குழந்தை இலக்கியத்தின் மொழி எது? குழந்தையின் மொழியே குழந்தை இலக்கியத்தின் மொழி. கொஞ்சம் என்பதற்கான குழந்தையின் மொழி ‘த்தூண்டு’. குழந்தைகள் பயன்படுத்தும் அல்லது புரிந்துகொள்ளும் சொற்களைக் கொண்டதே குழந்தைகளின் மொழி. அதுவே குழந்தை இலக்கியத்தின் மொழி.

குழந்தை மொழி தெரிந்தவர்களே குழந்தை இலக்கியம் படைக்க முடியும். பெரியவர்களுக்கு எழுதும்போது அந்த பிரச்சினை இல்லை. குழந்தைகள் எழுதினால் அது குழந்தை மொழியில் தான் இருக்கும். பெரியவர்கள் குழந்தைகளுக்கு எழுதும் போது அவர்கள் குழந்தைகள் மொழியை கையாள வேண்டியிருக்கிறது. அவர்கள் கூடு விட்டு கூடு பாய வேண்டியிருக்கிறது. அதனால்தான் குழந்தைகளுக்கு எழுதுவது எளிதல்ல என்று கூறுகிறார்கள்.

எண்ணங்களையும் உணர்வுகளையும் மொழியில் முழுமையாக சொல்லிவிட முடியாது என்று கூறுகின்ற நிலையில் குழந்தையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மொழியைத் தெரிவித்துக் கொள்ளாமல் எழுதுவது எப்படி?

மொழியினால் உருவாக்கப்படும் சூழலில்தான் குழந்தை வாழ்கிறது, வளர்கிறது என்பதால் குழந்தையின் உலகை மொழிதான் வடிவமைக்கிறது. ஆதலால் குழந்தையின் உலகோடு உறவாடும் போதே குழந்தையின் மொழியைக் கற்றுக் கொள்ள முடிகிறது.

குழந்தை இலக்கியத்தில் அனுபவமிக்க எழுத்தாளர் கவிஞர் செல்ல கணபதி அவர்களும் ‘குழந்தை எழுத்தாளர் ஆவது எப்படி?’ என்ற கட்டுரையில் ‘குழந்தைகளோடு பழகினால் அவர்கள் மொழி வசப்படும்’ என்றே கூறுகிறார்.

குழந்தை இலக்கியத்தின் மொழி பற்றி பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. அவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் மொழி இவ்வாறு இருக்கின்றன என்று விவாதிக்கின்றன.

தமிழில் பொது கல்வி முறையால் ஒரு பொது மொழி உருவாகியிருக்கிறது. ஆங்கிலம், வடமொழி, உருது ஆசிய மொழிகளின் சொற்கள் கலந்தே இப்பொது மொழி இருக்கிறது. ஆகையால் மொழிக் கலப்பு என்பது பிரச்சினையா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தை தமிழ்ச் சொற்களில் எழுதுகிற வர்கள் இருக்கிறார்கள். நேரடியாக ஆங்கிலத்தையே கலந்து கவிஞர் லெமன் ‘மஹா குறும்பு’ செய்திருக் கிறார், அந்த பாடல் இது:

‘MONKEY WEDDING MONKEY WEDDING

 மகிழ்ந்து பாருங்க.

மங்கேஷ் வீட்டுக் காலண்டர் முன் வந்து கூடுங்க!

MON MON எல்லாம் KEY KEY சேர்ந்து WEDDING ஆச்சுங்க!

MONKEY WEDDING MONKEY WEDDING மாதம் தோறுங்க!

மங்கேஷ் வீட்டு காலண்டரை வந்து பாருங்க!

‘பிற மொழி கலக்காத தமிழ்நடையில் பாடல் களையும் கதைகளையும் எழுத வேண்டும். தனித் தமிழ் மொழியின் சிறப்பை வளர்க்க வேண்டும்’ என்று அதே கட்டுரையில் கவிஞர் செல்ல கணபதி வலியுறுத்தி உள்ளார்.

மொழிக் கலப்பினால் குழந்தைகளுக்கு சொற் களஞ்சியம் உருவாகுவது பாதிக்கும். ஆங்கிலத்தில் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த அனுமதியில்லை. Dog Says ‘லொள்’ என்று சொல்ல முடியாது. BOW என்றே சொல்ல வேண்டியிருக்கிறது என்று கவிஞர் வெற்றிச் செழியன் வாதிடுவதில் அர்த்தமிருக்கிறது.

தனித்தமிழில் பாட்டு எழுதி அதற்கு தமிழ் இசையும் அமைத்துள்ளார் ‘தமிழிசைத் தென்றல்’ அரும்பியன் அவர்கள்.

‘உதிர்மா வேண்டும் உதிர்மா வேண்டும்

உதிர்மா வேண்டுமம்மா!

உள்ளம் களிக்க உடனே சிரிக்க

உதிர்மா வேண்டுமம்மா!

துளிமா வேண்டும் துளிமா வேண்டும்

துளிமா வேண்டுமம்மா!

