தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன்
நேர்காணல்: இரா. உமா
பா.ம.க.வில் இருந்து வெளியில் வந்து தனிக் கட்சித் தொடங்கியிருக்கிறீர்கள். தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் கொள்கை அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை, சிறப்பான, ஏற்புடைய கொள்கைதான். தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்டக் கொள்கை. பேராசிரியர் தீரன் போன்ற அக்கட்சியின் அறிவாளர்கள், தலைவர்கள் எல்லோராலும் உருவாக்கப்பட்டக் கொள்கை. எனவே கொள்கைகளில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அந்தக் கொள்கைக் கோட்பாடுகள் அத்தனை யையும் மறந்துவிட்டு, தற்போது பாட்டாளி மக்கள் கட்சி வேறுவிதமான பாதையில் செல்லத் தொடங்கிவிட்டது. அதனால், முரண்பாடுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக நான் வெளியேற்றப்பட்டேன். தமிழர் நலனை ஒட்டிய காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்சினை, ஈழத்தமிழர் வாழ்வுரிமை, தனித் தமிழ் ஈழமே தீர்வு, தமிழ்மொழிப் பாதுகாப்பு போன்ற பல சிறப்பான கொள்கைகள் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற இடத்தில் உள்ள தலைவர்கள் தற்போது தடம்மாறிப் போகின்றனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், 1998இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் முதன் முதலாக அங்கம் வகித்த போது, மத்திய அமைச்சர் பதவியையும், அதற்கான பலன்களையும் பெற்றபோது, எந்த மக்களுக்காக, எந்த மக்களின் நலனை முன்னிறுத்தி அந்தக் கட்சி உருவாக்கப்பட்டதோ, அந்த மக்களை யும், அந்த நோக்கத்தையும் மறந்து, பாதை மாறிச் சென்ற நேரத்தில், நாங்கள் தவறு களைச் சுட்டிக்காட்டினோம். அதனால் வெளியேற்றப்பட்டோம். எங்களுக்கான ஒரு களம் தேவை என்ற நிலையில், ஏற்கனவே தீரன் உள்ளிட்ட தலைவர்களால் உருவாக்கப்பட்டச் சிறப்பான கொள்கை களை உள்வாங்கிக் கொண்டு, இன்றைய அரசியல், சமூக சூழலையும், அதற்கான கருத்துகளையும் கவனமாக இணைத்துக் கொண்டு தமிழக வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கியிருக்கிறோம்.
நாம் தமிழர், பா.ம.க. போன்ற கட்சிகளும், சில தமிழ் அமைப்புகளும் திராவிடம் என்ற சொல்லையே இங்கிருந்து அகற்றிவிட வேண்டும், திராவிடம்தான் தனித்தமிழ்நாடு அடைய விடாமல் தடுக்கிறது, திராவிடத்தால்தான் வீழ்ந்தோம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றன. திராவிடம் குறித்த உங்களுடைய கருத்து என்ன?
அதிலிருந்து நான் வேறுபடுகிறேன். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தோன்றி, இந்த மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் பாடுபடவில்லையயன் றால், இப்படிப் பேசுகின்ற சீமான் போன்றவர்களோ, மருத்துவர் இராமதாசு போன்றவர்களோ, திராவிட இயக்கத்தைக் குறை சொல்லிப் பேசுகின்றவர்களோ இந்த நாட்டில் அறியப்பட்டிருக்க முடியாது. நிச்சயமாக இவர்களின் கருத்துகள் ஊடகங்களில் வெளிவருகின்ற வாய்ப்புகள் இல்லாமலே போயிருக்கும். இவர்கள் சொல்லுகின்ற தமிழ்ச்சமூகத்திற்கு இவர்களை அடையாளப்படுத்தியதே அந்த திராவிடம் தான். எனவே திராவிடத்தைக் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு அமைப்பிலும் சில தவறுகள் குறைகள் இருக்கலாம். அவற்றைச் சுட்டிக்காட்டலாமே தவிர கண்மூடித்தனமாக எதிர்ப்பது தவறு. குணா போன்றவர்கள் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசிவருகிறார்கள். ரவிக்குமார் கூட இதுபோன்றுதான் பேசிவந்தார். அது பெரிய விவாதத்தை தோற்றுவித்தது. இதை நான் முற்றுமாக மறுக்கிறேன். காரணம், பெரியார் போன்றவர் கள், அறிஞர் அண்ணா போன்றவர்கள், தலைவர் கலைஞர் போன்றவர்கள் திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும், பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கவில்லை என்று சொன்னால், தமிழகம் அமைதிப்பூங்கா என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோமே, அந்த நிலை வந்திருக்காது. எனவே திராவிடத்தை விமர்சனம் செய்கின்றவர்கள் வேறு விதமான லாபங்களுக்காகச் செய்கிறார்கள்.
