மோடி ஆட்சியின் ஓராண்டு நிறைவு எதை சுட்டிக் காட்டுகிறது? அவர்களின் சில ’சாதனைகளை’ பார்ப்போம்.
1. எவ்வித உரிமைகளுமின்றி உழைப்பு அடிமைகளாக இருந்த 18 ஆம் நூற்றாண்டு தொழிலாளிகூட அதிர்ச்சியடையும் விதமாக தொழிலாளர் சட்டத் திருத்தங்கள்.
2. புராதன மூலதனக் குவிப்பு சமயத்தில் அய்ரோப்பிய முதலாளிகள் விவசாயிகளை நிலங்களிலிருந்து வெளியேற்ற உருவாக்கிய கொடுஞ் சட்டங்களையும் மிஞ்சும் வண்ணம் நில எடுப்பு சட்டத் திருத்தம்.
3. 2014 இல் 3.1 விழுக்காடாக இருந்த விவசாய வளர்ச்சி மோடியின் ஒரே ஆண்டில் 1.1 விழுக்காடாக குறைந்துவிட்டது.
4. 80 விழுக்காடு விவசாயிகளின் நிலம் ஒரு ஏக்கருக்கு குறைவாக உள்ளது. ஆனால், இவர்களின் சராசரி கடன் 2014 இல் 47,000 ரூபாயாக இருந்தது. மோடி ஆட்சியில் 1,20,000 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
5. வர்ணாசிரமத் தர்மத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் குடும்பத் தொழில்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளலாம் என்று சிறார் வேலைக்கு அமர்த்தும் தடை சட்டத்தில் திருத்தம்.
6. 134 இடங்களில் தேவாலயங்கள் மீதும் மசூதிகள் மீதும் தாக்குதல் இந்த ஒரே ஆண்டில் நடைபெற்றுள்ளது.
7. சிறு குறுந் தொழில்களில் இதுவரை பெருமுதலாளிகள் ஈடுபடக் கூடாதென்று இருந்த எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு இப்போது மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, சூடம் போன்ற தயாரிப்புகளில்கூட பெரும் முதலாளிகள் ஈடுபடலாம் என்ற சட்டத் திருத்தம்.
8. சுதந்திர இந்தியா என்றும் சந்திக்காத முறையில் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு 66 ஆக சரிந்தது.
9. உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 2012 இல் 108 டாலராக இருந்தது. இப்போது வெறுமனே 60 டாலராக குறைந்த போதும் அனைத்துத் தனியார் எண்ணெய் வியாபாரிகளுக்கும் ஆதரவாக டீசல், பெட்ரோல் விலையை 17 முறை உயர்த்தியது.
10. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிடத் துடிக்கிறார்கள்.
11. சில மாநிலங்களில் மட்டுமே நடந்துவந்த விவசாயிகளின் தற்கொலை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. இதனை மத்திய அரசு வெளியிட்டுள்ள விவசாய வளர்ச்சி அறிக்கையே ஒப்புக் கொண்டுள்ளது.
12. மருந்துத் தயாரிப்பு மற்றும் பூச்சி மருந்துத் தயாரிப்பு கம்பெனிகள் தாங்கள் கண்டுபிடித்த(?) மருந்துகளின் உள்கட்டமைப்பு குறித்து 5 ஆண்டுகளுக்கு யாரிடமும் கூறத் தேவையில்லை என்ற சட்டத் திருத்தம் மூலமாக மருந்து, பூச்சி மருந்து முதலாளிகளின் காலடியில் நாட்டை அடகுவைத்தது.
13. தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெற்ற ‘வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்போம்’ என்ற விசயத்தில் ஒரு ரூபாய்க் கூட மீட்கப்படவில்லை. மாறாக மோடியின் நெருங்கிய சகா அமித் ஷாவிடம் இது குறித்து ஒரு நிருபர் சமீபத்தில் கேட்ட போது அவர் வெளிப்படையாகவே கூறினார் - “அது ஒரு தேர்தல் விளம்பர உத்தி. அதனைப் பெரிதுபடுத்தாதீர்கள்” என்று.
14. சமஸ்கிருத வாரம், பகவத் கீதையைத் தேசிய நூலாக அறிவிக்கத் திட்டம், மகாராஷ்டிரத்தில் மாட்சிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதைப் போன்று இந்தியா முழுவதும் அதனை அமலாக்க முயற்சி போன்ற உபக்காரியங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சுதந்திர இந்தியாவில் எந்தவொரு அரசும் இந்த அளவுக்கு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக நின்றதில்லை.
பணம், நிலம், பரிசு அனைத்தும் சூறையாடும் முதலாளிகளுக்கு, பகவத் கீதை மட்டும் நமக்கு. இதுதான் மோடியின் சாதனை.
ஆனால், இந்த கொடுங்கோலாட்சி இப்படியே தொடருமா?
மோடி ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் 2014 அக்டோபரில் மகாராஷ்டிரத்திலும் அரியானாவிலும் நடைபெற்ற தேர்தலில் வெற்றிப் பெற்றுத் தனித்து பா.ச.க. முதன்முறையாக ஆட்சி அமைத்தது.
ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே 2015 பிப்ரவரியில் தில்லியில் நடைபெற்ற தேர்தலில் பா.ச.க. படுதோல்வியடைந்தது. சென்ற மாதம் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் மண்ணைக் கவ்வியது. 2015 இல் தமிழகத்திலும் பீகாரிலும் நடைபெறவுள்ள தேர்தல்களில் அவர்களின் வெற்றி வாய்ப்புக் குறைவே.
தேர்தல் முனையில் அவர்களின் சரிவு இப்படியென்றால் தேர்தல் தவிர்த்த மக்களின் போராட்டம் இன்னும் தீவிரமாகி வருகின்றது.
நாடெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவு விவசாயிகளின் போராட்டம் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம் அனைத்திந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
போராட்டக் களம் தீவிரமடைய தீவிரமடைய நாடு இரு துருவங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இது ஒரு புதிய திருப்பம்தான்.