உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கான புரட்சிகர இலட்சியப் பயணத்தில் மாவோயிசக் கட்சியின் மையக்குழு உறுப்பினராக இருந்து தமது வாழ்நாளை அர்ப்பணித்த தலைமைத் தோழர் அனுராதா காண்டி 2008, ஏப்- 12 அன்று நம்மை விட்டுப் பிரிந்து இம்மண்ணில் விதையான நாள். மக்கள் புரட்சி ஒன்றே வழி என்று மார்க்சிய லெனினிய மாவோவிய வெளிச்சத்தில் வீறு நடைபோட்டபாட்டாளி வர்க்கத் தலைவர்.

மும்பை, நாக்பூர் நகரங்களிலே களப்பணி ஆற்றி, இறுதியில் மலேரியா பால்சிபோரியம் என்கிற கொடிய நோயால் 54 வயதிற்குள்ளேயே செங்கொடியில் கலந்த செஞ்சுடர் தலைவர் அனு. இளவயதிலேயே அறிவுஜீவியாக, மார்க்சிய ஆராய்ச்சியாளராக, தத்துவ ஆசிரியராக திகழ்ந்த தோழர் அனு, இந்திய புரட்சிகர இயக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு என்பதை இச்சமூகத்தில் கருத்தியல் தளத்திலும், மக்கள்களத்திலும் அவர் ஆற்றிச் சென்ற பணிகள் எடுத்துரைக்கின்றன.

1954 மார்ச், 28 அன்று மும்பை நகரத்தில் பிறந்தார். 1970களில் எலிப்ஸ்டைன் கல்லூரியில் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தார். அப்போது உலகம் முழுவதும் புரட்சிகர சூழல் நிலவியிருந்தது. இந்தியாவிலும், 67-70கள் காலகட்டத்தில் வசந்தத்தின் இடி முழக்கமாய் திகழ்ந்த நக்சல்பாரி எழுச்சியின் நேரம் அது. தோழர் அனு நக்சல்பாரி எழுச்சியால் ஈர்க்கப்பட்டார். புரட்சிகர மாணவர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர், எம்.ஏ. படித்தப் பின் எம்.பில். சோசியாலஜியை முடித்து, விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1977ல் அவருடன் பணியாற்றிய தோழர் கோபட் காண்டியைக் திருமணம் செய்துகொண்டார்.

1977ல் நிலவிய அவசர நிலை காலத்தில் மனித உரிமைகளுக்கான இயக்கத்தில் முன்னோடியாக விளங்கியவர் தோழர் அனு, மேலும், மகாராஷ்டிராவில் சனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டமைப்பை உருவாக்கியவர் என்கிற பெருமை அனுவையே சாரும். ஜார்ஜ் பெர்னான்டஸ், அருண்சோரி உள்ளிட்டோரைக் கொண்ட அக்குழுவின்மூலம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரிய மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். மகாராஷ்டிராவில் கட்சிரோலிப் மாவட்டத்தில் புரட்சிகர இயக்கம் வலுப்பெற்று வந்தது. விதர்பா போன்ற பின்தங்கிய பகுதிகளில் கட்சியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருந்த சூழலில் தோழர் அனு 1982ல் மும்பையிலிருந்து நாக்பூருக்கு மாற்றம் பெற்றார். அங்கிருந்து தனது மக்கள் பணியைத் தொடர ஆரம்பித்தார்.

தோழர் அனுவின் போராட்டக்களம்

நாக்பூர் பல்கலைக் கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். அந்த பகுதியில் தொழிற் சங்கத்திலும், தலித் இயக்கங்கள் மத்தியிலும், வேலைசெய்து முக்கியத் தலைவராக அடையாளமானார். அவரின் தொழிற்சங்கப் பணி நாக்பூரில் உள்ள வீட்டுப் பணியாளர்களுக்கான தொழிற்சங்கத்தைக் கட்டுவதில் ஆரம்பமானது. குறிப்பாக அமைப்பு சார்ந்த, அமைப்புச்சாராத் துறைகளில் உழைத்து வந்த தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

நாக்பூர் அருகில் அமைந்துள்ள கபர்காடா அனல்மின் நிலையத்தில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களை அணிதிரட்டி பலமான, உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுத்தார். 3 மாதமாக விடாப்பிடியாக தொடர்ந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்து அரசு, காவல்துறையின் துணையுடன் அடக்குமுறையை ஏவி கலைக்க முயற்சித்தன.

போராட்டம் தொடரும்போதே தோழர் அனுராதா கைதுசெய்யப்பட்டு நீண்ட நாள் சிறைவாசத்திற்குப்பின் வெளியில் வந்தார். பின் 1993ல் சந்தரபூர் மாவட்டத்தில் அங்கிருக்கும் கோல் மைண்ட் மற்றும் கட்டுமான தொழிலாளர்களிடையே தொழிற்சங்கப் பணி ஆற்றுவதற்காக இடம் மாற்றப்பட்டார். அங்கு பணியாற்றும் போதும் அமைப்புச்சாரா துறை தொழிலாளர்களுக்கு அடிப்படை சங்க உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து குரல்கொடுத்தார்.

