CM relief fund 3502004 முதல் 2014 மே மாதம் வரை, பத்தாண்டு கள் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், 2-ஜி அலைக்கற்றை ஊழல், சுரங்க ஏல ஊழல் போன்றவற்றில் பல இலட்சம் கோடி உருபா அளவுக்கு ஊழல் நடந்தது என்பதையும், இந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்திட முடியாத - கையாலாகாத பிரதமராக மன்மோகன்சிங் - சோனியா காந்தியின் ஊமையான கைப்பாவையாக இருந்ததையும் முதன்மையான குற்றச்சாட்டுகளாக முழங்கி, நரேந்திர மோடி 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுத் தலைமை அமைச்சரானார்.

தலைமை அமைச்சராகப் பதவியேற்று ஓராண்டு நிறைவு விழா உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் 2015 மே 25 அன்று பா.ச.க.வால் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் நரேந்திர மோடி, “நான் முதன்மை யான ஊழியன்; மக்களின் முதன்மையான நம்பிக் கைக்கு உரியவன்.

கொள்ளையடிக்க யாரையும் அனுமதிக்கமாட்டேன்; அதனால் கொள்ளைக்காரர் களின் கெட்ட காலம் தொடங்கிவிட்டது; கடந்த ஓராண் டில் பா.ச.க. ஊழலற்ற ஆட்சியை வழங்கியுள்ளது; மக்களுக்கு நல்ல காலம் (அச்சா தின்) பிறந்துவிட்டது” எனப் பெருமிதத்துடன் முழங்கினார்.

இதற்கு முன்பு, நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்து நூறு நாள்களானதை பா.ச.க. விழாவாகக் கொண் டாடியது. அப்போது ஆங்கில நாளேடு ஒன்றில், அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதிய கட்டுரையில், “மன்மோகன்சிங் ஆட்சி மீது கசப்பும், நம்பிக்கையின்மையும், வெறுப்பும் மக்களுக்கு ஏற்படப் பத்து ஆண்டுகளாயின. ஆனால் நரேந்திர மோடி ஆட்சி மீது இவ்வாறான கருத்து பத்து மாதங்களுக்குள் மக்களிடம் ஏற்படக்கூடிய தன்மை யில் மோடியின் நடவடிக்கை இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.

2015 மே 25 முதலாண்டு நிறைவு விழாவில் பா.ச.க.வின் ஊழலற்ற ஆட்சி குறித்துப் பெருமிதத் துடன் நரேந்திர மோடி பேசிய ஒரு மாதத்திற்குள், அயலுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இராஜ°தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே இருவரும் லலித் மோடிக்கு விதிமுறைகளுக்குப் புறம் பாக, உள்நோக்கத்தோடு உதவியதாக ஆதாரங்களுட னான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

யார் இந்த லலித் மோடி? அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது, போதைப் பொருள் வழக்கில் சிக்கிச் சிறையில் அடைக்கப்பட்டு, படித்தது போதும் என்று இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்பட்ட பணக்காரர் வீட்டுப் பிள்ளை. கூர்த்த மதியும், சுறு சுறுப்பும் துணிவும்-அதேசமயம் அடாவடித்தனமும் ஆணவமும் கொண்டவர் லலித் மோடி. லலித் மோடி குடும்பமும் வசுந்தரா ராஜே குடும்பமும் முப்பது ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பவர்கள்.

இராஜஸ்தானில் 2003ஆம் ஆண்டுத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்று வசுந்தரா முதலமைச்சரானார். இராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் முப்பது ஆண்டு களாக ருங்டா குடும்பத்தின் தனிச்சொத்து போன்ற நிலையில் இருந்துவந்தது. 2005இல் இராஜ°தான் கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பை அரசு ஏற்றது. வசுந்தரா, கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக லலித் மோடியை அமர்த்தினார்.

லலித் மோடியும் அதை நவீனப்படுத்தித் திறமையான அணியாக உயர்த்தி னார். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய கிரிக் கெட் வாரியத்தில் நுழைந்தார். சரத்பவார், சிமெண்ட் ஆலை முதலாளி சீனிவாசன் போன்றவர்களின் ஆதரவுடன் அதன் துணைத் தலைவரானார்.

