சமூக மாற்றமே வாழ்வியல்; அதனைப் பரப்புவதே என் லட்சியம் எனப் பணியாற்றி வருபவர் ரா. கிருஷ்ணசாமி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், பெரம்பலூரில் வசிக்கிறார். டாக்டர் அம்பேத்கர் சமூகக் கல்வி, பொருளாதார அறக்கட்டளையை நிறுவி, கல்விப் பணியையும் சமூகப் பணியையும் சளைக்காமல் ஆற்றி வருகிறார். எளிமையான தோற்றமும் உயர்ந்த லட்சியமும் கொண்டுள்ள இவர், கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உரத்துப் பேசக் கூடியவர். தன் மகளின் திருமணத்தை சமூக மாற்றத்திற்கான ஒரு விழாவாக மாற்றியவர். இம்மணவிழாவில், "தலித் முரசு' இதழுக்கு நாற்பது வாழ்நாள் கட்டணங்களை அளித்திருக்கிறார். பணியிலிருக்கும்போது, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அதிக நேரத்தைப் பள்ளியில் செலவிட்டு அவர்களை உருவாக்கியவர். படிக்க வழியில்லாத தலித் மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து, அவர்கள் வாழ்வில் கரையேற வழிவகுக்கிறார். தலித் முரசின் சமூக அவசியத்தை உணர்ந்த இவர், மிகக் குறுகிய காலத்திலேயே 112 வாழ்நாள் கட்டணங்களை சேர்த்து, இதழின் வளர்ச்சிக்கும் – தொடர்ச்சிக்கும் உரம் சேர்த்திருக்கிறார். "தலித் முரசு' மக்களிடையே பரவ வேண்டும் என்ற ஆவலோடு இயங்கிவரும், கிருஷ்ணசாமி அவர்களுடன் ஒரு சந்திப்பு.

சந்திப்பு மற்றும் புகைப்படங்கள் : யாழன் ஆதி

பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த உங்களுக்கு, இப்படியான சமூக அக்கறை எப்படி உருவானது?

நான் பிறந்தது பாலிகண்டபுரம் பக்கத்திலுள்ள பிரம்ம தேசம். பிரம்ம தேசம் என்பது, அந்தக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட இடம். எங்களுடைய ஊர், சாதி எதிர்ப்பாளர்கள் நிறைந்த ஊர். விவரம் தெரிந்தவர்கள் நிறைந்த ஊர். ஒரு முறை, அவர் ஒரு மருத்துவர். தலித் சமூகத்தைச் சார்ந்தவர். மிதிவண்டியில் போகக்கூடாது என்று சாதி ஆதிக்கவாதிகளால் தடுக்கப்பட்டார். ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சாதி வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் லாடபுரம், பூலம்பாடி ஆகியவை படித்தவர்கள் நிறைந்த பகுதி. அதனால் இத்தகைய கொடுமைகளை எதிர்த்துப் போராடி இருக்கிறோம். இரட்டைக் குவளை முறை போன்ற கொடுமைகளை ஒழித்து இருக்கிறோம். அதனால் அந்த உணர்ச்சி, மரபாக என்னிடத்தில் இருக்கிறது என்று எண்ணுகிறேன். அதிகாரமற்றவர்கள், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கும்போது கிளர்ந்து எழுதல் என்பது இயல்புதானே!

பணி செய்யும் காலத்தில் பெரம்பலூரில் அனைத்துலக அம்பேத்கர் மன்றம் தொடங்கி செயல்பட்டு வந்த பேராசிரியர் சொற்கோ செல்லமுத்து அவர்களுடன் சேர்ந்து, கல்விப் பணியும் சமூகப் பணியும் ஆற்றினேன். இங்கு அம்பேத்கர் விழாக்கள் தொடர்ந்து நடக்கும், அதில் எல்லாம் என் பங்களிப்பு இருக்கும்.

தலித் செயல் திட்டங்களில் தீவிரமாக இருக்கின்றீர்களே?

