வாசல்லவச்ச பொங்கப்பானைய நாயி நக்கிட்டுப் போச்சுனா அது நாயி குத்தம் இல்லடா! பொங்கப்பானைய வாசல்ல வச்சபாரு.. ஒம்மேல தான்டா குத்தம் ஒம்மேலதான்டா குத்தம்!...

என்ன நாட்டாம காலையில செம்பத்தூக்கிட்டு கொல்லைக்கி வரும் போதே தீர்ப்பச் சொல்லிக்கிட்டு வாரீக..

வாடா நட்டுவாக்கலி! அதுவா.. டீ.வியில வந்துச்சா... வசனம் நல்லா இருந்துச்சு..அதான் நாளைப்பின்ன பஞ்சாயத்துப் பேச தேவப்படுமேன்னு சொல்லிப் பாத்தேன்.. எளவு.. நீ பாத்துப்புட்ட.. நல்லாருந்துச்சாடா...

ஆமா அதுக்குத்தான் இப்ப கொறச்சல்... காலையில ஒரு சேதி பாத்துப்புட்டு நொந்து போயித்தான் ஒங்களப் பாக்கலாம்னு ஓடிவந்தேன்..

என்னடா சேதி.. அம்மாம்பெரிய சேதி.... வல்லரசாயிட்டமா?

ஆமா நாட்டாம. .. அதுக்குத்தான் ஏற்பாடாம்.. ஒங்க மானமரியாதைய எல்லாம் கெடுத்துக் கேவலப்படுத்திருவானுக போல..

எலேய் நம்ம மான மாரியாத காலங்காலமா வாறது டோய்! கெட்ருமா? அப்புடி விட்டுருவோமா?

ஆமா.. இதே வசனத்த.. வச்சு எம்புட்டுக் காலந்தான் ஓட்டுவீங்க! மோடி மோடின்னு ஆடுனீங்களே.. இப்ப யாரு நெலத்த எப்ப வேண்ணாலும் புடுங்குறதுக்கு சட்டம் போடப் போறாராம்.. அது ஒங்க தாத்தா நெலமா இருந்தாலும் செம்புப்பட்டயம் வச்சிருந்தாலும் ஒங்க அனுமதி இல்லாம நெலத்தப் புடுங்க வருது சட்டம்... என்ன செய்யப் போறீக.. இப்பச் சொல்லுங்க ஒங்க தீர்ப்ப. அதுக்குப் பேரு நெலம் கையகப்படுத்துற சட்டமாம்.

அட.. நட்டுவாக்கலி.. வெவரங்கெட்டவனே மோடி எல்லாத்தையும் மொதலாளி ஆக்கிப் பாக்கணும்கிறாரு.. தப்பாடா.. கேக்குறேன் தப்பா..?

நாட்டாம எல்லாரும் மொதலாளி ஆயிட்டா எவன் ஒழைக்கிறது. ஏன் நாட்டாம ஊருக்குள்ள இருக்குறவனை எல்லாம் நாட்டாமையா ஆக்கிருவீங்களா என்ன? எல்லாரும் ஆயிட்டா.. அப்பறம் நீங்க பேசுறதெல்லாம் மொட்ட மணியமாவுல போயிரும்.. அப்பறம் இளிச்சவாயன் நட்டுவாக்கலி வேலைக்குக் கெடப்பானா?;... அது மாதிரி மோடி எப்படி எல்லாரையும் மொதலாளி ஆக்குவாரு.. அப்பறம் அவரு மாதிரியே எல்லாருக்கும் பத்து லட்ச ரூபாய்க்கு சட்ட வாங்கிப் போட்டா... நாடு தாங்குமா?

நெலத்தப் புடுங்க வாறாங்கிறேன். மொதலாளி மொள்ளாளின்னு பேசிக்கிட்டு...

அடே என்நெலம் முப்போகம் வெளயுற பூமி... எதாவது கருவங்காட்ட வேணா அப்படி எடுப்பாக... எங்களுக்குத் தெரியாத கோளாறாடா...

