காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க சேலத்தில் கூடிய பெரியார் திராவிடர் கழக செயற்குழு முடிவு செய்துள்ளது. ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போகும் காங்கிரசையும், அதை நியாயப்படுத்தும் தி.மு.க.வையும், தமிழர்கள் தோற்கடிக்கவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு 29.3.2009 ஞாயிறு பகல் 11 மணியளவில் சேலம் நேஷனல் ஓட்டல் அரங்கில் கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் கூடியது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் 150 பேர் திரண்டு வந்திருந்தனர். சேலம் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் டைகர் பாலன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரியார் திராவிடர் கழகம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, அது தொடர்பாக கழகத் தோழர்கள் கருத்துகளை முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
கழக செயற்குழு உறுப்பினர்கள் திண்டுக்கல் தாமரைக் கண்ணன், லோகு. அய்யப்பன் (புதுவை), சாமிநாதன் (நாமக்கல்), நடராஜன் (விழுப்புரம்), அழகிரி (வடலூர்), அம்புரோஸ் (தூத்துக்குடி), செ.த.இரா சேந்திரன் (திருச்சி), இலட்சுமணன் (பெரம்பலூர்), சிற்பி ராசன் (தஞ்சை), சோலை மாரியப்பன் (தஞ்சை), ஆறுச்சாமி (கோவை மாநகர்), மனோகரன் (கோவை தெற்கு), டேவிட் (சேலம்), டைகர் பாலன் (சேலம்), முகில்ராசு (திருப்பூர்), இராம. இளங்கோவன் (ஈரோடு), இளையராஜா (நாகை), துரை சம்பத் (திண்டுக்கல்), திலீபன் (வேலூர்), தமிழ்பித்தன் (மதுரை), தனபால் (கரூர்), உமாபதி (சென்னை), அன்பு. தனசேகர் (சென்னை), வழக்கறிஞர் குமார தேவன், வழக்கறிஞர் இளங்கோவன், வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் நிறைவுரையாற்றினார். சேலம் பாலு நன்றி கூறினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
• மிசா, தடா, பொடா போன்ற ஆள் தூக்கி சட்டங்களை கடந்த காலங்களில் எதிர்த்து வந்த தி.மு.க. தற்போது, காங்கிரசை மகிழ்விக்கவும், காங்கிரஸ்எதிர்ப்புப் பிரச்சாரத்தை முடக்கவும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான், ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தை ஏவியுள்ளது. தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி பாதுகாப்புக்காக முறைகேடாகப் பயன்படுத்தும் தி.மு.க. அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
• ஈழத் தமிழர்களின் நியாயமான சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்கியே தீரவேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்து இலங்கை அரசுக்கு ஆயுதம், நிதி, போர்ப் பயிற்சிகளை அளித்து வரும் காங்கிரஸ்ஆட்சி - ஈழத்தில் ஒவ்வொரு நாளும் இன அழிப்புகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் - தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை சந்திக்க வருகிறது. ‘ஈழத்தில் தமிழர் இன ஒழிப்பு’ - வேகம் வேகமாக நடைபெறும் நிலையில் - ஈழத் தமிழின பாதுகாப்பு என்பதற்கு - முழுமையான முன்னுரிமை தந்து பெரியார் திராவிடர் கழகம், இத் தேர்தலை அணுகுகிறது. இந்த நிலையில் - ஈழத் தமிழர் ‘இன-ஒழிப்பு’க்குழு துணைபோகும் – காங்கிரஸ் மற்றும் அந்த துரோகத்துக்கு துணைப் போகும் தி.மு.க. கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று இச்செயற்குழு ஒருமித்து முடிவு செய்கிறது. இந்தக் கூட்டணி வேட்பாளர்களை தோற்கடிக்கக்கூடிய வலிமையான கூட்டணி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு இந்த செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
சோனியாவுக்கு கருப்புக் கொடி
• ஈழத் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து இதுவரை எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்காமல், தமிழின அழிப்புக்கு இந்திய அரசின் படை, ஆயுத உதவிகள் கிடைத்திட உதவி வரும் - காங்கிரஸ்கட்சித் தலைவர் சோனியா - தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வருகிற இடத்தில் எல்லாம் கருப்பு கொடி காட்டி, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த இந்த செயற்குழு முடிவு செய்கிறது.
• தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டவும் நலிந்து போன கள் இறக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கவும், தமிழ்நாட்டில் மீண்டும் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துவதோடு, அந்த உரிமை கோரி போராடும் தொழிலாளர் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை இந்த செயற்குழு முடிவு செய்கிறது.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் - எதிர்த்து களப்பணியாற்ற முடிவு
காங்கிரஸ்கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் எதிர்ப்புப் பிரச்சாரக் குழுக்களை உருவாக்கி தீவிரமாக தேர்தல் பணிகளில் இறங்கிடவும் - மாணவர்கள், இளைஞர்களை பெருமளவில் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்கச் செய்வது எனவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. ஏனைய தொகுதிகளில் தி.மு.க. - காங்கிரஸ்கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் கடிதம்
தேர்தல் நிலைப்பாடு குறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறையிலிருந்து கடிதம் எழுதயிருந்தார். விரிவான அந்த கடிதத்தை செயற்குழுவில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் படித்தார்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஈழத் தமிழர்கள் - இனப்படுகொலைக்கு துணை போகும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியை தோற்கடிப்பீர்!
- விவரங்கள்
- பெரியார் முழக்கம் செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2009