ஜாதி – பல மாயைகளில் புதைந்திருக்கிறது. கயர்லாஞ்சிபடுகொலை அவற்றில் பலவற்றை உடைத்தெறிந்திருக்கிறது. முதலாவதாக, நவீன தாராளவாத மாயை ஒன்று இருக்கிறது. அதாவது, உலகமயமாக்கல் சாதியை ஒழித்துவிடும் என்பது. பெரும்பான்மையான தலித்துகளின் அனுபவம் அதற்கு மாறாக இருப்பினும், இந்த மாயை தலித் அறிவுஜீவிகள் உட்பட, சில அறிவுஜீவிகளால் முன் வைக்கப்படுகிறது. அது, அச்சு ஊடகங்கள் மற்றும் அறிவுத் தளங்களில் அவ்வப்போது சில அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதைத் தவிர, பொருளாதார வல்லு நர்கள் சில மாயைகளை முன் வைக்கின்றனர். அதாவது, தலித்துகளின் பொருளாதாரத்துடன் தொடர்புடைய பண்பாட்டு வளர்ச்சி ஏற்படுமானால், தலித்துகள் மீதான சாதி அடிப்படையிலான சுரண்டல்கள் உதிர்ந்துவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
இடதுசாரி சிந்தனையாளர்கள், எப்போதுமே சாதியை ஒரு வர்க்கப் பிரச்சினையாக மட்டுமே பார்க்க விரும்புகின்றனர். அந்த அடிப்படையில் அனைத்து சாதிய சிக்கல்களும் நிலப் பிரச்சினையின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். கயர்லாஞ்சி வழக்கை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல், போட்மாங்கே குடும்பத்தினருக்கும் பிற கிராமத்தினருக்கும் இடையிலான நிலத் தகராறே – கயர்லாஞ்சி வன் கொடுமைக்கு காரணம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மகாராட்டிரத்திற்கென்றே ஒரு தனி மாயை இருக்கிறது. மகாராட்டிரம் ஒரு முற்போக்கான மாநிலம் என்பதால், அங்கு சாதி கொடுமைகள் என்பன வெகு அரிதானவையே என்ற மாயை இருக்கிறது. இதை அவர்கள் "புலே – அம்பேத்கரின் மகாராட்டிரம்' என்று பெருமையுடன் விளிக்கின்றனர். தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளில், பிற மாநிலங்களிலிருந்து மகாராட்டிரம் எந்த வகையிலும் வேறுபட்டதாக இல்லை என்பதைக் காட்டும் புள்ளி விவரங்களை அவர்கள் நம்புவதில்லை. மற்றொரு மாயை இருக்கிறது. 60 ஆண்டுகால வளர்ச்சியானது, சாதிக்கு எதிரான முற்போக்குச் சிந்தனையுள்ள தலித் அல்லாதவர்களைக் கொண்ட ஒரு நாகரிக சமுதாயத்தை உருவாக்கி இருப்பதாக நம்புகின்றனர். சாதிச் சிக்கலானது ஒரு பழமையான சிந்தனை என்றும், அது தற்காலத்தில் நிலவாத ஒன்று என்றும், பலரும் ஒரு சடங்காக சாதியைப் பின்பற்றுவதில்லை என்றும் நம்பி கொண்டாடுகின்றனர்.
இவற்றோடு, இடஒதுக்கீட்டினை முழுமையான தீர்வாக நம்பும் தலித்துகளிடையே, தலித்துகள் அதிகார வர்க்கத்தில் இடம் பெற்றுவிட்டால், தலித்துகளுக்கு நீதி வழங்கும் வகையில் ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றிவிடலாம் என நம்புகின்றனர். இது, பிரதிநிதித்துவ மாயை. அனைத்து நிலைகளிலும் தலித்துகளுக்கான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திவிட்டால், அந்த நிலைகளை சாதியின் பிடியிலிருந்து விடுவித்து விடலாம் என நம்புகின்றனர். இறுதியாக, பகுஜன் வாதம். ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்கள் (பகுஜன்) ஆளும் வர்க்கமாக மாறிவிட்டால் அனைத்தும் மாறிவிடும் என்ற மாயை. இது, மறைந்த கான்ஷிராமால் உருவாக்கப்பட்ட சித்தாந்தம். இதற்கு ஆதரவாகப் பல்வேறு வாதங்களும் முன் வைக்கப்படுகின்றன. இந்த மாயைகள் அனைத்தும் கயர்லாஞ்சி நிகழ்வு மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளால் எவ்வாறு உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன என்பதை நாம் காணலாம்.