இருபது ‘ஓவர்கள்’ (Overs) கொண்ட அய்.பி.எல். (IPL) போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்து வதற்குத் திட்டம் தீட்டிக்கொடுத்தவர் லலித் மோடி. அதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அய்.பி.எல். போட்டிகளை நடத்தும் முழுப் பொறுப்பையும் லலித் மோடியிடம் ஒப்படைத்தது. 2008ஆம் ஆண்டு, முத லாவது அய்.பி.எல். போட்டி மாபெரும் வரவேற்பும், விளம்பரமும் பெற்றது.

பணம் கொழித்தது. அய்.பி.எல். அணிகளின் முதலாளிகளாக, சாருகான், ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிண்டால், விஜய் மல்லய்யா போன்ற திரைப்பட நட்சத்தரங்களும், பெருமுதலாளிகளும் இருந்தனர். அதனால் லலித் மோடியின் அதிகார போதை தலைக் கேறியது.

sharukhan shilpa preety 3502009ஆம் ஆண்டு ஏப்பிரல்-மே மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்துக்குப் பொதுத் தேர்தல் நடந்ததால் அய்.பி.எல். விளையாட்டுக்குப் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. உடனே லலித் மோடி அய்.பி.எல். போட்டியை மிகக் குறுகிய காலத்திற்குள் தென்னாப்பிரிக்காவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.

அய்.பி.எல். கிரிக்கெட் முறை தொடங்கப்பட்ட போதே அதில் கோடிகளில் பணம் புழங்கியதால், ஊழலும் இரட்டைப் பிறவியாய் உடன் தோன்றியது.

லலித் மோடியின் அடாவடித்தனத்தால் கிரிக்கெட் அதிகார வட்டத்துக்குள்ளேயே அவருக்குப் பல எதிரிகள் உரு வாயினர். அவர்கள் மூலம் தென்னாப்பிரிக்காவில் அய்.பி.எல். கிரிக்கெட் நடத்தியதில் லலித் மோடி ரூ.700 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி மோசடி செய்தது மற்றும் இந்தியாவில் ஏலம் விடுவதில் தொடங்கி பல் வேறு வகைகளில் பல நிதி மோசடிகளும் விதிமீறல்களும் செய்தது அம்பலமாயிற்று. எனவே லலித் மோடி 2010இல் இங்கிலாந்திற்கு ஓடிவிட்டார். அதுமுதல் இங்கிலாந்திலேயே குடியிருக்கிறார்.

அந்நியச் செலாவணி மோசடி (FEMA) மற்றும் வரி ஏய்ப்புத் தொடர்பாக அமலாக்கத் துறை (Enforcement Directorate) லலித் மோடி மீது 16 குற்ற வழக்கு களைப் பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு விசாரணை களை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு வருமாறு இலண்டனில் உள்ள லலித் மோடிக்கு 15 அறிவிக்கைகள் இந்திய அரசால் அனுப்பப்பட்டன. இந்தியாவுக்கு வந்தால் தன் உயிருக்கு ஆபத்து நேரிடும்; அதனால் வர இயலாது என்று மட்டுமே அவருடைய வழக்குரைஞர்கள் மூலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எனவே 2011ஆம் ஆண்டு லலித் மோடியின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டது. அதை எதிர்த்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் லலித்மோடி வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி கடவுச்சீட்டை முடக்கியது சரியே என்று தீர்ப்பளித்தார். ஆயினும் தில்லி உயர்நீதிமன்றத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகள் மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று மேல்முறையீடு செய்தார் லலித்மோடி.

இந்தப் பின்னணியில்தான் வசுந்தரா, சுஷ்மா சுவராஜ் இருவரும் லலித் மோடிக்கு எவ்வாறு முறை கேடான வகையில் உதவி செய்தனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 2011இல் லலித் மோடி இங்கிலாந்தில் குடியிருப்பதற்காக உரிமைகோரி அளித்த விண்ணப்பத்தில் வசுந்தரா ராஜே “நான் லலித் மோடி இங்கிலாந்தில் குடியேறுவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுகிறேன், ஆனால் நான் லலித் மோடிக்கு ஆதரவாகக் கையொப்பம் இடுவது இந்திய அரசுக்குத் தெரியக்கூடாது என்கிற திட்டவட்டமான நிபந்தனை யின் பேரில்தான் இதைச் செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வசுந்தரா அப்போது இராஜஸ்தான் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். லலித்மோடி தன் குடும்ப நண்பர் என்பதற்காக, இந்தியாவில் 16 பொருளாதாரக் குற்றவழக்குகளைச் சந்திக்க மறுத்து இலண்டனில் இருக்கும் இந்தியரான லலித் மோடிக்கு ஆதரவாகச் செயல்படுவது குற்றம் என்று நீண்டகாலமாக அரசியலில் தலைவராக விளங்கும் வசுந்தராவுக்குத் தெரியாதா? தற்போது பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள வசுந்தராவின் மகன் துஷ்யந்த் சிங் நடத்தும் உணவு விடுதி நிறுவனத்தில் லலித் மோடி ரூ.11 கோடி முதலீடு செய்துள்ளார். லலித் மோடிக்கு உதவிய குற்றச்சாட்டுக் குறித்து வசுந்தரா இதுவரை வாய் திறக்கவில்லை.