திராவிட இயக்கத்தின் பேரால் ஆட்சிக்கு வந்தவர்கள் சில தவறுகளைச் செய்தால், அதைச் சுட்டிக்காட்ட இவர்களுக் குத் தார்மீக உரிமை இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக திராவிடம்தான் இந்த நாட்டை அழித்தது, திராவிடம்தான் இந்த நாட்டை ஒழித்தது என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தோன்றி, இத்தனை சமூகச் சீர்திருத்தப் பணிகளை ஆற்றிய பிறகும், இவர்கள் மனங்களில் இத்தனைப் பிற்போக்கான எண்ணங்கள் படிந்து கிடக்கின்றன என்று சொன்னால், திராவிட இயக்கம் என்ற ஒன்று இந்த மண்ணில் உருவாக்கப்பட்டிருக்கவில்லை என்றால், ஓர் அடிமைச் சமூகம், மனிதப் பண்புகளற்ற சமூகக் கட்டமைப்புதான் உருவாக்கப்பட்டி ருக்கும். இன்று தருமபுரி போன்ற நிகழ்வுகள், இன்னும் ஆயிரம் பெரியார்களின் தேவை இங்கே இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது.
காதல் திருமணங்களை நாடகத் திருமணங்கள் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காதல் திருமணம் பற்றி உங்களின் கருத்து என்ன?
காதல் திருமணங்களை நாடகத் திருமணங்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். என்னைப் பொருத்தவரையில், காதல் என்பது, ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரையயாருவர் புரிந்துகொண்டு, மனதார நேசித்து, சாதி, மத பாகுபாடுகளைக் கடந்து அன்பின் அடிப்படையில் இல்லற வாழ்வில் இணைவது. இதில் யாருடைய அதிகாரமும் செல்லுபடியாகாது. ஆனால் இன்று காதல் என்னும் எதிர்ப்பார்ப்பில்லா உணர்வில், சில வன்முறைகள் கலந்து விட்டிருப்பது வேதனையைத் தருகிறது. இதற்குக் காதலர்களைக் குறை சொல்ல மாட்டேன். காரணம் காதல் மாறுவதில்லை. ஆனால் இன்றைய ஊடகங்கள், குறிப்பாகத் திரைப்படங்கள் வன்முறையான காதலைத் தான் அதிகமாகக் காட்டுகின்றன. எனவே அவற்றைப் பார்க்கின்ற பிள்ளைகள் தவறாக வழிகாட்டப்படுகின்றனர். இதன் விளைவுகள்தான் இன்றைய ஆசிட் வீச்சு களும், பெண்கள் மீதான வன்கொடுமை களும். காதலை நான் ஆதரிக்கின்றேன். ஆனால் காதலின் பேரால் நடத்தப்படுகின்ற காட்டுமிராண்டித்தனங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தருமபுரியில் தலித் மக்கள் தாக்கப்பட்டபோது, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போதுமான எதிர்வினைகளை ஆற்றவில்லை என்ற ஒரு பார்வை இருக்கிறது. அதைப் பற்றி...