அடுத்து, உலகமயமாக்கல் சாதியை பலவீனப்படுத்திவிடும் எனும் மாயை. நவீனத்துவத்தின் நீட்சியாகப் பார்க்கப்படும் உலகமயமாக்கல், உள்ளூர் மற்றும் குறுகிய அடையாளங்களை உருக்கும் தன்மையுடையதாகவும் பார்க்கப்படுகிறது. அதனால், ஏற்படும் திறந்த சந்தையின் வெப்பத்தில் சாதிகள் காணாமல் போய்விடும் என்று அனுமானிக்கப்படுகிறது. ஆனால் உலகமயமாக்கலின் பரி சாக, இதுவரை இல்லாத அளவு காலாண்டு வளர்ச்சி விகிதம் 9.2 சதவிகிதமாக இருந்த நிலை குறித்து, இந்தியா பரவசமடைந்திருந்த நிலையில்தான் கயர்லாஞ்சி கொடுமை நடைபெற்றது.
செப்டம்பர் 2006இல் பங்குச் சந்தை உச்சத்தில் இருந்தது. நேரடியான அந்நிய முதலீடு அதிகரித்ததால் அந்நிய செலாவணி கையிருப்பு நிரம்பி வழிந்தது. உலகமயமாக்கலின் பெருமைமிகு சான்றாக இந்தியா உருவாகிக் கொண்டிருந்தது. இயல்பாக, 17 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டுள்ள தாராளமயமாக்கல் கொள்கையால், முதலாளித்துவ பொருளாதாரச் சூழலுக்கு முந்தைய சமூக அமைப்பின் பழமையான சின்னமான சாதி வலுவிழந்து போயிருக்கும் என எதிர் பார்க்கத் தோன்றும். வருந்தத்தக்க வகை யில் இதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லை. மாறாக, சமூகத்தில் சாதிய முரண்கள் அதிகரித்தே வருகின்றன.
தொழில் பொருளாதாரமும் முதலாளித்துவமும் இந்தியாவில் அறிமுகமானபோது, அய்ரோப்பாவில் நிகழ்ந்ததைப் போன்றே, முதலாளித்துவம் நில வுடைமை சமூகத்தையும் அதையொட்டி சாதிய அமைப்பையும் அழித்துவிடும் என நம்பப்பட்டது. கார்ல் மார்க்ஸ் கூட, முதலாளித்துவத்தின் வளர்ச்சியினால் விளையக்கூடிய சாதகமாக "சாதிகள் நொறுங்கிவிடும்' என எதிர்பார்த்தார். ஆனால் நடந்தவை இந்த எதிர்பார்ப்புகளைத் தவிடு பொடியாக்கியிருக்கின்றன! நிலவுடைமை ஆதிக்கத்தினை எதிர்த்துப் போராடுவதற்கு பதில் முதலாளித்துவம் அதனுடனும், அதோடு இணைந்துள்ள பிற நிறுவனங்களுடனும் கூட்டு வைத்தது. சாதி தன்னை நிலைப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது. வடிவங்கள் மட்டுமே மாறுபடுகின்றன.
ஆக, முதலாளித்துவ திட்டத்தின் நீட்சியும் வீச்சுமான உலகமயமாக்கல், சாதியின் மீது நேரடியான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல; சாதாரண மக்களின் பிரச்சனைகளை அதிகமாக்குவதை மட்டுமே அது செய்கிறது. அதோடு, இந்தியாவில் சாதியம்; ஆப்பிரிக்காவில் பழங்குடிச் சமூகநிலை; பிற இடங்களில் இனவெறி போன்று சமூகத்தில் ஏற்கனவே நிலவக் கூடிய தவறான நிலை களை ஆழப்படுத்தும் வேலையையே அது செய்கிறது.