துள்ளித் திரிந்து துயரை மறந்திடத்

துளிமா வேண்டுமம்மா!’

அரும்பியனின் மேற்கண்ட பாடலில் வரும் தூய தமிழ்ச் சொற்கள் உதிர்மா என்பதற்கு பகோடா என்பது பொருள், துளிமா என்பதற்கு காராபூந்தி என்பது பொருள். மேலும் வரும் சொற்களான நெளிமா என்பதற்கு அல்வா, அரிமா என்பதற்கு சிங்கம், ஊரி என்பதற்கு கார் என்பது பொருள். தூய தமிழ்ச் சொற்களை மூத்தோர் துணையுடனே குழந்தைகள் புரிந்து கொள்ள முடியும்.

சாதி, மதம், இனம், நிலம் இவற்றின் தாக்கத் தோடு தான் மொழி உள்ளது. இத்தாக்கமே வட்டார மொழி ஏற்படக் காரணம். ஓர் இலக்கியம் வட்டார மொழியிலேயே உயிர்ப்புடன் வெளிப்படுகிறது. குழந்தை இலக்கியத்தில் மட்டும் அது வேறாகவா இருக்கப் போகிறது? என்ற கருத்தோட்டமும் உள்ளது.

வட்டார மொழியே குழந்தையின் வாழ்க்கை மொழியாக இருக்கிறது. செயற்கையான வாக்கிய கட்டமைப்பும் சொல்லாட்சிகளும் வாழ்க்கை மொழியான வட்டார மொழியில் கிடையாது.

குழந்தை இலக்கியத்தில் தாலாட்டுப் பாடல் களும், நாடோடிப் பாடல்களும், கதைகளும் மொழிப் புலமைப் பெற்றவர்களிடமிருந்து பிறக்க வில்லை. பெரும்பான்மையான குழந்தை எழுத்தாளர் களுக்கு வட்டார மொழி தெரியாது. அவர்கள் வேரற்று இருக்கிறார்கள். அதனாலேயே நாடோடிப் பாடல்களுக்கும், கதைகளுக்கும் ஈடான படைப்புகள் இப்போது உருவாகவில்லை.

வட்டார மணத்துடன் கவிஞர் ம.லெ. தங்கப்பாவின் ‘சோளக் கொல்லை பொம்மை’, ‘தொடர் வண்டி’ பாடல்களும் கி. ராஜநாராயணனின் ‘பிஞ்சுகள்’ என்ற நாவலும் உள்ளன. இப்படைப்பு களில் மொழி இயல்பாக, வேடிக்கையாக, விளை யாட்டாக இருக்கிறது. இம்மொழியே குழந்தை களுக்கு நெருக்கமானது.

குடும்ப மொழியே குழந்தையின் மொழியாக இருக்கிறது. ஆகையால் பேச்சு வழக்கில் படைப்புகள் அமைவது சிறப்பானது என்ற கருத்தும் உள்ளது. பேச்சு மொழி, மொழியைச் சிதைத்து விடும் என்று எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் நிறைய மழலைப் பாடல்கள் பேச்சு மொழியிலே அமைந்து நீள்ளன.

‘குயிலு ஒண்ணு கூவுது

மயிலு ஒண்ணு ஆடுது

முட்டிப் பார்க்கும் கண்ணுல

முயலு ஒண்ணு தாவுது’

எனும் மேகலா செழியனின் பாடல் பேச்சு மொழியில் அமைந்துள்ள சிறப்பான பாடல்,

குழந்தை இலக்கியத்திற்கான மொழியைத் தீர்மானிக்கும் அடிப்படைகளில் முக்கியமானது குழந்தைகளின் வயது பிரிவுகளாகும்.

3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 3000 சொற்கள் வரை தெரிந்திருக்கும் என்று மொழி அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்களை மயக்குவது என்னமோ ஓசையின்பம் ஏற்படுத்தும் சொற்களே குழந்தைகளின் மனம் சந்தத்திற்கு கட்டுப்பட்டது.

‘சலக்குச் சலக்குச் சலக்குச் சலக்குச்

சலங்கை சத்தமாம்’

என்று தொடங்கும் கவிஞர் செல்ல கணபதியின் பாடல் ஓசையின்பத்தைத் தருகிறது.

‘மாமி சுட்ட பிட்டு

மடியில் வாங்கிக் கட்டு

சீனி சர்க்கரை இட்டு

சிறிது நெய்யும் சொட்டு

உண்டு ஏப்பம் விட்டு

ஓடி வா நீ பட்டு’

எனும் மயிலை சிவ முத்துவின் பாடல் சந்த சொற் களுக்கு நல்ல எடுத்துக்காட்டு, புரட்சிக் கவிஞரின் குழந்தைப் பாடல்கள் ஈற்றடி சந்தத்திற்கு பெயர் பெற்றது.

