அப்பன் நடந்து கொள்ளும் விதம் சின்னப்பையனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. பாய்மார்களின் முன்னால் அப்பன் நிலைக் கொள்ளாமல் தவிக்கிறான். தலையையும், தாடியையும் பரிதாபத்துடன் சொறிகிறான். குழைந்து நெளிகிறான். நிமிசத்துக்கு நிமிசம் "எஜிமான்... எஜிமான்' என்கிறான். எல்லாவற்றையும் கவனித்தபடி நின்ற இடத்திலிருந்து இம்மியும் அசங்காமல் அப்பனை முறைத்துக் கொண்டிருந்தான் சின்னப்பையன்.
இரண்டு பாய்மார்கள் கையில் ஒரு காகிதத்துடன் அந்த முள்காட்டில் நின்றார்கள். அவர்களிடமிருந்து மூக்கை நிமிண்டிக் கொள்கிற மாதிரி வாசனை அடித்தது. பாய்மார்கள் எல்லோரும் அத்தர் போடுவார்கள் என்று அப்பன் சொல்லி சின்னப்பையன் கேட்டிருக்கிறான். அப்பன் அதைச் சொன்னபோது அவன் பேச்சினூடே ஒரு வாசனை அடிப்பதாய் சின்னப்பையன் நினைத்தான். இப்போதோ நிஜத்தில் அது பிடிபடாமல் இருந்தது.
தரையில் படாத மாதிரி லுங்கியைத் தூக்கிக் கட்டியிருந்தார்கள் இருவரும். அவன் எதிரிலேயே கொஞ்ச நேரத்துக்கு முன்பு ஒருவர் லுங்கியை அவிழ்த்து உதறி கட்டிக் கொண்டார். இடுப்பிலிருந்து லுங்கியை அவிழ்த்ததும், இரண்டு கைகளிலும் பிடித்து இப்படியும் அப்படியுமாகக் குலுக்கி உதறிய பின், முன்பக்கமாக இறுக்கிச் சுற்றிச் சொருகினார் அவர். முன் தள்ளியிருக்கும் வயிற்றுக்கு எந்தத் தொந்தரவும் தரவில்லை. அவர் அப்படி லுங்கியை கட்டுவது, கார் ஓட்டுவதை சின்னப்பையனுக்கு ஞாபகப்படுத்தியது. அவன் அடக்கமாட்டாமல் சிரித்துக் கொண்டான். அப்போது குப்பன் மகனைப் பார்த்து முறைத்தான்.
அந்த முள்காட்டிலே வஜ்ஜிரம் மண்டியொன்றைக் கட்டுவதற்காக பாய்மார்கள் இருவரும் இடம் பார்த்தார்கள். பீமாராவ் நகர் எனப்படும் அப்பறைச் சேரியையும், பெரியப்பட்டிக்குப் போகும் நெடுஞ்சாலையையும் இணைக்கிற மாதிரி, ஊராட்சி நிர்வாகம் ஒரு தார்ச் சாலையைப் போட்டவுடனே அந்த முள்காட்டிற்கு மதிப்பு கூடித்தான் போனது. கண்ணுக்கெட்டிய விஸ்தாரத்துக்கு வேலிக்காத்தான் முள்செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் அங்கு, கருகருவென்ற தலையில் எட்டிப்பார்க்கும் வெள்ளை முடிகளைப் போல சில கட்டடங்களும்கூட இப்போது எழும்பிவிட்டன.
சேரிக்கு வரும் வழியில் வியாபித்திருந்த அந்த முள்காட்டில், நெடுஞ்சாலையை ஒட்டிய மாதிரி ரோட்டரி கட்டடம் ஒன்றும், பெட்ரோல் பங்க் ஒன்றும் முதலில் எழும்பின. சில மாதங்கள் கழித்து இணைப்புச்சாலை ஓரமாக தோல் மண்டியொன்று கட்டப்பட்டது. அதற்கடுத்து ஒரு வஜ்ஜிரம் மண்டியும் வந்தது. கொஞ்சம் போக்குக் காட்டுகிற மாதிரி இருந்து ஒரு வீடும் அந்த அத்துவானக் காட்டில் உருவானது. அந்த ஒற்றை வீட்டில் பழைய தொழில் நடப்பதாக சேரிசனங்கள் பேசிக் கொண்டனர். எப்படியோ சொல்லி வைத்துச் செய்த மாதிரி எல்லா
தொழில்மனைகளும் ஒரே வரிசையில் அமைந்துவிட்டதால், பழந்தொழில் பற்றிய பேச்சு தேய்ந்து அழிந்துவிட்டது!