வன்கொடுமை என்பது, சாதிய ஓர்மையின் கூர்மையான வெளிப்பாடு. இந்தியா நவீன தாராளமய பொருளாதாரத்தை தழுவிக் கொள்வதற்கு முந்தைய பத்தாண்டுகளையும், அதற்குப் பிந்தைய பத்தாண்டுகளையும் ஒப்பிடுவோமேயானால், சாதிய வன்கொடுமைகள் பல வகையிலும் அதிகமாகி இருப்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. பட்டியல் 1இல் அகில இந்திய அளவில் காவல் துறை பதிவுகளின்படி சில குறிப்பிட்ட வகையிலான குற்றங்களில், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளின் சராசரி எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
1981–1990, 1991–2000, 2001–2005 ஆகிய காலகட்டங்களில் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை வகைவாரியாக நோக்கினால், தீ வைப்பு, சமூக உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் (பி.சி.ஆர்) கீழான குற்றங்கள் மற்றும் பிற குற்றங்கள் ஆகியவை தவிர, பிற தலைப்புகளில் தொடர்ச்சியாக அதிகமாகி இருப்பதைக் காணலாம். அனைத்து பெரிய குற்றங்களின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகமாகி இருக்கும் அதே நேரத்தில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் மட்டும் தொடர்ச்சியாக குறைந்திருப்பதையும் காணலாம். 1981–90இல் ஆண்டு சராசரியாக 15182.8 ஆக இருந்தது, 1991–2000 காலகட்டத்தில் 8585.4 என ஏறத்தாழ சரிபாதியாகக் குறைந்து, 2001–2005 காலகட்டத்தில் சற்று அதிகரித்து 9863.8 ஆக உள்ளது.
இருப்பினும், இந்த புள்ளிவிவரங்கள் முழு கதையையும் வெளிப்படுத்தவில்லை. அண்மைக் காலங்களில் வன்கொடுமைகள், அது மேற்கொள்ளப்படும் விதத்திலும், வீச்சிலும் மாற்றமடைந்துள்ளன. கடந்த காலங்களில் ஒரு தனி நபராலோ, சிறு குழுவினராலோ மிக ரகசியமாக குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள் ளன. ஆனால் அண்மைக் காலங்களிலோ, வெளிப்படையாக, பெருங்கூட்டமாக, கொண்டாட்டமான மனநிலையில், துணிச்சலுடனும் பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடனும் குற்றங்கள் நடத்தப்படுகின்றன. 2002இல் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்ததை எடுத்துக் கொள்ளுங்கள். பட்டப் பகலில் காவல் நிலையத்திற்கு மிக அருகில் சாதி இந்து கும்பல் ஒன்றினால் 5 தலித்துகள் கொல்லப்பட்டனர். அண்மைக்காலங்களில் குற்றங்களைப் புரிபவர்களுக்கு இது ஒரு வித உறுதியை அளிக்கிறது.
இதே போன்றதுதான் மராட்டிய மாநிலம், மராத்வாடா பகுதியைச் சேர்ந்த பூட்டேகான் நிகழ்வும். கடந்த மே 2003இல் அங்கு ஓர் இளைஞர் உயிரோடு கொளுத்தப்பட்டார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், பீத் மாவட்டம் சொன்னகோட்டாவில் சாதி இந்துக்கள் ஒரு தலித்தை துரத்தி, கல்லால் அடித்தே கொன்றனர். இவ்வாறான குற்றங்கள் தனி நபர்களால் அல்லாமல் ஒரு கூட்டத்தினரால் செய்யப்படுவதை நோக்கும் போது, அண்மைக் காலங்களில் இத்தகைய கொடுமைகளின் வீச்சு எந்த அளவுக்கு அதிகமாகியிருக்கிறது என்பது விளங்கும். இந்த கொடுமைகளில் தென்பட்ட கொடூரமானது, கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது. போட்மாங்கே குடும் பத்தினருக்கு நடந்த கொடுமைகள் இதற்கு மிக வெளிப்படையான சான்று.