அது ஒரு வாழ்வியல். எனக்கான விடுதலையை சமூகத்திற்கானதாக மாற்றுகின்ற கடமை. ஒரு வாழ்வியல் ஒழுக்கம். அதைத்தான் என் மகள் திருமணத்தின்போது செய்து காட்டினேன். எத்தனையோ பேர் சாப்பிடாமலே அங்கே பேசிய செய்திகளைக் கேட்டதாகச் சொன்னார்கள். என்னுடைய பக்கத்து வயல்காரர்கூட, வேற்று சமூகத்தவராயிருப்பினும் "அவர் செய்தால் சரியாக இருக்கும்' என்றுதான் கூறினார். பணி செய்த இருபத்தைந்து ஆண்டுகள் அப்படிப்பட்ட சிந்தனையோடுதான் என் பணியை நிறைவேற்றியுள்ளேன். தலித் பார்வை என்பதே எனக்குள் இருந்து இவ்வுலகத்தைப் பார்ப்பதாகத்தான் இருக்கிறது. சமூக விடுதலைக்கான கருவியாக உள்ளவற்றைப் பயன்படுத்தும் திறன் சேர்ந்த வாழ்வியல் அது.

நீங்கள் எப்பொழுது கூட்டங்களில் பேசினாலும், "வந்த வேலை; சொந்த வேலை' என்று கூறுகிறீர்கள். அதென்ன வந்த வேலை, சொந்த வேலை?

என்னுடைய பள்ளி வேலையைத்தான் நான் சொந்த வேலை என்கிறேன். அது எனக்கானது. பாடவேளைகளைத் தவிரவும் நான் அதிகமாக மாணவர்களோடு இருந்திருக்கிறேன். அவர்களை படைப்பாற்றல் உள்ளவர்களாக மாற்றியிருக்கிறேன். மற்றவர்கள் இது குறித்து இழிவாகப் பேசுவார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப் படமாட்டேன். இடைநிலை ஆசிரியராக இருந்து, பின்னர் வரலாற்றுப் பட்டதாரி ஆசிரியரானேன். மன்றங்களைத் தொடங்குதல், அவற்றில் சமூகப் பிரச்சனைகளை மாணவர்களைக் கொண்டு பேச வைத்தல் என்று நிறைய செய்திருக்கிறேன். இதுதான் வந்த வேலை. ஒரு முறை மாணவர்கள் அவர்களே ஒரு தலைப்பை உருவாக்கி, என்னை நடுவராக வைத்து பட்டி மன்றம் நடத்தினார்கள். எட்டாம் வகுப்பு மாணவர்கள் அவர்கள். அந்தத் தலைப்பு என்ன தெரியுமா? மனிதனை மனிதனாக்குவது பணமா? குணமா? என்பது. மக்களுக்குப் போய்ச் சேர வேண்டியதை சரியாக சேர்த்திருக்கிறோம் தானே!

சமூகப் பணிதான் வந்த வேலை. அகமும் புறமும் இணைவதால், எத்தகு நன்மை கிடைக்குமோ அப்படித்தான் வந்த வேலையையும் சொந்த வேலையையும் ஒன்றாக்கி விடுவது. நிலையாமை என்பதுதான் நிலையானது. வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, சமூக மாற்றத்திற்கான வேலையை செய்ய வேண்டும். வாய்ப்பு அற்ற நேரங்களில் அறிஞர் பெர்னாட்ஷா சொன்னது போல, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்படித்தான் வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு, என் வந்த வேலையை செய்து வருகிறேன்.