தோல் மண்டிக்கும், வஜ்ஜிரம் மண்டிக்கும் காவலாளிகளாக சேரியிலிருந்து இரண்டு கிழக்கட்டைகள் அமர்த்திக் கொள்ளப்பட்டதும், குப்பன் அவர்களோடு வந்து ஒட்டிக் கொண்டான். அந்த வயசாளிகளோடு தன்னையும் இணை வைத்து ஊர்க்கதைகளைப் பொழுதுக்கும் பேசுவது. நிலை நிலையாய் மண்டியிருக்கும் உயிர் வேலி முள்புதர்களை வெட்டி விறகாக்குவது. இதுதான் குப்பனின் வேலை.
குப்பன் சுத்தமாக ஓய்ந்து உட்கார்ந்து விட்டான். எப்படித் திரும்பியும் அவனுக்குப் போக்கிடம் இல்லாமல் போய்விட்டது. ஏர் ஓட்டவோ, அறுப்பறுக்கவோ அவனை யாரும் கூப்பிடுவதில்லை. மனிதர்களை வைத்துச் செய்யப்படும் பயிர் வேலைகள் எதுவும் இப்போது இல்லாமலாகி விட்டன. அவன் உஷார்காரனாக இருந்திருந்தால் தோல் வேலைக்கோ, பீடி சுற்றுவதற்கோ மாறிக் கொண்டிருக்கலாம். அதற்கெல்லாம் அவன் போகவில்லை. எதிரில் உருண்டு வந்து நிற்கும் பாறைகளையொத்த ஒவ்வொரு நாளையும் எப்படிப் புரட்டுவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன், கடைசியாக அந்த முள்காட்டிற்கு வந்து சேர்ந்து விட்டான்.
பாய்மார்கள் வஜ்ஜிரம் காய்ச்சலை மேற்பார்வையிடவும், தோல் மண்டிக்கும் தினந்தோறும் வந்து போவார்கள். அவர்களுக்கு தேத்தண்ணீர் வாங்கி வருவான் குப்பன். அவர்கள் இடும் ஏவல் வேலைகளையும் செய்வான். அப்படியே அவர்களுடன் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பழக்கமாகிக் கொண்டான்.
முதலில் தனியாய் வந்தவன், இப்போது பொறுப்பின்றி ஊர் சுற்றிக் கொண்டிருந்த தன் மகனையும் சேர்த்துக் கொண்டான்.
அன்று மத்தியானம் அப்பனும் மகனுமாக முள் வெட்டிக் கொண்டிருந்தபோது, பாய்மார்கள் இருவர் ஸ்கூட்டர்களிலே அங்கு வந்து சேர்ந்ததைப் பார்த்தார்கள். குப்பன் உடனே வெட்ராவையும் கவைக்கோலையும் அப்படியே போட்டுவிட்டு ஓடிப்போய் அவர்களின் எதிரில் பம்மிக் குனிந்தான்.
“சலாம் எஜிமான். வணக்கம் வருது எஜிமான்''
“என்னா குப்பா ஒரே முள்ளுச்செடிய உடமாட்டே போலக்கீது?''
“எஜிமாம்மாருங்க சொன்னா செரிதாங்க. இவன் எம் மகங்க''
விறைத்துக்கொண்டு நிற்கும் மகனைப் பார்த்ததும் பற்றிக் கொண்டு வந்தது குப்பனுக்கு. வெகாளத்தோடு கத்தினான்.
“எஜிமாம்மாருக்கு வணக்கம் வெய்யிடா கம்ஜாத்தி நாயே''
“உடு குப்பா''
“அப்பிடி இல்ல எஜிமான். இந்தக் காலத்துப் பசங்களுக்கு, மட்டுமரியாதைன்னு எங்கத் தெரியிது?''