காங்கிரசு ஆட்சியின் ஊழல்களை நாடாளுமன் றத் தேர்தலில் முன்னிறுத்திப் பரப்புரை செய்து, ‘ஊழலற்ற ஆட்சி நடத்துவோம்’ என்று வாக்குறுதி அளித்து 2014 மே இறுதியில் ஆட்சியில் அமர்ந்த இரண்டு மாதங்களுக்குள் அயலுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஊழல் பேர்வழி லலித் மோடி இங்கிலாந் திலிருந்து போர்ச்சுகல் நாட்டுக்குச் செல்வதற்கு பிரித் தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து உதவி செய்துள் ளார். இதுபற்றிய செய்தி இலண்டனிலிருந்து வெளி வரும் ‘தி சன்டே டைம்ஸ்’ நாளேட்டில் 7.6.2015 அன்று வெளியானது. அதன்பின் இந்திய ஊடகங்களில் இது பெரிய செய்தியானது.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் ‘டுவிட்டரில்’, “லலித் மோடி 2014 சூலை 14 அன்று என்னிடம் தொலைப்பேசி யில் பேசினார். அப்போது, போர்ச்சுகல் நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள தன் மனைவிக்கு ஆகத்து மாதம் (2014) அறுவை செய்ய இருப்பதாகத் தெரிவித் தார். மனிதாபிமான அடிப்படையில், இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நாட்டின் தூதர் ஜேம்ஸ் பெவனிடம், பிரிட்டனின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி, லலித் மோடியின் வேண்டுகோளை (போர்ச்சுகல் லுக்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு வழங்குவது) ஆராயு மாறு கூறினேன். பிரித்தானிய அரசு லலித்மோடிக்குக் கடவுச்சீட்டு அளிப்பதால், இந்தியாவுக்கும் இங்கிலாந் துக்கும் இடையிலான உறவு எவ்வகையிலும் பாதிக் காது” என்று தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்க மளித்தார்.

இந்திய அரசு, லலித் மோடியின் கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ள நிலையில், இந்தியாவில் அவர் மீதான 16 பொருளாதாரக் குற்ற வழக்குகளின் விசார ணைக்கு உட்பட அவர் மறுத்துவரும் நிலையில், 2012இல் நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரம், இங்கிலாந்தின் நிதி அமைச்சருக்கு, “கடவுச்சீட்டு முடக் கப்பட்டுள்ள லலித் மோடி இங்கிலாந்தில் தங்கியிருக்க உரிமை இல்லை; அவரை உடனே இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புங்கள்” என்று கடிதங்கள் எழுதியுள்ள நிலையில், ‘மனிதாபிமான’ அடிப்படையில் உதவிய தாக சுஷ்மாசுவராஜ் கூறுகூது அவர் அயல்உறவு அமைச்சராகப் பதவி ஏற்ற போது கூறிய உறுதி மொழிக்கு முற்றிலும் எதிரானதாகும்.

சுஷ்மாசுவராஜின் கணவர் சுவராஜ் கவுசல் லலித் மோடிக்கு 22 ஆண்டுகளாக வழக்குரைஞராக இருந்து வருகிறார். மேலும் லலித் மோடியின் வழக்குரைஞர் குழுவில் சுஷ்மா சுவராஜின் மகளும் இடம்பெற்றி ருக்கிறார். 2014 ஆகத்து மாதம் தில்லி உயர்நீதி மன்றம் லலித் மோடியின் கடவுச்சீட்டை முடக்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் லலித் மோடியின் சார்பில் சுஷ்மா மகள் வாதாடினார்.

