழ, தன் இனம் வாழ, தன் நாடு வாழ என்று ஏற்படுத்திக் கொள்பவர்களும் உண்டு. அவர்கள்தான் தலைவர்களாக, அவர்களின் தொண்டர்களாக விளக்க முடியும்.

நம் பிரச்சனை என்ன வென்றால் சராசரி நடிகர்களை, தலைவர்களையே பார்த்துப் பார்த்து, பொதுவாழ்வு என்றால் என்ன, தலைவர்கள்கள், அவர்களின் தொண்டர்கள் யார் என்று தெரியாமலேயே போய்விட்டது தான்.

சிலநாட்களுக்கு முன் பெரியாரின் ஒரு காணொளியை பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. இரண்டு, மூன்று நிமிடக் காணொளிதான்.

அதில் வருவது இதுதான்.

"வயதாகிவிட்டதே. ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

எப்படி ஓய்வெடுப்பது?

மூன்று வேளை சாப்பிடுகிறேன். அது இந்த சமூகம் கொடுத்தது. இதை தின்றுவிட்டு, இந்த சமூகத்திற்கு உழைக்காமல் எப்படி இருக்க முடியும்" என்கிறார் பெரியார்.

யோசித்துப் பாருங்கள். பெரியார் பெரும் செல்வந்தர். அவரின் செல்வமெல்லாம் அவர் உழைத்து சம்பாதித்தது. அதைத் தான் அவர் செலவு செய்கிறார். அப்படியிருந்த போதும் தான் சாப்பிடுகிற மூன்று வேளை உணவையே, தன்னுடையதல்ல. இது சமூகம் எனக்கு கொடுத்தது. அதை உண்டு விட்டு சும்மா இருப்பதா என்கிற குற்ற உணர்வு, அவருக்கு ஏன் வர வேண்டும்?

நாம் என்றைக்காவது அவ்வாறு நினைத்திருக்கிறோமா? மற்ற வசதி, வாய்ப்புகளை விடுங்கள்.

உண்கிற மூன்று வேளை உணவு இந்த சமூகம் போடுகின்ற பிச்சை என்று நினைத்திருக்கிறோமா? நினைத்ததே கிடையாது எனும்போது, குற்ற உணர்ச்சி எங்கிருந்து வரும்? வரவே வராது.

வ.வு.சி அவர்கள் தன் பெரும் செல்வத்தை தொலைத்துவிட்டு, செக்கிழுத்து, சிதைந்து, அழிந்து போனாரே? அவருக்கு ஏன் தன் வழக்குரைஞர் தொழிலை மேலும் வளர்த்து, பொருள் சேர்த்து வாழவேண்டும் என தோன்றவில்லை? அந்த அளவிக்கு அறிவில்லையா?

சேகுவேரா, தன் மருத்துவத் தொழிலை கவனித்திருந்தால், பெரும் பணம், பொருள் ஈட்டி வாழ்ந்திருக்கலாம். ஏன் தன் நாட்டை விட்டு, அடுத்த நாடுகளுக்கு போய் போராடி வாழ்வை தொலைக்க வேண்டும்?

அவர்களுக்கு சிந்திக்க தெரியவில்லையா?

மேலே சொன்னவர்களோடு, அவர்களை பின்தொடர்ந்து போராடியவர்கள் மூளை இல்லாதவர்களா? இல்லை.

நீங்களும் இப்பொதுச் சமூகமும், வாழ்வு என்பதன் பொருள், பயன் என்ன என்பதை புரிந்துக் கொண்ட விதமும், ஏற்றுக் கொண்டு வாழ்ந்த விதமும், நான் மேலே சொன்ன தலைவர்களும், அவர்களை அடியொட்டி நடந்தவர்களும் வாழ்வை புரிந்துக் கொண்ட விதமும், ஏற்றுக் கொண்டு வாழ்ந்த விதமும் வேறு.