“சர்தான் குப்பா. நீ சொல்லிக்குட்த்தா கேட்டுக்கறான். சரி. பின்னியும் நீ முள்ளு வெட்டறதுக்கு நேரம் வந்துடுச்சி. இப்பிட வா''
“இதோ வந்துட்டேன் எஜிமான். டேய் எப்பா. ஓடியாடா. எஜிமானுக்குப் பின்னாடி போ''
சின்னப்பையன் வேண்டா வெறுப்பாக பாய்மார்களின் முன்பாகப் போய் அவர்களுக்குச் சில அடிகள் தள்ளி நின்று கொண்டான். அவர்கள் இருவரும் கையில் இருந்த வரை படத்தைப் பார்த்துவிட்டு எதிரில் இருந்த முள்காட்டை நோக்கினர்.
“குப்பா, இதுவும் நம்ம எடந்தான். இங்க ஒரு வஜ்ஜிரம் மண்டி உளுது. மனெ அளந்து நட்ட காணிக்கல்லுங்கள காணும் பாரு. அதுங்கள கொஞ்சம் தேடு பாக்கலாம்''
“ஆவுட்டும் எஜிமான்''
குப்பன் தலையில் துண்டை சுற்றிக் கொண்டான். சோமத்தை முட்டி தெரியும்படியாக மடித்துக் கட்டிக் கொண்டான். காலில் போட்டிருந்த பழைய அவாய் குதிக்காலில் பட்பட்டென்று அடிக்க, இப்படியும் அப்படியுமாக ஓடி முள் புதருக்குள் நுழைந்து காணிக்கற்களைத் தேடினான். முள் விளார்களை விலக்கிக் கொண்டு நுழைந்தபோது பச்சை முட்கள் அவனைக் கீறின. அவர்களுக்குக் கேட்கிற மாதிரியே வலியில் முனகிக் கொண்டான்.
“ஆத்தாள... எப்படி குத்துது பாரு''
“எஜிமான் இதோ கீது. நல்லா செடிங்களுக்குள்ள மறைஞ்சினுகீது. அந்தா மேலாண்ட கல்லு எங்கக் கீதுன்னு பாக்குனும்.''
அங்கிருந்தபடியே சின்னப்பையன் இருக்கும் திக்கைப் பார்த்து சத்தம் போட்டான்.
“என்னாடா நின்னுனு? அங்கக் காணிக்கல்லு தெரிதா பாரு. புள்ளத் தெறமையெ பேலவுட்டுப் பாத்தா, அது அருகம் புல்ல புடிச்சினு முக்குச்சாம். தேடிப்பாரு, தேடிப்பாரு''
காணிக் கற்களைக் கொண்டு கணக்குப் போட்டார்கள் அவர்கள்.
“குப்பா, நல்லா பாத்துக்க. இந்தக் கல்லையும் அந்தக் கல்லையும் புடிச்சினு அந்தாண்ட தெரு அளந்திருக்கிற எடம் வரிக்கும் சுத்தமா முள்ளுங்களெ வெட்டி சீர் பண்ணிடு. நாள மக்யா நாள்ள கட்டட வேல தொடங்குனும்.''
காலில் விழாத குறையாகப் பம்மிய குப்பன் அவர்களிடம் “ஆவுட்டும் எஜிமான்'' என்றான்.
பாய்மார்கள் இருவரும் அப்படியே காலாற கொஞ்ச தூரத்துக்கு நடந்து போனார்கள். திரும்பி வந்து வஜ்ஜிர மண்டிக்குள் நுழைந்து கொண்டனர். குப்பன், ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சாலையில் அவர்களின் வண்டிக்கருகில் அமர்ந்து கொண்டு காத்திருந்தான். அவர்கள் புறப்படுவதற்காகத் திரும்பியபோது விலுக்கென்று எழுந்து நின்றான்.
“எஜிமான் டீ குடிக்கணும். பீடி வாங்கிக்கணும். எதான சில்லற இருந்தா...''
குப்பனின் இடதுகை அனிச்சையாக மேலெழுந்து போய் பின்னந்தலையைச் சொறிந்தது. உதடுகள் பிரிந்து, காவியேறிய பற்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்து நின்றன. வலது கை மார்பளவுக்கு உயர்ந்து அந்தர வெளியில் அல்லாடியது. வண்டிகள் உறுமியபடி கிளம்பியபோது அவன் கையில் சில நாணயங்கள் விழுந்தன. குப்பன் அவைகளை கண்களில் ஒற்றி, மேல் சட்டையில் போட்டுக் கொண்டான்.
வெறுப்பில் முனகியபடி நாணயங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்கப் பெறாமல் கத்தினான் சின்னப்பையன்.