சுஷ்மா சுவராஜ், அயலுறவுத் துறை அமைச்சகத்தின் செயலாளரின் கருத்தைக் கேட்டறியாமல், தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளார். லலித் மோடி மீதான வழக்குகள் நிதி அமைச்சகத்தின் கீழ் இருப்ப தால், நிதி அமைச்சகத்தின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும். லலித் மோடி ‘ஒரு பெரிய புள்ளி’ என்ப தால் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் இதுகுறித்துப் பேசி இருக்க வேண்டும். எனவே அரசியல் சட்ட - நிருவாக நெறிமுறைகளுக்கு எதிராக சுஷ்மா சுவராஜ் லலித் மோடிக்கு உதவி செய்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

22.7.2015 நாளிட்ட “ஆனந்த விகடன்” இதழில் எழுத்தாளர் பாரதி தம்பி இதுபற்றி எழுதியிருப்பதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும் : “தன் அதிகாரத் தைப் பயன்படுத்தி ஒரு சில நிறுவனங்கள் 2-ஜி அலைக் கற்றை ஏலம் எடுக்க உதவினார் என்பதுதான் ஆ.இராசா மீதான குற்றச்சாட்டு. இதில் அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புத் தொகை வேண்டுமானால் பெரிய தாக இருக்கலாம். ஆனால் குற்றத்தின் தன்மை என்ற வகையில், ஆ.இராசா செய்ததைவிட, சுஷ்மாவும் வசுந்தராவும் செய்திருப்பது பெரிய குற்றம். இந்தியச் சட்டப்படியே அதைவிட இதற்கு அதிகத் தண்டனை வழங்க முடியும்.”

பொதுவாக ஊழல் என்பது பணமாக ஆதாயம் அடைவது மட்டுமேயாகும் என்ற கருத்து நிலவு கிறது. ஆனால் அதைப்போலவே ஆட்சியில் பதவியில் இருப்பவர்களும், உயர் அதிகாரிகளும் சட்ட விதிமுறைகளை மீறி மற்றவர்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்படுவதும் பெரிய ஊழலாகும். சுஷ்மாவும் வசுந்தராவும் இத்தன் மையில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள்.

ஊழலை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப் பதாகத் தன்னுடைய 56 அங்குல அகல மார்பைத் தட்டிக்கொள்ளும் மோடி, லலித்மோடியின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டது செல்லாது என்று தில்லி உயர்நீதி மன்றம் 2014 ஆகத்து மாதத்தில் தீர்ப்பளித்ததன் மீது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? கடந்த ஓராண்டில் மோடி அரசு, லலித்மோடியை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு பிரித்தானிய அரசை ஏன் கேட்க வில்லை? ‘மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி’ என்பது போல் சுஷ்மா, வசுந்தரா இருவரின் குற்றச் செயல் பாடுகள் குறித்து நரேந்திர மோடி எக்கருத்தும் கூறாமல் வாய்ப்பொத்திக் கிடப்பது ஏன்? வாய்பேசாத மன் மோகன்சிங் என்று கிண்டல் செய்த மோடிதானே இவர்!

பா.ச.க.வின் தலைவர் அமித்ஷா, “சுஷ்மா மனிதாபிமான அடிப்படையில் தான் லலித் மோடிக்கு உதவி செய்தார். போஃபர்ஸ் ஊழலின் முக்கிய குற்றவாளி குவத்ரோச்சியும், போபால் நச்சுவாயுக் கசிவுக்குக் காரணமான வாரன் ஆன்டர்சனும் காங்கிரசு அரசால் தப்பிக்கவிட்டது போன்றது அல்ல லலித்மோடி விவகாரம்” என்று வக்காலத்து வாங்குகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான இந்தரேஷ்குமார், லலித் மோடி ஒரு இந்தியர் என்கிற தேசபக்தியின் அடிப்படை யில் சுஷ்மா உதவியது சரிதான் என்று அடித்துப் பேசுகிறார்.