நாட்டாம! முப்போகம் வெளஞ்சாலும் மூணா ரெண்டா வெளஞ்சாலும் எடுக்கறத அரசாங்கம் எடுத்துக்குமுன்னு அடிச்சு சொல்லிப்புட்டான்.. அது மட்டுமில்ல நீங்க கோர்ட்டுக்குப் போனாலும் செல்லாதாம்...

என்னடா சொல்ற எவன் நெலத்த எவன்டா எடுக்குறது..வெள்ளக்காரன் சட்டமாவுல இருக்கு... ஏன்டா நட்டுவா, என்னமோ நீ சொல்றத நம்புற மாதிரி இல்லையேடா? சந்தேகமா இருக்கு...

நான் சொன்னா நம்பவா போறீக... காங்கிரசுக் கட்சியே அத எதுத்து டெல்லியில பொதுக்கூட்டம் போட்டுருக்கு.. வேண்ணா ரயிலேறிப் போயி பாத்துட்டு வாங்க...

எலேய் நட்டுவா... ஒங்குட்டு இப்பத்தான அகப்படுது.. நீ காங்கிரசு கட்சிக்காரனாக்கும்.. அதான் மோடி மோடின்னு நீட்டி மொளக்குற...

நாட்டாம காங்கிருசுக்கட்சி ஒங்க தாத்தா மாதிரி ஆளுகளுக்குத்தான் சரிப்பட்டு வரும்.. நமக்கு ஆகாது... ஏன்னா கம்யூனிஸ்டு கட்சி எங்ககிட்ட காசுவாங்கும்... காங்கிரசுக்கட்சி ஒங்ககிட்ட காசுவாங்கும்... மொதலாளிகள ஆதரிக்கிறதுல ஒங்க மோடிஜி கட்சியும் ஒங்க தாத்தா கட்சியான காங்கிரசும் ஓரே குட்டயில கெடக்கிற மட்டைகதான். எலெக்சன் கமிசன்ல இந்த ரெண்டு கட்சியும் சோ;ந்து சொல்லிருக்காக.. கம்பெனிகளிடமிருந்தும் முதலாளிகளிடமிருந்தும் நன்கொடை வாங்குறதுக்கு தடை போடாதீக.. அத வச்சுத்தான் மொத்தப் பொழப்பே ஓடுதுன்னு.. அதனால என்ன மாதிரி ஏழைபாழைகளுக்கு ஒங்க குடும்பக் கட்சிகள் சரிப்பட்டுவராது... எங்களுக்கெந்த கம்பெனிக்காரன் காசு கொடுக்கப் போறான். என்னத்தையோ எனக்குப்பட்ட நாயத்த எடுத்துச் சொன்னேன்.

ரொம்பத்தான் நாயம் பேசுற... நீயும் ஓங்கட்சிக் காரனெல்லாம் ஆட்சிக்கு வந்தா நாட்டுல நாயத்தக் காப்பாத்த கட்ட கடத்துறவன சுட்ட மாதிரி சுட்டுப்புடுவீகளாக்கும்.. ஏன்டா?...

நாட்டாம என் வாய கிண்டனுமாக்கும் ஒங்களுக்கு! கட்ட கடத்துறவன எங்க சுட்டாய்ங்க! கட்ட வெட்டுனவனயில்ல சுட்டுருக்கானுக.. அதென்னா நாட்டாம கட்ட வெட்டுனவன் பூராம் சட்டை யில்லாம டவுசரோட சுடுபட்டுக் கெடக்கான். எல்லாப் பேரும் போலீசு போன ஒடனே வேட்டி சட்டைய கழட்டிக்கிட்டு டவுசரோட வரிசையா நின்னா சண்ட போட்டான். செத்தவன் ஒடம்புல குண்டுபட்டா சண்டையின்னு விட்டுறலாம். தீயில ஒடம்பு வெந்துருக்கு.. கத்திக்கீறல் இருக்கு.. பல இடத்துல எலும்பு முறிவு இருக்கு.. இது தான் நாயத்தக் காப்பாத்த நடந்த துப்பாக்கிச் சூடா.. இந்த மாதிரி தான் நான் ஆட்சி நடத்தணுமா...பொழந்து போச்சு போங்க..