“மயிரு. அவங்க எதுர்லயே என்னெ நீ திட்டறியா? அந்தப் பிச்சக் காசை வாங்காக் காட்டிதான் என்னா?''
“அட... எஜிமாம்மாரை கேட்டது தப்புன்றியா? பொளைக்கத் தெரியாத தருதல. மொண்டிக் கத்தியாலயே உன்ன வெட்டி பொலி போட்டுருவேன்.''
திட்டிக் கொண்டிருக்கும் அப்பனை முறைத்துவிட்டு ஊரைப் பார்த்து நடந்தான் சின்னப் பையன்.
அப்பன் தனக்குக் கையளித்திருக்கிற தொழில் கருவிகளான கவைக்கோல், வெட்டுக்கத்தி, இரண்டு செங்கற்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு இளம் பொழுதிலேயே முள்வெட்ட புறப்பட்டான் சின்னப்பையன். முள் விளார்களை அடித்து ஒடுக்கிப் பிடிக்க, அந்தக் கவைக்கோலை நீண்ட காலமாக குப்பன் பயன்படுத்தி வந்தான். அது மினுமினுப்பாக மாறியிருந்தது. கால்களில் முள் குத்தாமலிருக்க செங்கல்லைப் போட்டு அதன் மீது தான் அவன் நின்று கொள்வான். முள் விளார்களை சுமை கட்டும்போது மிதித்து இறுக்கவும் செங்கல் உதவிகரமாக இருக்கும்.
குப்பன் காலையிலிருந்தே அவனைக் கிளம்பச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான். நேற்று மாலையிலிருந்தே தொடங்கியது காலையில் அதிகமாகிவிட்டது. “ஒரு கஞ்சியெ கிஞ்சியெ குடிச்சுப்புட்டு வேளையோட பெறப்புடுடா சாமி. பாய்மாருங்க சாங்காலமா வர்றத்துக்குள்ள வேல ஆவுனும். அங்க வஜ்ஜிரம் மண்டி உளுந்துச்சியானா, வாச்சிமேன் வேல கீல கேட்டு வாங்கிக்கலாம். உன்னும் எவ்ளோ காலத்துக்கு இந்த நாய்ப்பொளப்பு?''
சின்னப்பையனுக்கு அப்பனின் பேச்சில் எந்தப் பிடிமானமும் உண்டாகவில்லை. வெறுப்போடு கிளம்பி இரண்டு தெருக்கள் கடந்தபோது, ஊர்ப்பெண்கள் சிலர் அவனைத் திட்டியது இன்னும் வெறுப்பைக் கூட்டியது.
“பெறப்புட்டியாடா ஒரே முள்ளு செடிய உட்டுவெக்காம வெட்ட? எல்லாத்தியும் இப்பிடி வெட்டிப்புட்டா அப்புறம் பொம்பிளைங்க எங்கதான் ஒதுங்குறது?''
சின்னப்பையன் யோசனை செய்துகொண்டே நடந்தான். அவர்கள் சொல்வது சரிதான். நேற்றுகூட அவனின் அக்காள் சாவித்திரி, அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருந்ததை அவன் கேட்டான். பெண்கள் ஒதுங்குவதற்கு மறைப்பே இல்லையென்று குறைப்பட்டுக் கொண்டாள் அவள். சேரி சனங்கள் இயற்கையின் அழைப்புக்கு முள்காட்டிலேயே பதில் தேடினர். அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது.
முள்காடு ஒரு காலத்தில் மிகப்பெரிய புளியந்தோப்பாக இருந்தது. நூறு மரங்களுக்கு மேலிருக்கும். எல்லாமே முதிய மரங்கள். அவனின் தாத்தாவே சிறுவனாக இருந்தபோதும் அந்த மரங்கள் அப்படித்தான் இருந்ததாம்.
மழைக் காலங்களிலும், காற்றடிக் காலங்களிலும் கூச்சல் போட்டு பயமுறுத்தும் புளிய மரங்கள் வெயில் காலங்களில் கனிவு காட்டும். பழுத்துச் சிவந்து விழும் இலைகள் செந்நிற கம்பளி போல் பரந்திருக்க, அவற்றினூடாக மரங்கள் நின்றிருப்பது அழகாய் இருக்கும்.
