தொடர்புடைய படைப்புகள்

 

வெகு நாட்களுக்கு முன்பாக நான் தென் மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டேன். அனைத்து தலைவர்களின் சிலைகளும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருந்தன. அண்ணல் அம்பேத்கர், காமராசர், அண்ணா, தந்தை பெரியார், பசும்பொன் முத்துராமலிங்கனார், இமானுவேல் சேகரனார், எம்ஜிஆர் என அனைவரும் விலங்குகள் கூட தங்க மறுக்கும் இரும்புக் கூண்டிற்குள் அடைக்கப்பட்டு கிடந்தார்கள். மக்களின் தலைவர்களுக்கு மக்களால் ஆபத்து என்ற நிலையில் அந்த சிலைகளின் இருப்பு அந்த நிலத்தின் கொடும் சாட்சிகளாக விளங்கிக் கொண்டு நின்றன. வெறும் கல்லால் ஆன சிலைகள் மட்டும் அல்ல அவை என யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். அந்த சிலைகளில் இருந்துதான் அதிகாரத்திற்கான வேட்கையும், அதற்கான அரசியலும் பிறக்கின்றன.

சிலைகளைத் திறப்பதும், பிறகு அவற்றையே அவமதிப்பதும், அதன் வாயிலாக கலவரங்களுக்கு வழிவகுத்து உயிரைப் பிடுங்குவதுமாக பல்வேறு வேடங்களில் உலா வருகிறது சாதீயத்தின் இழிவான அரசியல். இறந்துபோன தலைவர்களுக்கு இடையே அந்தக் காலக்கட்டத்தில் நிலவிய வன்மத்தின் வெப்பத்தினை நாளது தேதி வரை பொத்தி பொத்தி பாதுகாப்பதில் தான் இருக்கிறது தனிப்பட்ட சிலருக்கான சில்லறை அரசியல். சாதீயத்தின் கூர்முனைகளை தீட்டாமலிருக்க யாருக்கும் விருப்பமில்லை. சாதீயத்தின் பேரில் நடக்கும் அரசியலையும், கிடைக்கும் அதிகாரங்களையும் எந்த சாதீயத்தலைவரும் இழக்க விரும்புவதில்லை. சாதீய கட்டுமானங்களின் அடிப்படையாகத் திகழும் சுயசாதிப் பெருமிதம் என்ற உணர்வே சாதீயக் கட்சிகளின் மூலதனமாக‌ விளங்குகின்றது. அரச அதிகாரத்தில் இருப்பவர்களும் சாதீயத்தின் முனை கூர்மழுங்காமல் பாதுகாப்பதில் மிகக் கவனமாக இருக்கிறார்கள். சொல்லப் போனால் பரமக்குடிகள் போன்ற பல ஊர்கள் முளைப்பது அரச அதிகாரத்திற்கும், சுயலாப அரசியலின் இழிவான சாட்சிகளாக இருக்கும் சாதீயக் கட்சிகளுக்கும் தேவையாக இருக்கின்றன.
 
 அரச அதிகாரங்களை பாதுகாக்கும் மிக முக்கிய அரணாக சாதி இருக்கிறது. சாதி இழிவினைப் போக்க தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த‌ தந்தை பெரியாரின் வழி வந்ததாக சொல்லிக் கொண்டு அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதீய இழிவினைப் போக்கலாம் என்பது போன்ற மாய்மால வார்த்தைகளை உதிர்த்துத் தோன்றிய திராவிட அரசியல் கட்சிகளே கடந்த பல ஆண்டுகளாக சாதீயத்தினைப் பாதுக்காக்கும் அமைப்புகளாக செயல்படுகின்றன. திராவிடம் என்ற சொல்லில் தான் பெரியாரியம் முழுவ‌தும் அடங்கி இருக்கிறது என்பது போன்றான புனைவுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி திராவிடர்களின் நல வாழ்விற்கான உண்மையான கட்சி திமுக என இன்று வரை பேசிக்கொண்டிருப்பதிலிருந்தே இதை நாம் புரிந்து கொள்ளலாம்.

மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு, நமக்கும்-தெலுங்கனுக்கும், நமக்கும்- மலையாளிக்கும், நமக்கும்-கன்னடனுக்கும் நதிநீர் உட்பட பல முனைகளில் முரண்கள் தோன்றும்போது திராவிடம் என்ற சொல்லுக்கான அவசியம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் வினா எழுப்புகையில், இந்த சாதீயம்தான் அவர்களுக்கு எதிரான முனையாக முன்நிறுத்தப்படுகிறது. திராவிடம் என்ற சொல்லுக்கு அப்பாலும் பெரியாரியம் பரந்து விரிந்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. தமிழனின் சாதி இழிவைப் போக்க, தமிழனுக்கு என்று ஒரு நாடு அமைய, தமிழர்களின் ஒற்றுமைக்காக, பெண்ணுரிமைக்காக என பல தளங்களில் மூர்க்கமாக போராடிய அந்த கிழவனைத்தாண்டி இந்த மண்ணுக்கான தத்துவங்கள் ஏதுமில்லை. ஆனால் அவர் வழி வந்ததாக சொல்லிக் கொள்ளும் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரத்தில்தான் சாதீயத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. சொல்லப் போனால் திராவிடக் கட்சிகளின் அரச அதிகாரம் தான் சாதியைப் போற்றி, பராமரித்து, பாதுகாக்கின்ற அரணாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இன ஒற்றுமையை உரத்துப் பேசும் தமிழ்த் தேசியர்கள் இது போன்ற சமூக உட்குழு பிணக்குகளில் பெருத்த பின்னடைவினை சந்திக்கின்றனர். பண்பாட்டு பெருமிதங்கள் மூலம் கட்டமைக்கப்படும் இனத்தின் ஒற்றுமையை சமூக உட்குழுவான சாதி சிதைப்பது தமிழ்த் தேசிய கருத்தின் பலத்தினை குறைக்கும். எனவே சாதி முரண்களால் மற்றவர்களை விட அதிகம் பாதிக்கப்படுபவர்களாக தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது வெளிப்படை. காலங்காலமாக ஆதிக்கச் சாதியின் இறுக்கத்தினில் இருந்து வெளியேற ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்றைக்கும் அரசியல் துணை நின்றதில்லை. துவக்கத்தில் அரசியல் மூலம் மாற்றத்தினை கொண்டு வர விழைந்த அண்ணல் அம்பேத்கர்கூட, இறுதியில் சமூக வழி செயலான மத மாற்றத்தினைத்தான் தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய லாபங்களுக்காக தனி நபர்கள் சுயசாதி பெருமிதத்தின் மீது கட்டமைக்கும் அரசியல் இதுவரை எவ்விதமான விளைவினையும் இங்கே ஏற்படுத்திவிடவில்லை என்பது உண்மையானது.

தேர்தல்களில் சாதி மக்களின் எண்ணிக்கையை காட்டி சாதிக்கட்சிகள் தங்களின் கூட்டணி தலைமையிடம் இடங்களுக்காக நிற்கின்றன. சாதி ஒழிப்பிற்காக, பிற்படுத்தப்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சமூக நீதிக்காக தோன்றிய திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட தேர்தல்களில் பெருமளவு சாதி பார்த்து, இடம் பார்த்துதான் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. தமிழனின் சமூக நுகர்வில் சாதிக்கான இடம் மிகப் பெரியது. இந்தப் புள்ளிதான் இன ஒற்றுமையை நிறுவ முயலும் தமிழ்த் தேசியர்களுக்கான உண்மை சவால்.

பரமக்குடி படுகொலைகளின் மூலம் அரச அதிகாரம் ஆதிக்க உளவியலில் இருந்து பிறந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்து விட்டது. திரண்ட மக்களின் உணர்வெழுச்சியான வன்முறை போக்கிற்குத் தீர்வாக காவல் துறை தூப்பாக்கிகளைக் கையாண்டது எதன் பொருட்டும் ஏற்கக் கூடியதல்ல. மக்களுக்காகத்தான் அரசு. எனவே அவர்களை மீறி, அவர்களைக் கொன்று அந்த நாளில் காவல் துறை காப்பாற்றியது எவற்றை என்பதை நாம் ஆராயும்போது அரச அதிகாரத்தின் ஆதிக்க சாதி முகத்தினை நாம் நேரிடையாக சந்திக்கிறோம். பார்த்தவுடன் பதற வைக்கிறது பரமக்குடி. மக்களாட்சி தத்துவத்தின் முகத்திரை கிழிக்கப்பட்டு அரச வல்லாத்திக்கத்தின் கோர முகம் தெரிகிறது.

