ஆகஸ்டு 30 – வலுக்கட்டாயமாக காணாமல் அடிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் நாளாக உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலும், அரசினாலோ, அரசின் ஏவலாட்களாலோ காணாமல் அடிக்கப்பட்ட ஏராளமானோரின் குடும்பங்கள், காணாமல் போன தங்களின் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய ஏதேனும் தகவல் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். Enfored disappearance

எங்கெல்லாம் மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் நிகழ்கிறதோ, அங்கெல்லாமே மக்கள் சட்ட விரோதமாக காணாமல் அடிக்கப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தனக்கு எதிராக செயல்படுபவர்களின் வாயை அடைக்க, அவர் களை செயலற்றவர்களாக ஆக்க, இந்த நேர்மையற்ற, கோழைத்தனமான வழிமுறையை ஒவ்வொரு அரசும் கையாள்கிறது. இவ்வாறு காணாமல் அடிக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினரோ, நண்பர்களோ ஆண்டுக்கணக்கில் போராடி வருவது, உலகின் பல இடங்களிலும் நடந்து வருகிறது.

1999 ஆம் ஆண்டு கொசோவாவில் நடை பெற்ற போரின் போது 3000 அல்பேனியர்கள் காணாமல் அடிக்கப்பட்டனர். இன்னமும் ஏறத்தாழ 1900 குடும்பங்கள் கொசோவாவிலும் செர்பியாவிலும் தங்கள் உறவினர்களுக்கு என்னவாயிற்று என்பதை அறிந்து கொள்ள காத்திருக்கின்றன.

1970களில் அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடைபெற்ற போது, இளம் ஆண்களும் பெண்களும் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் பெருமளவில் கடத்தப்பட்டனர். அப்பெண்களுக்கு குழந்தை பிறந்த உடன் அக்குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு கொடுக்கப்படுகிறது. அத்தம்பதியினர் ராணுவம் அல்லது காவல் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது அந்த அமைப்புகளுக்கு உடந்தையாக இருக்கும் நீதிபதியாகவோ, பத்திரிகையாளராகவோ கூட இருக்கலாம்.

அவர்கள் கைதிகளிடமிருந்து திருடப்படும் குழந்தையை எடுத்துச் செல்ல காத்திருந்தனர். ஒவ்வொரு வதை முகாமிலும் இப்படிக் காத்திருப்பவர்கள் இருந்தார்கள். கைதிகளில் ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே அநேகமாக குழந்தை பிறந்த உடனேயே கொல்லப்பட்டுவிடுவர். ராணுவம் அரசு அதிகாரத்தை விட்டு விலகிய பிறகு, இவ்வாறு பிறந்த குழந்தைகளையும் அவர்கள் என்னவாயினர் என்பதையும் கண்டுபிடிக்க "பிளாசா டி மாயோவின் பாட்டிகள்' என்ற அமைப்பு உருவானது. அந்த அமைப்பின் மூலம் தங்கள் உண்மையான குடும்பத்தினருடன் இணைந்த குழந்தைகள் பல.

இதே போன்ற ஓர் அமைப்பு இந்தியாவிலும் செயல்படுகிறது. "மணிப்பூர் தாய்மார்கள்' என்ற அமைப்புதான் அது. இந்திய ராணுவம் மணிப்பூரில் நடத்திவரும் கொடூரமான பாலியல் வன்முறைகளுக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் ராணுவத் தலைமை யகம் முன்பு, ""இந்திய ராணுவமே எங்களையும் வன்புணர்வுக்கு உட்படுத்து'' என்ற பதாகையை ஏந்தியபடி நிர்வாணப் போராட்டம் நடத்தியவர்கள், இந்த அமைப்பினைச் சேர்ந்த தாய்மார்களே.

சாதாரண சட்டப்படி, ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள அடக்குமுறைச் சட்டங்கள் 30 முதல் 180 நாட்கள் வரை நேர் நிறுத்தலிலிருந்து விலக்கு அளிக்கின்றன. அத்தனை நாட்கள் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது என்ற துணிச்சலில், அதிகாரிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் விசாரணை என்ற பெயரில் அழைத்தும் கடத்தியும் கொண்டு செல்கின்றனர். 30, 90 அல்லது 180 நாட்களுக்குப் பின் இவர்கள்தான் அழைத்துச் சென்றனர் என்ற எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில், சட்டப்பூர்வமான முறையில் அவர்களை கண்டுபிடிப்பதும் சாத்தியமற்றதாகிவிடுகிறது. 1990 இல் இருந்து இன்று வரை, இந்த காலப்பகுதியில் காஷ்மீரில் காணாமல் போனவர்கள் மட்டும் 8,000 முதல் 10,000 வரை இருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. "காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் சங்கம்' என்று ஓர் அமைப்பே அங்கு ஏற்படுத்தப்பட்டு, காணாமல் போனவர்களின் கதி என்னவாயிற்று என்று கண்டறிவதில் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறது.