புளியந்துளிர் காலத்திலும், பழக் காலத்திலும் சின்னப்பையன் நாக்கை சப்புக் கொட்டிக் கொள்வான். மணக்க மணக்க புளியந்துளிர்களைப் போட்டுக் கடைந்து அம்மா குழம்பு வைப்பாள். ஊர் மக்கள் ஒதுங்க தோப்பும், வயல்களும் அன்றிருந்தன. உச்சிப்பொழுதில் நடுதோப்புக்காய் ஒரு முறை அவசரத்துக்கு ஒதுங்கப் போனபோது, கருநாகத்தைப் பார்த்துவிட்டு, காலோடு கழிந்து வந்தது இன்றும் நினைவில் இருக்கிறது.
தோப்பை வெட்டிச் சரித்து மனையளந்ததும் புழக்கடைத் தடுப்பு விழுந்தது போலாகிவிட்டது. தோப்பைச் சுற்றியிருந்த நிலங்கள் எல்லாமே வீட்டு மனைகளாகி, ஊர் எழுந்து விட்டது. சேரிப் பக்கமாக இருப்பதால் தோப்பு மனையில் யாரும் வீடு கட்ட முன்வரவில்லை. அது முள்காடாகி சேரி மக்களுக்கு இன்று புழக்கடையாகி விட்டது.
நேற்று பாய்மார்கள் அடையாளம் காட்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததும் சின்னப்பையன் போலியாகக் கனைத்துக் கொண்டான். புதர் மறைவுகளில் உட்கார்ந்திருக்கும் சிலர் அவன் குரல்கேட்டு சீக்கிரம் எழுந்து போய்விடுவார்கள் என்று நினைத்தான். இப்போது, முள்களைவிட அவ்விடத்தைப் பற்றிய அருவருப்பே அவனுள்ளே பயமாக மேலெழுந்தது. அந்த முள்காட்டில் கீழே பார்க்காமல் நடக்க முடியாது. முட்களும், மக்கள் உட்கார்ந்து போன நிலைகளும் கால்களைப் பதம் பார்த்து விடும். மழைக்காலங்களில்தான் சேரி சனங்களின் பாடு சொல்லி மாளாது. முள்காட்டில் குளம் போல அங்கங்கே தண்ணீர் நிறைந்துவிடும். மிஞ்சுகின்ற கொஞ்ச நஞ்ச இடங்களிலோ மக்கள் உட்கார்ந்து குமித்து விடுவார்கள்.
அகலமான இணைப்புச் சாலையின் ஓரங்கள் நிறைந்து ஒற்றையடிப் பாதையாகிவிடும். ஒதுங்க இடமின்றி தவிப்பார்கள் சனங்கள். களிமண் பூமி வேறு சொதசொதவென்றாகி வழுக்கும். அவசரத்துக்கு ஒதுங்கப்போய் வழுக்கி விழுந்து உடம்பெல்லாம் பூசிவந்தவர்கள் கதைகளை சின்னப்பையனும், அவனின் கூட்டாளிகளும் சொல்லிச் சிரித்திருக்கிறார்கள்.
முள்காட்டில் நீர் தேங்கும்போது பன்றிக்குட்டிகளைப் போன்ற தவளைகள் மண்ணிலிருந்து கிளம்பும். அவற்றை அடித்துக் கொல்லவும், ஓணான்களைப் பிடிக்கவும், நண்டுகளைத் தேடவும் அவர்கள் சுற்றியலைவார்கள். மழைக்காலங்களின் காலைகளில் முள்செடிகளின் இலைகள் எங்கும் நீர்த்திவலைகள் நிறைந்து சொட்டக் காத்திருக்கும். இளம் வெயில் முள்காட்டில் அடித்ததும் சரவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மாபெரும் பந்தலைப் போல முள்காடு மின்னும். சேரியின் ஒதுக்குப்புறத்தில் பாழடைந்திருக்கிற சமுதாயக் கூடத்தில் தான் சின்னப்பையன் தனது கூட்டாளிகளுடன் கோலி விளையாடுவான், பம்பரம் விடுவான். நிலாக்காலங்களில் அங்கிருந்தபடி அவர்கள் நிலா பார்த்தார்கள். தோப்பு அழிந்த பிறகு வானத் தடுப்பு திறந்து கொண்டதால் கோடிக்கணக்கில் நட்சத்திரங்கள் சேரி மீதும், முள்காட்டின் மீதும் பூக்களைத் தூவின. இரவில் தனியே ஒருநாள் முள்காட்டில் உட்கார்ந்திருந்தபோது, நட்சத்திரமொன்று எரிந்தபடி விழுவதை சின்னப்பையன் பார்த்தான்.