அப்பறம் கட்ட வெட்டப் போன இந்த கூலிக எல்லாம் பெரும்பாலும் ஜவ்வாது மலைப் பழங்குடிகளாம். தமிழக அரசு அவுகள காட்டவிட்டு வெரட்ட இப்ப கட்டக் கடத்தல்காரன்னு பேருவாங்கி சுடுவாங்கி கெடக்கானுக..

ஏன் நாட்டாம நான் தெரியாமத்தான் கேக்குறன். கட்ட வெட்டுனவன் இங்க பொணமா இருக்கான். வெட்டுன கட்டைய வித்தவன் எங்க? அதுல மாடி கட்டுனவன் சன்னல் செஞ்சவனெல்லாம் எங்க? அவனுகள அரசாங்கம் சுட்டுப்புடுமா? சொல்லுங்க அரசாங்கம் தனக்குத்தானே சுட்டுத் தற்கொல செய்யுமா?

எலேய் நட்டுவா! என்னடா அரசாங்கத்த கொற சொல்ற.. தீவிரவாதி மாதிரி பேசுற... போக்கு சரியில்லடா.. ஊருக்குள்ள ஒதுக்கி வச்சுப் புடுவேன்..

ஆமா அளந்துகிட்டே போறியே அவங்கள எல்லாம் வேணுமுன்னேதான் சுட்டாங்கங்கிறதுக்கு என்ன ஆதாரம்..

ஆந்திரா போலிஸ் டி.ஜி.பி தான் கன்னியாகுமரி வரைக்கும் கேக்குற மாதிரி சொன்னாரே... மரம் வெட்டுனா சுடுவோம்னு.. ஒங்க ஓ.பி.எஸ்சுக்கு அவனுங்க மேல ஒரு கேசப் போடத் திராணி இருக்கா? சொரணகெட்ட எரும கெணக்கா திரிஞ்சா என்ன பன்றது..

எலே போடா உன் நியாயமும் ஓட்ட வாயும்... தமிழக அரசு... ஆந்திர அரசுன்னு... பிரிச்சுப் பேசிக்கிட்டு.. இப்படி பேசிப் பேசித்தான் நாட்டையே குட்டிச்சொவராக்குரானுக.. காசுமீருல பாத்தயா? பாகிஸ்தான் கொடிய புடிச்சுக்கிட்டு ஊர்வலம் விட்டுருக்கானுக.. என் ரத்தமெல்லாம் கொதிக்குதுடா...?

ரொம்பத்தான் கொதிக்காம.. நெறயா

விஜயகாந்து.. அர்ஜுனு படத்துல எல்லாம் நரம்பு

பொடைக்க கொதிச்சுட்டானுக.. கொஞ்சம்

கொறச்சுக் கொதிங்க...

எலேய் நட்டுவா.. தேசத்துரோகி .. நீ என்ன அவனுகளுக்கு வக்காலத்தாடா?

சும்மா வசனம் பேசாதீக நாட்டாம..! பி.ஜே.பியும் ஆர்.எஸ்.எஸ்சும் ஒங்க மோடியும் அப்பறம் இந்து இந்துன்னு சந்து சந்தா கத்துறவனும் மூச்சுக்கு முன்னூறு தடவ இந்தியா இந்து நாடு ... இந்தியா இந்துநாடுன்னு அரசியல் சட்டத்துக்கு எதிரா கத்திக்கிட்டுத் திரியிரானுவல்ல.. அதுக்கு அர்த்தமென்னா? அப்ப முஸ்லீம்களும் மற்ற மதத்துக்காரகளும் அவகவுக மதமிருக்குற நாட்டுக்குப் போயிருங்கன்னு தான சொல்றானுவ.. அப்பல்லாம் நீங்க எங்க போயிருந்தீக.. அத மொதல்ல நிறுத்தச் சொல்லுங்க.. அத நிறுத்துனாலே இப்படி நடக்குறதெல்லாம் நின்னு போகும்... இல்லையினா அடுத்து நாடு முழுக்க கிறிஸ்தவரெல்லாம் வாடிகன் கொடிய புடிச்சுக்கிட்டு ஊர்கோலம் போனாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல..

நாட்டாம நீங்க இந்தியன் இந்தியன்னு சொல்றீங்க! அவன் இந்துயன் இந்துயன்னு சொல்றான்...