தலித் மக்கள் தற்போது சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

எந்தச் சூழலிலும் தலித் மக்களின் வளர்ச்சியை பொதுச் சூழல் ஏற்றுக் கொள்வதில்லை. பொதுத் தன்மைக்கு அவர்களை அனுமதிக்க சாதிய சமூகம் இன்றைக்கும் மறுக்கிறது. தலித்துகள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆதிக்க – அடிமை உணர்வு இன்னும் அப்படியே தக்க வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொன்னால் அதிகமாகவே பல வடிவங்களில் மாறி இருக்கிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் அவர்களேயானாலும் சரி, இப்போது முதல்வராக இருக்கும் மாயாவதி அவர்களேயானாலும் சரி, எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோமல்லவா! இத்தனைக்கும் இந்தியக் குடியரசுத் தலைவர்களிலேயே மிகுந்த பாராட்டுக்குரியவர் அவர். அவருடைய உரைகள் அற்புதமானவை. ஆனால் அவர் எவ்வளவு தூரம் இவர்களால் புரிந்து கொள்ளப்பட்டார்? மேலும் தலித்துகள் பணிபுரியும் எல்லா துறைகளிலும் மேல் அதிகாரிகளால், சாதியப் பார்வையுடனேயே பார்க்கப்படுகின்றனர். பிற சாதி சங்கங்கள் எஸ்.சி. எஸ்.டி. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனவே. இதுவே சாதி ஈட்டிகள் தொடர்ந்து தாக்குகின்றன என்பதற்கான சாட்சி. திராவிட அரசியல், தலித்தல்லாதாரை "நவீன பார்ப்பனர்களா'க மாற்றி வைத்திருக்கிறது. மனிதனை நேசிக்கின்ற தன்மையற்றவர்கள் சூழ வாழ்வதே ஒரு பிரச்சனை அல்லவா?

Krishnasamyசரி, தலித் அதிகாரிகளின் நிலை எப்படி இருக்கிறது?

பம்முகின்றவர்களாகவே அவர்கள் இருக்க முடிகிறது. மென்மையாக இருக்க வேண்டிய கட்டாயம், அவர்களை அப்படி ஆக்கியிருக்கிறது என்பதே உண்மை. உணர்வுப்பூர்வமாக அவர்கள் இல்லை. கயர்லாஞ்சி கொடுமையை, அதற்குப் பிறகு நடைபெற்ற விசாரணையின்போது சூழ்ந்திருந்தவர்கள் தலித் அதிகாரிகள்தான். அவர்கள் அப்பிரச்சனையை எப்படி கையாண்டனர் என்பதைத்தான் நாம் அறிவோமே!

"தலித் முரசு' மீது தங்களுக்கு ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

அதைத்தான் வாழ்வியல் நோக்கம் என்று சொன்னேன். நமக்கான ஏடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆவல் என்னிடம் உண்டு. தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், அவர்களின் தேவைகள், எழுச்சி ஆகியவற்றை இந்த இதழ் உள்ளபடியே வெளிப்படுத்துகிறது. தேனியில் உயர் நிலைப் பள்ளியில் படித்த அருந்ததியின மாணவர் மீதான வெறுப்பு – அதைத் தொடர்ந்து அவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டிருப்பது போன்ற செய்திகள் "தலித் முரசு' மூலம்தான் கிடைக்கின்றன. அதனால் இவ்விதழுக்கு என்னõலான பங்களிப்பை செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை உந்துகிறது. புதுக்கோட்டை மருத்துவர் ஜெயராமன், அரக்கோணம் கவிஞர் தமிழேந்தி போன்ற ரத்த உறவுகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது "தலித் முரசு' இதழ்தான். "தலித் முரசு' இதழின் நேர் தன்மை என்னைப் போன்றவர்களை ஈர்க்கின்றதாகவே உள்ளது. அதனுடைய நேர்த்தி, உண்மைத் தன்மை ஆகியவை பெருத்த நம்பிக்கையை அளிக்கிறது.

குறைந்த காலத்திலே தலித் முரசுக்கு 100க்கும் மேற்பட்ட சந்தாக்களைச் சேர்க்க முடிந்தது எப்படி?