21.7.2015 அன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில், சுஷ்மாவும் வசுந்தராவும் தங்கள் பதவிகளிலிருந்து விலகாத வரையில், நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கமாட்டோம் என்று எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பா.ச.க.வோ நாடாளுமன்றத்தில் விவாதித்துப் பேசிட, நாடாளுமன்றம் செயல்பட எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்; நாடாளுமன்றத்தை முடக்குவது சனநாயகத் துக்கு எதிரான செயல் என்று கூறுகிறது.

முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, சுஷ்மா, “நாடாளுமன்றத்தை முடக்குவது சனநாயக நெறிமுறைகளில் ஒரு வழியாகும்” என்று நாடாளு மன்றத்திலேயே அறிவித்தாரே!. இப்போது லலித் மோடிக்கு முறைகேடாக உதவியது குறித்து நாடாளு மன்றத்தில் விடை கூறாமல் “மூத்த காங்கிரசுத் தலைவர் ஒருவர், நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்ட சந்தோஷ் பக் ரோடியாவுக்குத் தூதரக அலுவல் பாஸ்போர்ட் வழங்கு மாறு எனக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார். தேவைப்பட்டால் அந்த மூத்த தலைவர்யார் என்பதை நான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயாராக இருக்கிறேன்” என்று டுவிட்டரில் கூறியுள்ளார். இது பிரச்சனை யைத் திசைதிருப்பும் அடாவாடித்தனமாகும்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்யா “காங்கிரசு ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற ஊழல் கள் குறித்து விவாதிக்கக்கோரி பா.ச.க. உறுப்பினர்கள் அறிவிக்கை அளித்துள்ளனர்” என்று மிரட்டுகிறார்.

ஊழலை உமியளவும் அனுமதிக்கமாட்டோம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த பா.ச.க.-ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு மக்கள் மன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ பதில் சொல்ல மறுக்கிறது மோடி அரசு. நாடாளுமன்றத்தின் அலுவல் களை நடக்கவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்தால், காங்கிரசு ஆட்சியின் ஊழல் குப்பைகளைக் கிளறுவோம் என்று அச்சுறுத்துகிறது.

ஆகவே, இந்தியாவில் இரண்டு பெரிய தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ச.க.வும் ஊழல் எனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே என்பதை மீண்டும் மீண்டும் அக்கட்சிகளே மெய்ப்பிக்கின்றன.

vasundra rajasthan 350ஊழல் குறித்து ஆராய நடுவண் அரசு அமைத்த “வோரா குழு 1993இல் அளித்த அறிக்கையில், அரசியல் வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடுகளே ஊழலின் ஊற்றுக்கண்” என்று கூறியது.

1993க்குப்பின், கிரிமினல்களே அரசியல்வாதிகளாகவும், அரசியல்வாதிகள் கிரிமினல் களாகவும் மாறிவிட்ட கேடான நிலை ஏற்பட்டுவிட்டது. அதனால் ஊழல்களை அம்பலப்படுத்த முயலும் ஊடகவியலாளர்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுகிறார்கள்; தாக்கப்படுகிறார்கள்; கொலை செய்யப்படுகிறார்கள். மாநிலங் களிலும் இதே கொடிய நிலைதான் இருக்கிறது.

இத்துடன் கடந்த முப்பது, நாற்பது ஆண்டுகளில் பொதுவுடைமைக் கட்சிகள் தவிர்த்த மற்ற எல்லாக் கட்சிகளிலும் தலைவர் வழிபாடும், குடும்ப அரசியலும் - ஆட்சியும் என்கிற இழிவான நிலை ஏற்பட்டு விட்டது. இது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே மாபெரும் சனநாயக வெற்றி என்பதான மூடத்தனம் மக்கள் மனதில் ஆழ வேரூன்றியுள்ளது. சனநாயகத்தின் பெயரால் செயல்படும் அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரவர்க்கத்தினர், நீதித்துறை உள்ளிட்ட எந்த வொரு பிரிவினரும் சனநாயக நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் போது மக்கள் அணிதிரண்டு தவறுகளைத் தட்டிக்கேட்பதும், எதிர்த்துப் போராடு வதுமே உண்மையான சனநாயகக் கடமையாகும்.

உண்மையான சனநாயக அரசியல் என்ன என்று வெகுமக்களை அரசியல்படுத்தி, அணிதிரட்டிப் போராடச் செய்வதன் மூலமே ஊழல்களை, முறைகேடுகளை, அடக்குமுறைகளை, சுரண்டல்களை ஒழிக்க முடியும்.

Pin It