சந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை - என்று எழுதினார் கவிஞர் நா.காமராசன். ‘அரவாணி’ என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றி மிகுந்த அக்கறையோடு எழுதப்பட்ட கவிதை வரிகள் அவை.

பெண்களுக்கான இடஒதுக்கீடு பற்றிய விவாதம் இந்தியத் துணைக் கண்டம் முழுக்க பற்றி எரிந்து கொண்டிருந்த வேளையில், ‘இன்று பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிறார்கள்; நாளை இதை அலிகளுக்கும் கேட்பார்கள்’ என சமூக அக்கறை சிறிதுமின்றி திமிர்த்தனமாக எழுதினான் ஒருவன். உடம்பெல்லாம் மூளை என பார்ப்பனர்களாலும், அவர்களின் பாசந்தாங்கிகளாலும் அழைக்கப்படுபவன் தான் அவன். ஆனால், அந்த மூளை முழுக்க ‘நஞ்சு’ மட்டுமே இருப்பதை அவர்கள் எப்போதும் கூறமாட்டார்கள். ஆமாம், ‘சோ’ தான் அவன்.

இது போன்ற நச்சுக் கருத்துகளை திமிர்த்தனமாகப் பரப்பும் ‘நாசக்கார கிருமி’ சோ பற்றி மறைந்த கவிஞர் குடியரசு அவர்கள் ஒரு முறை இப்படிக் குறிப்பிட்டார்.

சோ - எழுத்து ஒன்று

எனவே, துளி விஷம்.

சிறுத்துச் சொன்னாலும், மிக சிறப்பாக சொன்னார் கவிஞர் குடியரசு.

நாம் என்றென்றும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி, அந்தத் துளி விஷப் பார்ப்பானைப் பற்றி கவிஞர் இன்குலாப் தனது ‘புறாச் சிறகு போர்த்திய பருந்துகள்’ நூலில் இப்படிக் கூறினார்: “காக்கிச் சட்டையுடனும், மொட்டையடித்தத் தலையுடனும் ‘சோ’ தமது காரை ஓட்டிச் செல்வதை சில சமயம் பார்த்திருக்கிறேன். ‘ஸ்வஸ்திக்’ சின்னத்தின் பின்னணியில்... காக்கிச் சட்டையும், மொட்டைத் தலையும் எனக்கு பாசிஸ்ட் முசோலினியைத் தான் அப்பொழுதெல்லாம் நினைவுபடுத்தும்.’ நமது இன எதிரி சோ பற்றி நாம் அணுக வேண்டிய மிகச் சரியான கோணம் எது என்பதற்கான நினைவூட்டலே மேலே குறிப்பிட்டது, அவ்வளவே.

‘அரவாணி’ பற்றிய செய்திகளைப் பார்ப்போம். பெண், ஆண் ஆகிய இருபால் குழந்தைகளிடமும், ஏறத்தாழ 13 வயது வரை அவரவர் பால் சார்ந்த பிறப்புறுப்பைத் தவிர உணர்தலில் வேறு எந்த வேறுபாடும் இருப்பதில்லை. 13 வயதுக்குப் பிறகே குழந்தைகளின் உடலியல் பண்புகளில் பால் சார்ந்த மாற்றம் தொடங்குகிறது. இந்த மாற்றம் தொடங்கும் வரை, ‘அரவாணி’ என அழைக்கப்படுவோரின் உடலியல் பண்புகளிலும் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. 13 வயதுக்குப் பிறகு தான் பெண், ஆண், அரவாணி என்ற கிளைகள் தோன்றுகின்றன.

இச்செய்திக்கு தொடர்பில்லை என்றாலும் ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. குழந்தைகள் பிறந்தவுடன், பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தைக் கணித்து அவர்களின் எதிர்காலத்தை அறிவதில் அலாதி ஆர்வம் காட்டுகிறார்கள்.

அதைப்போலவே, பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை அவர்கள் வளர்ந்து, வயதாகி, இறக்கின்ற வரையில் கணித்து மிகச் சரியாக(?) கூறுவதாக சோதிடர்கள் தற்போது தொலைக்காட்சிகள் மூலம் நம் வீட்டிற்குள் புகுந்து பொய்சாட்சியுடன் தற்பெருமை அடித்துக் கொள்கிறார்கள். இந்த அனைத்து வகை சோதிடர்களுக்கும் நம் வினா என்னவெனில், இது வரை எந்த ஒரு சோதிடராவது, எந்த ஒரு குழந்தையையாவது, அக்குழந்தை எதிர்காலத்தில் அரவாணியாக மாறும் என கணித்துக் கூறியதாக ஏதேனும் ஒரே ஒரு சான்று உண்டா?