6 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு மொழியும் அறிவும் வளர வேண்டியுள்ளது. அவற்றை வளர்க்கும் விதமாக குழந்தை இலக்கியத்தின் மொழி அமைய வேண்டும். இவ்வயதினர் 6000 சொற்கள் வரை அறிந்திருப்பார்கள்.

9 முதல் 11 வயது குழந்தைகளுக்கான மொழி அவர்களின் கற்பனை, சிந்தனையைத் தூண்டுவதாக அமைய வேண்டும்.

‘ஊருக்கெல்லாம் ஒரு விளக்காம்

உயரக் காணும் தெரு விளக்காம்

யாரும் ஏற்றி வைக்கவில்லை

                அழகு நிலா, அதே பார்!

                அழகு நிலா, அதோ பார்!’

எனும் அழ. வள்ளியப்பாவின் பாடல் குழந்தைகளின் கற்பனை ஆற்றலைத் தூண்டும் மொழியில் அமைந்து உள்ளது.

12 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளிடம் படைப்புத் திறன்கள் வளரும். அவர்களுக்கான படைப்பும் படைப்பின் மொழியும் படைப்பாற்றலைத் தூண்டும் விதமாக அமைய வேண்டும். இவ் வயதினருக்கான குழந்தை இலக்கிய மொழியில் புதிய சொற்கள் இருக்க வேண்டும். ‘ஒவ்வொரு பாட்டாலும் குழந்தை இரண்டோர் அருஞ்சொற் களேனும் அறிந்து கொள்ளாராயின் அப்பாட்டினால் ஏற்படும் பயன்தான் என்ன என்று கேட்கிறேன்’ என்பது பாவேந்தர் பாரதிதாசனின் கேள்வியாகும்.

குழந்தை இலக்கியத்தின் மொழி இயல்பாகவே எளிமை, இனிமை, தெளிவு ஆகிய முப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். பாடல் என்றால் பண்புகளின் வரிசை இனிமை, எளிமை, தெளிவு என்று மாறும். கதை என்றால் எளிமை, இனிமை தெளிவு என்று மாறும். கட்டுரை என்றால் தெளிவு, எளிமை, இனிமை என்று மாறும்.

குழந்தை இலக்கியத்தின் மொழி இறுகியதாக இருக்கக் கூடாது. அது நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். பாடலில் அது இசை மொழியாக இருக்க வேண்டும்.

கதை, கட்டுரை போன்ற உரைநடையில் எளிய சொற்கள், சிறிய சொற்றொடர், குறுகிய வாக்கியங் களுடன் இருக்க வேண்டும்.

மருது எழுதியிருக்கிற ‘திருவள்ளுவர் தாத்தா’ என்ற சிறுகதையில் வரும் ஒரு வாக்கியம் இது. ‘உனக்கு விருப்பமில்லாத ஒன்றை உனக்குத் துன்பம் தருகின்ற ஒன்றைச் செய்கிற ஒருவரை நீ தண்டிக்க வேண்டுமென்று சொன்னால் அவர் தான் செய்வது தவறு என்று உணர்ந்து கொள்ளும்படி அவருக்குத் திருப்பி நன்மையைச் செய்து விடு’ என்று அந்தக் குறள் குறிப்பிடுவதாக விளக்கம் அளித்தார்.

ஒரு பத்தி போலிருக்கும் ஒரு வாக்கியத்தை எந்த குழந்தை படித்து புரிந்து கொள்ள முடியும்? அதுவும் கதையில்!

கதையின் நடை கலகலப்பாக அல்லவா, இருக்க வேண்டும்.

‘மந்திர அடுப்பு’ என்ற தி.ஜ.ர. வின் சிறுகதையைப் பாருங்கள்.

‘ஒரு ராஜா அரண்மனையில் ஒரு மந்திர அடுப்பு இருந்தது. ராணி அதில்தான் சமையல் செய்வாள்.

அடுப்பே டும் டும்

சமைத்து வை.

அரசர் விருந்து

படைத்து வா.

இந்த பாட்டை ராணி பாடினால் போதும். உடனே அடுப்பு சமைத்து விடும்.

‘மந்திர அடுப்பு’ கதையின் வெற்றியை அதன் மொழிதான் சாதித்திருக்கிறது. க. உதயசங்கரின் ‘மாயக் கண்ணாடி’ தொகுப்பிலுள்ள கதைகளும் கலகலப்பான மொழியில் எழுதப்பட்டுள்ளன.

குழந்தை இலக்கியத்தில் மொழிபெயர்ப்புக்கான மொழியும் சிக்கலாக இருக்கக் கூடாது. மூலத்தின் தன்மை மாறாமலும் அதே நேரத்தில் அந்நியத் தன்மை மிகுந்து விடாமலும் மொழி அமைய வேண்டும்.

‘வேண்டுமடா சொல்லின்பம் மந்திரம் போலே’ என்பார் மகாகவி பாரதி,

குழந்தை இலக்கியத்தின் மொழி குழந்தை களுக்கு இன்பம் தருவதாக அமைய வேண்டும் என்று கூற விரும்புகிறேன்.