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அது நிகழ்ந்தது. பல பேர் தங்களுடைய உணர்வுகளைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தத் தயாராக இல்லை. மத அடிப்படை சம்பிரதாயங்களில் ஊறிப்போனவர்களாகத்தான் அவர்கள் இருக்கிறார்கள். அதைக் கைவிட முடியாதவர்களாய்த்தான் அவர்களால் இருக்க முடிகிறது. எப்படியாவது அவர்களை இம்மாதிரி இதழ்களைப் படிக்க வைத்துவிட மாட்டோமோ என்னும் ஏக்கம் எப்பொழுதும் என்னுள்ளத்தில் இருந்து கொண்டே இருக்கும். யாருடனாவது பேசும்போது, அவர்கள் தலித்தாக இருந்தாலும் சரி, தலித் அல்லாதவராக இருந்தாலும் சரி, என்னுடைய பேச்சு "தலித் முரசு' பற்றியதாகத்தான் இருக்கும். ஓர் ஆயுள் சந்தாவிற்கு அவர்களை ஒப்ப வைத்து விடுவேன். அது மட்டுமல்ல, நான் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்னும் கருத்து அவர்களிடம் உண்டு. அந்தத் தோழர்களுக்கெல்லாம் என் நன்றியை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய வீட்டிலே கூட்டங்களை நடத்திதான் இதைச் செய்தேன். இதை ஏன் வெளி அரங்கத்தில் செய்யக் கூடாது என்றும் கேள்வி இப்போது என்னுள் இருக்கிறது. அப்போது நிறைய பேரை நம்மால் சேர்க்க இயலும். கருத்துகளைத் தெரிவிக்க இயலும். வரும் ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் பிறந்த நாளில் பெரம்பலூரில் வெளி அரங்க நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யும் எண்ணம் இருக்கிறது. அதற்கான திட்டங்களை தீட்டிக் கொண்டு இருக்கிறேன்.

உங்கள் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அய்.ஏ.எஸ். மய்யம் குறித்து சொல்லுங்கள்...

இப்போதுதான் மாவட்ட ஆட்சியரைப் பார்த்துவிட்டு வருகிறேன். தொடக்க விழாவிற்கு வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதை எல்லாம் தீவிரமாக செய்ய வேண்டும். நிறைய பேரை ஆட்சியாளர்களாக உருவாக்க வேண்டும்.

"தலித் முரசு' வாசகர்களுக்கு தங்களின் செய்தி என்ன?

தலித்தியத்திலிருந்து உலகைப் பார்க்க வேண்டும் என்னும் கருத்து, என்னுள்ளத்தில் ஆழப்பதிந்துள்ளது. சமூகப் பிரச்சனைகளுக்கான தீர்வைத் தருகின்ற ஏடுகளைத் தொடர்ந்து படித்து ஆதரிக்க வேண்டும். தலித் விடுதலைக் கருத்தியலை வாழ்வியலாகக் கொண்டு அதைப் பிறரும் பயன்படுத்தும் வகையில் பின்பற்ற வேண்டும். நடக்க வேண்டும். கற்பி. அணியமாகு. செயல்படு.

சாதியை ஒழிக்க முடியும் என்னும் நம்பிக்கையை இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவது எப்படி?

சாதியை ஒழிக்க முடியும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு. அதிலும் குறிப்பாக பெண்கள் தலைமையில் அது நிகழ வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அது சாத்தியமே. தலித் முரசில் "மாற்றுப்பாதை' பகுதியில் தோழர் ஜெனிபர் பற்றிய கட்டுரை படித்தேன். அதில் அருமையாக அவர் பணியாற்றுவது தெரிகிறது. அப்படி எந்தவொரு பகுதியிலும் பணி நடக்கிறபோது, சமூக மாற்றத்தை நாம் கொண்டு வந்து விட முடியும். சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைக்கும் – அதற்கு ஆதரவு தெரிவிக்கும் தலித் அதிகாரிகள் பெருக வேண்டும். சாதி ஒழிப்பு குறித்த கருத்துகளை குழந்தைகளுக்கும் புரிய வைக்க வேண்டும். கருத்தியலைப் பரப்புவது மிக முக்கியமானது. "தலித் முரசு' அதை சரியாகவே செய்கிறது. ஆனால் இன்னும் துரிதமாக அதைச் செய்ய வேண்டும்.