வரையறுக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்களால் பெருகி வந்த வன்முறைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தும் துவக்குகளையும், ரவைகளையும் தீர்விற்கான வழிகளாக காவல்துறை நம்பியது கண்டிக்கத்தக்கது. அரச பயங்கரவாதம் நிகழ்த்திய வன்முறைகளுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சாதி சார்பு என இவற்றை நாம் குறுக்கி விட இயலாது. மாறாக அரசதிகாரம் தந்த ஆணவமும், வரையறையற்ற அதிகாரமும் இவற்றிற்கான காரணங்கள். இந்த வன்முறையில் பலியானவர்கள் குறித்த தகவல்களை அறியும்போது வேதனையாக இருக்கிறது. நிகழ்ந்த சம்பவங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத எளிய மனிதர்கள் சுடப்பட்டு இருக்கின்றார்கள். அதிகாரம் தந்த ஆணவத்தினால் கக்கிய காவல்துறையின் துப்பாக்கிக் குழல்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லை. சுடப்படுபவர் வன்முறையாளரா என்ற வரைமுறை இல்லை. ஆதிக்கத்தின் துப்பாக்கி குழல்களுக்கு தேவை வீழ்த்த ஒரு உடலம். அவ்வளவே. காரண, காரியங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆதிக்க சாதி, அரசியல் கட்சி நிகழ்ச்சிகளின்போது நிகழும் வன்முறைகளை இயல்பாக அனுமதிக்கும் அரச அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிய கிளர்ச்சி செய்தால் உயிரைப் பறிக்க துவக்குகளைத் தூக்குகிறது. இராணுவத்திற்கு எதிராக கல்லெறிந்து போராடி வரும் காஷ்மீர் மக்களைக் கூட அந்த அரசாங்கம் சுட்டுக் கொல்வதில்லை.

பல்வேறு சாதி மக்கள் வாழக்கூடிய ஒரு நிலத்தில், பெரும்பான்மை சாதிக்குழுவின் முக்கிய ஆளுமையின் விழா நாளில் ஏற்படும் விபரீதங்கள் அதற்கு இணையான, எதிரிடையாக இருக்கும் மற்றொரு சாதிக்குழுவின் மீது சாட்டப்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. மறைந்த தலைவர்களின் விழாக்களின்போது பதட்டம் ஏற்படுவதை சாதீயக்கட்சிகளின் தலைவர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் விளையும் பதட்டம்தான் அடுத்த ஒரு வருடத்தின் அரசியலுக்கான மூலதனம். சாதீயத்திற்கு எதிராக, இன ஒற்றுமையை வலியுறுத்தும் தமிழ்த்தேசியர்களை இதில் வலுக்கட்டாயமாக வம்புகிழுப்பதில்தான் இருக்கிறது கடைந்தெடுத்த அயோக்கியதனம்.

சாதிதான் பெரிதென்றால் சுயசாதிப் பெருமிதத்தினை, சாதி பேரில் திரளும் மக்களை வைத்து அரசியல் நடத்தியிருக்கலாம். ஆனால் இன ஒற்றுமையையும், அதன் வாயிலாக சாதீய ஒழிப்பினையும் சிந்திக்கும் தமிழ்த் தேசியர்கள் மூன்றாம் தர சொல்லாடல்களால் விமர்சிக்கப்படுவது எதன் பொருட்டும் நியாயமல்ல. தமிழ் உணர்வாளர்கள் பாகுபாடின்றி மறைந்த தமிழ் ஆளுமைகளின் விழாக்களிலும் கலந்து கொள்வதை மோசடியாக புனைய துடிப்பவர்கள் அதன் மூலம் நிகழும் பொதுமை உணர்ச்சியை நிகழ விடாமல் தடுக்க எண்ணுகிறார்கள். சாதிகளுக்கு அப்பாற்பட்டு நம் இனத்து ஆளுமைகளை அவர்களுக்குள் அக்காலத்தில் நிலவிய முரண்களுக்கு அப்பாற்பட்டு பார்க்கின்ற பொதுமை உணர்ச்சி நிகழ்கால அமைதி வாழ்வின் பாற்பட்டது.