பகுத்தறிவாளர்கள் நம்பும் மருத்துவர்கள் யாராவது பிறந்த குழந்தையைப் பற்றி இதுபோல் கூறியிருக்கிறார்களா? - என்ற எதிர் வினாவை அவர்கள் நம்மை நோக்கி எழுப்ப முடியும். இதற்கு விடை என்னவெனில், ஏறத்தாழ 13 வயதில் தான் உடலில் ஜீன்களால் (மரபணு) அந்த மாற்றம் ஏற்படுவதால், பிறந்த குழந்தையை பரிசோதித்துச் சொல்ல இன்றைய நிலையில் மருத்துவத்தால் முடியாது என்பது உண்மையே. ஆனால், எதிர்காலத்தில் இதுவும் சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகம். அவ்வளவு ஏன், விருப்பமில்லையென்றால் அந்த அரவாணித் தன்மையை களையக் கூடிய சாத்தியமும் மருத்துவத்தால் எதிர்காலத்தில் கண்டிப்பாக ஏற்படும்.

மீண்டும் ‘அரவாணி’ பற்றி நமது கவனத்தைக் குவிப்போம். ஏறத்தாழ 13 வயதில், ‘ஈஸ்ட்ரோஜென்’ என்ற ஹார்மோன் அதிகமாக சுரப்பதன் மூலம் ஒருவரின் உடலில் பெண் தன்மைப் பண்புகள் ஏற்பட்டு, அவர் பெண் என உடலியல் ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகிறார். அதேபோல், ‘ஆண்ட்ரோஜென்’ என் ஹார்மோன் அதிகம் சுரப்பதன் மூலம் ஒருவர் ஆண் என உடலியல் ரீதியாக நிர்ணயம் செய்யப்படுகிறார். குழந்தையின் உடலியல் பண்புகளில் 13 வயதில் ஏற்படும் இத்தகைய மாற்றத்தை உடற்கூறு இயல் இரு கட்டங்களாக பிரிக்கிறது.

பெண்களுக்கான முதல் கட்டமாக - பாலின உறுப்புகளின் வளர்ச்சி முதற்கொண்டு தோலின் மென்மைத் தன்மை வரை பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. (மிகவும் விரிவாக வேறொரு வாய்ப்பில்) பெண்களுக்கான இரண்டாம் கட்டமாக - முகத்தில் மயிர் வளராமை - (‘முடி’ என்பது சமஸ்கிருதச் சொல்), குரல் தொண்டையிலிருந்து வெளிப்படுதல், ஆண்களை நோக்கிய கவர்ச்சி - இவை போன்ற மேலும் பல மாற்றங்கள் ஈஸ்ட்ரோஜென் அதிகமாக சுரப்பதன் மூலம் பெண்களுக்கு ஏற்படுபவை.

ஆண்களுக்கான முதல் கட்டமாக - பாலின உறுப்பின் வளர்ச்சி முதற்கொண்டு தோலின் கடினத் தன்மை வரை பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆண்களுக்கான இரண்டாம் கட்டமாக - தாடி, மீசை மற்றும் நெஞ்சில் மயில் வளர்வது, குரல் வயிற்றிலிருந்து வெளிப்படுவது, பெண்களை நோக்கிய கவர்ச்சி - இவை போன்ற மேலும் பல மாற்றங்கள் ஆண்ட்ரோஜென் அதிக அளவில் சுரப்பதால் தான் ஆண்களுக்கு மயிர் உதிர்ந்து தலையில் சொட்டைத்தன்மை உண்டாகிறது. அதனால் தான், சொட்டைத் தலையை உடையவர்கள் பாலின சேர்க்கையில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள் என்ற கருத்தும் உள்ளது. இதுவும் ஓரு காரணம் என்பதால் அது ஓரளவு உண்மையும் கூட. பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் குறைவாக சுரப்பதால் தான் பெண்களில் சொட்டைத் தலையை உடையோர் பெரும்பாலும் இருப்பதில்லை.

பெண் தன்மைக்கு, ஈஸ்ட்ரோஜென் அதிக அளவிலும், ஆண்ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். அதன் காரணமாகவே பெண்ணிடம், குறைந்த அளவில் மட்டுமே ஆண் தன்மை காணப்படும். ஆண் தன்மைக்கு, ஆண்ட்ரோஜென் அதிக அளவிலும், ஈஸ்ட்ரோஜென் மிகக் குறைந்த அளவிலும் சுரப்பதே காரணம். எனவே தான், ஆணிடம் குறைந்த அளவில் பெண் தன்மை காணப்படும். உடலியல் பண்புகளின் அடிப்படையில், முற்றிலும் பெண் தன்மையுடைய பெண்ணும் கிடையாது; முற்றிலும் ஆண் தன்மையுடைய ஆணும் கிடையாது.