அதற்கு ஆதரவாக மற்ற தொழிற்சங்கங்களும் துணைநின்றன. வலுவான தொழிற்சங்கத்தைக் கட்டி முன்னுதாரணமான தொழிற்சங்கத் தலைவராக அறியப்பட்டவரானார்.இத்தகைய ஆளுமைமிக்க அரசியல் தலைவராக பல தளங்களில் அனுராதா அறியப்பட்டாலும், கருத்தியல் தளத்தில் அம்பேத்கரின் சிந்தனைகளையும், மார்க்சியத்தையும் ஆழமாக கற்றுணர்ந்தவராக இருந்ததால்தான் தலித் மக்கள் அதிகளவு வாழ்ந்துவரும் விதர்பாவில், தலித் தலைவர்களின் கோட்டையாக விளங்கிய அந்நகரங்களில் பணியாற்றி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி, சாதிய சிக்கலில் அக்கறை செலுத்தாதவர்கள் என்று கம்யூனிஸ்டுகள் மீது வன்மத்தோடு வைக்கப்படும் விமர்சனங்களைக் கேள்விக்குள்ளாக்கினார்.

அம்பேத்கரின் எழுத்துக்களையும், சாதியச் சிக்கல் குறித்த சமூக ஆய்வையும் புரிந்து கொள்வதற்கான மூல ஒளி மார்க்சியம் என்பதை உணர்ந்த இளைஞர்கள் மாவோயிசக் கட்சியை நோக்கி வரத் தொடங்கியதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் தோழர் அனு. விதர்பாவில் மாவோயிச இயக்கத்திற்கான மேடைகளில், பல தலித் இயக்கத்திற்கான மேடைகளில் முதன்மை பேச்சாளராக முன்னிறுத்தப்பட்டவர் தோழர் அனு. வர்க்கக் கண்ணோட்டத்தில் சாதியம் குறித்து ஆங்கிலத்திலும், மராத்தி மொழியிலும் எழுதினார். அவற்றில் மார்க்சிய நிலைபாட்டிலிருந்து தலித் சிக்கல் என்பது தலித் விடுதலையோடும், நாட்டின் ஒட்டுமொத்த சனநாயகப் புரட்சியோடும் இணைந்ததாகவே அமையும் என்ற பார்வையை முன்வைத்தார்.

அச்சமயம், மாலெ மக்கள் யுத்தம் கட்சியானது சாதியச் சிக்கல் குறித்தான முதல் கண்ணோட்ட அறிக்கையை தயாரித்திருந்தது. அது இந்தியாவில் புரட்சிகர மார்க்சிய இயக்கத்தின் சாதி குறித்தான அறிக்கைகளில் மிக முக்கியமானது. அதற்கான அடிப்படை வரைவு ஆவணத்தைத் தயாரித்தவர்களில் முதன்மைப்பங்கு வகித்தவர் தோழர் அனு என்பது குறிப்பிடத்தக்கது.

பஸ்தார் பயணம்

1995ல் கட்சி அழைத்ததன்பேரில் தோழர் அனு, பஸ்தார் காட்டிற்குச் செல்கிறார். 3 ஆண்டுகள் அக்காடுகளில் உள்ள பழங்குடி மக்களிடையே பணியாற்றினார். கோண்டு பழங்குடி மக்கள் பற்றியும், தண்டகாரன்யா மண்டலத்தைப் பற்றியும் பிஎச்டி ஆய்வுக்கான தரவுகளை எடுத்து வெளியில் அனுப்பினார்; அங்குள்ள புரட்சிகர ஊழியர்களுக்கு இவை குறித்து வகுப்புகளை எடுத்தார்.

மேலும் பஸ்தாரிலுள்ள கோண்டு பழங்குடி மற்றும் குறிப்பாக கிராந்திகரி ஆதிவாசி மகிளா சங்கதன் என்கிற பெண்கள் இயக்கத்திலுள்ள பெண்களுடைய வாழ்நிலையை, போராட்டத்தைதன் ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்தார். பழங்குடிப் பெண்களைத் தலைமைக்கு வளர்த்தெடுப்பதற்கான முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார். உள்ளுரில் உள்ள புரட்சிகர இயக்கத்திற்கு குறிப்பாணையைத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

பஸ்தார் காடுகளில் ஓயாத உழைப்போடும் விழிப்போடும் பயணித்துக் கொண்டிருந்தபோதுதான் மலேரியா நோய் அவரைத் தாக்கியது. கோடைக்கால வறட்சியும் சேர்ந்து அவரை வாட்டும்போது நோயின் அழுத்தம் அதிகரித்ததில் 10 கிலோ எடை குறைந்தும், கடுமையான வலியில் அவதிப்பட்டார். அத்தகைய சூழலிலும் அர்ப்பணிப்புடன் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதிலேயே முதன்மை கவனம் செலுத்தினார்.