ஒரு சமூகத்தின் இரு தலைவர்கள் அன்று நிலவி வந்த சாதீயச் சூழல் காரணமாக, ஆண்டான், எதிர்ப்போன் என பிளவுபட்டு கிடந்தார்கள். அவர்கள் இறந்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இதே சாதியை இறுகப் பிடித்துக் கொண்டு, அடித்துக் கொண்டு செத்தார்கள். அவர்களின் பிள்ளைகள் இன்றைக்கும் தலைவர்களின் பேரால் அடித்துக் கொண்டு சாகிறார்கள். இந்தப் பகையை, இந்த வன்மத்தினை இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு கொண்டு போகப் போகிறோம் என்று கேட்டாலே சாதி வெறியன்களாக சித்திரித்து விடுவது அரச பயங்கரவாதத்தினை விடக் கொடுமையானது. தமிழ்த் தேசியர்களை இழித்துப் பேசுவதன் மூலம் தங்களைத் தாங்களே சொறிந்து கொண்டு, தங்களின் குற்ற உணர்ச்சியை மற்றவர்களின் மீது பழி போடுவதன் மூலம் தணித்துக் கொண்டு சுகம் காணும் ‘இணையத்தளப் போராளிகளை’ நாம் இச்சமயத்தில் சரியாக இனம் காணுவோம்.

பரமக்குடி சம்பவங்களில் நிகழ்ந்த ஏழுத் தமிழர்களின் படுகொலைகளுக்கு எதிராக அய்யா.பழ.நெடுமாறன், அண்ணன் தொல்.திருமாவளவன், அண்ணன் சீமான் போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்களும், மே 17 போன்ற இயக்கத்தினரும் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதை கவனிக்கலாம். யாராலும் ஏற்க இயலா, குறிப்பாக தமிழ்த் தேசியர்கள் முற்றிலும் எதிர்க்கிற பரமக்குடி கொலைகளை, திட்டமிட்டு இன நலனிற்காக போராடிவரும் தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக நிறுத்துவது அருவருப்பான செயல். முகநூலில் போகிற போக்கில் முகப்புப் பக்கத்தில் தமிழ்த் தேசியர்களைப் பற்றியும், தமிழ் அமைப்புகள் குறித்தும் நஞ்சாய் இந்த 'இணையத்தளப் போராளிகள்’ கக்கியிருக்கின்ற மூன்றாம் தர விமர்சனங்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. கணினித் திரைக்கு அப்பால்தான் உலகம் இருக்கிறது என்பதை அறிய மறுக்கிற இவர்களின் விமர்சனங்கள் நாகரீகமற்றவை. மேலும் காலங்காலமாய் பகைமை கொண்டிருக்கும் இரு குழுக்களிடையே நிலவும் வன்மத்தினை கொஞ்சமும் குறைய விடாமல் பாதுகாப்பதில் தான் இவர்களின் அரசியலே இருக்கிறது. நடந்து முடிந்த பரமக்குடி படுகொலைகளை எந்த தமிழ்த்தேசிய அமைப்பாவது ஆதரித்திருக்கிறதா என்றால் இவர்களிடத்தில் பதிலில்லை. அப்படி இருக்கையில் எதற்காக இத்தனை விமர்சன அம்புகள் என்றால்.. சமீப காலமாக இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற, மக்களிடம் தோன்றியிருக்கின்ற 'நாம் ஒரு இனம்’ என்ற உளவியல். தேசியத் தலைவர் பிரபாகரன் தான் எம் இனத்தின் ஒரே தலைவர் என்ற உளவியல். ஈழம் போலவே சாதிகளற்ற சமூகம் இந்த மண்ணிலும் விளைய வேண்டும் என்ற உளவியல். இந்த உளவியல் போக்குகளே மூன்று தமிழர் உயிர் காக்க தமிழக வீதிகளில் போர்க் குரல்களாய் மூண்டெழுந்தன. இந்த உளவியல் போக்குகள் தான் எப்போதும் ஊரை பிரித்துப் பார்த்து ரசிக்கும் இந்த இரண்டகன்களுக்குப் பிடிக்கவில்லை.