நிலம் மற்றும் அதிகாரப்படுத்துதல் பற்றிய மாயை : ஒப்பீட்டளவில் வளம் மிக்க ஊரான கயர்லாஞ்சியில், 5 ஏக்கர் நிலம் வைத்திருந்த போட்மாங்கே குடும் பத்தினர், சின்ன குடிசையில் வாழ்ந்த போதும், சாதி இந்துக்களின் தொடர்ந்த அழுத்தங்களுக்கு ஆட்பட்டிருந்த போதும், பொருளாதார ரீதியாக தற்சார்புடையவர்களாகவே இருந்தனர். பொருளாதார வளர்ச்சி சாதியை ஒழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பொருளாதார வளர்ச்சியோடு, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சி இணையும்போது, சாதிய வேற்றுமைகள் களையப்படும் என்று நம்பப்படுகிறது. சொல்லப்போனால், பொருளாதார பலத்தைக் கொண்டு மற்ற அனைத்து வளங்களையும் பெற்று விடலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த பலமானது, சாதிக் கொடுமைகளை எதிர்த்து வெற்றி பெறுமா என்பது கேள்விக்குரியது.
தலித்துகளைப் பொருத்தவரையில், உண்மையில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவே தோன்றுகிறது. இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் தலித்துகளின் வாழ்க்கையில் சிறிதளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் கூட, அது எதிர்ப்பையே தோற்றுவிக்கிறது. சாதி இந்துக்களின் சாதிப் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்துவதாகவும் அது இருக்கிறது. அதன் காரணமாக தலித்துகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுதான் போட்மாங்கே குடும்பத்தினருக்கு நடந்தது. சாதிய ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் உடைத்தெறிய, பொருளாதாரத்தைக் கடந்த வளங்களும், பலமும் ஒருவருக்கு தேவைப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சிக்கும், வன்கொடுமை நிகழ்வுகளுக்குமான ஒப்பீடு எதிர்மறையாகவே இருக்கிறது. 2002 இல் குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில், பொருளாதாரத்திலும் அரசியலிலும் பலம் பெற்றிருந்த முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஷான் ஜாப்ரி, கலவரக்காரர்களால் தனது சொந்த வீட்டிலேயே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். அதைப் போன்றே பொருளாதார ரீதியாக வளம் பெற்ற தலித்துகள் வன்கொடுமைகளிலிருந்து தப்ப முடிவதில்லை. கயர்லாஞ்சிக்குப் பிறகான போராட்டங்களில், மிலிந்த் மானே போன்ற மருத்துவர்களும், ராஜு லாகாண்டே போன்ற நகராட்சி அதிகாரிகளும், பிற நடுத்தர வர்க்கத்தினரும் எவ்வாறு துன்புறுத்தப்பட்டு, அரசினாலேயே அச்சுறுத்தப்பட்டனர் என்பதை நாம் பார்த்தேõம்.
போட்மாங்கே குடும்பத்தினருக்கு இத்தகைய பேரழிவை வரவழைத்ததில் முக்கியக் காரணமாக அவர்களின் பண்பாட்டு முன்னேற்றத்தினை கொள்ள லாம். சுரேகா போட்மாங்கே, ஒரு தீவிர அம்பேத்கரியல்வாதியாக இருந்தார். அவரது குழந்தைகளையும் அவரைப் போலவே வளர்த்தார். அம்பேத்கரை பின்பற்றி பவுத்தத்தை தழுவிய ஒரு தலித் குடும்பத்தின் முன் மாதிரியாகவே போட்மாங்கே குடும்பத்தினர் இருந்தனர். அவர்களது பொருளாதார, கல்வி மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்கள் கிராமத்தினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. கயர்லாஞ்சி இந்துக்களால் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட சித்தார்த்த காஜ்பியின் நிலையும் அதுவே. தனது பண்ணையில் சில சாதி இந்துக்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் அளவிற்கு காஜ்பியி வளம் பெற்றிருந்தார். அது அவரை விடுதலை செய்வதற்கு பதிலாக, அவர் மீது சாதி இந்துக்கள் வன்மம் கொள்வதற்கு காரணமாக அமைந்து விட்டது.