உச்சிப்பொழுதுக்குள் பாதியளவிற்கு முள்புதர்களை வெட்டிக் கழித்து விட்டான் சின்னப்பையன். குப்பன் வேறு அங்கே வந்து குத்துக்காலில் உட்கார்ந்துக் கொண்டு அவனை அதட்டிக் கொண்டிருந்தது இன்னும் வேகப்படுத்தியது. சின்னப்பையன் லாவகமாக முள்விளார்களை வெட்டினான். கைக்கு வாக்காக, முகத்தில் அடிக்காதபடி நிற்கும் கிளையை முதலில் அவன் தேர்ந்து கொள்வான். கைப்பிடிக்கிற இடத்தில் நீண்டிருக்கும் முட்களை கழித்து விடுவான். பிறகு வாகாக ஒரு வெட்டு. சாய்வாக விழும் வெட்டுக்கு முள்செடியின் கிளை தனியே விழும். வெட்டுப்பட்ட கிளையின் அடிப்பாகம் முட்டையைப் போல் நீள் வட்டத்தில் அழகாய் இருக்கும். சில முள்மண்டைகளை வேலி போடுவதற்காக அப்படியே எடுத்து ஓரமாகப் போட்டான் சின்னைப் பையன். சிலவற்றை விறகுக்காக கழித்துப் போட்டான். வெறுட்டும் பசிய வாசம் முள்செடிகளிலிருந்து அங்கு பரவியது.
வியர்வை வழியும் உடம்பில் முட்செடிகளின் பொடி இலைகள் பசைபோட்டது போல் ஒட்டிக் கொண்டிருந்தன. என்னதான் கவனமோடு இருந்தும் நான்கைந்து இடங்களில் முள் அடித்து வலித்தது. வேலையின் மீது மும்முரமாய் இருந்தபோது கூட்டமாக வரும் பெண்களின் சத்தம் மனதைக் கலைத்தது. சின்னப்பையனுக்கு குறுகுறுவென்றிருந்தது. பெண்கள் ஒதுங்கும் இடம் தனியே இருக்கிறது. இங்கு எங்கே வருகிறார்கள் என்று நினைத்தான். அவனுக்கு எதிர்க்கையில் இருந்த இணைப்புச் சாலையிலே கூட்டமாக பெண்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
“ஒரே முள்ளு செடிய உடறதில்லடி இந்த சாவித்திரி ஊட்டாரு. பொம்பிளைங்க எங்க ஒதுங்குவாங்கன்னு ஒரு யோசனையில்ல?''
“ஏய், அவுங்களும் என்னாதான் பண்ணுவாங்க?
வெறகுக்கு வெட்றாங்க. மானமாகீறவ ஊட்டுலயே லெட்ரினு கட்டிக்குனும்.''
“ஊட்டாண்ட கட்றதுக்கு அவ்ளோ துட்டுக்கு எங்க போறது. எம்பட்டைங்க இந்த கெவுருமெண்ட்டு ஊட்டுல கட்டித் தந்தது கூட இடிஞ்சி உளுந்து புடுச்சிங்க.''
“க்கும்... அவுனுங்க என்னாத்த கட்டனானுங்க?''
பேசிக் கொண்டேபோன பெண்களில் சாவித்திரியும் இருப்பதைப் பார்த்தான் சின்னப்பையன்.
“ஏய் எக்கோவ். இந்த முள்ளு மண்டைங்கள வந்து கட்டி எடுத்துனுப் போயேன்.''
“டேய், இர்றா. பொம்பிளைங்களுக்கு லெட்ரினு ரூம்பு கட்டச் சொல்லி பி.டி.ஓ. ஆபிசுல மனு குடுக்கப் போறோம்.''
சாலையோரத்தில் பீடி இழுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த குப்பன் தொண்டையைச் செருமி துப்பிவிட்டுச் சொன்னான்.
“குடிக்கக் கூழு இல்ல. ஊரு வேலய எடுத்துனு அலையுதுங்க. இதுங்க எங்க உருப்படப் போதுங்க.''
பெண்களின் தலை மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் சின்னப்பையன். கத்தியைக் கீழே போட்டு விட்டு உடம்பை நெட்டி முறித்தான்.