2005 ஆம் ஆண்டு குஜராத்தில் காணாமல் போன தனது சகோதரர் சொராபுதீனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, அவரது சகோதரர் தொடுத்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்வெளிவந்த உண்மைகள் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கின. விசாரணைக்கென்று காவல் துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டதோடு, பின்னர் நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டமிட்ட பயங்கரவாதியாகவும் அவர் சித்தரிக்கப்பட்டார் என்பது, ஜனயநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கொடிய இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசின் கீழ் இளம் பெண்களும், ஆண்களும் காணாமல் போவது, கடத்தப்படுவது என்பது, பல ஆண்டுகளாகவே அன்றாட நிகழ்வுகளாகவே இருந்து வந்திருக்கின்றன. "வெள்ளை வேன்' கடத்தல் என்று பரவலாக அறியப்பட்ட இந்த நிகழ்வுகள், இத்தனை நாட்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தன. இன்று அவை மிக மோசமாக மாறியுள்ளன. வெளிப்படையான போரை முடித்து விட்டதாக அறிவித்த இலங்கை அரசு, உயிருடன் எஞ்சியுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் "நலன்புரி முகாம்கள்', "தடுப்பு முகாம்கள்' என்ற பெயரில் வதை முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது.

இந்த முகாம்களில் இருந்து வெளிப்படையாக விசாரணைக்கு என்று ராணுவத்தினரால் கூட்டம் கூட்டமாக அழைத்துச் செல்லப்படும் இளம் ஆண்கள் மற்றும் பெண்களின் நிலை என்னவென்பதை, அதன் பின் எவருமே அறிந்து கொள்ள முடியாத நிலையே உள்ளது. இளவயதினரோடு நிற்காத இந்தக் கடத்தல், சிறுவர்களையும் பெற்றோரிடமிருந்து பிரித்து கடத்தி, குழந்தைத் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிலுக்காகவும் விற்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது என அண்மையில் வவுனியா முகாமிலிருந்து "தமிழ் மாணவர் ஒன்றியம்' என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது.

அதிகாரத்தில் இருக்கும் அரசுகளின் இத்தகைய சட்டவிரோத கடத்தல்களுக்கு எதிராக 2006 ஆம் ஆண்டு அய்க்கிய நாடுகள் அவையின் பொதுக் குழு கூட்டத்தில், கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுவதிலிருந்து அனைத்து மக்களையும் காப்பதற்கான தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இத்தீர்மானத்தின்படி, கட்டாயமாக காணாமல் அடிக்கப்படுவது என்பது, ""அரசு மற்றும் அதன் நிறுவனங்கள், அதன் சார்பு நிறுவனங்கள், ஆதரவுக் குழுக்கள் இவற்றினால் சட்டவிரோதமான கைது, காவலில் வைப்பது அல்லது கடத்தல் அல்லது வேறு எந்த வகையிலாவது சுதந்திரமான நடமாட்டம் தடை செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து அப்படியான செயலுக்குப் பொறுப்பேற்க மறுப்பதும், இவ்வாறு காணாமல் அடிக்கப்பட்டவரைப் பற்றிய விவரங்களைத் தர மறுப்பதும்'' இந்தத் தீர்மானத்தின் விதிகளுக்கு உட்படும். இத்தீர்மானத்தின்படி, இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அரசுகளுக்கு கூறுகிறது.

இத்தீர்மானத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், இவ்வாறான செயலில் ஈடுபட்டவர்கள் – அதனை எங்கு செய்திருந்தாலும், தற்போது தங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்தால், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை மற்றொரு அரசிடமோ அல்லது சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்திலோ ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

இத்தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இதனை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும். அக்குழு தனி நபர்களிடமிருந்தும் அரசுகளிடமிருந்தும் வரும் புகார்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். இந்த தீர்மானம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னமும் சில அரசுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இத்தீர்மானம் முற்றிலும் அரச பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானமாக இருப்பதால், எந்த அளவிற்கு அரசுகளின் ஆதரவு கிட்டும் என்பது, பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

உலகளாவிய மனித உரிமை அமைப்பான "அம்னஸ்டி இண்டர்நேஷனல்' இத்தீர்மானத்தை நிறைவேற்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறது. உலகெங்கிலும் இருக்கக் கூடிய மனித உரிமை ஆர்வலர்கள், தங்கள் அரசுகளை இத்தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதன் மூலம் தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியாமலேயே தவித்து, காத்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, ஒரு குறைந்தபட்ச ஆறுதலையாவது கொடுக்க இயலும்.

பூங்குழலி

Pin It