ஆகஸ்டு 2005 இல் பஞ்சாப், கோஹானா மோதல்களில், 2000 ஜாட்கள் அடங்கிய கும்பல் ஒன்று 70 தலித் வீடுகளை எரித்த நிகழ்வின் மூலம், பொருளாதார அதிகாரம் அனைத்தையும் பெற்றுத்தந்து விடாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது பொருளாதார வளமே அவர்களுக்கு எதிரான கலவரத்தைத் தூண்டியது. அந்நிகழ்வில், தீண்டத்தகாதவர்களிலும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படும் "பால்மிகி'கள், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளித்து, தங்கள் மரபு சார்ந்த பணிகளைத் தவிர்த்து, வெளிப்பணிகளை ஏற்றுக் கொண்டு, அதன் மூலம் சாதி இந்துக்களான "ஜாட்' சாதியினர் தங்களிடம் இருந்து கூலி இல்லாத கட்டாய வேலை வாங்கும் முயற்சிகளை முறியடித்தனர். இதேதான் பஞ்சாபின் தல்ஹனிலும் நடந்தது. குருத்வாராவின் நிர்வாகத்தில் தங்களுக்குரிய பங்கை கேட்டதால், அதாவது மத பொருளாதாரத்தில் பங்கு கேட்டதால், "ஆதி – தர்மி' தலித்துகளுக்கும் "ஜாட்'களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. சுரிந்தர் ஜோத்காவும் பிரகாஷ் லூயியும் அதனைப் பின்வருமாறு விவரிக்கின்றனர் :
"தால்ஹனில் கடந்த காலத்தில் இருந்த நடைமுறை போன்றல்லாமல், தற்போது நிலவுடைமையாளர்களான ஜாட்களின் நிலங்களில் ஒரு "ஆதி–தர்மி' கூட வேலையாளாகப் பணிபுரியவில்லை. உத்தரப்பிரதேசத்திலிருந்தும் பீகாரிலிருந்தும் இடம் பெயர்ந்த மக்களே விவசாயக் கூலி வேலைகளை பார்க்கின்றனர். பண்பாட்டு வளங்கள் மற்றும் வேலைவாய்ப்பிலும் ஆதி – தர்மிகள் ஓரளவிற்கு தற்சார்புடையவர்களாகத் திகழ்ந்தனர். ஒட்டுமொத்தமாக அதிகாரப்படுத்தப்பட்டிருப்பினும், பார்ப்பனிய சமூகக் கட்டமைப்பு ஏறத்தாழ முற்றிலுமாக இல்லாதிருப்பினும், பஞ்சாபின் கிராமப்புறங்கள் சாதியை மறந்துவிடவில்லை. இதன் பொருள் என்னவெனில், அங்கு இன்னமும் சமத்துவமின்மை நிலவுகிறது என் பதே. வேறு சொற்களில் சொல்வதானால், ஆதிக்க சாதியினரிடம் தலித்துகள் மீதான வேற்றுமை மனப்பான்மை இன்னமும் அப்படியே இருக்கிறது.''
நிலப் பிரச்சினையை முன்னிட்டே ஒவ்வொரு சாதிய மோதலும் நடைபெறுகின்றன என்ற மாயை, தன் வேரை மார்க்சிய பொருளாதார வரையறுப்பில் கொண்டுள்ளது. இந்திய இடதுசாரிகள் இந்த அணுகுமுறையில் ஏறத்தாழ நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருக்கின்றனர். நிறைய ஆய்வுகளில் வெளிப்பட்டதைப் போன்று, நிலம் வன்கொடுமைகளுக்குப் பெரிய காரணியாகவே இருக்கிறது. ஓர் அடிப்படை வளம் என்ற அடிப்படையில் கிராமப் பொருளாதாரத்தில் இயல்பாகவே நிலம் மோதல்களை ஏற்படுத்துகிறது. தலித்துகளை பொருத்தவரையில் இந்த மோதல்கள், நிலச் சீர்திருத்தத்தின் கீழ் நிலம் வழங்கப்படுவதால், வீட்டு மனைகள் மற்றும் விளை நிலங்கள் வழங்கப்படுதல், பொதுப் பாதைகள் மற்றும் சமூக நிலங்களைப் பயன்படுத்துதல், நீர்ப் பாசன உரிமைகள் மற்றும் நிலங்களிலிருந்து அந்நியப்படுத்துதல் ஆகியவை தொடர்பாகவே ஏற்படுகின்றன.