பலமுறை மலேரியா நோய் தாக்கிய போதெல்லாம் பழங்குடி மக்களின் மருத்துவமே அவரைக் காப்பாற்றியிருக்கிறது. இத்தகைய கொடிய சூழலில் ஆளும் வர்க்கத்தின் கடுமையான அடக்குமுறையும் அதிகரித்தது. பஸ்தார் காடுகளின் ஒவ்வொரு அடியிலும் இராணுவத்தின் நடமாட்டமும், கண்காணிப்பும் விரிவடைந்து வந்தது. சவாலான இக்காட்டுப் பகுதியில், கொரில்லா படைகள் நகர்ந்து செல்லும்போது குறுக்கும் நெடுக்குமாக ஓடி, போலீசின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிக்கவும் செய்திருக்கிறார் தோழர் அனு.

மேலும் முடிவின்றி தொடரும் அவரின் சிந்திக்கும் திறன் இந்துத்துவ பாசிசத்தின் அபாயம் குறித்தும், இந்தியாவில் பெண்கள் இயக்கமும் பெண்ணியத்தின் வளர்ச்சிப்போக்குகள் பற்றியும், அராஜகவாதப் பெண்ணியம் சோசலிசப் பெண்ணியம் குறித்தான வேறுபாட்டைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பதிவு செய்திருக்கிறார். இந்துத்துவம், மத அடிப்படைவாதம், ஆணாதிக்கம் குறித்த விரிவான ஆழமான கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். அவர் இறப்பதற்கு முன்புகூட புரட்சிகர கம்யூனிஸ்ட் கடசிக்குள் பெண் தோழர்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்திருக்கிறார்.

இத்தகைய ஆய்வுகளும் தேடலும் மாபெரும் ஒரு மகத்தான தலைவருக்குரிய பண்போடு, பொறுப்புணர்வோடு, அதனைத் தீர்ப்பதற்கான முயற்சியோடு தன் கடமையை செய்துகாட்டியிருக்கிறார். உயர்ந்த பண்புகளைத் தனக்குள் கொண்டிருந்த தோழர் அனு, திறமைமிக்க கற்பிப்பாளராகவும், அறிவுமிக்கவராகவும், நேர்மறையான அணுகுமுறை கொண்டவராகவும் பலரின் ஈர்ப்பைப் பெற்றிருந்தார். பலராலும் போற்றப்படும் வல்லமைப் படைத்த தலைவர், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாக விளங்கியிருக்கிறார்.

மேலும் மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்ட் கட்சி(மாலெ) கட்சியைத் தோற்றுவித்தவரில் ஒருவர். பின் மாவோயிசக் கட்சியின் 9வது காங்கிரசில் அதிகாரப்பூர்வமாக மையக்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணாகவும் அங்கம் வகித்தார். யாராலும் மறுக்கமுடியாத தலைவராகத் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம், நிலவும் இந்துத்துவ சமூகக் கட்டமைப்பில் ஆர்.எஸ்.எஸ், பா.ச.க. போன்ற பயங்கரவாத சக்திகள் மக்களுக்கு எதிரான, குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் நச்சுப் பாம்பாக வளர்ந்து வருவதை குஜராத் கலவரத்தின்மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும் இந்தியாவில் குறிப்பாக இந்துத்துவப் பாசிசமும், ஆணாதிக்கமும் இணைந்து பெண்களை ஒடுக்கும் முக்கியக் கருவியாக இருப்பதை விவரித்து, அதற்கு எதிராகப் பெண்கள் அணிதிரள வேண்டும் என்கிற கருத்தை ஆழமாக முன்வைக்கிறார்.

இத்தகைய ஆற்றல் படைத்த அருமைத் தோழர் அனு, எத்தகைய அறிவாற்றலாக இருந்தாலும் அவை நடைமுறையோடு உரசிப் பார்த்து வெற்றி அடைவதில்தான் அமைந்திருக்கிறது. அதற்கு, ‘‘மக்களிடம் செல்வோம் மக்களிடம் கற்றுக் கொள்வோம்’’ என்கிற மாவோவின் கூற்றுக் கிணங்க தான் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார். மக்கள் வாழ்வில் கலந்து, களத்தில் போர்க்குணமிக்க, எளிமையான வாழ்க்கை முறையையும், கடினமான உழைப்பையும் கொண்ட கம்யூனிசப் பண்புகளை முன்னுதாரணமாக்கிச் சென்றிருக்கிறார்.

ஆக இன்றைய சூழலில், ஆளும்வர்க்கங்கள் வலுப்பெறத் துடிக்கிறது. பன்னாட்டு உள்நாட்டு பெருமுதலாளிகளின் சூறையாடல் மக்களின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தி வருகிறது. உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியலை ஏற்று புரட்சிகரக் கம்யூனிச கட்சியின் வழியில் நடைபோடுவதே இன்றைய தேவை. அந்த உறுதியோடு, இலட்சியத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வோம் எனும் நம்பிக்கைக் கீற்றை தோழர் அனுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம். சிரம் தாழ்த்தி புரட்சிகர வீரவணக்கம்.

Pin It