பாட்டாளி மக்கள் கட்சி என்பதை, வன்னியர் என்னும் சாதி அடையாளத்தை முன்னிறுத்தி, சாதிய உணர்வின் அடிப்படையில், சாதிச் சங்கமாகக் கட்டமைத்தார் மருத்துவர் ராமதாசு என்பதை அனைவரும் அறிவார்கள். சர்.பிட்டி.தியாகராயர் மாதிரியோ, பெருஞ்சித்திரனார் மாதிரியோ, பாரதிதாசன் மாதிரியோ,அறிஞர் அண்ணா மாதிரியோ, தலைவர் கலைஞர் மாதிரியோ, அய்யா ஆனைமுத்து மாதிரியோ சமூக மாற்றத்திற்காகப் பணியாற்றியவர்களின் வரிசையில் ராமதாசு இடம்பெறவில்லை. அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் போன்று சமூக மாற்றத்திற்கான அரசியலை முன்வைக்காமல், சாதி உணர்வை ஊட்டி அதன் மூலம் அரசியல் லாபங்களை அடையாளம் என்கிற எண்ணத்தோடு வந்தவர் ராமதாஸ்.
அவரால் சாதிய உணர்வூட்டப்பட்ட, குறுகிய சிந்தனை கொண்ட இளைஞர்கள்தான் என்னுடன் இருப்பவர்கள். அவர்கள் இன்னும் அந்தக் கட்டுகளில் இருந்து மீளவில்லை. அவர்களுக்கு இப்போதுதான், சரியான வழிகாட்டுதல்களையும், வரலாறுகளையும் கொடுக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். அதிலும், நாங்கள் கட்சி தொடங்கி குறுகிய காலமே ஆகின்ற காரணத்தாலும் எங்கள் கட்சி பெரிய அளவில் போராட்டங்களை முழுமையாகச் செய்ய முடியாமல் போனது என்பதை நான் மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளையில், வன்னியர் சமூகத்தில் இருந்து, இந்த நிகழ்வை முதன் முதலாகக் கண்டித்தவன், அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவன், அந்த இடத்திற்குச் சென்றவன் நான்தான். ஆனால் காவல் துறையினர் என்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். அதற்கு மறுநாளே பத்திரிகையாளர்களைச் சந்தித்து என்னுடைய எதிர்ப்பை நான் பதிவு செய்துவிட்டு வந்தேன்.
திரைப்படங்களும், தலைவர்களின் தவறான வழிகாட்டுதல்களும் சீரழித்து வைத்திருக்கின்ற இளைஞர்களை, நம் தமிழ்ச்சமூகத்திற்கு, மொழிக்கு, நம் சமூக விடுதலைக்குத் தயார்படுத்தி வருகின்றேன். கண்டிப்பாக எதிர்காலத்தில், எங்கள் கட்சி தமிழகத்தின் சமூக, பொருளாதார நலன்களைக் காப்பதற்காக வலிமையான போராட்டங்களைத் தீவிர மாக முன்னெடுக்கும் என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றேன். இருந்தும் இக்குறுகிய காலத்திலும், இதற்காக நாங்கள் சில போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் வருகிறோம். பல இடங்களில் எங்கள் கட்சிக் கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட் டுள்ளன. எங்கள் கட்சியினர் மற்றும் அவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டுள்ளன. இவையயல்லாம், நம்முடைய சாதிக்காக இந்த வேல்முருகன் வந்து நிற்கவில்லையே என்ற கோபத்தில் நடத்தப் பட்ட தாக்குதல்கள். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், சமத்துவத் தமிழ்ச் சமூகத்திற்கான அரசியல் பாதையில் எங்கள் கட்சி உறுதியோடும், வலிமையோடும் பயணித்துக் கொண்டுள்ளது.
அடுத்த இதழில் முடியும்