தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதேயில்லை. அப்படியே குற்றம் சாட்டப் பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதோ அதைவிட மூர்க்கத்தனமான உள்நோக்கத்தோடு குஜராத்தின் பட்டேல்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடும் பொருளாதார சூழலில் வாடிக் கொண்டிருக்கும் வன்னியர் சமூக மக்களுக்கான சமூகப் பொருளாதார மேம் பாட்டுக்காக குரல் கொடுப்பது, அதற்காகப் போராடுவது அவசியமானது, அவசரமானது. ஆனால், இராமதாசோ அமல்படுத்தவே படாத ஒரு பல்போன சட்டம் பெயரளவில் இருப்பதைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கொதித்ததன் நோக்கமென்ன? தன் கட்சியையும் குடும்பத்தையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறென்ன நோக்கமுள்ளது?

குஜராத்தின் தொழில்துறை, வணிகம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பட்டேல்களின் போராட்டமும் இதேபோன்ற நயவஞ் சக நோக்கம் கொண்டதே. இந்த போராட்டத்தை வழி நடத்திய ஹிர்த்திக் பட்டேல் வெளிப்படையாக அறிவித்தது என்ன? ”ஒன்று எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கு அல்லது இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்து விடுங்கள்” என்கிறார். பட்டேலின் நோக்கம் தெளிவானது. தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்பதைவிட இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்திட வேண்டும் என்பதுதான்.

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தொழிலகங்களும் வயல்வெளிகளும் வணிகத் துறையும் பஞ்சாயத்தில் இருந்து பாராளுமன்றம் வரையில் உள்ள அரசியல் அதிகாரமும் உயர்மட்டக் கல்விப் பயிலகங்களும் இன்னும் ஆதிக்கச் சாதியினர் கையிலேயே உள்ளதென்று பல ஆய்வுகள் நிரூபித்த போதும் ஹர்திக் படேல்கள் ஏன் கொதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில் அமைப்பாக்கப்பட்ட துறை வெறும் ஏழுசதவிகிதமே. அதிலும் இரண்டு சதவிகிதம் மட்டும்தான் அரசு மற்றும் பொதுத் துறை சார்ந்தவை. இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறப்படும் இந்த இரண்டு சதவிகிதத்திலும் இட ஒதுக்கீடு எந்த இலட்சணத்தில் அமலாக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போதைய உலக மயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு பிறகு இந்த இரண்டு சதவிகிதம் என்பது கிட்டதட்ட இல்லாத நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. கல்வித் துறையிலும் இதே நிலைமைதான். இந்த இலட்சணத்தில் படேல்களின் போராட்டத்திற்கு ஒரே நோக்கம்தான் உள்ளது. இட ஒதுக்கீடு என்ற பெயரில்கூட தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் யாரும் எழுந்து வந்துவிடக் கூடாது. ஆண்ட தலைமுறையே மீண்டும் மீண்டும் ஆள வேண்டும் என்பதுதான்.

 ஆர்.எஸ். எஸ் சின் நோக்கமும் இதுதான். இதனால்தான் இந்தப் போராட்டம் ஆரம்பித்த உடனேயே விசுவ இந்து பரிசத்தின் இன்றையப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெபான், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குதிக்கிறார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ரவி, ”சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாதென்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று கதறுகிறார். தினமணி, ’பிரச்சனையாகும் இட ஒதுக்கீடு’ என்று தலையங்கம் எழுதுகிறது. அதில் இட ஒடுக்கீட்டுக்கு சாதியையோ மதத்தையோ அடிப்படையாக கொள்ளாமல் வருமானத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை என்கிற எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்று புலம்புகிறது.

உண்மையில் எம்.ஜி.ஆர். சாதிய ஒதுக்கீட்டுக்குள் பொருளாதார வரையறையைத்தான் கொண்டு வந்தார் என்பதையும் அதற்காகவே அவர் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனையட்டி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனே அவர் தனது திட்டத்தைக் கைவிட்டது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டை 69% சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தினார் என்பதையும் மூடி மறைக்கின்றது தினமணி.

 இந்த நிலையில் வழமை போன்று சி.பி.ஐ.(எம்). நாடகமாடுகிறது. தமிழக சி.பி.ஐ. (எம்) இன் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் படேலின் போராட்டத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார். ஆனால், அவர்களின் மையக் குழுவோ கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவைப் பாதிக்கப்படும்போது அரசை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.

படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை மறுக்கப்பட்டதே இப்போதையப் பிரச்சனைக்குக் காரணம் என்று அறிக்கை விடுகின்றது. படேல்களின் இந்தப் போராட்டத்திற்கு குஜராத் மாநில அரசும் போலீசும் எந்த அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவின என்று ஊடகங்கள் வேதனைப்படும் வேளையில் படேல்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னான சமூகப் பொருளாதாரக் காரணங்களை நாமும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் இப்போராட்டத்தின் திசைவழியும் கோரிக்கைகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கிறதே. இந்நிலையில் நம்மைப் பொறுத்தவரை வாய்ப்புகளும் வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு விரிவடையும்வரை சாதி, மத ரீதியிலான இட ஒதுக்கீடு அவசியமானது, அடிப்படையானது என்று கருதுகிறோம்.

அதே போன்று இந்த இட ஒதுக்கீட்டு முறை அந்தந்த மக்களின் அடித்தட்டுப் பிரிவினரைச் சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யும் நோக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதே போன்று சாதி ஒழிப்பிற்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஒரு பரந்த விவாதம் தேவை என்று கருதுகிறோம். 

Pin It