நம்பியூரில் திருமண மண்டபத்தில் அருந்ததியினருக்கு பணம் கட்டியும் இடம் வழங்க மறுத்த தீண்டாமையை எதிர்த்து, ஈரோட்டில் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த கிளர்ச்சி விரிவடைந்து, சாதி ஒழிப்பு கூட்டியக்கமாக பரிணாமம் பெற்றது. தலித் அமைப்புகளும், பெரியார் திராவிடர் கழகமும் இணைந்து, தீண்டாமைக்கு எதிராக களமிறங்கின.
மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிடும் நிர்ப்பந்தத்தை போராட்டக்களம் உருவாக்கியது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமண மண்டப நிர்வாகிகளுடன் கலந்து பேசினார். சாதி வெறி பணிந்தது. கடந்த 19.3.2008 அன்று அனுமதி மறுக்கப்பட்ட அருந்ததி சமூக தோழர் மாரியப்பன் இல்ல நிகழ்ச்சியை நடத்த, திருமண மண்டப நிர்வாகிகள் அனுமதி வழங்கினர். ஆயிரம் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஈரோடு மாவட்டக் கழக செயலாளர் கோபி. இளங்கோ மற்றும் கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுமூக தீர்வை உருவாக்கிட முயன்ற மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், திருமண மண்டப நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து, சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.
கழகத்துக்கு திருமாவளவன் பாராட்டு!
உடுமலையில் - சாளரப்பட்டி தீண்டாமை வெறியைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் - விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையிலிருந்து -
“நீண்ட இடைவெளிக்குப் பிறகு அருமைத் தோழர் அதியமான் தலைமையில் நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது கண்டனத்தை தெரிவிப்பதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். சாளரப்பட்டி மக்களுக்கு நேர்ந்த வன்கொடுமைகளை எண்ணி ஒரு புறம் வேதனைப்பட்டாலும், அண்ணன் இராமகிருட்டிணன் சொன்னதைப்போல ஒரே களத்தில் நின்று போராடுவதற்கு உரிமைக் குரல் எழுப்புவதற்கான ஒரு வாய்ப்பை இந்த நாள் நமக்கு வழங்கியிருக்கிறது.
இன்றைக்கு சாதி ஒழிப்பு கூட்டியக்கம் என்கிற ஒரு தலைப்பின் கீழ் நாமெல்லாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்கிற அடிப்படையிலே நம்பியூர் பிரச்சனையை முன்னிறுத்தி, அண்ணன் கொளத்தூர் மணி, கோவை இராமகிருட்டிணன், மேற்கொண்ட முயற்சியின் விளைவுதான் கோவையிலே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் வந்திருந்தபோது, ஒரு கூட்டியக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நம்பியூர் திருமண மண்டபம், ஒரு அருந்ததிய சகோதரன் தான் பெற்ற பிள்ளைக்கு காதணி விழா நடத்துவதற்காக பணம் கட்டி பதிவு செய்த நிலையில், அவன் தன்னுடைய நண்பனோடு தெலுங்கில் பேசினான் என்கிற ஒரே காரணத்திற்காக இவன் ரெட்டியாராகவோ, நாயுடுவாகவோ இருக்க முடியாது. இவன் அருந்ததியினராகத்தான் இருக்க முடியும் என்று அவன் யூகம் செய்து கொண்டு, உடனடியாகவே அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள், உனக்கு இடம் இல்லை என்று அவன் மறுதலிக்க, அந்த செய்தி விடுதலைச் சிறுத்தைகளின் கவனத்துக்கு வர அது சுசி கலையரசன் கவனத்துக்கு வர, அது என் கவனத்திற்கு வர அதை விடுதலைச் சிறுத்தைகள் போராட்டமாக முன்னெடுத்தபோது, எல்லோரும் சேர்ந்து செய்வோம் என்று கொளத்தூர் மணி, இராமகிருட்டிணனும் அந்த கூட்டு முயற்சியில் ஈடுபட்டபோதுதான் நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, நாம் இணைந்தே செய்வோம் என்று அன்றைக்கு ஒப்புதல் கொடுத்து ஒரே நேரத்தில் எல்லோரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து முறையிட்டோம்.
அன்றைக்கும் ஆதித் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர். ஆக, அந்த சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் சார்பிலே நம்பியூரில் முதல் களத்தை அமைத்தோம். நம்முடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். உள்ளபடியே அரசு கடுமையாக அஞ்சியது, பின் வாங்கியது. சாதி வெறியர்களுக்கு துணை நிற்கிற நிலையில் இருந்து பின் வாங்கியிருக்கிறது. அதிலும் இன்னும் அடுத்தகட்ட பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
நாம் அரசாங்கத்திடமிருந்து மண்டியிட்டுக் கெஞ்சுகிற நிலையிலிருந்து நம்முடைய அணுகுமுறைகளை மாற்றியாக வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் மனு கொடுத்து பாதுகாப்பு கொடு என்று கெஞ்சுகிற இந்த நிலையிலிருந்து நாம் மீள வேண்டும். இதுதான் இன்றைக்கு இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம். இங்கே அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் பேசும்போது ஒன்றைச் சொன்னார்கள். யார் யர் எந்தக் காலகட்டத்திலே எப்படி செயல்பட்டார்கள். மால்கம் எக்ஸ், புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தலைவர்களின் நடவடிக்கைகளை எல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள்.
தோழர் சம்பத் அவர்கள்கூட சீனிவாசராவ் அவர்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள். அவர் குடியால் பார்ப்பனராக இருந்தாலும்கூட, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக, விடுதலைக்காக ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியிலே களப்பணியாற்றியவர் என்கிற அந்த உணர்வோடு, நன்றி உணர்வோடு இங்கே சுட்டிக் காட்டினார்கள்.
ஆக, நாம் - எங்களைத் தாக்கி விட்டார்கள், காயப்படுத்தி விட்டார்கள், எங்கள் குடிசைகளை தீ வைத்து விட்டார்கள் என்று பாதிப்படைந்த பிறகு முறையிடுவது என்ற நிலையிலிருந்து மாறி பாதிப்படைந்த பிறகு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது என்கிற நிலையில் இருந்து மாறி எங்களை இனி தாக்கவே முடியாது என்கிற நிலைக்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அத்தகைய துணிவை இத்தகைய ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் தரும். இந்த ஆர்ப்பாட்டத்தால், பேரணியால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணக் கூடாது” என்றார் திருமாவளவன்.