“எப்பா, இதுக்குமேல நம்மால முடியாது. வெய்யிலு தாழத்தான் நான் வருவேன்.''
குப்பனின் அருகில் வந்து சொன்னான் சின்னப்பையன். அப்பனின் பதிலுக்குக் காத்திருக்காமல் ஊரைப் பார்த்து நடக்கத் தொடங்கினான். குப்பன் அவனை அசிங்கமாகத் திட்டுவது காதில் விழுந்தது.
உச்சிப் பொழுது கழிந்து வெயில் தாழ்ந்திருந்தபோது சின்னப்பையனை விரட்டினாள் அம்மா.
“உங்கொப்பன் பாத்துனு இருப்பாரு போடா எப்பா''
முனகிக் கொண்டே கிளம்பிய சின்னப்பையன், முள்காட்டிற்குள் நுழைந்ததும் கூச்சல் கேட்டு நின்றான். முள்காட்டின் கிழக்கு மூலையிலிருந்துதான் அப்பெண் குரல் எழும்பியது. சாவித்திரியின் குரலைப் போல அது தோன்றியதும் புதர்களின் நடுவே இருந்த ஒற்றையடிப்பாதை வழியே ஓடினான். கிழக்கு மூலையில் மற்றொரு இணைப்புச் சாலை போட மண் சாலை போட்டிருந்தார்கள். சேரிப் பெண்கள் ஒதுங்கும் இடம் அந்தப் பக்கத்தில்தான் இருந்தது.
சாவித்திரிதான் கத்திக் கொண்டிருந்தாள்.
“உங்கம்மா, அக்கா, தங்கச்சிங்களுத போய்ப் பாருங்களேண்டா, நாயிங்களே''
ஊர்க்காரன் ஒருவனை சேரிப் பெண்கள் இரண்டு பேர் கல்வீசி துரத்திக் கொண்டிருந்தார்கள். அருகில் போவதற்குள்ளாகவே
சின்னப்பையனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. கீழே குனிந்து பொறுக்கான கற்களை எடுத்துக் கொண்டு, அந்த ஆளின் பின்னால் திட்டியபடியே
துரத்திக் கொண்டு ஓடினான்.
“டேங்கோ... நில்றா''
“டேய் கணா வானான்டா''
சின்னப்பையனிடம் கெஞ்சியபடி கத்தினாள் சாவித்திரி. ஊர்க்காரனின் தலை மறையும் வரை துரத்திக் கொண்டு போனான் சின்னப்பையன். இணைப்புச் சாலை முடியும் இடத்தில் நெடுஞ்சாலை ஓரமாக நீண்ட நேரமாக நின்றான். சின்னப்பையனின் உடல் விறைத்திருந்தது. ஆத்திரம் அடங்காமல் மனம் ஆர்ப்பரித்தது. மூச்சு இறைக்க இறைக்க திரும்பி முள் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு நடந்தான். மகன் வராத ஆத்திரத்தில் திட்டிக் கொண்டும், பாய்மார்களிடம் கெஞ்சிக் கொண்டும் இருந்த குப்பன், சின்னப்பையனின் தலையைப் பார்த்ததும் கோபத்தோடு கத்தத் தொடங்கினான்.
“எங்கடா போய்த் தொலஞ்ச நாதாரி. எஜிமாம்மாருங்க எவ்ளோ நேரமா வந்து நிக்கிறாங்க தெரிமா? போய் நான் வெட்டிப் போட்டுக்கிறதையெல்லாம் ஓரமா இழுத்துப் போட்டுட்டு மீந்துக்கீற முள்ளுச் செடிங்கள வெட்டு.''
சின்னப்பையன் வெறியுடன் அப்பனைப் பார்த்தான். அங்கு நின்று கொண்டிருந்த பாய்மார்களைப் பார்த்து முறைத்தான்.
“முள்ளு வெட்ட முடியாது. எவனாவது முள்ளு வெட்டுன்னு வந்தா ஒததான்.''
பதறிப்போன குப்பன் சின்னப்பையனை அடிக்க ஓடினான். பாய்மார்களிடம் காலில் விழப்போனான். எதையும் சட்டை செய்யாமல் சேரியைப் பார்த்து நடந்து போய்க் கொண்டிருந்தான் சின்னப்பையன்.