தலித்துகள் நிலங்களை சொந்தமாக வைத்திருப்பது, அதில் பயிர் செய்வது, நிலங்களை அனுபவிப்பது ஆகியவற்றின் காரணமாகவே மோதல்கள் ஏற்படுகின்றன. இந்த மோதல்களே தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு வித்திடுகின்றன என்பதே உண்மை. இருந்த போதும், அடிப்படைக் கேள்வி இன்னமும் இருக்கிறது. தலித் அல்லாதவர்களுக்கு இடையிலான நிலத் தகராறுகள் ஏன் இத்தகைய கொடிய குற்றங்களாக உருவெடுப்பதில்லை! தலித்துகள் மீது மட்டுமே இத்தகைய கொடிய குற்றங்கள் நிகழ்த்தப்படுவது ஏன்? வழக்கமான காரணங்களாகத் தோன்றும் பொருளாதார மற்றும் நிலத் தகராறுகள், தலித்துகள் மீதான ஆத்திரத்தை வளர்க்கவே பயன்படுகின்றன. வழக்கம் அல்லாத காரணமான சாதியே, இத்தகைய தகராறுகளை வன்கொடுமைகளாக மாற்றத் தக்கவையாக இருக்கின்றன.
கயர்லாஞ்சி நிகழ்வு, முதல் பார்வையில், இந்த மாயைக்கு உடன்பட்டதாகவே தோற்றம் அளிக்கிறது. ஏனெனில், போட்மாங்கே குடும்பத்தினருக்கும் சாதி இந்து கிராமத்தினருக்கும் இடையே 17 ஆண்டு கால நிலத் தகராறு இருந்து வந்திருக்கிறது. ஒரு நீண்ட சட்டப் போருக்குப் பிறகு, சமாதானத்திற்கான வாய்ப்பாக, தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை பொது வழியாகப் பயன்படுத்த போட்மாங்கே குடும்பத்தினர் விட்டுக் கொடுத்திருந்தனர். இதனால் நிலத் தகராறு ஓய்ந்தது. அதோடு, போட்மாங்கே குடும்பத்தினருக்கு எதிரான இந்தக் கொடூர வன்முறையில் ஈடுபட்ட அக்கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த சாதி இந்துக்களும் – இந்த நிலத் தகராறின் பங்காளிகள் அல்லர். மாறாக, இரு குடும்பத்தினரோடு மட்டுமே நிலத் தகராறு இருந்தது. ஆகவே, இந்த கொடுமைக்கான தூண்டுதலாக நிலத் தகராறை சொல்ல முடியாது.
பரவலாக அறியப்பட்ட எந்த ஒரு வன்கொடுமை நிகழ்விலும் நிலத் தகராறு அடிப்படைக் காரணமாக இருக்கவில்லை. 1968இல் தமிழ்நாட்டின் கீழ்வெண்மணியில், விவசாயக் கூலியின் மீதான தகராறின் விளைவாக வன்கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் கூலித் தகராறுதான் அந்த வன்கொடுமைகளுக்கு காரணம் என்பது தவறாகும். தகராறு, கொடூரமான வன்கொடுமையாக வடிவம் எடுப்பதற்கு, ஆழ வேரூன்றி இருக்கின்ற சாதிய வேற்றுமை உணர்வுகளே காரணமாக இருக்கின்றன.
Khairlanji: A strange and Bitter Crop by Anand Teltumbde (Navayana, Page : 214, Rs. 190) இந்நூலில் "உடைபடும் மாயைகள் : உலகமயமாக்கல், குடிமைச் சமூகம், பெரும்பான்மை மக்கள்' என்ற தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதி, இங்கு வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் பகுதி அடுத்த இதழில்.
தமிழில்: பூங்குழலி