தமிழ்த் தேசியர்கள் அழிந்த தம் இனத்தின் வலியை சுமந்து நிற்கிறார்கள். ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனுக்காக தீக்குளித்து, தன்னுயிரைத் தந்த கொலுவைநல்லூர் முத்துக்குமார், பெரம்பலூர் அப்துல்ரவூப் எந்த சாதி, மத மக்களுக்காக ஈகை செய்தார்கள்?- இனத்தின் மேன்மைக்காக, இனத்தின் ஒற்றுமைக்காக தியாகம் செய்த அந்த மாவீரர்களை சாதியின் பேரால் நிகழும் இழிவான அரசியல்களால் அவமானப்படுத்துகிறோம். மூன்று தமிழர்களின் தூக்குதண்டனைகளுக்கு எதிராக மூண்டெழுந்த தமிழினம் ஏழு தமிழரை பறிகொடுத்து விட்டு எழுபதாக பிரிந்து கிடக்கின்றது. அதிகாரத்தின் உதடுகளில் தோன்றும் நமுட்டுச் சிரிப்பினை உணர்ந்து ஒன்றாகக் கிளம்ப வேண்டிய தருணம் இதுவாகும். எடுத்துக்காட்டாக நாம் இங்கே சாதியாய் பிளவுற்று செத்துக் கொண்டிருக்கையில், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் கேரள அரசு நீர்வழிப் பாதையை ஆய்வு செய்து முடித்து விட்டது. இன்னமும் ஈழப் போரின்போது நடைபெற்ற சிங்கள பேரினவாத குற்றங்களுக்கு நமக்கு உலக சமூக நியாயம் கிடைக்கவில்லை. கூடங்குளம் அணுமின் உலையை மூடச் சொல்லி 15,000/- தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தூக்கு மேடையில் நிற்கும் மூன்று தமிழர்களின் உயிருக்கு உள்ள ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் தமிழர்களின் உள்ளங்களில் மூண்டிருக்கிறது சா’தீ’. திசைதிருப்பல்கள் மூலமாகவே திசையற்றுப் போனான் தமிழன்.

பரமக்குடி சம்பவங்கள் இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையல்ல. ஏனெனில் ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர் வாழ்வும், அவர்கள் மீதான கொலைகளும் எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு உயிருக்கு விலை ஒரு லட்சம் அல்ல. விலை மதிப்பில்லா மனித வாழ்வினைப் பறிகொடுத்த ஏழு தமிழின சகோதரர்களின் குடும்பங்களை அரசே பராமரிப்பதுதான் ‍ இப்போதைக்கான இயன்ற தீர்வாக இருக்க இயலும்.

சாதீய முரண்கள் களையப்பட வேண்டுமானால், சுயசாதிப் பெருமிதம் சாக வேண்டும். சுயசாதிப் பெருமிதம் அழிய வேண்டுமானால் அதற்கு நேர் எதிராக, முரணாக நிற்கும் ஒட்டுமொத்த இனம் சார்ந்த, மொழி சார்ந்த சிந்தனைகள் மேலோங்க வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகளின் வளர்ச்சியும், எழுச்சியுமே பிளந்து கிடக்கும் இனத்தினை ஒற்றுமைப்படுத்தும். சாதிக்க வேண்டிய தமிழினம் சாதிக்காக நின்றால் இழப்புகள் இன்னும் அதிகமாகும்.

மூன்று தமிழர் உயிர் காக்க தன்னுயிர் தந்த செங்கொடியின் தியாகம் நிகழ்ந்து ஒரு மாதம் கூட ஆகாத இடைவெளியில் ஏழு தமிழினச் சகோதரர்களை அரச வல்லாத்திக்க துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கி விட்டு அமர்ந்திருக்கிறோம். விலங்குகளை சுட்டுக் கொன்றால் தண்டனை விதிக்கும் இந்த நாட்டில் மனித உயிர்களுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதுதான் அவலமான முரண்.

சாதியால் பற்றெரியும் நிலத்தின் நாற்றம் தாங்காமல்
சிதையில் புரள்கிறான் முத்துக்குமார்...
பற்றெரியும் மூர்க்கத்தின் வெப்பம் தாங்காமல்
இருமிக் கொண்டிருக்கிறாள் செங்கொடி..
தூக்குக் கயிற்றினை அறுக்க நினைத்தவர்களின்
கரங்கள் இரண்டாக கிடக்கின்றன.
விரல்களை இழந்த கரமும்
கரங்களை இழந்த விரல்களும்
துடித்துக் கொண்டிருக்கின்றன..
தீ எரிகிறது.
சா’தீ’