இரண்டு,

நான் மேலே சொன்ன தலைவர்கள், அவர்களை பின்பற்றி உங்கள் பாஷையில் வாழ்வை தொலைத்தவர்கள் இருந்ததால் தான் இருப்பதால்தான், தன் வாழ்வு பிறருக்கானது என்று கருதியதால்தால் தான், பொதுச் சமூகம், பொன்னும் பொருளும் ஈட்டி, உங்கள் பாஷையில், வாழ்வை ருசிக்க அனுபவிக்க முடிந்தது.

ஆனால், உங்கள் இனத்துக்கான உரிமையை முழுதாக அடையாதவரை நீங்கள் ருசிக்கும் இந்த வாழ்வும் பறிபோகும் என்பதுதான் உண்மை.

தேர்தலின் போது, இரண்டாயிரம், ஐயாயிரம் காசு வாங்கிக் கொள்பவன் சில நாட்களுக்கான வரவை எண்ணி தனது ஐந்தாண்டு வாழ்வைப் பறிகொடுப்பது போலத்தான், ஒரு சில தலைமுறை தனக்கு சோறும், பணம், பொருள் வசதி வாய்ப்பில் மயங்கி தனது பல தலைமுறைகளின் வாழ்வைத் தொலைக்கிறான் பறிகொடுக்கின்றான்.

நம்மைப் போல பொது சமூகம் போல, நமக்கும் தேர்தலின் போது பணம் வாங்குபவனுக்கும் அவ்வளவுதான் வேறுபாடு.

கட்சிகள், தேர்தலின் போது ஐயாயிரம் கொடுத்து சிலருக்கு போதை ஏற்றி வாழ்வை பறிக்கின்றது.

இந்து / இந்தி / இந்தியா

நமக்கு நம் தலைமுறைக்கு சிலவற்றை வழங்கி வரப் போகும் நம்முடைய பல தலைமுறைகளின் வாழ்வை பறிக்கின்றது, அவ்வளவுதான் வேறுபாடு.

நாம்தான் இட ஒதுக்கீடு பெற்றிருக்கிறோம். தனி மாநிலம் இருக்கிறது. லட்சக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் உருவாகுகிறார்கள். பணம், பொருள் ஈட்டுகிறார்கள்.

பின் ஏன் பெரியார் தன் இறுதி முழக்கத்தில் கூட தமிழ்நாடு கேட்டார்? அவர், நாம் பெற்ற வாழ்வை நினைக்கவில்லையா? அல்லது உணர அறிவில்லையா?

நாம்தான் தேர்தல் கட்சி நடத்துகிறோம். ஒருநாள் ஆட்சியை பிடிப்போம். மருத்துவர்களையும்,பொறியாளர்களையும் உருவாக்கப் போகிறோம் .

பின் எதற்கு, அண்ணா, திராவிட நாட்டை கைவிடுகிறோம். ஆனால் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்றார்?

வாழ்க்கை என்பது வெறும் வசதியாக பொருள் ஈட்டி வாழ்வது மட்டுமல்ல. தமது மக்களின் தமது இனத்தின் தமது மொழியின் தமது முழு விடுதலையின் உரிமைக்குமேயாகும்.

பெரியாரின் திராவிட இயக்கத்தின் ஏன் அண்ணாவின் திமுகவின் நோக்கமும் தொடக்கமும் அரசியல், சமூக, பொருளாதார விடுதலைதான்.

ஆனால் காலப்போக்கில் தேர்தல் போக்கில் அது சிதைந்து நலிந்து இயன்றை பெறுவது கொடுப்பதை கொள்வது என்றாகி மருத்துவர், பொறியாளர், கணக்காளர் ஆகுவதும் சாலை போட்டு, பாலம் கட்டி, கல்லூரி அமைப்பதே சாதனை என்று வந்து நிற்கிறது.

அரசியல் சமூக விடுதலையன்றி இந்த சில நன்மைகளும் கானல் நீரே நிலையற்றதே பறிபோகக்கூடியதே என்கிற புரிதல் இல்லாது போயிற்று.

அதனால்தான் 1950/60 களின் கட்சிகளின் தொண்டர்கள் / மக்கள் தங்களின் கட்சித் தலைவர்களை கட்சிகளின் நோக்கத்தோடு பொருத்தி விமர்சனங்களோடு பார்த்தார்கள்.