ஆனால், அரவாணி என்பவருக்கு ஆண்ட்ரோஜென், ஈஸ்ட்ரோஜென் ஆகிய இரண்டும் ஏறத்தாழ சம அளவில் சுரப்பதால் தான், அரவாணி என்பவர் ஆண், பெண் ஆகிய இருவரின் சரிவிகிதக் கலப்பாகத் தெரிகிறார். மேலும், அரவாணியிலும் ஆண் அரவாணி, பெண் அரவாணி என்ற கிளைகள் உண்டு. அரவாணி உடலில் ஏறத்தாழ சரிவிகிதத்தில் சுரக்கும் இரு ஹார்மோன்களிலும், எது சற்று அதிகமாக சுரக்கிறதோ அதுவே அரவாணியின் ஆண் அல்லது பெண் தன்மையை நிர்ணயிக்கிறது.

எனவே, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களின் விகித மாறுபாட்டால்தான் அரவாணி எனப்படுவோர் குறையுள்ளவராக கருதப்படுகிறார். இது இயற்கையாக ஏற்படும் ஊனம் என்பதைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை. ‘ஊனமுற்றோர்’ என்போரைப் பற்றிய நமது தவறான கடந்தகாலப் பார்வை முற்றிலும் அகற்றப்பட்டு, அவர்களை சமமாக மதிக்கின்ற மிகச் சரியான நோக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிது. இதே அணுகுமுறையை அரவாணி மீதும் நாம் திருப்ப வேண்டும்.

ஊனமுற்றோர் என்ற சொல்கூட தற்போது மாற்றப்பட்டு, ‘உடல் ரீதியான சவாலை எதிர்கொள்பவர்’ (physically challenged) என்ற மிகச் சரியான சொல் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே, ஒரு காலத்தில் ‘அலி’ என்று மிக இழிவான பொருளில் பயன்படுத்தப்பட்டது மறைந்து, தற்போது அரவாணி என்றும், திருமங்கை என்றும் விளிக்கப்படுகிறது. வெறும் சொல் மாற்றம் மட்டும் போதாது. உளவியல் ரீதியான நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட துணைபுரிபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் காவல் துறையினர், அரவாணிகள் மீது பொய்வழக்கு புனைவதில் இந்தியத் துணைக் கண்டம் முழுக்க ஒரே மாதிரியாகவே நடந்து கொள்கிறார்கள். அரவாணிகளுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை - இவை போன்ற எவ்வளவோ இல்லைகள் தாம் பரிசாக தரப்படுகின்றன. திரு. மு. கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு ஆளுநர் உரையில், ‘அரவாணிகளுக்கென தனி நல வாரியம்’ ஏற்படுத்துவதாக கூறியுள்ளது மிக வரவேற்கத்தக்கது. ஏளனப் பார்வை, இழிவுபடுத்துதல் கலையப்பட வேண்டும் எனவும், சமநோக்கு என்பதை மய்யமாக வைத்து இவ்வாரியம் இயக்கத் தொடங்கினால் நல்ல அணுகுமுறைக்கான தொடக்கமாக அது இருக்கும் எனவும் நாம் கருதுகிறோம்.

கடைசியாக, துளி விஷப் பார்ப்பான் சோ-வுக்கு சில வரிகள்: சாதாரணமான உடலியல் தன்மைகளைக் கொண்ட ஆண், பெண் இவர்களிடமிருந்து, அரவாணி வேறுபடுவது மேற்சொன்ன இரு சுரப்பிகளின் விகித வேறுபாடுதான். அதேபோன்று, பெரும்பாலோரிடமிருந்து வேறுபடுகிற ஆண் - ஆண், பெண் - பெண் உறவுக்கும் கூட ஒரு முதன்மைக் காரணம், இதே சுரப்பிகளின் வேறுபட்ட விகிதம்தான். அரவாணிகளை இழிவுபடுத்தும் சோ, சாவர்க்கர் - கோட்சே இருவரையும் சேர்த்தே இழிவுபடுத்தியதாக நாம் எண்ணுகிறோம். ஏனெனில், ‘கோழை’ சாவர்க்கர் - ‘அயோக்கியன்’ கோட்சே ஆகியோருக்கு இடையில் ஆண் - ஆண் உறவு இருந்ததாக நிறைய செய்திகள் வந்து விட்டன. நாம் இவர்கள் இருவரையும் எதிர்க்க எதிர் கருத்துத் தளம் என்ற ஒன்றை மட்டுமே கையாள்கிறோம்.

(இது எந்த உடற்கூறு இயல் மருத்துவரிடமும் ஆலோசனைப் பெற்று எழுதப்பட்டதல்ல; படித்த தகவல்களை வைத்தே எழுதப்பட்டது. எனவே, சிறு பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு.)