- மணி.செந்தில் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

3 comments

3
ஆறுமுகம்
கைது செய்யப்பட்ட சாதிய தலைவர் என வர்ணிக்கப்படும் நபர் கட்சி ஏற்படுத்தியது தன் இனத்திற்க்காக அல்ல மாறாக தன்னை காத்துக கொள்ளவே! இந்த விழா முழுவதும் சாதிய அரசியல் நடத்துபவர்கள் எதிர்தரப்பினரை முறைக்கும் விதமாக வே நடத்துகின்றனர் இதில் மத நம்பிக்கை அடிப்படையில் இல்லை. ஆனால், எதிர் தரப்பினர் நடத்தும் விழா மத நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பது. கட்டுரையாளர்கள் கவணத்தில் கொள்ளவில்லை. ஆண்டுதோறும் இந்த பகுதியில் இந்த நிழாவலும் மக்கள் துயரப்படு கின்றனர். இப் பகுதி கல்லூரிகள் மூன்று நாட்கள் முன்னதா கவே விடு முறை அளிக்கப்பட்டுள்ளது நிலைமை யை விளக்கவாதக உள்ளது.. இருப்பினும், சர்ச்சைக்குறிய கைது நடவடிக்கை ஒரு தவிர்க்கும் செய்ல் என்றால் இந்த நிகழ்வு நடத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கூட்டத்தை கலைக்க கொலை செய் ய வேண்டிய அவசியம் இல்லை. பிளக்ஸ் போர்டு மறை வில் நின்றகொண்டு ஒருவர் அடையாளம் காட்ட மற்றவர் சுடுவது தற்க்காப்புக்கானது அல்ல (டிவி காட்சிகள்). எனவே, சுட்டவர்கள் அடையாளம் காட்டிய வர்கள் அணைவர் மீதும் கொரை வழக்கு பதிய வேண்டும். அதிலிருந்து அவர்கள் குற்றமற்ற வர் என்பதை நிறுபிக்க வேண்டும். சாதரன சிறி தகறாறுகளுக்கே வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்தும் போலிஸ் அந்த மக்களை கொடுமை படுத்துவது ஏற்புடையதல்ல. தவறிழைத்தல் காவல்துறையில் புகர் அளிக்கலாம். புகர் காவல் துறைியனர் மீதே என்பதால் மனித உரிமை ஆணையம் தாழத்தப்பட்டோர் மற்றும் பழுங்குயினர் ஆயைம் பணியல் இருந்த தனிநபர் குறித்து விசாரிக்க வேண்டும்.. சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பு க்கு மட்டுமல்லாது எதிர்காலத்தில் இது போன்று பெறாதிருக்க கூடுதல் தவிர்ப்பு இழப்பு (குறைந்தது ஐந்து மடங்கு) வழங்க வேண்டும். இறுதியாக வருந்த கூடிய செயல் போராட்டங்க ள் தவறல்ல அதில் அப்பாவி பொது மக்கள் (அணைத்து சாதியினரும் தான்) பாதிப்படைய செய்வது இது போன்ற செயல்களை நியயம் என என்ன செய்கிறது. இதுவே தமிரபரணி துயரத்திலும் நடந்தது நடந்தது ஒரு வன்முறை இதற் க்கு மற்றொரு வன்முறை தீர்வாகாது என்ற மோடியின் சமீபத்திய செய்தி இச்சம் பவத்திற் க்கு பொருத்தமானது.
பழனிதுரை
முத்துராமலிங்கத்தை எதிர்த்த ஒருவருக்குபாராட்டு விழாவா?

7 தலித் தமிழர்களை சுட்டுகொன்ற புரட்சிதலைவிக்கு உமது கட்சிசார்பில் ஒரு பாராட்டு விழா எடுங்க தோழர்.

முதல்ல உங்க தலைவன் கொடுத்த அறிக்கையை ஒருதடவ படிச்சிட்டு வந்து எழுதுங்க....
P.SELVARAJ
Ellorum saathi oliyavendum entru solkiraargal aannal enna thittam erukkirathu,saathi olikka saathi indukkal allathu ooruttheru thamizhargal uruppadiyaana seyal ethuvum ethuvarai seyyavillai ,saathiveri naveenamaaga valarchi adaikirathu.inku saathi olikkaamal entha marumalarchiyum earpadapovathillai.mullivaakkaalil uthaipattu chetthaipol inkum chagappokirom naam niraiya chinthikka,cheyalpada vendi irukkirathu.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.