இன்றைய தலைமுறையோ இந்த நலிந்த திரிந்த சூழலில் பிறந்தவர்கள். இந்த அரசியலின் சாலை போடுதல் வீடு கட்டுதல் பாலம் அமைத்தல் பொருள் ஈட்டுதலே சாதனை என்கிற காட்சிப் பிழையின் காதலர்களாகிப் போனார்கள்.

விடுதலை வாழ்வு என்பது அரசியல், விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்பதன் முழுப் பொருள் ஆகும். பொருளாதாரத்தின் ஒரு பகுதியான, அதுவும் குறிப்பிட்ட சட்டகத்திற்கு உட்பட்ட பொருள் ஈட்டுதல் மட்டுமல்ல.

அரசியல், சமூக விடுதலையற்ற பொருளாதார விடுதலையும்கூட பலனற்றது நிலையற்றது. பறிபோய்விடக் கூடியது.

நான் மேலே சொன்ன பெரியார், பிரபாகரன், செகுவேரா போன்றவர்கள் தன் தலைமுறை வாழ்வை மட்டும் யோசிக்காதவர்கள்.

பல தலைமுறைகளின் வாழ்வை யோசித்தவர்கள். அதுவே அதற்காக போராடுதலே தன் கடமை என்று ஆக்கிக் கொண்டவர்கள்.

சொல்லப் போனால் பெரியார், சேகுவெரா, பிரபாகரன் காலம் தாண்டிய இனம் தாண்டிய மொழி தாண்டிய நாடு தாண்டிய தலைவர்கள் களப் போராளிகள். விடுதலை என்பதன் பொருள் உணர்த்தியவர்கள்.

அவர்களின் விடுதலைக்கான போராட்ட முறைகள் அவர்களின் சூழலை, அவர்களின் தேவையை, அவர்களின் வாய்ப்பை, அவர்கள் சந்தித்த ஒடுக்குமுறையின் தன்மையை நோக்கி அமைத்துக் கொண்டார்கள். அதுதான் வேறுபாடு.

அந்த பிரதிபலன் பார்க்காத பொதுத் தொண்டை அந்த உன்னத வாழ்வை வாழ்ந்து காட்டியதன் மூலம் வெறும் சராசரி அரசியல் தலைவர்களையே பார்த்துப் பழகிப்போன தமிழகத் தமிழர்களுக்கு பெரியாருக்கு பின் தியாக வாழ்வின் உச்சத்தைக் காட்டிய தலைவன் பிரபாகரன்.

திராவிட இயக்க தேர்தலில் தேய்ந்து, நசிந்துக் போய்க் கொண்டிருந்த தமிழின உணர்வை அதற்காக பிடிமானத்தை உள்ள உரத்தை பெரும் வீச்சோடு அளித்த தலைவன் பிரபாகரன்.

தன்னைப்பற்றி உணர்வில்லாத, அதனடிப்படையிலான ஒற்றுமை குறித்த எழுச்சியில்லாமல் ஒரு இனம் உயர முடியாது.

உணர்வைப் பெறாத, உணர்ச்சியில்லாத ஒற்றுமையில்லாத இனம் உய்ய முடியாது. தமிழர் என்கிற உணர்வின்றி தமிழருக்கான உரிமைகளை பெறமுடியாது. போராட முடியாது.

தன் தன்னிகற்ற வாழ்வின் மூலம் தமிழ் உணர்வை தமிழர் உணர்வை இருபத்தியோராம் நூற்றாண்டில் ஈழத் தமிழர்களிடம் மட்டுமல்ல தமிழக தமிழர்களிடம், உலகத் தமிழர்களிடம், வேறு யாரையும்விட பெரும் தாக்கத்தோடு ஏற்படுத்திய தலைவன் பிரபாகரன்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பிரபாகரன் தமிழர்க்கு காலம் அளித்த கொடை. தமிழர் எழுச்சி பிரபாகரன் தமிழர்க்கு அளித்த கொடை.

பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்.

- ப.பூங்குமரன் 

Pin It