நட்டுவா ஒன்ன நல்லா சலவ பண்ணி வச்சிருக்கானுவடா.. அதனால இப்படித்தான் பேசுவ.. இப்ப ஒன்னச் சொல்றேன்.. ஒனக்கு மனசாட்சி இருக்கானு பாக்குறேன்..

ஏன்டா நீ அறுக்குற மாதிரியே கருப்புச் சட்டக்காரங்க சென்னையில தாலியறுக்குற விழா எடுத்தானுவலாம்ல.. அதுல சிகப்புச்சட்டக்காரனுக காவலாம்ல.. உருப்படுமா தமிழ்கலாச்சாரம்.. உருப்படுமாடா..

 ஏன் நாட்டாம பி.ஜே.பி. எச்.ராஜா மாதிரி ஏன் திருட்டுமுழி முழிச்சு ஒளர்றீங்க..

அவரு சொல்றாரு’ தாலிவேணும்னா நீ கட்டிக்க.. இல்லன்னா அத கழட்டிக்க அது ஓம் பிரியம்.. அத ஏன் பொது எடத்துல செய்ற.. அதுக்கு யாருக்கும் உரிமயில்ல’ அப்படின்றார்.

நாட்டாம நம்ம எச்.ராஜா சாதிக்காரவுக தாலிய தேங்கா மேல வச்சிக்கிட்டு மந்திரம்ன்ற பேருல .. அடே வெள்ளச்சட்ட போட்டவனே .. இதோ இந்த மணப்பெண் முதலில் இந்திரனுக்குப் பொண்டாட்டி.. அப்பறம் சந்திரனுக்குப் பொண்டாட்டின்னு அடுக்கிக் கிட்டே போயி கடைசியில எனக்கும் அப்பறம் ஒனக்கும் அவ பொண்டாட்டின்னு சொல்லி முடிச்ச பெறகு அந்த மந்திர அருளாள நனைஞ்ச அந்தத் தாலிய எடுத்து நம்ம தமிழ்பொண்ணுக கழுத்துல கட்டச் சொல்லி சமஸ்கிருதத்துல சுலோகம் சொல்றான். இந்த கேவலத்த வெட்கக்கேட்ட நம்ம தமிழ்பெண்கள இழிவுபடுத்துற இந்த விழாவ பொதுமேடையில நடத்தலாமாம். அந்த இழிவத் துடைக்கிற.. தமிழ் பொம்பளைக சுயமரியாதைய காப்பாத்துற விழாவ பொது மேடையில நடத்தக்கூடாதாம். அட என் டவுன்ட டக்கான் டவுன்டா... என்னா நாட்டாம.. பொம்பளப் பிள்ளைகள பெத்துப்புட்டு இப்புடிப் பேசுறீங்க. இதுக்குத் தமிழ் கலாச்சாரமுன்னு வக்காலத்து வேற..

என்னக்கி ஊர்மந்தையில ஏறி நின்னு அறுத்து தாங்கத்தா தாலியன்னு நம்ம ஊர் பொம்பளைக மத்தியல சொல்லுறீகளோ அன்னக்கித்தான் நாட்டாம நம்ம தமிழ்கலாச்சாரம் காப்பாத்தப்படும்...

எலேய் நட்டுவாக்கலி... நீ ஓம் பெரியார் வேலைய ஊருக்குள்ள காட்ட நெனக்கிற... ஒன்ன ஊருக்குள்ள ஒதுக்கி வைக்கிற காலம் வந்துருச்சுடியோய்.

ஆமா, எப்ப ஊருக்குள்ள இருந்தோம்..? ஊர் மந்தையில பொழங்குனோம்? ஊர்க்கோயிலுக்குள்ள போனோம்..? இப்ப ஒதுக்கப் போறீக...

செய்ங்க நாட்டாம! நாட்டாம பாத்துச் செஞ்சா சரித்தான். சரி நான் சோத்துப்பாட்டத் தேடிக் கௌம்புறேன்.. நாட்டாம... வரட்டா..

போயிட்டுவாடா போக்கத்தவனே... வாயக்கொற.. பொழைக்கப்பாரு... பாப்போம்.

Pin It